Sunday 12 July 2015



நீந்தும் ஓவிய மீன்கள் -  Digital Fish Tank


நம்ம வீட்டு குட்டீசுகளுக்கு வண்ண ஓவியம் தீட்டுதல் என்றால் கொள்ளை ஆசை. சில வேலைகளில் வீட்டு சுவர்களிலும் கூட தங்கள் கைவண்ணத்தினை காட்டி நம் இரத்த அழுத்தத்தினை அதிகரித்து விடுவார்க‌ள்.

இனி குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி உங்களை கோபப் பட வைக்க மாட்டார்கள். அதற்கு ஒரு வழியினை ஜப்பானிய பொம்மை நிறுவனமாகிய  டகாரா டோமி ஆர்ட்சு (Takara Tomi Arts Inc.) கண்டுபிடித்துள்ளது.

 குழந்தைகள்  வரையும் வண்ண மீன் ஓவியங்கள் நீரில் நீந்த தொடங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையினை இந்நிறுவனம் நிஜமாக்கியுள்ளனர். இப்படி ஒரு நிழல் மீன் தொட்டியினை ஆப்பிள் திறன் கைபேசியில் உள்ள செயலாக்கிகள் (Picturerium Application)மூலம் வடிவமைத்துள்ளனர். 


இன்று நோதா நகரத்தில் டாய்சரசு (Toysarus) பொம்மை கடைக்கு சென்ற போது இந்த மாத புது வரவாக இதனை விற்பனைக்கு வைத்திருந்தனர்.










அப்படி இதில் என்ன விசேசம் என்கிறீர்களா?

இந்நிறுவனம் வழங்கும் சிறு பிரத்யோக அட்டைகளில் நம் குழந்தைகள் மீன்களை அவர்கள் விருப்பம் போல் வரைந்து வண்ணம் தீட்டி வைத்து கொள்ள வேண்டும். 

பிறகு அவர்கள் கொடுக்கும் சிறு மீன் தொட்டி ஒன்றின் மீது உங்கள் ஆப்பிள் திறன் பேசியினை (காமிரா வெளிப்புறம் தெரியும் படி) வைத்து விட்டு, குழந்தைகள் வரைந்த வண்ண மீன்களை காமிராவின் மீது காட்டி ஸ்கேன் எடுத்து விட்டால் போதும். இந்த பொம்மை மீன்கள் சிறிது நேரத்தில் இந்த நிழல் மீன் தொட்டிக்குள் அங்கும் இங்கும் நீந்த ஆரம்பித்து விடும். இது பார்ப்பதற்கு அசல் உண்மையான மீன் தொட்டியினைப் போலவே இருப்பதால் குழந்தைகளின் உற்சாகத்திற்கு கேட்க அளவே இருக்காது.

இந்த மீன்கள் நீந்துவதோடு மட்டுமில்லாமல் இரையும் தின்னும். அதற்கான உண்ணும் பொருட்களையும் குழந்தைகள் வரைந்து விட்டால் இதே போன்று அவற்றினையும் தொட்டிக்குள் செலுத்தி விடலாம். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறன் நிச்சயம் அதிகரிக்கும். வண்ண ஓவியங்கள் அவர்கள் கண் எதிரே உயிர் பெற்று ஓடுவதால் அவர்களின் உலகம் இன்னும் விரிவடையும்.   











இவை எல்லாம் முப்பரிமாண (3D) படங்களை உருவாக்கும் தற்போதைய ஓளி உமிழ் விளக்குக  (LED) நுட்பத்தில்  ஏற்பட்ட புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.   

ஒரு வேளை இந்த வண்ண மீன்கள் வரையும் பிரத்யோக அட்டைகள் தீர்ந்து விட்டால் பிரச்சினை இல்லை. இந்த ஆப்பிள் செயலிகளில் இருந்து தரவிறக்கம் செய்து வேண்டும் அளவிற்கு அச்சிட்டு கொள்ளலாம்.  



இதில் உள்ள பிரச்சினை நம் கைபேசியினை இனி அவர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நம் கைபேசியினை கொடுக்க விருப்பமில்லை எனில் நம் வீட்டில் உள்ள கணிப்பொறி திரையினையே மீன் தொட்டியாக மாற்றி அவர்கள் விளையாடலாம்.


இதற்கான காணொளி விளக்கத்தினை கீழ் காணும் சுட்டியில் காணலாம்.
https://www.youtube.com/watch?t=95&v=LDPHWz9UADQ


ஆப்பிள் செயலிகள் தரவிறக்கம் செய்ய‌
 https://itunes.apple.com/us/app/picturerium/id965771489?mt=8

இதன் விலை ஜப்பானில் 1834 யென் (~946 ரூபாய்). வெளி நாட்டு இணைய சந்தைகளில் 45 டாலர் (~3000 ரூபாய்). மூன்று மடங்கு விலை அதிகம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு இந்த டிஜிட்டல் மீன் தொட்டிகள் குட்டீசுகள் மத்தியில் பெரும் கிராக்கியினை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

No comments:

Post a Comment