Thursday, 22 March 2018

பிரித்தானியா சூரிய எரிபொருள் கூட்டு கருத்தரங்கம் (UK Solar Fuel Network Symposium)

பிரித்தானியாவின் ஆறாவது சூரிய எரிபொருள் கருத்தரங்கம் யார்க் பல்கலைக் கழகத்தில் (York University) கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் நடைபெற்றது (19-20 March 2018). இக்கருத்தரங்கில் பிரித்தானியாவில் உள்ள ஒளி வினையூக்கிகள் (Photocatalyst) குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு படைப்புகளை வாய்மொழியாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் வெளியிட்டனர்.

குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வாயுவினை சூரிய ஒளியில் இயங்கும் மூலக்கூறு வினையூக்கிகள் (molecular catalyst) மூலம் எரிபொருளாக மாற்றும் திசையில் இயங்குவதற்கான புதிய ஆய்வுகளை பலரும் முன் வைத்தனர். குறிப்பாக உலோக ஆக்சைடு (metal oxide) பரப்பின் மீது மூலக்கூறு வினையூக்கிகளை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் போது வினையின் வேகம் அதிகரிக்கிறது. அத்தோடு மூலக்கூறு வினையூக்கிகளின் படிக கட்டமைப்பினை எளிதாக மாற்றியமைப்பதன் மூலம் பல படிநிலைகளில் வினையில் மாற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு குறிப்பிட்ட  எரிபொருளைப்  தேர்வாகப் பெறுவதில்  (selectivity) அதிக திறனுடன் செயலாற்றுகிறது.

அ. நீர் மூலக்கூறுகளை பிரித்து அதில் இருந்து ஹைட்ரஜன் வாயுவினை பெரும் ஒளிவினையூக்கி பரப்புகளை நானோ மீட்டர் அளவில் வடிவமைப்பது மற்றும் அதன் நீடித்த திறனை (durability) மேம்படுத்துவது
ஆ. நீர் சுத்திகரிப்பில் (water treatment) ஒளி வினையூக்கிகள் பூசப்பட்ட மென் ஏடுகளை பயன்படுத்துதல்
இ. முப்பரிமாண (3-D) அச்சில் வடிவமைக்கப்பட்ட ஒளிமின் கலங்களை வடிவமைத்தல்.

என்ற பல புதிய கருதுகோள்களுடன் இக்கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

அமெரிக்காவின் நார்த்வெஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மைக் வெசிலெவிஸ்கி  (Mike Wasielewski) அவர்களுக்கு  ராயல் சொசைட்டி கழகத்தின் 2017 ஆம் ஆண்டு  இயல் கரிம வேதியியல் பிரிவிற்கான பரிசை  இக்கருத்தரங்கில் வழங்கி கவுரவித்தார்கள்.



2017 RSC Physical Organic Chemistry Prize Winner Prof. Mike Wasielewski (left) with Prof Robin Perutz (right)


இவ்விருதை பேரா. வெசிலெவிஸ்கி அவர்களுக்கு யார்க் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபின் பெரூட்ஜ் (Robin Perutz) வழங்கினார். பேரா. ராபினின் தந்தையார்  பேராசிரியர் மாக்ஸ் பெரூட்ஜ் (Prof. Max Perutz)   ஹீமோகுளோபின், மியோ குளோபின் புரத‌ மூலக்கூறுகளின்   படிக அமைப்பினை கண்டறிந்ததற்காக 1962 ஆம் ஆண்டில் வேதியியல்  பிரிவில் நோபல் பரிசு பெற்றவர். 

அடுத்த வரும் ஏழாவது பிரித்தானிய சூரிய எரிபொருள் கூட்டு கருத்தரங்கம் இலண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி  நடத்தலாம் என கூட்டுக் குழு முடிவெடுத்துள்ளது.

இக்கருத்தரங்கிற்கு மூன்று தினம் முன்னதாக (25-27 March 2019) உலகின் புகழ் பெற்ற ஆய்வு கலந்துரையாடலான பாரடே டிஸ்கசன் (Faraday Discussion) நடைபெறுகிறது. செயற்கை ஒளிச் சேர்க்கைத் துறையில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் நிச்சயம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.



தென்கொரியாவின் ஹன்யாங் பல்கலைக் கழகம், மற்றும் பிரித்தானியாவின் எக்சிடர் பல்கலைக் கழகதுடன் இணைந்து மேற்கொண்ட சமீபத்திய எமது ஆய்வு முடிவுகளை இக்கருத்தரங்கில் சுவரொட்டி மூலம் விளக்கினேன். குறிப்பாக  ப்ரனெல் லென்சு மூலம் வடிவமைக்கப்பட்ட‌ குவிப்பான் (Concentrator) மூலம் பெறப்பட்ட செறிவான சூரிய ஒளியில் வினையூக்கிகள் எவ்வாறு ஹைட்ரஜன் வாயுவினை நீரில் இருந்து தருகிறது என்ற ஆய்வு முடிவுகளை முன் வைத்தேன். 






இக்கருத்தரங்கிற்கு எமது சுவான்சி பல்கலைக் கழகத்தின் சக ஆராய்ச்சியாளர்கள் முனைவர் மோரிட்ஜ் (வேதியியல் துறை விரிவுரையாளர்), முனைவர் மைக் வார்விக் (சர் கிம்ரு விருதாளர்), முனைவர் ஜெனிபர் ருத் ஆகியோருடன் மகிழ்வுந்தில் சென்று வந்தது மகிழ்வுடன் நினைந்து பார்க்கக் தக்கது.







முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
சுவான்சி பல்கலைக் கழகம்
மார்ச் 22, 2018







Wednesday, 14 March 2018


"நான் இறப்பைக் கண்டு அஞ்சவில்லை, அதே நேரம் நான் இறப்பை நோக்கி அவசரமாக நகர்ந்திடவும் விருப்பமில்லை.நான் செய்ய விரும்பும் பணிகள் இங்கே நிறைய இருக்கிறது"
- ஸ்டீபன் ஹாக்கிங்.

உலகின் மிகப் புகழ்பெற்ற குவாண்டம் இயற்பியல் அறிவியலாளரும், நவீன அண்டவியலின் முன்னோடியுமான பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாங்கிங் (Stephan Hawking) இன்று தனது 76 வயது வயதில் இன்னுயிரை நீத்தார். 

அறிவியல் உலகில் புரிந்து கொள்ள இயலா தளங்களில் ஒன்று  கருந்துளைகள் (block holes) பற்றிய‌ கருதுகோள். இந்த தளத்தில் ஸ்டீபன் ஹாங்கிங்சின் என்னும் கருதுகோள் மிக முக்கிய கவனத்தைப் பெற்றவை.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக மோட்டார் நியூரான் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல் அசைவே இல்லாமல் சக்கர நாற்காலியில் இருந்தாலும் துளி சோர்வில்லாமல் முனைப்புடன் நவீன அறிவியலுக்கு பணியாற்றியவர்.

அவரது குறிப்பிட்டத்தக்க சாதனைகள்

அ. ரோகர் பென்ரோஸ் என்பாருடன் கூட்டாக இணைந்து கண்டறிந்த‌ புவி ஈர்ப்பு தனித்தன்மை கருதுகோள் (Gravitation singularities)

ஆ. 1971 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பர்டீன், பிரான்டன் கார்டர் ஆகியோருடன் கூட்டாக இணைந்து கருந்துளைகள் உருவாக்கம் குறித்த நான்கு விதிகளை வெளியிட்டார். இதற்காக  புவி ஈர்ப்பு நிறுவனத்தின் (விருதினை பெற்றார்
இ. 1974 ஆம் ஆண்டு கருந்துளைகள் கதிர்வீச்சினை உமிழ்கிறது என்ற புதிய‌ கருதுகோளை வெளியிட்டார். அவை இன்றும் ஹாங்கிங் ரேடியேசன் என்றழைக்கப்படுகிறது.இந்த கருதுகோள் துகள் இயற்பியலில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவை.

ஈ. அண்ட விரிவாக்கலில், குவாண்டம் வீக்கம் குறித்த புதிய‌ கருதுகோளை வெளியிட்டார். இது அண்டம் எப்படி வளர்கிறது என்று புரிந்து கொள்ள எளிதாக இருந்தது.

உ. ஜேம்ஸ் கார்ட்லெ என்பாருடன் கூட்டாக இணைந்து 1983 ஆம் ஆண்டு "கார்ட்லெ‍‍-ஹாங்கிங் நிலை" யினை வெளியிட்டார். இது அண்டம் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்தது என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

ஊ. 2006 ஆம் ஆண்டு தாமஸ் கெர்டாக் என்பாருடன் இணைந்து டாப் டவுன் காஸ்மாலஜி என்னும் கோட்பாட்டினை வெளியிட்டார். இதுவே உலகின் புகழ் பெற்ற ஸ்ட்ரிங் தியரி என்றழைக்கப்படுவது. இதற்கு பின் உலகம் இவரை அதிகம் உற்று நோக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

எ. 1988 ஆம் ஆண்டு என்ற "The Brief History of Time" புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் கருந்துளைகள், பிங்பாங் கோட்பாடு, ஒளிக் கூம்புகள் என அண்டவியலின் அனைத்து கோட்பாடுகளையும் அறிவியல் மொழியில் எழுதாமல் வெகுசன மக்களுக்கான எளிய மொழியில் ஹாங்கிங் எழுதி இருந்தார். உலகமெங்கும் கடந்த 20 வருடங்களில் 10 மில்லியனுக்கு மேல் இப்புத்தகம் விற்று தீர்ந்தது. இதனை வெளியிட்ட டைம்ஸ் பதிப்பகத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

ஏ.இத்துடன், அவரது எழுதிய மற்ற புத்தகங்களும் உலகின் கவனத்தை ஈர்த்தவை. Black Holes and Baby Universes and Other Essays (1993), The Universe in a Nutshell (2001), On The Shoulders of Giants (2002), and God Created the Integers: The Mathematical Breakthroughs That Changed History (2005).  

ஐ. மிக இளம் வயதில் பிரித்தானியாவின் ராயல் சொசைட்டி ஆப் லண்டன் அமைப்பால் அங்கீகரிப்பட்டதோடு உலகின் முக்கியமான பல விருதுகளை வென்றவர். 

பிபிசி நிறுவனத்தால் உலகின் மிக முக்கியமான 100 அறிவியலாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஸ்டீபன் ஹாங்கிங், உலகின் பை தினம் (Pi day) என்று கொண்டாடப்படும் ஐன்ஸ்டீனின் பிறந்த தினத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். 

உலகெங்கும் வாழும் அறிவியல் ஆர்வலர்களிடையே ஸ்டீபன் ஹாங்கிங்கின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டவியலில் அவரது கண்டுபிடிப்புகள் இனி வரும் தலைமுறையினரால் நிச்சயம் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும். நவீன அறிவியல் உலகில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம‌
மார்ச் 14, 2018








Monday, 12 March 2018


பிரித்தானியா அறிவியல் வாரம்

பிரித்தானியா அறிவியல் வார (British Science Week) நிகழ்வின் ஒரு பகுதியாக வேல்சு அரசின் (Welsh Government) அமைச்சக ஊழியர்களுக்கு எமது ஆராய்ச்சியினை விளக்கும் பொருட்டு அழைப்பிதழ் கிடைத்தது.

வேல்சு அரசின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைச்சக ஊழியர்களுக்கு சுவரொட்டி மூலம் எமது ஆராய்ச்சி பணிகள் குறித்து விளக்கினேன் குறிப்பாக சூரிய ஒளி ஆற்றம் மற்றும் வினையூக்கிகள் அடிப்படையிலான செயற்கை ஒளிச்சேர்க்கை நுட்பம் குறித்து விளக்கினேன். .

இது போன்ற அறிவியல் விழிப்புணர்ச்சி நிகழ்வுகள் மூலம் நேரடியாக அமைச்சரக ஊழியர்களுக்கு விளக்கும் போது துறை சார் நுட்பங்களில் புதிய வளர்ச்சியினைப் பற்றி தெரிந்து கொள்வதோடு,, அதுசார்ந்து திட்டங்களில் புதிய வரைவுக் கொள்கைகளை (policies) கொண்டு வரவும் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அதே நேரம் என்னைப் போன்ற அறிவியலாளர்களுக்கு அரசுடன் இணைந்து செயல்படுவதோடு, தொழிற்துறை நிறுவனங்களுடன் நேரடியாக இணைந்து அவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சியினை முன்னெடுக்கவும் எளிதாக இருக்கும்.

இன்றைய நிகழ்வினை ஒருங்கினைத்த Ser Cymru-II குழுவினருக்கு நன்றியும், பாராட்டுகளும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
மார்ச் 12,2018






Saturday, 10 March 2018

வேல்சு தேசம் தரும் பாடங்கள் 1



வேல்ஸ் தேசத்தில் பெரிய அளவில் விவசாயம் கிடையாது. . கோதுமை, ஆரஞ்சு, கொஞ்சம் இதர பழங்கள் எனமிக சொற்பமாகவே நடைபெறுகீறது. ஆனால் இது வேல்ஸ் மக்கள் தொகையினை ஒப்பிடும் போது கடலில் கரைத்த பெருங்காயமே.

முழுக்க முழுக்க கம்பளி ஆடு (sheep) வளர்ப்புதான் வேல்சு தேசத்திற்கு கை கொடுக்கிறது.. ஆயிரக் கணக்கான ஏக்கர் புல்வெளி பிரதேசத்தில் கம்பளி ஆடுகள் வளர்கிறது. இது கூடவே மாட்டுப் பண்ணைகள். இதில் இருந்து கிடைக்கும் பால், இறைச்சி இவைதான் பிரதான தொழில். நம் ஊர் ஆட்கள் கற்பனை செய்வது போல் கம்யூட்டர் வைத்தெல்லாம் இங்கே ஆடு மேய்ப்பதில்லை.

மிக நீண்ட புல்வெளி மேடுகளை, குன்றுகளில் வேலி கட்டி ஆட்டை விட்டு விடுகிறார்கள். அதுவாக மேய்ந்து கொண்டு, அப்பகுதி வழியாகச் செல்லும் ஓடைகளில் நீரைக் குடித்துக் கொள்கிறது. அவ்வப்போது அதற்கு தேவையான் தடுப்பூசி, மற்றும் இதர பராமரிப்பு செய்யப் படுகிறது. அவ்வளவே. மாட்டுப் பண்ணைகளுக்கு நிறைய பரமாரிப்பு அதிகம் (இது பற்றி தனியாக எழுத வேண்டும்).

கால்நடை வளர்ப்போடு, சிறு, குறு தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அதிகம். பிரித்தானியாவின் ஒட்டு மொத்த தொழில்நிறுவனங்களின் வருமானத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வேல்சு தேசத்தின் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பது விவசாயம் மற்றும் கால்நடைத் துறை. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதோடு நோய் தொற்றையும் பரப்புகிறது. இது தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பு குறித்து நாம் சிலாகித்து பேசினாலும் அதனால் ஏற்படும் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இங்கே யாரும் விவசாயம் பற்றி வாய் திறப்பதில்லை. தற்சார்பு கருத்தாக்கத்திற்கு வேலையே இல்லை. ஐரோப்பிய நாடுகளுடனான கொடுக்கல், வாங்கல் பண்ட மாற்று முறையில் வேல்ஸ் தேசத்தின் பொருளாதாரம் தாக்கு பிடிக்கிறது.

வேல்ஸ் முழுக்க புவிசார் சூழல் பள்ளத்தாக்குகளாக இருப்பதால் இங்கே இருக்கும் மனித வளம் (human resource) மட்டுமே பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகையால் இவர்களின் மனித வள ஆற்றலை மேம்படுத்த வேல்சு அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது.

எந்த அளவிற்கு என்றால் அமைச்சர்கள் நேரடியாக கிரவுன்ட் ஒர்க் செய்யும் அளவிற்கு வேலை பார்க்கிறார்கள். பரப்பளவில் சிறிய நாடாக இருப்பதால் அமைச்சர் ஒருவர் ஆராய்ச்சியாளர்களை நேரடியாக சந்த்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேல்ஸ்க்கு சாத்தியமாகிறது.

தமிழ்நாடு பரப்பளவில் பெரியதுதான். ஆனால், இது சார்ந்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் குறு, சிறு, மத்திய தொழில்நிறுவனங்களுக்கு முறையான ஆய்வகம் கிடையாது. பல்கலைக் கழகங்களில் சென்று கொண்டிருக்கும் ஆய்வுகளை கட்டாயம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம். தொழிற்சாலைகளோடு இவர்களை இணைக்காவிட்டால் அத்தனை அறிவு வளமும் வீண்.

நம்மிடம் இருக்கும் மனித வள ஆற்றல் அளப்பரியது. இதனை சரியான முறையில் செதுக்கினால் போதும், உலக அளவில் தமிழகம் ஜொலிக்கும்.

குறிப்பாக சுழற்சி முறை பொருளாதாரத்தினை கையில் எடுக்கலாம். கழிவுப் பொருட்களில் இருந்து மதிப்புறு பொருட்களை தயாரித்து அந்தந்த துறைக்கே திருப்பி தருவது. இன்னும் சாணி மேட்டரை தாண்டி நாம் வெளியே வந்ததாக தெரியவில்லை.

நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதுவும் எதிர்கால நோக்கில் ஆற்றல், நீர்த் தேவைகள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சுதாகர் பிச்சைமுத்து
மார்ச் 10, 2018


Monday, 5 March 2018

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு 5

தமிழக அரசுப் பாடத் திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரியில்ல சார், சிபிஎஸ்சி சிலப்பசை ஒப்பிடும் போது இது ஒன்னுமே இல்லை.

எந்த விசயத்தில் சரியில்லைன்னு நினைக்கிறீங்க?
சிபிஎஸ்சி சிலபஸ் காலேஜ்ல படிக்கிற மாதிரி. அவ்ளோ கன்டென்ட் அதுல இருக்கு. அதுல படிச்சா நாலேஜ் நல்லா வளரும் சார். நம்ம ஊர் சிலப்பஸ் எல்லாம் சும்மா. சிபிஎஸ்சில பாதிதான் நம்ம ஊர் சிலப்பசே இருக்கு. இதை படிச்சு எப்படி சார் நம்ம பையன் அறிவு வளரும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான உரையாடல்களை தினமும் நீங்கள் ஒரு முறையாவது கடந்திருப்பீர்கள்.

மாணவர்களுக்கான அறிவு என்பது எவ்வளவு கடினமான பாடத்திட்டத்தில் தான் இருக்கிறது என்ற ஒரு பொது புத்தி மிக ஆழமாக நம் மக்களிடம் வேரூன்றிப் போயிருக்கிறது.

ஆனால் அதே நேரம் அந்த கல்வியினை பெறுகிற மாணவர்களின் பொருளாதார பின்புலம், குடும்ப சூழல், சமூக வாழ்வியல், புவிசார் சிக்கல்கள் என அனைத்தும் ஒரே சம நிலையில் இருக்கிறதா என்று யாரும் யோசிப்பதில்லை.

எது எப்படியோ, கடந்த வாரம் ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எதிர்வரும் 2019 கல்வி ஆண்டில் இருந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினை பாதியாக குறைக்கச் சொல்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி கழகத்திடம் (NCERT) பரிந்துரைத்துள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

அப்படியானால் அந்த பாடத்திட்டம் தமிழக அரசின் தற்போதைய பாடத்திட்டத்தின் அளவுதான் இருக்கும் என்று நாம் பொருள் கொள்ளலாம்.

என் கவலை எல்லாம் இதுநாள் வரை சிபிஎஸ்சி தான் உசத்தி என வகுப்பெடுத்த கூட்டம், மாநில பாடத்திட்டமும் சிபிஎஸ்சி பாடத்திட்டமும் ஒன்றாக இருக்கப் போவதை எந்த அளவுக்கு ஜீரணிப்பார்கள் எனத் தெரியவில்லை.

அவர்கள் அனைவரும், இன்டர்நேசனல் சிலப்பசுக்கு மாறுவதற்கு என் வாழ்த்துகள்.

சரி ஏன் இந்த திடீர் மாற்றம்?
நீட் தேர்வில் கடந்த வருடம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தமிழக மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விடவும் குறைவாக தேர்ச்சி பெற்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் மிக அழுத்தமான பாடத்திட்டமே என்ற அரிய உண்மையினை கண்டுபிடித்துள்ளார்கள். ஆகவேதான் இந்த திடீர் மாற்றம்.

மேலும், இனி மாநில பாடத்திட்டமும், சிபிஎஸ்சி பாடத்திட்டமும் ஒரே அளவில் இருப்பதன் மூலம் எல்லா மாநிலத்திலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தையே நடுத்தர வர்க்கம் ஓஹோவென ஆர்பரித்து ஆதரிக்கும்.

இதன் வாயிலாக மொழித்தாளுக்கு கட்டாயமாக இருக்கும் தமிழ் போன்ற மாநில மொழிகளை மெல்ல காயடிக்கத் துவங்குவார்கள். பத்து வருடங்களில் தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் அவரவர் தாய்மொழியினை எழுதத் தெரியாத ஒரு பெரும் கூட்டம் உருவாகும்.

அப்படியானால் சிபிஎஸ்சி பாடத்திட்டமே கூடாதா?
முதலில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் எதற்கு கொண்டு வந்தார்கள். எங்கு கொண்டு வந்தார்கள் என்று லாஜிக்காக யோசித்தாலே அதற்கான எல்லை எது என எளிதாக புரியும்.

மற்றபடி மாநில அரசுகளின் பாடத்திட்டத்தினை முன்னுதாரணமாகக் கொண்டு சிபிஎஸ்சியில் பயிலும் குழந்தைகளின் பாடச்சுமையினை குறைக்க முன் வந்த மத்திய அரசுக்கு வாழ்த்துகள்.

தமிழகத்தில் பத்து பைசா இன்வெஸ்ட் செய்யாமல், ஒரு புதிய மருத்துவக் கல்லூரிகளையும் இந்த வருட பட்ஜெட்டில் ஒதுக்காமல் நம்மிடம் இருந்த சீட்டை மட்டும் தெளிவாக நகர்த்திக் கொண்ட தந்திரம் தான் நீட்.

மீண்டும் முதலில் இருந்து நீங்கள் எங்கே ஏமாந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், அதன் துவக்கப் புள்ளி சிபிஎஸ்சி பாடத்திட்டம்தான் அதிசிறந்தது என்று உங்களை நம்ப வைக்கப்பட்டதில் போய் முடியும்.

இனியாவது நீட் தேர்வு வேண்டுமா என யோசியுங்கள்.

#TNagainstNEET