Friday 17 July 2015


ஒரு சந்திப்பும் எனது அனுபவமும்

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் நானோ நுட்பவியல் (Nanotechnology) இந்தியாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட தருணம் ஒரு புதிய மயக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் வெகு சில ஆராய்ச்சி கூடங்களில் (IISC, IIT, C.S.I.R, NCL) மட்டும் நானோ பருப் பொருள் பற்றிய‌ ஆராய்ச்சியினை முன்னெடுத்திருந்தனர். 


எனது எம்.பில் பட்ட ஆராய்ச்சி (சூரிய மின் கலங்களுக்கான டைட்டானியம் டை ஆக்சைடு மென் ஏடுகள்) முடித்து 2003 ஆம் ஆண்டு வாக்கில் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை செய்வதற்கான ஆய்வு தலைப்பினை தேடிக் கொண்டிருந்த போது, எனது ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் இரா. சத்திய மூர்த்தியும், எங்களது ஆய்வுக் குழுவில் இருந்த மூத்த ஆராய்ச்சியாளர் அண்ணன் முனைவர் செந்தில் அரசுவும் என்னை நானோ நுட்பவியல் பக்கம் கவனத்தினை செலுத்த சொன்னார்கள். ஏனெனில் அப்போது வழமையான மென் ஏடுகளில் (thin films technology) எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. 



எமது ஆய்வகத்தில் முனைவர் செந்தில் அரசு அண்ணா, மற்றும் முனைவர் சந்திரமோகன் மாம்ஸ் (middle) உடன்

நானோ நுட்பவியல் ஆராய்ச்சிக்கு தேவையான புதுமுக‌ புத்தகங்களோ, ஆய்வுக் கட்டுரைகளோ கிடைக்காத  சூழலில் எங்கு இருந்து ஆய்வினை துவக்குவது, எந்த புத்தகத்தினை படித்தால் புரிந்து கொள்ளலாம் என நான் அலையாத இடம் இல்லை. அப்போதைய சூழலில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னையில் இருக்கும் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் உள்ள நூலகங்கள்தான். 

அப்போது கிடைத்த புத்தகங்கள்  
1. Encyclopedia of Nanoscience and Nanotechnology. Editor Hari Nalwa Singh.
2.Introduction to Nanoscience and Nanotechnology, Chris Binns, Wiley Publishers.
இன்னும் சில புத்தகங்களின் பெயர் நினைவில் இல்லை


தற்போது உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்துல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. ஆகையால் இன்டர்நெட் கடைகளுக்கு சென்று ஆய்வு சுருக்கத்தினை இணையத்தில் தேடி ஆய்விதழின் தகவல்களை எடுத்துக் கொண்டு பெங்களூருவிற்கு புறப்பட்டு விடுவோம். ஏறத்தாழ வேட்டைக்கு செல்லும் மனோ நிலையில்தான் மனசு இருக்கும்.  

காலையில் நூலகத்திற்குள் சென்று அந்த குறிப்பிட்ட ஆய்விதழ் இருக்கும் அறை, மற்றும் அலமாரியினை கண்டுபிடிக்க மதியம் ஆகி விடும். ஒரு வழியாய் குறிப்பிட்ட வருடத்திற்கான ஆய்விதழில் நமக்கு தேவைப்படும் ஆய்வுத்தாள் உள்ள பக்கங்களை நமக்கு முன்பே வந்திருக்கும் சில பிரகஸ்பதி ஆராய்ச்சிளார்களை கையோடு கிழித்து எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். 
இன்னும் சில புல்லட் பாண்டிகள் வருடத்தினை மாற்றி ஒளிய வைத்துவிடுவார்கள். பல லட்சம் ஆராய்ச்சியாளர்கள் பொக்கிசமாக தேடி அலையும் ஆராய்ச்சிக் கட்டுரைககளின் பக்கங்களை  ஒரு சில குறுகிய மனம் படைத்தவர்கள் செய்யும் வேலையால் அதன் மூலத்தினை தேடி பல வருடங்கள் அலைந்த அனுபவமும் உண்டு. 

தற்போது 100 வருடங்கள் பழமையான ஆய்விதழின் கட்டுரைகளை கூட எல்லா ஆய்வு இதழ் பதிப்பக நிறுவனங்கள் ஒளி நகல் எடுத்து இணையத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.  

2003-2005 ஆண்டு வாக்கில் நானோ அளவிலான‌ குறைகடத்திகள் பற்றிய எனது ஆராய்ச்சியினை தொடங்கிய போது நிறைய ஆய்வு கட்டுரைகள் உலக அளவில் வரத் தொடங்கி இருந்தன. ஆனால்  நானோ குறைகடத்திகள் மூலம் செறிவூட்டப்பட்ட டைட்டானியம் ஆக்சைடுகளை கொண்ட சூரிய மின் கலங்கள்  (Quantum Dot sensitized Solar Cells) தயாரிப்பதற்கான ஆய்வுக் கட்டுரைகள் விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே இருந்தது. 

அப்போது எனக்கு கிடைத்த மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று ஜப்பானில் உள்ள பேராசிரியர் தரோ தோயாத்தா (Prof. Taro Tayota,The University of Electro-Communications in Tokyo, Japan)  அவர்களுடையது.  என் ஆய்விற்குத் தேவையான அடிப்படை வேதி வினை தரவுகளை அவரது கட்டுரையில் இருந்தே கையாள ஆரம்பித்தேன்.  முக்கியமாக‌, உலோக ஆக்சைடு சுவர்களில் பூசப்பட்ட நானோ குறைகடத்திகளின்  மீது வெளிச்சத்தினை கொண்டு செறிவூட்டப்படும்போது உருவாகும் எலக்ட்ரான் மற்றும் துளைகளின் நீடித்த வாழ்நாள் திறன் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் இத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். 


பேராசிரியர் தொயோத்தா தற்போது ஒய்வு பெற்ற பின் அதே ஆராய்ச்சி மையத்தில் கொளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார்.  நேற்று அவரை தனிப்பட்ட முறையில் ஒரு கூட்டு ஆராய்ச்சிக்காக அவரை சந்திக்க கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். 

 மனிதர் 70 வயதிலும் சுறு சுறுப்பாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். நெடு நேரம் அவரோடு உரையாடிய போது,  அவரது ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவிற்கு எனது ஆய்விற்கு உதவின என சொன்னபோது மிகவும் நெகிழ்ந்து போனார். தன் ஆய்வுக் கட்டுரையினை நினைவு கூர்ந்தமைக்கு பல முறை நன்றி கூறினார். 

தன் அனுபத்தில் இருந்து நிறைய தரவுகளை, நுணுக்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆல விருட்சத்தின் அடியில் சிதறிக் கிடக்கும் பழங்களை கொத்தி தின்னும் சிறு கிளியானேன் நான். 

உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டபோது என்னை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு அவர் என் பின்னால் நின்று கொண்டார். வயதில் என் தந்தையினை விட மூத்தவர். அவரிடம் நான் கற்பதற்கு இன்னும் நிறைய இருப்பதாகவே தோன்றியது. 


Me with Prof. Taro Tayota (left), Prof. Qing Shen (right) and Prof. Sixto Gimenez (sitting right) at The University of Electro-Communications in Tokyo, Japan

உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை, நான் அதிகம் நேசித்த ஒரு பேராசிரியரின் கட்டுரை இன்று அவரின் அருகிலேயே நிற்க‌  வைத்திருக்கிறது. 

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல் கல்விதான் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.


யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

No comments:

Post a Comment