Monday, 5 March 2018

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு 5

தமிழக அரசுப் பாடத் திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரியில்ல சார், சிபிஎஸ்சி சிலப்பசை ஒப்பிடும் போது இது ஒன்னுமே இல்லை.

எந்த விசயத்தில் சரியில்லைன்னு நினைக்கிறீங்க?
சிபிஎஸ்சி சிலபஸ் காலேஜ்ல படிக்கிற மாதிரி. அவ்ளோ கன்டென்ட் அதுல இருக்கு. அதுல படிச்சா நாலேஜ் நல்லா வளரும் சார். நம்ம ஊர் சிலப்பஸ் எல்லாம் சும்மா. சிபிஎஸ்சில பாதிதான் நம்ம ஊர் சிலப்பசே இருக்கு. இதை படிச்சு எப்படி சார் நம்ம பையன் அறிவு வளரும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான உரையாடல்களை தினமும் நீங்கள் ஒரு முறையாவது கடந்திருப்பீர்கள்.

மாணவர்களுக்கான அறிவு என்பது எவ்வளவு கடினமான பாடத்திட்டத்தில் தான் இருக்கிறது என்ற ஒரு பொது புத்தி மிக ஆழமாக நம் மக்களிடம் வேரூன்றிப் போயிருக்கிறது.

ஆனால் அதே நேரம் அந்த கல்வியினை பெறுகிற மாணவர்களின் பொருளாதார பின்புலம், குடும்ப சூழல், சமூக வாழ்வியல், புவிசார் சிக்கல்கள் என அனைத்தும் ஒரே சம நிலையில் இருக்கிறதா என்று யாரும் யோசிப்பதில்லை.

எது எப்படியோ, கடந்த வாரம் ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எதிர்வரும் 2019 கல்வி ஆண்டில் இருந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினை பாதியாக குறைக்கச் சொல்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி கழகத்திடம் (NCERT) பரிந்துரைத்துள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

அப்படியானால் அந்த பாடத்திட்டம் தமிழக அரசின் தற்போதைய பாடத்திட்டத்தின் அளவுதான் இருக்கும் என்று நாம் பொருள் கொள்ளலாம்.

என் கவலை எல்லாம் இதுநாள் வரை சிபிஎஸ்சி தான் உசத்தி என வகுப்பெடுத்த கூட்டம், மாநில பாடத்திட்டமும் சிபிஎஸ்சி பாடத்திட்டமும் ஒன்றாக இருக்கப் போவதை எந்த அளவுக்கு ஜீரணிப்பார்கள் எனத் தெரியவில்லை.

அவர்கள் அனைவரும், இன்டர்நேசனல் சிலப்பசுக்கு மாறுவதற்கு என் வாழ்த்துகள்.

சரி ஏன் இந்த திடீர் மாற்றம்?
நீட் தேர்வில் கடந்த வருடம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தமிழக மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விடவும் குறைவாக தேர்ச்சி பெற்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் மிக அழுத்தமான பாடத்திட்டமே என்ற அரிய உண்மையினை கண்டுபிடித்துள்ளார்கள். ஆகவேதான் இந்த திடீர் மாற்றம்.

மேலும், இனி மாநில பாடத்திட்டமும், சிபிஎஸ்சி பாடத்திட்டமும் ஒரே அளவில் இருப்பதன் மூலம் எல்லா மாநிலத்திலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தையே நடுத்தர வர்க்கம் ஓஹோவென ஆர்பரித்து ஆதரிக்கும்.

இதன் வாயிலாக மொழித்தாளுக்கு கட்டாயமாக இருக்கும் தமிழ் போன்ற மாநில மொழிகளை மெல்ல காயடிக்கத் துவங்குவார்கள். பத்து வருடங்களில் தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் அவரவர் தாய்மொழியினை எழுதத் தெரியாத ஒரு பெரும் கூட்டம் உருவாகும்.

அப்படியானால் சிபிஎஸ்சி பாடத்திட்டமே கூடாதா?
முதலில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் எதற்கு கொண்டு வந்தார்கள். எங்கு கொண்டு வந்தார்கள் என்று லாஜிக்காக யோசித்தாலே அதற்கான எல்லை எது என எளிதாக புரியும்.

மற்றபடி மாநில அரசுகளின் பாடத்திட்டத்தினை முன்னுதாரணமாகக் கொண்டு சிபிஎஸ்சியில் பயிலும் குழந்தைகளின் பாடச்சுமையினை குறைக்க முன் வந்த மத்திய அரசுக்கு வாழ்த்துகள்.

தமிழகத்தில் பத்து பைசா இன்வெஸ்ட் செய்யாமல், ஒரு புதிய மருத்துவக் கல்லூரிகளையும் இந்த வருட பட்ஜெட்டில் ஒதுக்காமல் நம்மிடம் இருந்த சீட்டை மட்டும் தெளிவாக நகர்த்திக் கொண்ட தந்திரம் தான் நீட்.

மீண்டும் முதலில் இருந்து நீங்கள் எங்கே ஏமாந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், அதன் துவக்கப் புள்ளி சிபிஎஸ்சி பாடத்திட்டம்தான் அதிசிறந்தது என்று உங்களை நம்ப வைக்கப்பட்டதில் போய் முடியும்.

இனியாவது நீட் தேர்வு வேண்டுமா என யோசியுங்கள்.

#TNagainstNEET