Thursday 22 March 2018

பிரித்தானியா சூரிய எரிபொருள் கூட்டு கருத்தரங்கம் (UK Solar Fuel Network Symposium)

பிரித்தானியாவின் ஆறாவது சூரிய எரிபொருள் கருத்தரங்கம் யார்க் பல்கலைக் கழகத்தில் (York University) கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் நடைபெற்றது (19-20 March 2018). இக்கருத்தரங்கில் பிரித்தானியாவில் உள்ள ஒளி வினையூக்கிகள் (Photocatalyst) குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு படைப்புகளை வாய்மொழியாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் வெளியிட்டனர்.

குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வாயுவினை சூரிய ஒளியில் இயங்கும் மூலக்கூறு வினையூக்கிகள் (molecular catalyst) மூலம் எரிபொருளாக மாற்றும் திசையில் இயங்குவதற்கான புதிய ஆய்வுகளை பலரும் முன் வைத்தனர். குறிப்பாக உலோக ஆக்சைடு (metal oxide) பரப்பின் மீது மூலக்கூறு வினையூக்கிகளை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் போது வினையின் வேகம் அதிகரிக்கிறது. அத்தோடு மூலக்கூறு வினையூக்கிகளின் படிக கட்டமைப்பினை எளிதாக மாற்றியமைப்பதன் மூலம் பல படிநிலைகளில் வினையில் மாற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு குறிப்பிட்ட  எரிபொருளைப்  தேர்வாகப் பெறுவதில்  (selectivity) அதிக திறனுடன் செயலாற்றுகிறது.

அ. நீர் மூலக்கூறுகளை பிரித்து அதில் இருந்து ஹைட்ரஜன் வாயுவினை பெரும் ஒளிவினையூக்கி பரப்புகளை நானோ மீட்டர் அளவில் வடிவமைப்பது மற்றும் அதன் நீடித்த திறனை (durability) மேம்படுத்துவது
ஆ. நீர் சுத்திகரிப்பில் (water treatment) ஒளி வினையூக்கிகள் பூசப்பட்ட மென் ஏடுகளை பயன்படுத்துதல்
இ. முப்பரிமாண (3-D) அச்சில் வடிவமைக்கப்பட்ட ஒளிமின் கலங்களை வடிவமைத்தல்.

என்ற பல புதிய கருதுகோள்களுடன் இக்கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

அமெரிக்காவின் நார்த்வெஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மைக் வெசிலெவிஸ்கி  (Mike Wasielewski) அவர்களுக்கு  ராயல் சொசைட்டி கழகத்தின் 2017 ஆம் ஆண்டு  இயல் கரிம வேதியியல் பிரிவிற்கான பரிசை  இக்கருத்தரங்கில் வழங்கி கவுரவித்தார்கள்.



2017 RSC Physical Organic Chemistry Prize Winner Prof. Mike Wasielewski (left) with Prof Robin Perutz (right)


இவ்விருதை பேரா. வெசிலெவிஸ்கி அவர்களுக்கு யார்க் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபின் பெரூட்ஜ் (Robin Perutz) வழங்கினார். பேரா. ராபினின் தந்தையார்  பேராசிரியர் மாக்ஸ் பெரூட்ஜ் (Prof. Max Perutz)   ஹீமோகுளோபின், மியோ குளோபின் புரத‌ மூலக்கூறுகளின்   படிக அமைப்பினை கண்டறிந்ததற்காக 1962 ஆம் ஆண்டில் வேதியியல்  பிரிவில் நோபல் பரிசு பெற்றவர். 

அடுத்த வரும் ஏழாவது பிரித்தானிய சூரிய எரிபொருள் கூட்டு கருத்தரங்கம் இலண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி  நடத்தலாம் என கூட்டுக் குழு முடிவெடுத்துள்ளது.

இக்கருத்தரங்கிற்கு மூன்று தினம் முன்னதாக (25-27 March 2019) உலகின் புகழ் பெற்ற ஆய்வு கலந்துரையாடலான பாரடே டிஸ்கசன் (Faraday Discussion) நடைபெறுகிறது. செயற்கை ஒளிச் சேர்க்கைத் துறையில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் நிச்சயம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.



தென்கொரியாவின் ஹன்யாங் பல்கலைக் கழகம், மற்றும் பிரித்தானியாவின் எக்சிடர் பல்கலைக் கழகதுடன் இணைந்து மேற்கொண்ட சமீபத்திய எமது ஆய்வு முடிவுகளை இக்கருத்தரங்கில் சுவரொட்டி மூலம் விளக்கினேன். குறிப்பாக  ப்ரனெல் லென்சு மூலம் வடிவமைக்கப்பட்ட‌ குவிப்பான் (Concentrator) மூலம் பெறப்பட்ட செறிவான சூரிய ஒளியில் வினையூக்கிகள் எவ்வாறு ஹைட்ரஜன் வாயுவினை நீரில் இருந்து தருகிறது என்ற ஆய்வு முடிவுகளை முன் வைத்தேன். 






இக்கருத்தரங்கிற்கு எமது சுவான்சி பல்கலைக் கழகத்தின் சக ஆராய்ச்சியாளர்கள் முனைவர் மோரிட்ஜ் (வேதியியல் துறை விரிவுரையாளர்), முனைவர் மைக் வார்விக் (சர் கிம்ரு விருதாளர்), முனைவர் ஜெனிபர் ருத் ஆகியோருடன் மகிழ்வுந்தில் சென்று வந்தது மகிழ்வுடன் நினைந்து பார்க்கக் தக்கது.







முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
சுவான்சி பல்கலைக் கழகம்
மார்ச் 22, 2018







No comments:

Post a Comment