Friday, 17 July 2015


ஒரு சந்திப்பும் எனது அனுபவமும்

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் நானோ நுட்பவியல் (Nanotechnology) இந்தியாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட தருணம் ஒரு புதிய மயக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் வெகு சில ஆராய்ச்சி கூடங்களில் (IISC, IIT, C.S.I.R, NCL) மட்டும் நானோ பருப் பொருள் பற்றிய‌ ஆராய்ச்சியினை முன்னெடுத்திருந்தனர். 


எனது எம்.பில் பட்ட ஆராய்ச்சி (சூரிய மின் கலங்களுக்கான டைட்டானியம் டை ஆக்சைடு மென் ஏடுகள்) முடித்து 2003 ஆம் ஆண்டு வாக்கில் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை செய்வதற்கான ஆய்வு தலைப்பினை தேடிக் கொண்டிருந்த போது, எனது ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் இரா. சத்திய மூர்த்தியும், எங்களது ஆய்வுக் குழுவில் இருந்த மூத்த ஆராய்ச்சியாளர் அண்ணன் முனைவர் செந்தில் அரசுவும் என்னை நானோ நுட்பவியல் பக்கம் கவனத்தினை செலுத்த சொன்னார்கள். ஏனெனில் அப்போது வழமையான மென் ஏடுகளில் (thin films technology) எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. 



எமது ஆய்வகத்தில் முனைவர் செந்தில் அரசு அண்ணா, மற்றும் முனைவர் சந்திரமோகன் மாம்ஸ் (middle) உடன்

நானோ நுட்பவியல் ஆராய்ச்சிக்கு தேவையான புதுமுக‌ புத்தகங்களோ, ஆய்வுக் கட்டுரைகளோ கிடைக்காத  சூழலில் எங்கு இருந்து ஆய்வினை துவக்குவது, எந்த புத்தகத்தினை படித்தால் புரிந்து கொள்ளலாம் என நான் அலையாத இடம் இல்லை. அப்போதைய சூழலில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னையில் இருக்கும் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் உள்ள நூலகங்கள்தான். 

அப்போது கிடைத்த புத்தகங்கள்  
1. Encyclopedia of Nanoscience and Nanotechnology. Editor Hari Nalwa Singh.
2.Introduction to Nanoscience and Nanotechnology, Chris Binns, Wiley Publishers.
இன்னும் சில புத்தகங்களின் பெயர் நினைவில் இல்லை


தற்போது உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்துல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. ஆகையால் இன்டர்நெட் கடைகளுக்கு சென்று ஆய்வு சுருக்கத்தினை இணையத்தில் தேடி ஆய்விதழின் தகவல்களை எடுத்துக் கொண்டு பெங்களூருவிற்கு புறப்பட்டு விடுவோம். ஏறத்தாழ வேட்டைக்கு செல்லும் மனோ நிலையில்தான் மனசு இருக்கும்.  

காலையில் நூலகத்திற்குள் சென்று அந்த குறிப்பிட்ட ஆய்விதழ் இருக்கும் அறை, மற்றும் அலமாரியினை கண்டுபிடிக்க மதியம் ஆகி விடும். ஒரு வழியாய் குறிப்பிட்ட வருடத்திற்கான ஆய்விதழில் நமக்கு தேவைப்படும் ஆய்வுத்தாள் உள்ள பக்கங்களை நமக்கு முன்பே வந்திருக்கும் சில பிரகஸ்பதி ஆராய்ச்சிளார்களை கையோடு கிழித்து எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். 
இன்னும் சில புல்லட் பாண்டிகள் வருடத்தினை மாற்றி ஒளிய வைத்துவிடுவார்கள். பல லட்சம் ஆராய்ச்சியாளர்கள் பொக்கிசமாக தேடி அலையும் ஆராய்ச்சிக் கட்டுரைககளின் பக்கங்களை  ஒரு சில குறுகிய மனம் படைத்தவர்கள் செய்யும் வேலையால் அதன் மூலத்தினை தேடி பல வருடங்கள் அலைந்த அனுபவமும் உண்டு. 

தற்போது 100 வருடங்கள் பழமையான ஆய்விதழின் கட்டுரைகளை கூட எல்லா ஆய்வு இதழ் பதிப்பக நிறுவனங்கள் ஒளி நகல் எடுத்து இணையத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.  

2003-2005 ஆண்டு வாக்கில் நானோ அளவிலான‌ குறைகடத்திகள் பற்றிய எனது ஆராய்ச்சியினை தொடங்கிய போது நிறைய ஆய்வு கட்டுரைகள் உலக அளவில் வரத் தொடங்கி இருந்தன. ஆனால்  நானோ குறைகடத்திகள் மூலம் செறிவூட்டப்பட்ட டைட்டானியம் ஆக்சைடுகளை கொண்ட சூரிய மின் கலங்கள்  (Quantum Dot sensitized Solar Cells) தயாரிப்பதற்கான ஆய்வுக் கட்டுரைகள் விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே இருந்தது. 

அப்போது எனக்கு கிடைத்த மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று ஜப்பானில் உள்ள பேராசிரியர் தரோ தோயாத்தா (Prof. Taro Tayota,The University of Electro-Communications in Tokyo, Japan)  அவர்களுடையது.  என் ஆய்விற்குத் தேவையான அடிப்படை வேதி வினை தரவுகளை அவரது கட்டுரையில் இருந்தே கையாள ஆரம்பித்தேன்.  முக்கியமாக‌, உலோக ஆக்சைடு சுவர்களில் பூசப்பட்ட நானோ குறைகடத்திகளின்  மீது வெளிச்சத்தினை கொண்டு செறிவூட்டப்படும்போது உருவாகும் எலக்ட்ரான் மற்றும் துளைகளின் நீடித்த வாழ்நாள் திறன் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் இத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். 


பேராசிரியர் தொயோத்தா தற்போது ஒய்வு பெற்ற பின் அதே ஆராய்ச்சி மையத்தில் கொளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார்.  நேற்று அவரை தனிப்பட்ட முறையில் ஒரு கூட்டு ஆராய்ச்சிக்காக அவரை சந்திக்க கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். 

 மனிதர் 70 வயதிலும் சுறு சுறுப்பாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். நெடு நேரம் அவரோடு உரையாடிய போது,  அவரது ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவிற்கு எனது ஆய்விற்கு உதவின என சொன்னபோது மிகவும் நெகிழ்ந்து போனார். தன் ஆய்வுக் கட்டுரையினை நினைவு கூர்ந்தமைக்கு பல முறை நன்றி கூறினார். 

தன் அனுபத்தில் இருந்து நிறைய தரவுகளை, நுணுக்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆல விருட்சத்தின் அடியில் சிதறிக் கிடக்கும் பழங்களை கொத்தி தின்னும் சிறு கிளியானேன் நான். 

உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டபோது என்னை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு அவர் என் பின்னால் நின்று கொண்டார். வயதில் என் தந்தையினை விட மூத்தவர். அவரிடம் நான் கற்பதற்கு இன்னும் நிறைய இருப்பதாகவே தோன்றியது. 


Me with Prof. Taro Tayota (left), Prof. Qing Shen (right) and Prof. Sixto Gimenez (sitting right) at The University of Electro-Communications in Tokyo, Japan

உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை, நான் அதிகம் நேசித்த ஒரு பேராசிரியரின் கட்டுரை இன்று அவரின் அருகிலேயே நிற்க‌  வைத்திருக்கிறது. 

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல் கல்விதான் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.


யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

Sunday, 12 July 2015



நீந்தும் ஓவிய மீன்கள் -  Digital Fish Tank


நம்ம வீட்டு குட்டீசுகளுக்கு வண்ண ஓவியம் தீட்டுதல் என்றால் கொள்ளை ஆசை. சில வேலைகளில் வீட்டு சுவர்களிலும் கூட தங்கள் கைவண்ணத்தினை காட்டி நம் இரத்த அழுத்தத்தினை அதிகரித்து விடுவார்க‌ள்.

இனி குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி உங்களை கோபப் பட வைக்க மாட்டார்கள். அதற்கு ஒரு வழியினை ஜப்பானிய பொம்மை நிறுவனமாகிய  டகாரா டோமி ஆர்ட்சு (Takara Tomi Arts Inc.) கண்டுபிடித்துள்ளது.

 குழந்தைகள்  வரையும் வண்ண மீன் ஓவியங்கள் நீரில் நீந்த தொடங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையினை இந்நிறுவனம் நிஜமாக்கியுள்ளனர். இப்படி ஒரு நிழல் மீன் தொட்டியினை ஆப்பிள் திறன் கைபேசியில் உள்ள செயலாக்கிகள் (Picturerium Application)மூலம் வடிவமைத்துள்ளனர். 


இன்று நோதா நகரத்தில் டாய்சரசு (Toysarus) பொம்மை கடைக்கு சென்ற போது இந்த மாத புது வரவாக இதனை விற்பனைக்கு வைத்திருந்தனர்.










அப்படி இதில் என்ன விசேசம் என்கிறீர்களா?

இந்நிறுவனம் வழங்கும் சிறு பிரத்யோக அட்டைகளில் நம் குழந்தைகள் மீன்களை அவர்கள் விருப்பம் போல் வரைந்து வண்ணம் தீட்டி வைத்து கொள்ள வேண்டும். 

பிறகு அவர்கள் கொடுக்கும் சிறு மீன் தொட்டி ஒன்றின் மீது உங்கள் ஆப்பிள் திறன் பேசியினை (காமிரா வெளிப்புறம் தெரியும் படி) வைத்து விட்டு, குழந்தைகள் வரைந்த வண்ண மீன்களை காமிராவின் மீது காட்டி ஸ்கேன் எடுத்து விட்டால் போதும். இந்த பொம்மை மீன்கள் சிறிது நேரத்தில் இந்த நிழல் மீன் தொட்டிக்குள் அங்கும் இங்கும் நீந்த ஆரம்பித்து விடும். இது பார்ப்பதற்கு அசல் உண்மையான மீன் தொட்டியினைப் போலவே இருப்பதால் குழந்தைகளின் உற்சாகத்திற்கு கேட்க அளவே இருக்காது.

இந்த மீன்கள் நீந்துவதோடு மட்டுமில்லாமல் இரையும் தின்னும். அதற்கான உண்ணும் பொருட்களையும் குழந்தைகள் வரைந்து விட்டால் இதே போன்று அவற்றினையும் தொட்டிக்குள் செலுத்தி விடலாம். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறன் நிச்சயம் அதிகரிக்கும். வண்ண ஓவியங்கள் அவர்கள் கண் எதிரே உயிர் பெற்று ஓடுவதால் அவர்களின் உலகம் இன்னும் விரிவடையும்.   











இவை எல்லாம் முப்பரிமாண (3D) படங்களை உருவாக்கும் தற்போதைய ஓளி உமிழ் விளக்குக  (LED) நுட்பத்தில்  ஏற்பட்ட புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.   

ஒரு வேளை இந்த வண்ண மீன்கள் வரையும் பிரத்யோக அட்டைகள் தீர்ந்து விட்டால் பிரச்சினை இல்லை. இந்த ஆப்பிள் செயலிகளில் இருந்து தரவிறக்கம் செய்து வேண்டும் அளவிற்கு அச்சிட்டு கொள்ளலாம்.  



இதில் உள்ள பிரச்சினை நம் கைபேசியினை இனி அவர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நம் கைபேசியினை கொடுக்க விருப்பமில்லை எனில் நம் வீட்டில் உள்ள கணிப்பொறி திரையினையே மீன் தொட்டியாக மாற்றி அவர்கள் விளையாடலாம்.


இதற்கான காணொளி விளக்கத்தினை கீழ் காணும் சுட்டியில் காணலாம்.
https://www.youtube.com/watch?t=95&v=LDPHWz9UADQ


ஆப்பிள் செயலிகள் தரவிறக்கம் செய்ய‌
 https://itunes.apple.com/us/app/picturerium/id965771489?mt=8

இதன் விலை ஜப்பானில் 1834 யென் (~946 ரூபாய்). வெளி நாட்டு இணைய சந்தைகளில் 45 டாலர் (~3000 ரூபாய்). மூன்று மடங்கு விலை அதிகம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு இந்த டிஜிட்டல் மீன் தொட்டிகள் குட்டீசுகள் மத்தியில் பெரும் கிராக்கியினை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Wednesday, 8 July 2015


Inviting Manuscript for the Special Issue in Advances in Chemistry Journal (Hindawi Publishers)


We are inviting the regular research articles, review and short communications for the special issue on "Fabrication of graphene-based nanocomposites for energy and environmental applications" to be published in Advances in Chemistry Journal (Hindwai Publishers)

Carbon nanomaterials have attracted huge interest among the communities of materials science, chemical engineering, chemistry, and biology due to their excellent properties. Among them, graphene has attracted increasing interest because of its unique physical and chemical properties, such as its high surface area, good chemical resistance, excellent electrical conductivity, extraordinary mechanical properties, high charge mobility, and thermal conductivity. These peculiar properties have highlighted the potential of this material in a variety of applications. However, despite their excellent properties, pure graphene sheets are limited for many applications. 

To overcome this issue, an ideal solution will involve combining the graphene with functional nanomaterials. In this special issue, we focus on fabrication of graphene-based hybrid nanocomposites for hydrogen production, electrochemical energy devices (eg., supercapacitor, fuel cell, Lithium ion battery), solar energy conversion (eg., photovoltaic and photoelectrochemical devices), and environmental applications (photocatalytic degradation of organic and inorganic pollutants, adsorption of heavy metals, and organic pollutants). To promote communication between scientists of graphene-based composites, we invite researchers to contribute original research articles as well as review articles that will stimulate the continuing efforts to understand the fabrication and application of the graphene-based nanocomposites for energy and environmental applications. I have experience in supercapacitor, fuel cell, Lithium ion battery, hydrogen production, adsorption of metal ion and dyes, and photocatalytic degradation of organic and inorganic pollutants, which is evident from my publications and conference presentations. 




Guest editors have very good experience in photocatalysis, photovoltaic, solar cell, and photoelectrochemical devices.

Manuscript Due
January 22, 2016
First Round of Reviews
April 15, 2016
Publication Date
June 10, 2016





Lead Guest Editor
Yuvaraj Haldorai, Department of Energy and Materials Engineering, Dongguk University, Seoul, South Korea; yuvraj_pd@yahoo.co.in

Guest Editors
Sundaram Senthilarasu, Environment and Sustainability Institute, University of Exeter,
Penryn, Cornwall TR10 9EZ, UK; s.sundaram@exeter.ac.uk

Pitchaimuthu Sudhagar, Photocatalysis International Research Center, Tokyo University of Science, 2641 Yamazaki, Noda, Chiba 278-8510, Japan; vedichi@gmail.com


For further details visit 
http://www.hindawi.com/journals/ac/guidelines/

Tuesday, 7 July 2015


 ஜப்பான் கல்வியில் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது - 3


எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின்   தலைவரும், எமது சர்வதேச போட்டோகேட்டலிஸ்ட் மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசுசிமா (Akira Fujishima) அவர்களது நேர்காணல் அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) செய்தி இதழான சி&என் (C&En) பத்திரிக்கையில் வந்துள்ளது.



பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை


பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை

கடுமையான பணிகளுக்கு இடையில்  எவ்வாறு தனது நேரத்தினை சரியான முறையில் திட்டமிட்டு உழைக்கிறார்  என இந்த நேர்காணலில் சொல்லப் பட்டிருக்கும். 

இந்த நேர்காணலில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஜப்பானின் அறிவியல் வளர்ச்சிக்கு  பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் அறிவியலை வளர்ப்பது ஒன்றுதான் தங்களது தேசத்தினை எதிர்காலத்தில் வளப்படுத்தும் என திடமாக கூறியுள்ளார். இதற்கு ஜப்பானில் பெற்றோரின் ஒத்துழைப்பும் நன்கு உள்ளது. 

வார இறுதியில் நான் இங்குள்ள அறிவியல் அருங்காட்சியகங்களுக்கு செல்லும்போது அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்து பொறுமையுடன் அவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கின்றனர். குழந்தைகளின் அறிவியல் திறனை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாதது. 

இன்றைக்கு சீனாவில் இருந்து பள்ளி மாணவர்கள் அவருடன் உரையாட வந்திருந்தனர். அப்போது அவர்களோடு பேசுகையில் பேராசிரிய புசுசிமா பகிந்து கொண்ட மற்றொரு விடயம் ஆச்சரியம் அளித்தது. தனது கண்டுபிடிப்பான போட்டோகேட்டலிஸ்ட்கள் பற்றிய  கண்டுபிடிப்புகள்   மற்றும் அடிப்படை அறிவியலை ஜப்பானின் நடு நிலைப் பள்ளிகளில் பாடத்திட்டமாக வைத்துள்ளார். இதற்கான வாய்ப்பினை ஜப்பான் அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. கனகாவா  (Kanagawa) மாவட்டத்தில் போட்டோகேட்டலிஸ்ட் அருங்காட்சியகத்தினை அரசின் உதவியுடன் உருவாக்கி உள்ளார் (http://kanagawa-travel-info.com/english/special_report/1475). பள்ளிக் குழந்தைகளுக்கு  சூரியனைப் பற்றியும் அதன் பயன்பாடுகளையும் எளிய முறையில் புரியும் படி கார்ட்டூன் வடிவில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இப்புத்தகம் தற்போது ஆங்கிலம், சீனம், ரஸ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


Clean and Green: Know about the Sun. The book written by Prof. Fujishima (For middle school students)

 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)


 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)

மேலும் உயர்கல்வி மாணவர்களுக்கு போட்டோ கேட்டலிஸ் பற்றிய அறிவியல் மற்றும் நுட்பங்களை ஜப்பானிய மொழியில் புத்தகமாகவும் எழுதி உள்ளார். எங்கள் மையத்திற்கு குறுகிய கால ஆய்வு செய்ய வரும் ஜப்பானிய இளம் அறிவியல் மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்த புத்த்கத்தினை படித்து விட்டு அடிப்ப்டை ஆராய்ச்சியில் களம் இறங்கி விடுகிறார்கள். இதுதான் தாய்மொழி வழி கல்வியின் பலம். இது போல் தமிழில் அறிவியல் நுட்பங்களுக்கு பல புத்தகங்களை பேராசிரியர் பெருமக்கள் எளிய நடையில் எழுத வேண்டும்.


 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

  Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)


இனி வரும் காலங்களில் நமது பாடப் புத்த்கங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்ற நமது விஞ்ஞானிகளது படைப்புகளை பாடத் திட்டத்தில் கொண்டு வரலாம். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் நோபல் பரிசு பெறும் அறிவியல் துறைகளின் சுருக்கங்களையும் நமது நடுநிலைப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் கொண்டு வரலாம்.

சமச்சீர் பாடத்திட்டமாகட்டும், சிபிஎஸ்சி பாடத்திட்டமாக இருந்தாலும் குழந்தைகளின் கற்பனைத் திறனை விளையாட்டுடன் ஊக்குவிக்க வில்லை எனில் மீண்டும் மீண்டும் நாம் கைதேர்ந்த அடிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப முடியுமே தவிர நம்மால் பிற்காலத்தில் நோபல் அறிவியலாளர்களை ஒரு போதும் உருவாக்க முடியாது. 

மக்கள் தொகையில் 10 மடங்கு சிறிய நாடான ஜப்பான் ஒவ்வொரு வருடமும் சராசரியாக நோபல் பரிசில் ஏதாவது  துறையில் குறைந்த பட்சம் ஒரு விருதாவது பெற்று விடும். ஜப்பானில் நோபல் பரிசு பெறும் அறிவியலாளருக்கு கோடிக்கணக்கில் அரசு பரிசாக வழங்கி சிறப்பிக்கிறது. இவர்கள் அந்த பணத்தினை கூட சொந்த விசயங்களுக்கு செலவிடாமல் மீண்டும் ஆராய்ச்சி திட்டத்திற்கு கொடுக்கிறார்கள். அதனைக் கொண்டு அந்த நோபல் அறிவியலாளர் தனது துறையினை ஜப்பான் முழுவதும் வியாபிக்கும் வகையில் பல பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். இதனால் நோபல் பரிசு பெற்ற துறையோடு அவரது அறிவும் பரவலாக எல்லோருக்கும் செல்கிறது. 

இந்தியா தனது நோபல் வரலாற்றில் அறிவியல் துறையில் பேராசிரியர் சர் சி வி இராமன் (1930) மற்றும் பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் மட்டும் பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தவிர இந்தியாவினை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் (2009) பெற்றுள்ளார். இவர்களுக்கு பின்னர் பெரிய வெற்றிடம் இன்னும் நிலவுகிறது. 

இந்த லட்சணத்தில் நாம் ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது  என கிண்டல் வேறு. 

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை, தாய்மொழியாய் கொண்ட இன்ன பிற நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ரஸ்யா போன்றவை மிக அதிகமான நோபல் பரிசுகளை வென்று தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. 





தாய்மொழி வழிக் கல்வியினை உதாசினப் படுத்தி போலி வேடம் போட்ட எந்த இனமும் உருப்பட்டதில்லை என்பதே இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பெரும் பாடம்.

எது எப்படியோ தாய்மொழி வழிக் கல்வியினை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி பாடத்திட்டத்தில்  எதிர்கால நுட்பங்களை பற்றி அறியும் வகையில் இருக்க வேண்டும் என இனியாவது அரசினை வலியுறுத்துவோம்.

சமீபத்தில் சமச்சீர் புத்தகங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படித்து பார்த்தேன். நல்ல பல தகவல்கள் இருப்பினும் பல முரண்கள் உள்ளது. உதாரணத்திற்கு  இந்தியாவின் ஒப்பற்ற கணித மேதை  இராமானுஜத்தின் எண்களியலில் அவர் செய்த மாய விளையாட்டுகளை (முடிவுறா எண் , பை  எண் உட்பட), அவை எவ்வாறு உலக அளவில் பல்வேறு பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை விளையாட்டு கணக்குகளாக கணித பாடப்பிரிவில் வைக்கலாம். அதை விடுத்து தற்போதைய ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இராமானுஜன் பற்றிய வரலாற்று ரீதியிலான சில தகவல்களை மட்டும் வைத்திருக்கின்றார்கள். நம்மவர்களின் அறிவினை கண்டு  வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். இங்கே ஜப்பான் நாட்டுக்காரன் இராமானுஜத்தினை தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். அவரது எண்ணியல் கோட்பாடுகளை விளையாட்டுகளாக குழந்தைகளுக்கு செய்து காண்பிக்கிறார்கள் (தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித அருங்காட்சிய ம் ).

 முக்கியமாக அரசியல்வாதிகளை குளிர்விக்கிறேன் பேர் வழி என அவர்களை பற்றிய செய்திகளை பாடப் புத்தகத்தில்  வருந்தி திணிப்பதும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் போது அவைகளை நீக்குகிறேன் என கோடிக்கணக்கில் பணத்தினை விரயம் செய்யும் கூத்துகளை உடனடியாக நிறுத்தவேண்டும். 

பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத் திட்ட விளக்கங்களுக்கு தேவையான மாதிரி வடிவங்களுக்கு நாம் இன்னும் மெனக் கெட வேண்டி உள்ளது. அரசு அதற்காக இன்னும் கூடுதல் பணம் செலவு செய்யலாம். இந்த விசயத்தில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். 

முக்கியமாக கவலைக் கிடமாக இருக்கும் அறிவியல் அருங்காட்சியகங்களை  (Science Museum) போர்க்கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும். இதை சரி செய்தால்தான் ஏன் என்ற கேள்விகளை கேட்டு சிந்திக்கும் தலைமுறையினை உருவாக்க முடியும். 

அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். 

Monday, 6 July 2015

மரத்தினை வாழ விடுங்கள் - Save Trees


சமீப காலமாக சாலையோரத்தில் உள்ள மரங்கள் மிக வேகமாக வெட்டி அழிக்கப்படுகின்றன. இவற்றிற்கு நாம் சொல்லும் காரணம் நகரமயமாக்கல். 

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூற்றாண்டுகள் கடந்த மரங்கள் உட்பட பழமையான மரங்கள் யாவும் வெட்டி அழிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளை பொதுமக்களாகிய நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்ந்து விடுகிறோம்.

சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின்  இலை சிறியதுதான் ஆனால் அது என்ன செய்யும் என்று தெரிந்து கொண்டால் அடுத்த முறை  சாலையோர மரங்களை வெட்டும் போது நிச்சயம் நீங்கள் தடுத்து நிறுத்துவீர்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி விட்ட இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு நச்சு புகையின் அளவும் சரிநிகராக அதிகரித்து விட்டது. இங்குதான் மரத்தின் இலைகள் தங்களது அற்புதமான புனித பணியினை மேற்கொள்கிறது. வாகனங்களில் இருந்து வெளி வரும் நச்சு புகையினை தான் எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கை என்னும் வேதி வினை மூலம் கார்பன் டை ஆக்சைடு வாய்வினை  நாம் சுவாசிக்கும் ஆக்சிசன் வாய்வினை பரிசாக வழங்குகிறது.இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மட்டுமல்ல தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியின் மூலம் கார்பன் டை ஆக்சைடு நச்சு வாயுக்கள் மனிதர்களுக்கு சுவாசிக்க பயன்படும் ஆக்சிசன் வாயுவினை தருகிறது


 வாகனம் மற்றும் தொழிற்சாலை கழிவு நச்சுகளில் கலந்துள்ள வாயுக்களையும் இந்த மரங்கள்தான் சுத்தகரிக்கின்றன. இது இல்லாவிட்டால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது இந்த நச்சு காற்று வளிமண்டலத்தில் உள்ள இதர கரிம நச்சுகளுடன் சேர்ந்து தரைமட்ட அளவிலான ஓசோன் படலத்தினை (Ground level ozone) உருவாக்கி விடும் ( இது நமது வளி மண்டலத்தின் மீது இருந்து நம்மை காக்கு ஒசோன் படலம் அல்ல).

தரைமட்ட அளவிலான ஓசோன் படலம் என்னவென்று விளக்கமாக சொல்கிறேன்.

வாகனங்களில் இருந்து வெளி வரும் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு மற்றும் இதர கரிம நச்சு வாயுக்களுடன் இணைந்து சூரிய ஒளியில் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் (O2) மூலக்கூறுகளை உடைக்க முடியாத O3 மூலக்கூறுககளாக மாறுவதே தரைமட்ட ஓசோன் படலம் எனப்படும். இதனை நம் நுரையீரலால் உடைக்க இயலாது. சொல்லப் போனால் மென்மையான நுரையீரல் கொண்ட நமது குழந்தைகளையும், பெரியவர்களையும் வெகுவாக பாதிக்கும்.


Ground level ozone layer formation


நம் தரை மட்ட அளவில் உருவாகும் இந்த நச்சு ஓசோன் படலம் நமக்கு தீராத நுரையீரல் நோய்களை தரும் மேலும் பயிர்களின் வளர்ச்சியினையும் கெடுக்கும். இதனால் ஆண்டு ஒன்றிற்கு பல இலட்சம் மரணங்களை  இந்த மோசமான வேதிவினை விளைவிக்க்கிறது.அதுமட்டுமல்ல அளவுக்கு அதிகமான சுற்றுப்புற சூழல் சீர் கேட்டினால் வளி மண்டலம் பாதிக்கப்படு அமில மழை பொழியும். இதெல்லாம் நம் நாட்டில் பெரு நகரங்களில் ஏற்கனவே நடக்கும் கொடுமைதான்.


சரி இந்த மரத்தின் இலைகள் செய்யும் வேலையினை நம்மால் செயற்கையாக விஞ்ஞானத்தின் மூலம் செய்ய முடியாதா என கேட்போருக்கு எமது ஆய்வின் மூலம் ஒரு தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

சாலையோர மரங்களில் உள்ள ஒரு இலையினை செயற்கையாக (artificial leaf) டைட்டானியம் டை ஆக்சைடு (TiO2) நானோ பூச்சுகள் மூலம்  1 செமீ அளவிற்கு செய்ய  குறைந்தது 100 ரூபாய் ஆகும்.  அப்படியே செய்தாலும் இலையின் அளவிற்கு திறனுடன் இந்த செயற்கை பூச்சுகள்  செயலாற்றுமா என்பதும் கேள்விக்குறியே. அப்படியென்றால் ஒரு மரத்தில் உள்ள இலைகளை கணக்கில் கொண்டால்  ஒவ்வொரு மரமும் சுத்திகரிப்பு பணியில் கோடிக்கணக்கில்   மதிப்பிட முடியாத பொக்கிசம்.


Photo courtesy: Salem Citizen Forum

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் பகுதியில் சாலையோரங்கள் மரங்கள் வெட்டப்படும்போது நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டே சென்றால் பின்னாளில் உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ நேரடியாகவும், மறைமுகமுகாவும் இந்த நச்சு காற்றினால் பாதிக்கப்படுவீர்கள்தானே.

இந்த மரங்கள் நம் சுற்றுப்புற சூழலில் நம்மைப் போலவே சம உரிமை படைத்த பறவைகளும் தங்கும் வீடுகள் ஆகும். அவர்கள் உரிமையின்றி அவர்களது வீடுகளை பறிக்கவும், இடிக்கவும் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

தயவு செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த கட்டுரையினை காண்பிக்கவும். எனக்கு அவர்களைப் பற்றிய அக்கறைதான் அதிகம்.


நன்றி:
இக்கட்டுரை எழுத காரணமாக இருந்த Salem Citizen's Forum மற்றும் நாணல் நண்பர்கள் குழுவினருக்கு நன்றி.




Saturday, 4 July 2015

சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் - சோலார் இம்பல்சு (Solar Impulse-II) வரலாற்றின் மைல் கல்


நேற்றைய நாள் ( 03, July 2015) சூரிய ஆற்றல் பயன்பாட்டிற்கான  (Solar Energy Utilization) செயல்பாடுகள் குறித்த புதுமையான முயற்சிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.


முற்றிலும் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஆற்றலினைக் கொண்டு  எரிபொருளே இல்லாமல் (Zero-fuel) வடிவமைக்கப்பட்ட சிறிய ரக விமானம் உலகை கடந்த நான்கு மாதம் வலம் வந்து கொண்டு இருந்தது. அதன் பெயர் சோலார் இம்பல்சு-II (Soar Impulse -II: Si2).

நேற்று உள்ளூர் நேரப்படி காலை  6:30 மணி அளவில் கவாய் (Hawai) தீவில் தரை இறங்கும் முன்பு அதன் விமானிகளான பெட்ரான்டு பிக்கார்டு (Betrand Piccard) மற்றும் ஆன்ட்ரு பொர்சுபெக்  (Andre Borschberg) இருவரின் கண்ணிலும் வெற்றியின் ஒளி கீற்று தெரிய ஆரம்பித்தது.




 சோலார் இம்பல்சு-II விமானம் கவாய் தீவில் இறங்குவதற்கு முன்பு


சோலார் இம்பல்சு-II விமானத்தின் விமானிகள் பெட்ரான்டு பிக்கார்டு (Betrand Piccard) மற்றும் ஆன்ட்ரு பொர்சுபெக்  (Andre Borschberg)


மார்ச் 9 ஆம் தேதி ஓமன் நாட்டின் மசுகட்டில் (Muscat) துவக்கப்பட்ட    இந்த நான்கு மாதத்தில் அவர்கள் சந்தித்த சவால்கள், வேதனைகள் யாவும் இன்னும் சிறிது நேரத்தில் வரலாற்றின் பக்கங்களில் எழுதப் பட இருக்கிறது என்கிற பெருமிதத்துடன் சோலார் இம்பல்சு-II விமானத்தினை கவாய் தீவில் கொனுலுலு பகுதியில் உள்ள கலிலோவா (Kalaeloa) விமான நிலையத்தில் தரை  இறக்கினார்கள்.

எரிபொருளற்ற விமானமாகிய சோலார் இம்பல்சு-II மூலம் மூலம் உலகை முதலில் வலம் வந்த சாதனையாளர்களாய் கவாய் தீவில் அவர்கள்  இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்களிடம் பெட்ரான்டு சொன்ன வார்த்தை இதுதான் "தற்போது புதுப்பிக்க தக்க ஆற்றல் மூலம் சவால் நிறைந்த கடினமான பணிகளை செய்ய இயலாது என எவரும் கூற  மாட்டார்கள்" .  சூரிய ஆற்றலின் செயல்பாடு என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சமூகத்தில் நிலவி வரும் பொதுவான நம்பிக்கையினை உடைக்கவே அவர் அவ்வாறு கூறினார். உண்மையில்  சூரிய ஆற்றலைக் கொண்டு இத்தகைய சாதனைகளை செய்ய இயலுமா  என்று உலகமே  வாய் பிளக்க வைக்கும்  இந்த விமானத்தின் சாதனைதான் என்ன?

அதை கீழ்கண்ட பத்தியில் காண்போம்

சுற்றுப்புற சூழல் மாசு சீர்கேட்டினால் உலகமே பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இன்றைய சூழலில் மரபு சாரா, புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் பயன்பாடுகள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  அமைக்கப்பட்ட பயணம்தான், சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் சிறிய ரக சோலார் இம்பல்சு-II விமானத்தின் நோக்கம். 

இதற்கான திட்டத்தினை சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி  பெட்ரான்டு பிக்கார்டு   தீட்டினார். பிறகு, உலகின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களோடு கூட்டு ஆராய்ச்சி மூலம் 80 பொறியாளர்களை கொண்டு இவ்விமானத்தினை வடிவமைத்தார். 

இதன் சோதனை ஓட்டமாக முதலில் வடிவமைக்கப்பட்ட சோலர் இம்பல்சு-I விமானம் ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றினை 2009 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டிற்குள் வேறு வேறு கால கட்டங்களில் பல்வேறு தூரங்களை பரிசோதனைகளின் அடிப்படையில்  கடந்தது. இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்களை கொண்டு தற்போது இருக்கும் சோலார் இம்பல்சு -II விமானத்தினை இக்குழுவினர் வடிவமைத்தனர்.

சோலார் இம்பல்சு விமானத்துடன் வெற்றிக்குழுவினர்

இந்த விமான பயணம் ஊர் கூடி இழுத்த தேர் என்றுதான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய நிபுணர் குழு (Mission Control Center) தரையில் இருந்த படியே 24 மணி நேரமும் விமானத்தின் போக்கினை கண்காணித்து குறிப்பிட்ட நிறுத்தங்களில் இறங்குவதற்கும், சரியான பருவ நிலைக்கு தக்கவாறு பயணிக்கவும் பெரிதும் உதவி புரிந்துள்ளனர். 

சோலார் இம்பல்சு-II  தனது பயணத்தில் பல ருசிகரமான இடங்களை கடந்து பயணித்துள்ளது. பெர்சிய வளைகுடாவின பாலைவனங்கள், இந்தியாவின் அச்சமூட்டும் பருவ கால நிலை, பர்மிய கோயில்கள், சீனப் பெருஞ்சுவர், மற்றும் உலகின் இரு பெருங்கடல்கள் (பசிபிக் மற்றும் அட்லாண்டிக்) ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.



Route Map -Solar Impulse -II




இதன் பயணத்தில் இந்தியா, சீனா, மியான்மர், ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் நிறுத்தம் செய்து அங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுடன் உரையாடி எதிர் காலத்தில் மாசற்ற நுட்பங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வினை தூண்டியுள்ளனர்.  

கடைசி நிறுத்தப் பயணமான ஜப்பானில் பருவ கால  சாதகமின்மையினால் நகோயா (Nagoya) நகரத்தில் ஒரு வாரமாக தங்கி இருந்து பின்னர் இறுதி இலக்கான கவாய் தீவினை (6500 கிமீ) நான்கு நாட்கள் 22 மணி நேரம்  இரவும் பகலும் தொடர்ந்து பயணம் செய்து அடைந்தனர். இது உலகின் இடைநில்லா (non stop) விமான பயணத்தில் ஒரு சாதனையாகும். 

விமானத்தில் பறந்து சாதிப்பது என்ன ஒரு பெரிய சவாலா என நினைப்பவர்கள் எனது சோலார் இம்பல்சு விமானம் குறித்த முதல் கட்டுரையினை படித்தால் அதில் பறப்பதில் உள்ள சவால்கள் புரியும்.

http://vedichi-sudhagar.blogspot.jp/2015/03/solar-powered-plane-takes-off-in-first.html

வெறும் மூன்று கன மீட்டர் அளவே உடைய விமான அறையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரண்டு விமானிகள் பயணிப்பதென்பது எத்தனை கடின செயல் என்று நமக்கு சொல்லி புரியவேண்டியதில்லை. 

இத்தையக கடினமான பயணங்கள் நமக்கு சொல்லும் பாடங்கள் ஒன்றுதான் விடா முயற்ச்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் உலகையே வலம் வர முடியும். முதலில் இவ்விமானம் பயணிக்கத் துவங்கிய போது இதன் இறகுகள் விமான ஓடுதளத்தினை விட பெரிதாக இருக்கிறதே இது எங்கே பறக்க போகிறது என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். 

மிக மோசமான பருவ கால சூழ்நிலையில் பயணத்தினை தொடர முடியாத நிலையில் கூட இதன் பிரதான விமானி பதட்டப் படாமல் தெளிவாக சிந்தித்து பொறுமையாக செயலாற்றியதும்  கூட இதன் சாதனைக்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்

சூரிய மின் சக்தியினைக் கொண்டு   விமானத்தின் மூலம் உலகையே வலம் வரும் போது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு பதில் சூரிய மின் சக்தியினை  பயன்படுத்துவதன் மூலம் எதிர் கால சந்ததிகளுக்கு ஆற்றல் வளத்தினை சேமித்து வைக்க இயலும். 

முக்கியமாக சிறிய ரக வாகனங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயக்கப்படு மானால்  பெட்ரோலிய எரிபொருட்கள் மூலம் ஏற்படும் விரும்பதகாத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டினை   தடுக்க இயலும். 

கடுமையான சவால்களுக்கு இடையில்  நான்கு மாதமாக இவ்விமானத்தினை திறம் பட இயக்கிய விமானிகளுக்கும் அதன் குழுவினருக்கும் நமது வாழ்த்துகளை சொல்வோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 

சோலார் இம்ப்லசு விமானத்தினை பற்றிய கீழ்கண்ட சுட்டியில் எனது முதல் பதிவினை படிக்கலாம் 

http://vedichi-sudhagar.blogspot.jp/2015/03/solar-powered-plane-takes-off-in-first.html

சோலார் இம்பல்சு விமான பயணம் குறித்த சுவையான தகவல்கள்

1. இதன் முதல் பயணம் ஓமன் நாட்டின் மசுகட் நகரில்  இருந்து  இந்தியாவின் அகமதாபாத் வரை துவங்கியது. இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவான 1468 கி.மீ தூரத்தினை நேர் கோட்டில் பயணித்து உலக சாதனை புரிந்தது


2. இந்த விமானத்தின் இறக்கைகள் (72 meter) மிகப் பெரிய போயிங் ரக (Boeing 747) விமானத்தின் இறக்கைகளை விட நீளமானது. ஆனால் அதன் இறக்கைகளின் எடையினை போயிங் இறக்கைகளோடு ஒப்பிடும் போது ஒரு சதவிகிதமே. 

3. சோலார் இம்பல்சு குறித்த திட்ட வடிவம் பன்னிரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

4. பகலில் சூரிய ஒளியின் கிடைக்கப்பெறும் மின் சக்தியின் மூலமும்,  மீதமாக மின்கலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மின் சக்தியின் மூலம் இரவிலும் தொடந்து 24 மணி நேரமும் இயக்கவல்லது.

5. இந்த விமானத்தின் வேகம் 45 கிமீ/மணி ஆகும். இது ஒரு சிறிய மொபட் வண்டியின் வேகத்தினை விடவும் குறைவே. 

6. இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்ட 17000 சோலார் மின் கலங்கள்  சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி லித்தியம் மின் கலங்களில் (633 Kg) சேமித்து வைக்கிறது

7. பறக்கும்போது சராசரியாக தரையில் இருந்து 15000 அடி உயரத்திலும் அதிக பட்சமாக 25000 அடி உயரத்திலும் பறக்க வல்லது 



Wednesday, 1 July 2015

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான  டிரான்சிஸ்டர் ஒரு நினைவூட்டல்


இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவுற்ற பிறகு, மிகச் சரியாக அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (July 01, 1948, ) இதே நாளில்தான் அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பெல் நிறுவனம் திரிதடையம் (Transistor) பற்றிய தங்கள் வடிவமைப்பினை உலகிற்கு அதிகார பூர்வமாக அறிவித்தனர்.

மிகச் சிறந்த இயற்பியலாளர்கள், வேதியலாளர்கள் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு  திண்ம நிலை எலக்ட்ரானியல் (Solid State Electronics)  ஆராய்ச்சிக்கு என்று ஒரு தனிக் குழுவினை 1940 களில் பெல் நிறுவனம் உருவாக்கியது (இந்நிறுவனத்தினை துவக்கியவர் தொலைபேசியினை கண்டுபிடித்த கிராம் பெல் ஆவார்).

இக்குழுவினை மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி வில்லியம் சாக்லீ (William Shockley)  தலைமை தாங்கி வழி நடத்தினார். இக்குழுவில் சான் பார்டீன் (John Bardeen), வால்ட்டர் பிராட்டேய்ன் (Walter Brattain) உள்ளிட்ட பன்னிரென்டு பேர் பணி புரிந்தனர்.

சுமார் பதினோரு ஆண்டுகள் கழித்து இம்மூவரும் 1956 ஆம் ஆண்டு "குறைக்கடத்திகள்  தொடர்பான அவர்களின் ஆய்வுகள் மற்றும் டிரான்சிஸ்டர் விளைவு " கண்டுபிடிப்பிற்காக கூட்டாக இயற்பியல் பிரிவில் நோபல் பரிசினை பெற்றனர்.

இக்கண்டுபிடிப்பு எலக்ரானியல் துறையில் ஏற்பட்ட மிகப் பெரிய புரட்சிக்கு வித்திட்டது என்பது வரலாறு. அதே வேளையில் இக்கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த வணிக நோக்கிலான பயன்பாடு பல்வேறு  குழப்பங்களை இக்குழுவில் ஏற்படுத்தின. அதனைப் பற்றி பெரிய புத்தகமே போடாலாம்.

பெல் நிறுவனத்தின் டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பிற்கு முன்பே இலிலியன்பெல்டு (Julius Edgar Lilienfeld)  என்ற ஆத்திரிய நாட்டினை சேர்ந்த இயற்பியலாளர் காப்புரிமை பெற்றிருந்தார். ஆனால் நடைமுறையில்  செயலாற்றும் வகையில் டிரான்சிஸ்டர்கள் பற்றி அவர் எந்த ஆய்வு கட்டுரையினையும்  வெளியிடவில்லை
ஆதலால் வரலாற்றில் அவருக்கு கிடைக்க வேண்டிய மிகப் பெரிய இடம் நழுவிப் போனது.


பெல் நிறுவனத்தில் வில்லியம் சாக்லீ,  சான் பார்டீன்  , மற்றும் வால்ட்டர் பிராட்டேய்ன் .


முதல் டிரான்சிஸ்டர் தொடுகை முனை அமைப்பில் (Point-Contact Transistors) வடிவமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பில் செருமானியம் (Germanium) படிகங்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போதைய கால கட்டத்தில்  இதற்கு முன் புழக்கத்தில் இருந்த வெற்றிட குழாய்களை (vacuum tube) ஒப்பிடும் போது இது  எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்களை ) வேகமாக கடத்தியது.




செருமானிய படிகங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் டிரான்சிஸ்டர்


அண்மையில் சப்பானில் உள்ள உயனோ தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓர் அடி  அளவில் இருந்த வெற்றிடக் குழாய் மாதிரியினைப் பார்த்த போது தலையே சுற்றி விட்டது. இதனைக் கொண்டு கணக்குகள் போடும் எனியாக்கு (ENIAC- Electronic Numerical Integrator And Computer) என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய கணிப்பொறியை உருவாக்கி இருந்தார்கள். அது ஓர் அறை அளவிற்கு இருந்தது. இதனையும்  அந்த அருக்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள்.  அக்காலகட்டத்தில் இதனைக் கொண்டு கணக்கீடுகள் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்தது.

ஆனால் இதன் எடையும், அளவும் இன்றைய நகத்தின் அளவே உள்ள டிரான்சிஸ்டரை ஒப்பிடும் போது இதன்  பின்னால் எத்தனை அறிவியலாளர்களின் உழைப்பு உள்ளதெனப் புரிந்து கொள்ள முடிந்தது.



Vacuum tube used in Japan technologies during 1940 (Photo taken at Ueno National Science Museum).


1950-களுக்குப் பிறகு டிரான்சிஸ்டர்கள் வடிவமைப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் தொடக்க புள்ளியாக சாக்லீ அவர்களது இடைச்செருகல் அமைப்பான (''சான்ட்விச்சு'' அமைப்பிலான) பி-என் வகை டிரான்சிஸ்டர்கள் (Sandwich p-n junction transistor) புழக்கத்திற்கு வர ஆரம்பித்தன.

டிரான்சிஸ்டர்களை அளவில் சுருக்கி (miniaturization) எப்படி மிகச்சிறிய வடிவத்தில் செய்யலாம் என தெக்சாசு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பொறியாளர்களான சேஅக்கு கில்பி (Jack St. Clair Kilby), இ ராபர்ட்டு நாய்சு (Robert Noyce) ஆகிய இருவரும் இணைந்து ஒருங்கிணைந்த மின் சுற்றுகளை  (integrated circuits- IC) வடிவமைத்து டிரான்ஸிஸ்டர்களின் பயன்பாட்டினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவினர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு சேஅக்கு கில்பி அவர்களின் ஒருங்கிணைந்த மின்சுற்று ( Integrated Circuits)  கண்டுபிடிப்புக்கும் அதன்வழி நிகழ்ந்த தகவல் தொடர்பு நுட்ப வளர்ச்சியில் ஆற்றிய  முக்கிய பங்கிற்காக இயற்பியல் பிரிவில் நோபல் பரிசினை பெற்றார்.






சமகாலத்தில் இந்த ''ஐசி''-களில் (IC) பயன்படுத்தப்படும் டிரான்சிட்டர்களின் அளவு சுருக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றை ஆண்டுகளுக்கும் டிரான்சிட்டர்களின் எண்ணிக்கை அதே இடத்தில்  இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கார்டன் மூர் (Gordon Moore) என்பவர் முற்கூறினார். இது மூர் விதி (Moor's Law) என்று அழைக்கப்படுகிறது.

Moor's Law prediction 


மிகப் பெரிய ஆச்சரியம் இன்றைய கணினியின் மூளையாகப் பயன்படும் நடுச்செயலி (மைக்ரோபிராசசர்) நுட்பத்தில் இந்த ஐசிக்களில் டிரான்சிஸ்டர்களின் பயன்பாடு ஏறத்தாழ மூர் சொன்னபடியே ஒத்துப் போகிறது. இந்த மூர் வேறு யாரும் அல்ல தற்போது  உலகப் புகழ் பெற்ற இன்ட்டெல் நிறுவனத்தின் (Intel Corporation) நிறுவனர்களில் ஒருவரானவரே.


2000 ஆம் ஆண்டிற்கு பிறகு நானோ நுட்பவியலில் ஏற்பட்ட புரட்சி டிரான்சிஸ்டர்களின் வடிவமைப்பில் புதிய பரிணாமங்களைக் கொண்டு வந்துள்ளது. நானோ அளவிலான குறைகடத்தி பூச்சுகளால் ஒரு செமீ அளவில் இலட்சக் கணக்கான டிரான்சிஸ்டர்களை கொள்ளும் அளவிற்கு அளவில் சுருக்கப்பட்டு விட்டது. 



தற்போது கிராஃபின் நானோ பூச்சுகள் (atomic scale graphene coatings) நானோ அளவினை விடவும் சிறுத்து மூலக்கூறு அளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நினைவகங்களின் (Memory Storage Devices) கொள்ளும் அளவீடு தெராபைட்டுகள் (ஆயிரம் கிகாபைட்டு) அளவினையும் தாண்டி இன்னும் பயணிக்கும். 

மேலும் நெகிழ் தன்மையுடைய எலக்ட்ரானிக்குச் சுற்றுகளில் டிரான்சிஸ்டர்களின் பயன்பாடுகள் (Flexible Electronic Circuits) தற்போது ஆய்வில் உள்ளன. இவை வெற்றி பெரும் என்றால் உடலில் பொருத்தி கொள்ளும் மருத்துவ கருவிகள் நகத்தின் அளவே உள்ள ஒட்டுத்துண்டுகளாக  (ஸ்டிக்கர்களாக) சந்தையில் கிடைக்கும். நெகிழ் எலக்ட்ரானிக்குச் சுற்றுகள் (Flexible Electronics) மூலம் மருத்துவ துறையில் சாதனங்களை வடிவமைப்பதில் இல்லினாய்சு பல்கலைக் கழக்கத்தின் பேராசிரியர் சான் உரோச்சர்சு (Prof. John A Rogers) சில வருடங்களில் நோபல் பரிசு வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 Wearable flexible electronic devices designed by Prof John A Rogers.


ஒரு வரலாற்றையே புரட்டி போட்ட டிரான்சிஸ்டரின் அளவு சிறுத்துக் கொண்டே போனாலும் அதன் புகழ் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்பது மெய்தான் போலும்.

குறிப்பு:

முதல் டிரான்சிஸ்டரை வடிவமைத்த நோபல் அறிவியலாளர் சாக்லீ 1956 ல் பெல் நிறுவனத்தில் இருந்து வெளியேறி சாக்லீ செமிக்கண்டக்டர்சு (Shockley Semiconductors Laboratory) என்ற நிறுவனத்தினை துவக்கினார். அதன் துணை நிறுவனமான பெக்மென் இன்ஸ்ட்ரூமென்ட்ன்ஸ் நிறுவனமே இன்று கலிபோர்னியா மாகானத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் துவக்கப்பட்ட முதல் குறைகடத்தி (Semiconductor) நிறுவனம் ஆகும்.





நன்றி:
இக்கட்டுரையினை அழகுற செம்மைப் படுத்தி,  திருத்தி தந்த பேராசிரியர் இரா. செல்வகுமார் ஐயா (வாட்டர்லூ பல்கலைக் கழகம், கனடா)  அவர்களுக்கு எமது நன்றிகள்.