Sunday, 31 January 2016

குப்பையல்ல மாணிக்கம் ‍-  பிரித்தானியா இதய அறக்கட்டளை (British Heart Foundation)



வீடுகளில் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள மரச்சாமான், மின் மற்றும் மின்னனு பொருட்களை போன்றவற்றினை வளர்ந்த நாடுகளில் குப்பைகளில் தூக்கி போட்டு விடுவார்கள். இந்த பொருட்களை மறு சுழற்சி செய்து மக்களிடம் விற்பதன் மூலம் கார்பன் குப்பைகளை பெருமளவில் இந்நாடுகள் தடுக்கிறது.

வீட்டில் வசிப்பவர்கள் இது போன்ற மரச்சாமான் மற்றும் மின், மின்னனு பொருட்களை தெருவில் குப்பையில் போட்டு விட முடியாது. அதெற்கன நகர் மன்றங்களில் மறு சுழற்சிக்கு கட்டணத் தொகையினை செலுத்தி அடையாள சீட்டை ஒட்டிதான் போட முடியும். ஆக வேண்டாம் என்று தூர எறிந்தாலும் பிரச்சினைதான்.

சற்றே வித்தியாசமாக, பிரித்தானியாவில் மக்கள் பயன்படுத்திய பொருட்களை தூக்கி எறியாமல் இங்குள்ள பிரித்தானியாவின் இதய அறக்கட்டளைக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லி விட்டால் அவர்களே வீடு தேடி வந்து அப்பொருட்களை எடுத்து கொள்கிறார்கள்.

அவர்கள் அந்த பொருட்களை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

எடுத்து வந்த பொருட்களை சீரமைத்து நல்ல நிலையில் புதிய வடிவில் மக்களுக்கு பயன்படும் விதம் மாற்றி தனித்த  நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இதில் வரும் பணத்தினை பிரித்தானியாவில் உள்ள இதய நோயாளிகளின் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு நிதியாக கொடுத்து விடுகிறார்கள்.

பிரித்தானியாவில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதனை மனதில் வைத்து இவர்களுக்கு உதவும் வண்ணம் 1961 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த‌  அறக்கட்டளையினை பெரும் வல்லுநர் குழு குழு நிர்வகிக்கிறது.

எல்லா நகரங்களிலும் இந்த அறக்கட்டளையினர் இரண்டு விதமான விற்பனை நிலையங்களை வைத்திருக்கின்றனர். ஒன்று தெருக்கடைகள் (street shops) என்பவற்றில் துணி மணிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்கிறார்கள்.  மரச்சாமான், மின்சாதன பொருட்களை ( Furniture and Electrical) தனியாக மற்றொரு கடையில் விற்கிறார்கள்.

இன்று வீட்டிற்கு மரச்சாமான்கள் வாங்கலாம் என முடிவெடுத்த போது அண்ணன் பேரா. செந்தில் அரசு அவர்கள் இந்த கடையினை பரிந்துரைத்தார். இன்று சுவான்சி (swansea) நகரில் உள்ள இதய அறக்கட்டளையினரின் கடைக்கு அவரின் பரிந்துரையின் பேரில்  சென்று பார்த்தேன்.

ஆச்சரியம், இங்கே உள்ள பொருட்கள் மிக நேர்த்தியாகவும், நல்ல முறையிலும் உள்ளது.  மூன்று மடங்கு குறைந்த விலையில் மரச்சாமான்கள் கிடைக்கிறது.

நம் ஊரிலும் நாம் பயன்படுத்திய நல்ல பொருட்களை தூக்கி எறியாமல் இது போன்று மறுசுழற்சி கடைகள் மூலம் சிறிய தொகைக்கு விற்பனை செய்து அதனை இது போன்று மருத்துவ வசதி இல்லாத மக்களுக்கு பயன்படுத்தலாம்.

இனி வரும் காலங்களில் போகி பண்டிகை என பயன்படுத்திய  பொருட்களை எரிக்காமல், அவற்றினை மறு சுழற்சி மையங்கள் (recycling center) மூலம் மீள் உபயோகத்திற்கு கொண்டு வந்தால் நம் ஊரிலும் கார்பன் நச்சு வாயுவினை கட்டுபடுத்தி சுகாதாரமான சுற்று சூழலை கொண்டு வரலாம். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு உதவிய மாதிரியும் ஆயிற்று.




சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்

சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்

சுவான்சி நகரில் உள்ள பிரித்தானிய இதய அறக்கட்டளையினரின் மரச்சாமான் விற்பனை நிலையம்



நண்பர்களுடன் கலகலப்பாய் இருக்கும் பிறந்த நாள் பொழுதானது கல்லூரி காலம் தொட்டு விரிவடைந்து, சின்ன சின்ன நினைவு திட்டுகளாய் நெஞ்சில் எப்போதும் உவப்பாய் நிலைத்திருப்பவை .

திருமணத்திற்கு பிறகு பிறந்த நாளானது மனைவியிடம் இருந்து கிடைக்கும் சஸ்பென்ஸ் பரிசுகள் என வேறுதளத்திற்கு தாவி இருந்தது.

இந்த பிறந்த நாள் வித்தியாசமாக இருந்தது.
என் தனிப்பட்ட நட்பு வட்டத்தினையும் தாண்டி நான் பார்த்திராத நண்பர்கள் பலரும் அனுப்பியிருந்த‌ அன்பு கலந்த வாழ்த்துகளால் முகநூல் உள் பெட்டி நிறைந்து இருந்தது. நண்பர்களின் வாழ்த்துகளால் திக்கு முக்காடி போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்த பால்ய நண்பர்கள், ஆய்வு நண்பர்கள், பேராசிரியர்கள், ஊடக நண்பர்கள், முக நூல் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.

முடிந்த வரை எல்லோருக்கும் தனித் தனியே நன்றி செய்தியினை அனுப்பி விட்டேன். யாருக்கேனும் விடுபட்டிருந்தால் என் நன்றிகள் உரித்தாகுக.

வீடு திரும்பும் பறவையென நேற்று பெல்பாஸ்டு நகரில் இருந்து சுவான்சி நகருக்கு ஓடி வந்தேன். வீட்டு கதவை திறந்தவுடன் ஊருக்கு போயிருந்த என் குட்டி தேவதை அவந்தி ஓடோடி வந்தென்னை தழுவிக் கொண்டாள்.

டாடி கண்ணை மூடு என்ன சொல்லி விட்டு வீட்டிற்குள் ஓடியவள் தான் கிறுக்கிய வண்ண தாளை கொண்டு வந்து பரிசாய் கொடுத்தாள்.

இந்த பிறந்த நாளுக்கு இதைவிடவும் பெரிய பரிசாய் வெறென்ன வேண்டும்.

"பிரிவுகள்தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன‌" என்னும் யுக பாரதியின் கவிதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

Hearty thanks to all my dear friends for your birthday wishes. You made my day special.

Monday, 25 January 2016



இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்டு நகருக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகிறது.

ஒவ்வொரு முறையும் இங்குள்ள‌  நகர் மன்ற வீதியில் உள்ள அங்காடிகளுக்கு செல்லும் போது, இரயிலடியிலும், பேருந்துகளிலும் நிறைய இந்தியர்களை பார்க்கிறேன். நாம் புன்னகைத்தால் கூட திரும்பி கொள்கிறார்கள். அல்லது நாம் அருகில் வரும் போது வேறு பக்கம் பார்க்காதது போல் செல்கிறார்கள். கடல் கடந்து வந்தும் ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கிறது.
 
சீனா, கொரியா, ஜப்பான் நாட்டுகாரர்கள் தங்கள் நாட்டினரை வெளி நாடுகளில் பார்த்து விட்டால் அப்படி உருகுவார்கள். நம்ம ஆள் உருக வேண்டாம், ஒரு முகமன் செய்யலாமே.

இந்தியர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் வணக்கத்தை இந்தி மொழி உட்பட எந்த மொழியில்  சொன்னாலும் சரி , சக இந்தியரை பார்த்தால் புன்னகையுங்கள்.

இந்த குடியரசு தினத்திலாவது நம் பிள்ளைகளுக்கு பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்யவும், வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் நம் ஊர்காரர்களை பார்த்தால் புன்னைகையோடு முகமன் செய்யவும் சொல்லி கொடுப்போம்.

அதை விடுத்து தேசியகீதம் பாடும் போது எழுந்து நிக்கலை, தேசிய கொடிய தலை கீழா குத்திட்டான்னு எதார்த்த வாழ்க்கைக்கு உவப்பில்லாத விசயங்களில் அடுத்தவரை இகழ வேண்டாம்.

அடிமைதனம் இல்லாத சுதந்திரமான பண்பாடுகளோடு தலைநிமிர்ந்து வாழும் ஒரு தேசத்து மக்களாக பரிமளிப்போம்.

நம் தேசத்திற்காக உழைத்த ஒவ்வொருவரின் தியாகத்தினையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம்.

இனிய குடியரசு தின வாழ்த்துகள்.


ஜப்பானில் சமச்சீர் வழி கல்வி புத்தகங்கள்


ஜப்பானில் தோக்கியோ நகரில் உள்ள நிசிகசாய் (Nisi Kasai), தொக்காய் சீபா (Thokaishiba) பகுதியில் வார இறுதியில் முழுமதி அறக்கட்டளை சார்பில் தமிழ் வகுப்புகள் நம் தமிழ் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மழலை செல்லங்கள் தோக்கியோ நகரில் உள்ள சர்வதேச பள்ளியில் பயிலுகிறார்கள்.ஆனால் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியினை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல நல்ல தமிழ் புத்தகங்கள் தேடி வந்த வேலையில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சமச்சீர் பாடக் கல்வி புத்தகத்தினை  வாங்கி தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக இந்தியாவில் இருந்து ஒன்றாம் வகுப்பு சமச்சீர் வழி கல்வி தமிழ் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு நம் செல்வங்களுக்கு கொடுக்கப்பட்டது.

 அதனை வாங்கி பார்த்து விட்டு அவர்கள் அடைந்த் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

தமிழ்  மொழி மட்டுமல்ல அது நம் அடையாளமும் கூட‌..

நிசிகசாய் தமிழ் பயிற்சி வகுப்பில் சமச்சீர் வழி தமிழ் புத்தகங்களை ஏந்திக் கொண்டிருக்கும் மழலை செல்லங்கள்.





மளிகை கடையில் இலவச நூலகம் - Swap library at convenient store 


இன்று என் வீட்டின் அருகில் (Tates avenue, Belfast, UK) இருக்கும் சிறு மளிகை கடை (Today Local Express) ஒன்றிற்கு பொருட்கள் வாங்க சென்று இருந்தேன்.

அங்கு மூலையில் ஒரு அலமாரியில் புத்தகம் அடுக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை விற்பனைக்கு புத்தகம் வைத்திருப்பார்கள் போல என்று அருகில் சென்று பார்த்தேன். 

ஆச்சரியம்  நம்மிடம் இருக்கும் படித்த புத்தகம் ஒன்றை அங்கு வைத்து விட்டு நமக்கு பிடித்த, படிக்கும் விரும்பும் புத்தகம் ஒன்றை எடுத்து கொள்ளலாம் என எழுதி வைத்திருந்தார்கள்.

இப்படி  ஓவ்வொருவரும் படித்த புத்தகம் ஒன்றை இந்த அலமாரியில் வைப்பதன் மூலம் இந்த கடைக்கு வரும் இந்த பகுதி மக்கள் அனைவரும் பல புதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு "பரிமாற்று நூலகம்" (Swap Library) என பெயரிட்டுள்ளனர்.

நம் ஊரிலும் இது போன்று படித்த புத்தகங்களை கொண்டு  மளிகை இட‌மாற்று நூலகத்தினை மளிகை அங்காடிகளில் கொண்டு வரலாம். இதனால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குழந்தைகள், பெரியவர்களிடையே அதிகரிக்கும்.

மளிகை கடையில் வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள்



Wednesday, 13 January 2016


இந்த மாத "நம் பிள்ளை" இதழில் எனது ஜப்பானிய காய் கறி தோட்ட விவசாயம் பற்றிய கட்டுரையினை வெளியிட்டுள்ளார்கள்.
நம் பிள்ளை ஆசிரியருக்கு பெரும் நன்றிகள்.






Monday, 11 January 2016

ஜப்பானிய கதை சொல்லி ‍  (Japanese Story Teller)

தமிழர்களின் தொன்று தொட்ட ஆதி தொன்ம கலைகளான வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம்  தொடங்கி பக்தி இலக்கிய கால கட்டத்தில்  கதாகாலட்சேபம் வழியாக‌ நாம் நம் பண்பாட்டு சங்கதிகளை கதை சொல்லுவதன் (story telling) மூலம் பல தலைமுறைகளுக்கு  கடத்தி வந்திருக்கிறோம்.. ஆனால் இந்த கணிப்பொறி காலத்தில் அவையெல்லாம் மக்களால் கைவிடப்பட்டு மிக மோசமான சூழலில் அந்த கலைஞர்கள் உள்ளனர்.

ஆனால்   400 வருடம்  பழமையான‌ தொல் கலைகளில் ஒன்றான கதை சொல்லும் (story telling) கலைக்கென்று ஜப்பானில்  இன்றும்  தனித்த அரங்குகள்  செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  ஜப்பானிய மக்களும் தங்கள் கலையினை மறக்காமல் இன்றும் இதனை வழக்கத்தில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கதை சொல்லுவதற்கென்று ஒரு கலையா என ஆச்சரியப் படுகிறீர்கள்தானே, இந்த கட்டுரையினை மேலும் படியுங்கள். 

பழமை வாய்ந்த அந்த கதை சொல்லும் ஜப்பானிய‌ கலையின் பெயர்  ரகுகோகா (落語家 Rakugoka)

சொல்லப்படும் கதையின் உட்கருத்தினை பொறுத்து இந்த கலை இரண்டு விதமான‌ பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

1. ரகுய்கோ (rakuigo) எனப்படும் நகைச்சுவை ததும்பும் விகடகவி கதைகள் மற்றும் 
2. கதாநாயக  வழிபாடுகளை (hero worship) சொல்லும் கோதானி (kodani)  எனப்படும் வீர தீர கதைகள்

இந்த கதைகளை சொல்லும் கதை சொல்லி "கனாசிகா" என்று அழைக்கப்படுகிறார்.

கோசா எனப்படும் மேடை (高座) ஒன்றின் மீது தனது முழங்காலை மடித்து  உட்கார்ந்து கொண்டு வஜ்ராசன அமைப்பில் இருந்தவாறு கனாசிகா கதை சொல்லுவார். அவரது எதிரே பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் அமர்திருப்பர். 

கதை சொல்லிக்கென்று தனித்த உடை இருக்கிற‌து. ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையான கிமானோ அல்லது நீண்ட கால் சட்டை உடைய ககாமாவையும் மேலங்கியான கவோரியும் அணிந்து கொண்டு கதை சொல்வர்.  




தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும்  கலை பற்றிய விளக்க பலகை

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌  ரகுகோ  சிலை


வழமையான நாடக நடிகர்களை போல் அல்லாமல் "கனாசிகா"  என்னும் கதை சொல்லி கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கேற்ப தன் குரல், உடல் மொழி ஆகியவற்றை ஏற்ற இறக்கத்துடன்   உட்கார்ந்த  இடத்தில் இருந்தபடியே சுவாரசியத்துடன் சொல்வார்.   நகைச்சுவை நிரம்பிய ரகுய்கோ கதை‌ சொல்லும் போது இரசிகர்களின் சிரிப்பொலியில் அரங்கமே அதிர்ந்திருக்கும். குறிப்பாக‌, கதை சொல்லி தன் கையில் சென்சு (扇子 sensu) எனப்படும் காகித விசிறியையும், தெனுகுய் (手拭 tenugui) எனப்படும் சிறிய துணியும் கையில் வைத்து அபிநயம் பிடித்தவாறே கதை சொல்லும் பாங்கே தனி.

Tachibanaya Senkitsu a Hanasiga Story teller
ரகுகோ கதை சொல்லும் கலையானது 17 ஆம் நூற்றாண்டில் ஜப்பானின் காமிகதா பகுதியில் (கியோத்தோ,ஒசாகா) இருந்து தொடங்கி  பிறகு எதோ கால கட்டத்தில் (1603 1868) தோக்கியோவிற்கு பரவியது.

ஆரம்பத்தில் இந்த கதை சொல்லும் உத்தியானது புத்த கோவில்களில் நீதி கதைகள் சொல்ல புத்தகுருமார்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக  அங்காடிகள், சந்தைகள், தெருக்களின் முனை என மக்கள் கூடும் இடங்களில் இந்த கதை சொல்லும் உத்தி பரவ தொடங்கியது. தற்போது கதை சொல்லுவதற்கென்று "யொசெ" எனப்படும் தனித்த அரங்குகள் வந்து விட்டது.

இந்த கதை சொல்லிகள் தங்களது குருமார்களால் வழி வழியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் எந்த பள்ளியில் இருந்து வருகிறார்கள் என்ற அடையாளத்துடனேயே தற்போதும் அறியப்படுகிறார்கள்.

ஒரு காலைப் பொழுதில்  தோக்கியோவில் அசகுசா (Asakusa) கோவிலுக்கு செல்லலாம் என சென்றபோது, அசகுசா தொடர் வண்டி நிலையத்தின் மிக‌ அருகே இருந்த (சுகுபா விரைவு வண்டி தடம்) "யொசெ" அரங்கு ஒன்றின் முன்பு நிறைய வயதான முதியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஜப்பானியர்கள் தங்களின் கலையினை இன்னும் கைவிடாமல் இப்படி வைத்திருக்கிறார்களே என அந்த வரிசையினை பார்க்கும் போதே தெரிந்து விட்டது


தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில்உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு



 அந்த இடத்தினை மெல்ல‌ கடந்து, "வதேவில்ல" (vaudeville) எனப்படும் அந்த கதையரங்கின் வெளிப்புறத்தினை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு வந்தேன். நாடக கலைஞர்கள் தங்களின் பொக்கிசமாக வைத்திருக்கும் பழைய புகைப்படங்களை போன்று 50   வருடம் பழமையான கனாசிகா புகைப்படங்களை பார்க்க முடிந்தது. ஒரு சில கதை சொல்லும் உத்திகளின் போது சாமிசென் (Shamisen, 三味線) எனப்படும் மூன்று நரம்புகள் கொண்ட தந்தி வாத்திய கருவிகள் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது (இந்த வாத்திய கருவியினை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்). இது கதை சொல்லும் போது பின்னனி இசைக்கும், கதை சொல்லி அரங்கத்திற்கும் வரும்போது குதூகலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.


சாமிசென் இசைக் கருவி இசைக்கும் கதை சொல்லி


நாமும் ஏன் நம்மிடம் உள்ள தொல்கலைகளை மீட்டெடுக்க கூடாது. ஏனெனில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள கூத்து, பொம்மலாட்டம் போன்ற கலைஞர்களை  நாம் காப்பாற்றா விட்டால் இனி வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு கலைகள் இங்கே இருந்ததற்கான சுவடே இருக்காது. 

Sunday, 10 January 2016

ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது -10

(கேடில் விழுச் செல்வம் கல்வி)


"ஒரு நாட்டின் அரசு  தனது குடிமக்களுக்காக ஒரு மைல் தொலைவு கூடுதலாக பயணிக்கும் போது நான் ஏன் அது போன்ற தேசத்தில் இறக்க கூடாதுஎன ஜப்பானை பற்றி வெளிநாட்டவர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியுள்ளது.  அப்படி என்ன செய்தி அது.

ஜப்பானின் கொக்கைதோ (Hokkaido) தீவு ஒன்றில் செயலிழந்தது என முடிவெடுக்கப்பட்டு, மூடப்படும் சூழலில் இருந்த இரயில் நிலையத்தில் அங்கு தினமும் வரும் ஒரே ஒரு மாணவிக்காக அதன் வழியே செல்லும் இரயில்    தினமும்  நின்று செல்கிறது என்பதுதான் அந்த செய்தி. வெகு காலத்திற்கு முன்பே ஜப்பானிய ஊடகங்களால் பேசப்பட்ட என்றாலும் ஒரு சீன நிறுவனத்தின் (CC TV News0 சமீபத்திய முகநூல் செய்தி பகிர்வினால் இந்த செய்தி தற்போது உலகின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

நான் சொல்ல வந்த செய்திக்கு முன் இந்த கொக்கைதோ தீவினை பற்றி ஒரு சில வரிகள் சொல்லி விடுகிறேன்

ஜப்பானின் வடக்கு எல்லையில் உள்ளது கொக்கைதோ தீவுஜப்பானின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது கடுமையான பனி பொழிவு உள்ள பிரதேசம் இதுபனி காலத்தில் இந்த பனி பொழிவினை கண்டு அனுபவிக்க ஜப்பானிய மக்களின் சுற்றுலா விருப்பங்களின் இதற்கென்று எப்போதுமே தனி இடம் உண்டு

நிலப் ப‌ரப்பில்  ஜப்பானில் உள்ள தீவு கூட்டங்களில் இரண்டாவது மிகப் பெரிய தீவு கொக்கைதோ. உலக அளவில் உள்ள‌ தீவுகளை ஒப்பிடும் போது அயர்லாந்து நாட்டினை விட 3.6% சதவிகிதம் பரப்பில் சிறியது. ஜப்பானின் வடக்கு எல்லையில் உள்ள இந்த தேசம் கடலால்  துண்டிக்கப்பட்டு இருந்தாலும்  ஜப்பானின் வடக்கு எல்லை நிலப்பரப்பில் இருந்து 53.85 கி.மீ தொலைவிற்கு கடலுக்கு அடியில் நிலவறை (tunnel) மூலம்  செய்கான் குகை இரயில் மார்க்கம் (青函トンネル Seikan Tonneru) வழியாக‌  ஜப்பானின் முக்கிய நிலப்பரப்போடு (main land) இணைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு கீழே 100 மீட்டர்  ஆழத்தில் 23.3 கி.மீ தொலைவிற்கு செல்லும் இந்த தடம் உலகின் ஆச்சரியமான இரயில் வழி தடங்களில் இதுவும் ஒன்று. 

 இந்த கொக்கைதோ தீவில் உள்ள ஒரு சிறு இரயில் நிலையம்தான் காமி-சிரதாகி (Kami-Sirataki). கொக்கைதோ தீவின் மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள அபசிரி (Abasiri) இரயில் நிலையத்தில் இருந்து தீவின் மத்திய பகுதியில் உள்ள அசாகிகவா வரை செல்லும் செய்கொகு இரயில் தடத்தில் காமி-சிரதாகி இரயில் நிலையம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்த இரயில் பின்னர் பயணிகள் வரத்து குறைந்து கொண்டே செல்ல‌ இனி இந்த நிலையம் செயலிழந்தது என  ஜப்பான் இரயில்வே நிறுவனத்தினரால் கருதப்பட்டு இனி இங்கு இரயிலை நிறுத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

காமி-சிரதாகி இரயில் நிலையம்

ஆனால் ஆச்சரியமாக‌ இந்த இரயில் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவி தொடர்ந்து இந்த நிறுத்தத்தில் ஏறுவதை கவனித்த இரயில் ஓட்டுநர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க, இந்த மாணவியின் கல்வி நலனுக்காக இரயில் காமி-சிரதாகி  இரயில் நிலையத்தில் நின்று செல்ல முடிவெடுக்கப்பட்டது. 

அதன் படி அம்மாணவி காலையில்   பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து திரும்பும் போதும் என இரு முறை மட்டும் இந்த ரயில் நிலையத்தில்  
வண்டி நின்று செல்கிறது. அம்மாணவி  பள்ளி படிப்பினை முடித்து பின்னர் அருகில் உள்ள நகரின் கல்லூரிக்கு பட்ட படிப்பு சென்று கொண்டு  இருந்ததால் அவருக்காக இன்னும் இரயில் நிறுத்த சேவை தொடர்கிறது. எதிர் வரும் மார்ச் மாதத்தோடு அம்மாணவியின் கல்லூரி படிப்பு முடிவடைந்த பின் இந்த இரயில் நிலையத்தில் இரயில் நிற்காது என ஜப்பானிய இரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது



photo courtesy: Twitter @foxnumber6


காமி-சிரதாகி  இரயில் நிலையத்தின் கால அட்டவணை (புகைப்படம் நன்றி; விக்கிபிடியா)

த‌ன் குடிமக்களில், ஒருவரின் கல்விக்காக லாப நோக்கின்றி செயல்படும் நிறுவனத்தை வைத்திருக்கும் ஜப்பான் நாடு குறித்து இந்த கட்டுரையில் முதல் பத்தியில் வெளிநாட்டவர் கூறிய‌ கருத்து இனி ச‌ரியானதென்று நீங்கள் நிச்சயம் ஒத்து கொள்வீர்கள்.

இதே போல் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவம்  தனி ஒரு மாணவருக்காக  பிரித்தானியாவில் நடந்துள்ளது. இங்கு ஸ்காட்லாந்து (Scotland) தேசத்தின் அவுட் ஸ்கெரிஸ் (Out Skerries) தீவில்    அரோன் (Aron) என்னும் பத்து வயதுள்ள ஒரே மாணவனுக்காக இங்குள்ள‌ பள்ளி இயங்குகிறது.  இந்த‌ ஒரே ஒரு மாணவனுக்காக வருடம் ஒன்றிற்கு பிரித்தானிய‌ அரசு இந்த பள்ளிக்கு 75,000 பவுண்டு செலவு செய்கிறதுஇப்பள்ளியில் சில காலம் வரை நிறைய மாணவர்கள் படித்து கொண்டு இருந்தனர். ஆனால் நாளடைவில் அம்மாணவர்கள் அருகில் உள்ள நிலப்பரப்பான செட்லாந்து நகருக்கு சென்று விட்டனர்தற்போது அரோன் மட்டுமே இங்கு பயில்வதால் அவருக்கு ஆசிரியர்களின் கவனிப்பு நிறைய கிடைக்கிறதுஆனால் ஆரோனுக்கு பிடித்த கால்பந்து விளையாட்டு விளையாடத்தான் நண்பர்கள் இல்லை. 


மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள்   நமக்கு உணர்த்து உண்மை ஒன்றுதான், பள்ளி கல்விக்காக வளர்ந்த நாடுகள் அதிமாக‌ பிரயத்தன படுகின்றன. ஏன், பள்ளி கல்வியில் இவ்வளவு சிரத்தினை எடுத்து கொள்கிறார்கள்?  ஒரு தேசம் அந்த மாணவனுக்காக எல்லா நிலையிலும் உடன் நிற்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த குடிமகன்களை பெற முடியும் என  எண்ணுகிறது.

சம கால சூழலில் நம் தமிழகத்தில் பார்க்கும் போதுஇரண்டு செய்திகள் நமக்கு மன வலியை தருகிறதுஒன்று, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறார்கள் என தமிழகத்தில் பள்ளிகளை அரசு மூடுவது .  மற்றொன்று, சரியான போக்குவரத்து சூழல் இல்லாததால் இன்னும் பல மாணவர்கள் கல்வி கூடங்களுக்கு செல்ல இயலாத நிலை உள்ளது

மனதை நெருடும் மற்றொரு விசயம்நன்கு இரயில் தடங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குறைவான பேருந்து சேவைகளே உள்ளது. ஆனால் பெரும்பாலும் வருமானம் தரும் நிலையங்களில் மட்டும் இரயில்கள் நின்று செல்வதால் அந்த மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே உள்ளது. இதனால் பேருந்துகளின் படிகட்டுகளில் தொங்கி கொண்டும், பேருந்தின் மீது ஏறிக் கொண்டு செல்லும் அவல நிலையியினை இன்றும் பார்க்க முடிகிறதுமக்கள் தொகை மிகுதியான இந்தியா போன்ற நாடுகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்து திட்டங்கள் இன்னும் முன்னேற்றப்படுத்த பட வேண்டும், சாலை வழி போக்குவரத்தில் பேருந்து வசதிகளோடு இரயில் போக்குவரத்தையும் எதிர் கால நோக்கில்  நாம் விரிவு படுத்த வேண்டும்.

ஜப்பானின் காமி-சிரதாகி இரயில் நிலையம் போன்று இயக்கப்பட முடியாத சூழலில் உள்ள தமிழக‌ இரயில் நிலையங்களின் அருகில் இருந்து பல ஆயிரம் மாணவர்கள் சிறு நகர பள்ளிகளுக்கு செல்ல ஏதுவாக அவற்றை மீண்டும் இயக்கலாம்மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு பேருந்தினை காட்டிலும் இரயில் சேவை மிக பலன் தரவல்லது.

தற்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண சேவை தருகிறது. இதைப் போலவே மத்திய நடுவன் அரசிடம் பேசி, இரயில் நிலையம் இருக்கும் பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச கட்டணமாக பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யலாம். இதற்கான தொகையினை தமிழக அரசு மத்திய அரசிற்கு செலுத்தலாம். அல்லது மத்திய அரசே இலவச சேவையினை மாணவர்களுக்கு வழங்கலாம்.

இவையெல்லாம் கற்பனை என தோன்றினால், தற்போது பள்ளிக்கு அருகில் அரசு பேருந்துகள் வேண்டா வெறுப்புடன் நின்று செல்கிறது. காரணம்  மாணவர்களை ஏற்றி சென்றால் அரசுக்கு வருமானம் வராது என்ற தட்டையான காரணம். அரசுக்கு வருமானம் வரும் பல நல்ல திட்டங்களை வேண்டும் என்றே தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து விட்டு இது போன்று மக்கள் நல விசயங்களில் அரசுதுறை ஊழியர்கள் செயல்படும் நிலை இனியேனும் மாற்றப்பட வேண்டும்.


தமிழக‌  அரசு மதுபானக் கடைகளை நடத்தும் அளவிற்கு வல்லமை இருக்கும் போது அரசு பள்ளிகளை நடத்துவதிலும் அம்மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கும் ஏற்ற  சூழலை ஏற்படுத்தி தருவதில் சுணக்கம் காட்டுவது ஏனோ.


Thursday, 7 January 2016

ஆடை வங்கிகள் ‍  Cloth bank


இன்று பெல்பாசுடு (Belfast) நகரில் உள்ள யோர்தான்பேட்டை (Jordenstown) ரயிலடிக்கு செல்லும் வழியில்  ஆடை வங்கி பெட்டகம் (Cloth bank) ஒன்றை சாலையோரம் வைத்திருந்தனர்.

இதில் நாம் பயன்படுத்திய ஆடைகள், துண்டுகள் போன்றவற்றினை இந்த பெட்டகத்தில் போட்டு விட்டால் தொண்டு நிறுவனம் மூலம் ஆடைகள் தேவைப்படும் வறியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

நம் ஊரிலும் இது போன்ற பெட்டகங்களை பெருநகரங்களில் வைத்து பொதுமக்களிடம் நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய ஆடைகளை சேகரித்து இல்லாதவருக்கு உதவலாமே.

பழைய ஆடைகளை பிறருக்கு கொடுக்கும் போது  கட்டாயம் துவைத்து கொடுக்க வேண்டும். இல்லையேல் ஆடைகளில் உள்ள‌ அழுக்கில் இருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

Cloth bank near by Jordenstown train station

Cloth bank near by Jordenstown train station

Saturday, 2 January 2016

இறவா பெண்ணியக் கவிதை


கவிதையென்பது தங்க‌ குத்தூசி போல அவற்றினை அழகியலாகவும், விடுதலை தரும் புரட்சியின் குறியீடாகவும் பயன்படுத்துவதென்பது கவிஞனின் எழுதுக் கோலுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் மந்திரம்.

புதுக் கவிதைகள் பற்றிய என் வாசிப்பு யாத்திரை வைரமுத்து, மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வண்ணதாசன் என என் கல்லூரி காலத்தில் தொடங்கியது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் தச்சன் செய்த ஈட்டி போல் இறங்கும்.இதில் வண்ணதாசனின் கவிதைகள் மட்டும் மயிலிறகு ரகம். பெரும்பாலானவற்றில், நீட்டி முழங்கும் வார்த்தை தேரின் இம்சை இருக்காது. இவர்களின் கவிதைகளில் வெறும் ஒரு சொல் என கடந்து போக முடியாத படி சில கவிதைகள் நம்மை அதிர்வுற செய்பவை. ஒரு படி மேலே போய் மனப்பாடமாய் மனசில் நிலைத்து நிற்பவை.

சமீபத்தில் நிறைய கவிஞர்கள் தமிழ் சூழலுக்கு வந்துள்ளார்கள்.
சில கவிஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். எளிமையான சொல் ஒன்றின் மூலம் கவிதை கூடு ஒன்றை கட்டி தருகிறார்கள். இன்றைக்கு அப்படி ஒரு அழகிய கூடு ஒன்றை முக நூல் வழியே கண்டடைய முடிந்தது.

2014 ஆம் ஆண்டு குமுதம் தீராநதியில் வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனின்  காலத்துரு என்னும் கவிதை ஒன்றை அவர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நிறைய படிமங்களை அடுக்கி வைத்திருக்கும் அடந்த புதுக்கவிதையாய் தோன்றியது. ஆயினும் முதல் வாசிப்பிலேயே அந்த‌ வார்த்தை அலமாரியினை எளிதாய் திறந்து படிக்க முடிந்தது. வார்த்தைகள் யாவும் தூசி துடைத்து வைத்த ஒரு கண்ணாடி போல் அத்தனை தெளிவு.

பெரும்பாலும் இது போன்ற கவிதைகளை படித்து விட்டு கடந்து போய் விடுவேன். ஆயினும் இதனை பகிர காரணம் பெண்ணியவாத காட்டு கத்தலுக்கு இடையில் நம் சட்டை காலரை பிடித்து யாரோ உலுக்குவது போல் இருந்த வரிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த கவிதைதான் ஆனால் இன்றைய சூழலுக்கு நன்கு பொருந்தி போகும்படியாய் இருக்கும் கவிதை வரிகளே இதன் இறவாத் தன்மையினை உணர்த்துகிறது.

"கூரான இரும்பு கம்பியுடைய‌
எல்லா வீட்டு கதவுகளிலும்
தடவப் பட்டு விட்டது ‍
டெல்லி பேருந்தில் சிந்திய‌
உதிரத்தின் ஒரு துளி.
காலத் துரு ஏறிவிடுமதனை
சத்தமில்லாது இரவில் ஆண்களும்
ஓசையெழுப்பியபடி
அதிகாலையில் பெண்களும்
தினமும் திறக்கின்றார்கள்."

நம் வழமையான ஞாபக மறதி என்னும் துரு ஏறிவிடாத படியாய் நம் மனசாட்சியின் கதவுகளில் காலத்துருவாய் எச்சரிக்கை செய்கிறது இந்த‌ வரிகள்.

இது நிர்பயாவின் பெற்றோரின் குரலாக மட்டுமல்ல பதின்ம வயது பெண் பிள்ளைகளை கொண்ட ஒரு தாயின் குரலாகவே காலத்திற்கும் நீதி கேட்கும் படியாய் நிலைத்து நிற்கிறது. ஒரு படி மேலே போய் இரவுப் பொழுதை ஆண்களுக்கும், பகல் பொழுதினை பெண்களுக்குமானதாய் வைக்கும் இடத்தில்தான் கவிதை எழுந்து நிற்கிறது.

பைத்தியக்காரியின் கர்ப்பப்பை, வண்டிகள் அழித்து செல்லும் கோலம், கழுமரத்தில் இருந்து வீழும் இறகு, சோற்றுக்கு உப்பென காமம் என புதிய சொற்களால் நிரம்பி வழியும் பெருங் கவிதை இது.

காற்புள்ளிக்கும் குறைவான, ஒரு மழைக்கால நாள் ஒன்றில் மட்டுமே வாழும் ஈசலைப் போலவாவது, குறைந்த பட்ச சுதந்திரத்தினை கூட ஒரு பெண்ணிற்கு கொடுக்க முடியாத ஆண்களாய் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியினை ஒட்டு மொத்த சமூகத்திடம் கேள்வியாய் கேட்டு விட்டு கவிதை முடியாமல் முடிகிறது.

ஒன்றுதான் நான் வேண்டுவது, இக்கவிதையினை கல்லூரி பாட திட்டத்தில் வைத்திடுங்கள், அங்கேதான் பெண்ணை புரிந்து கொள்ளும் புதிய ஆண்கள் பிறக்கிறார்கள்.
இந்த கவிதை பல புதிய ஆண்மக்களை பிரசவிக்கும் என நம்புகிறேன்.