வேல்சு தேசம் தரும் பாடங்கள் 1
வேல்ஸ் தேசத்தில் பெரிய அளவில் விவசாயம் கிடையாது. . கோதுமை, ஆரஞ்சு, கொஞ்சம் இதர பழங்கள் என மிக சொற்பமாகவே நடைபெறுகீறது. ஆனால் இது வேல்ஸ் மக்கள் தொகையினை ஒப்பிடும் போது கடலில் கரைத்த பெருங்காயமே.
முழுக்க முழுக்க கம்பளி ஆடு (sheep) வளர்ப்புதான் வேல்சு தேசத்திற்கு கை கொடுக்கிறது.. ஆயிரக் கணக்கான ஏக்கர் புல்வெளி பிரதேசத்தில் கம்பளி ஆடுகள் வளர்கிறது. இது கூடவே மாட்டுப் பண்ணைகள். இதில் இருந்து கிடைக்கும் பால், இறைச்சி இவைதான் பிரதான தொழில். நம் ஊர் ஆட்கள் கற்பனை செய்வது போல் கம்யூட்டர் வைத்தெல்லாம் இங்கே ஆடு மேய்ப்பதில்லை.
மிக நீண்ட புல்வெளி மேடுகளை, குன்றுகளில் வேலி கட்டி ஆட்டை விட்டு விடுகிறார்கள். அதுவாக மேய்ந்து கொண்டு, அப்பகுதி வழியாகச் செல்லும் ஓடைகளில் நீரைக் குடித்துக் கொள்கிறது. அவ்வப்போது அதற்கு தேவையான் தடுப்பூசி, மற்றும் இதர பராமரிப்பு செய்யப் படுகிறது. அவ்வளவே. மாட்டுப் பண்ணைகளுக்கு நிறைய பரமாரிப்பு அதிகம் (இது பற்றி தனியாக எழுத வேண்டும்).
கால்நடை வளர்ப்போடு, சிறு, குறு தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அதிகம். பிரித்தானியாவின் ஒட்டு மொத்த தொழில்நிறுவனங்களின் வருமானத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வேல்சு தேசத்தின் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பது விவசாயம் மற்றும் கால்நடைத் துறை. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதோடு நோய் தொற்றையும் பரப்புகிறது. இது தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பு குறித்து நாம் சிலாகித்து பேசினாலும் அதனால் ஏற்படும் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இங்கே யாரும் விவசாயம் பற்றி வாய் திறப்பதில்லை. தற்சார்பு கருத்தாக்கத்திற்கு வேலையே இல்லை. ஐரோப்பிய நாடுகளுடனான கொடுக்கல், வாங்கல் பண்ட மாற்று முறையில் வேல்ஸ் தேசத்தின் பொருளாதாரம் தாக்கு பிடிக்கிறது.
வேல்ஸ் முழுக்க புவிசார் சூழல் பள்ளத்தாக்குகளாக இருப்பதால் இங்கே இருக்கும் மனித வளம் (human
resource) மட்டுமே பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகையால் இவர்களின் மனித வள ஆற்றலை மேம்படுத்த வேல்சு அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
எந்த அளவிற்கு என்றால் அமைச்சர்கள் நேரடியாக கிரவுன்ட் ஒர்க் செய்யும் அளவிற்கு வேலை பார்க்கிறார்கள். பரப்பளவில் சிறிய நாடாக இருப்பதால் அமைச்சர் ஒருவர் ஆராய்ச்சியாளர்களை நேரடியாக சந்த்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேல்ஸ்க்கு சாத்தியமாகிறது.
தமிழ்நாடு பரப்பளவில் பெரியதுதான். ஆனால், இது சார்ந்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் குறு, சிறு, மத்திய தொழில்நிறுவனங்களுக்கு முறையான ஆய்வகம் கிடையாது. பல்கலைக் கழகங்களில் சென்று கொண்டிருக்கும் ஆய்வுகளை கட்டாயம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம். தொழிற்சாலைகளோடு இவர்களை இணைக்காவிட்டால் அத்தனை அறிவு வளமும் வீண்.
நம்மிடம் இருக்கும் மனித வள ஆற்றல் அளப்பரியது. இதனை சரியான முறையில் செதுக்கினால் போதும், உலக அளவில் தமிழகம் ஜொலிக்கும்.
குறிப்பாக சுழற்சி முறை பொருளாதாரத்தினை கையில் எடுக்கலாம். கழிவுப் பொருட்களில் இருந்து மதிப்புறு பொருட்களை தயாரித்து அந்தந்த துறைக்கே திருப்பி தருவது. இன்னும் சாணி மேட்டரை தாண்டி நாம் வெளியே வந்ததாக தெரியவில்லை.
நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதுவும் எதிர்கால நோக்கில் ஆற்றல், நீர்த் தேவைகள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சுதாகர் பிச்சைமுத்து
மார்ச் 10, 2018
No comments:
Post a Comment