Thursday, 30 July 2015


ஒரு பேராசானின் இறுதிப் பயணம் - The last journey of a great teacher  

நோபல் அறிவியளார்கள்,உலகின் தலை சிறந்த பொருளாதார மேதைகள், மிகச் சிறந்த நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் தங்கள் எல்லைகளை கடந்து  சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளமும், வாழ்வியல் அடிப்படைத் தேவைகளும் மிகச் சிறப்பாக கொடுத்து அவர்களை கெளரவிக்கின்றது. 

சரி இவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய‌ சம்பளத்திற்கு என்னதான் பணி? மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டுமா, அவர்களது தேர்வுத் தாளை திருத்த வேண்டுமா. எதுவுமே கிடையாது. வேறு என்னதான் செய்ய வேண்டும்? மாணவர்களோடு உரையாட வேண்டும், அவர்களது அனுபவங்களை பகிர வேண்டும். இதன் மூலம் அந்நாட்டின் மனித வள மேம்பாடு வளர்ச்சியடையும் என அவர்கள் கருதுகிறார்கள். மேதமை தாங்கிய இந்த முதிர்ந்தவர்களிடம் கிடைக்கப்பெறும் அறிவாயுதத்திற்கே அவர்கள் பெரும் தொகையினை செலவிடுகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில்தான் மேதகு அப்துல் கலாம் ஐயாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதரு பேராசிரியர் பதவிகள் அவரை தேடி வந்தன. அவற்றினை எல்லாம் நம் தாய் நாட்டிற்காக புறந்தள்ளி விட்டு நம் மண்ணிலேயே தங்கி, தன் 84 வயதிலும் இடையறாது இந்தியா முழுக்க பயணித்து பல லட்சம் மாணவர்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தேசிய ஆராய்ச்சி கூடங்களிலும் நேரில் சந்தித்து உரையாடினார். அதன் சாட்சியே இந்த இரண்டு நாட்களில் சமூக தளங்களிலும், பொது வெளிகளிலும் பகிரப்படும் புகைப்படங்கள்.  ஒரு எளிமையான பேராசானின் பயணத்திற்க்கு இதுவே சாட்சி

மக்களை வசீகரிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் அவரிடம் இல்லை. கேட்பவர்களை கிண்டலடிக்கும் பெரிய நகைச்சுவை துணுக்குகள் இல்லை. பிறகு எப்படி இத்தனை லட்சம் மாணவர்கள் அவரது பேச்சில் கட்டுண்டார்கள்.  அதற்குக் காரணம், தேசமுன்னேற்றத்திற்காக அவரிடம் இருந்த அக்கறை.   அந்த தகுதிதான் மாணவர்களிடம் அவரை கொண்டு சென்றது.

இல்லறத் துணை இல்லாமல் தன் முதுமை காலத்திலும்  சுய ஒழுக்கம் தவறாது இந்த நாட்டையே சுற்றி வந்த ஒரே ஆன்மா கலாம் அவர்கள்.  கலாம் ஐயா மறைந்த பிறகு இந்த இரண்டு நாட்களில் அவர் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை காணும் போது எதார்த்தத்தில் இந்த தேசம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது. இதே வயதில் இத்துணை செயல்பாடுகளை கடந்து வருவீர்களாயின் நீங்கள் அவரை விமர்சிக்க கட‌வீர்களாக. 

மிகச் சிறந்த போராளிகள், இலக்கியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பொது வெளியில் அறியப்பட்டவர்களிடம் அவர் போய்ச் சேரவே இல்லை என்பதனை என்னால் உணர முடிகிறது. ஒரு வேளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். புல்லாங்குழலின் வழியே பயணிக்கும் காற்று முழுமையும் அதனை நிரப்ப இயலாது, ஆனால் அதன் துளைகளே அதனை இசைக்கிறது. அதைப் போலவே, உங்களின் விமர்சனங்கள் வழியே அவர் இன்னும் அதிகமாய் மக்களிடம் போய் சேருவார், என நம்புகிறேன்.

இச்சமூகத்திற்கு அவரது பங்களிப்பினை தனிக் கட்டுரையாக எழுதலாம், ஒரு ஆராய்ச்சியாளனாக இந்தியாவின் தற்போதய அறிவியல் வளர்ச்சியில் அவரது பங்கினை நானறிந்த வகையில் ஓரிரண்டு விசயங்களை பகிர விரும்புகிறேன். 

ஐஐடிகளும், தேசிய அறிவியல் ஆய்வகங்களிம் மட்டும்தான் மிகப் பெரிய ஆய்வு திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்பிக் கொண்டிருந்த கால கட்டம் அது. அப்போதுதான், கலாம் அவர்கள் இராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி கழகத்தின் செயலராக இருந்த போது, இந்த நாட்டில் உள்ள எல்லா கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் உள்ள பேராசிரியர்களுக்கு அடிப்படை அறிவியல் மற்றும் நுட்ப ஆராய்ச்சிக்கான உதவித் தொகை வழங்கவும், புதிய பல திட்டங்களையும் கொண்டு வந்தார். இதனால் இன்று பல ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர்.  இந்தியாவிற்கென பிரத்யோக நுட்பங்கள் இந்த மண்ணிலேயே வடிவமைக்கப்படும் என நம்பியவர். 

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எந்த மாதிரியான ஆராய்ச்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை மிக நுட்பமாக ஊகிக்கும் வல்லமை பெற்றவர். அதனை மாணவர்களிடமும் வலியுறுத்தினார். என் நினைவில் தெரிந்த வரை 2005ல் இருந்து 2007 ஆம் ஆண்டிற்குள்  தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கின் ஆய்வு சுருக்கம் புத்த‌கத்தில் முகவுரை எழுதியிருந்தார். அதில் அவர் நம் தேசத்தின் எதிர்கால ஆராய்ச்சி என வலியுறுத்தியது " விண்ணில் இருந்து சூரிய ஒளியில் மின்சக்தியினை உற்பத்தி செய்து கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் பூமிக்கு மைக்ரோவேவ் நுட்பம் மூலம் எப்படி கொண்டு வருவது" என்பதே. இந்த நுட்பம் உண்மையில் சாத்தியம் ஆகுமா என்று நான் ஆச்சரியப் பட்டேன். 

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் விண்வெளி கழகமும் (JAXA), மிட்சுபுசி நிறுவனமும் இணைந்து உலகின் முதல் முறையாக மைக்ரோவேவ் நுட்பத்தின் மூலம் 1.8 கி.மீ தொலைவில் இருந்து மின்சாரத்தினை கம்பியில்லாமல் மைக்ரோவேவ் நுட்பத்தின் அடிப்படையில் 10 கிலோவாட் மின்சாரத்தினை கடத்தி சாதித்து காட்டியுள்ளனர். ஜப்பான் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்துறையில் வெகு தூரம் முன்னேறி இருக்கும் என்பது உறுதி. அப்போதும் நம்ம ஊர் உளுந்த பருப்புகள் விமர்சனம் என்ற பெயரால் வேகாத பருப்பை நசுக்கி கொண்டு இருப்பார்கள்.  தமிழ்ப் பிள்ளைகளே இவர்களை உதறித் தள்ளி விட்டு மக்களுக்கு தேவையான அறிவியலை முன்னெடுத்து செல்லுங்கள்.

கலாம் அடிப்படையில் பறப்பியல் நுட்ப வல்லுநர், ஆயினும் தான் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் ஆற்றல் தேவை எதிர் காலத்தில் தீர்க்க இயலாத சிக்கலாக இருக்கும் என்று கணித்திருந்தார். புதிய ஆற்றல் உற்பத்திக்கான‌ மூலங்களை இந்தியா உருவாக்க வேண்டிய கட்டாயத்தினை  தொடந்து வலியுறுத்தினார். இந்தியாவின் பரந்து பட்ட மக்கள் தொகையினை சமாளிக்க தேவைப்படும் மிகையான மின் ஆற்றல் உற்பத்தியினை அணு மின் உலை மூலம் பெற முடியும் என நம்பினார். அவரிடம் இருந்து கருத்தளவில் நான் நிறைய வேறுபடுகிறேன். ஆனால் ஒரு போதும் கலாம் இந்தியாவில் சூரிய மின் ஆற்றல் தொடர்பான எந்த ஆராய்ச்சி திட்டத்தினையும் குறை கூறியதோ, தடுத்ததோ இல்லை.   

இன்னும் பல ஆண்டுகாலம் இந்த மாமேதை வாழ்ந்திருந்தால் பல லட்சம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார். அவரை சந்திக்க வேண்டி காத்திருக்கும் பல லட்சம் மாணவர்களது கேள்விகளுக்கு அவரின் வாழ்க்கையே விடையாக கிடைக்கும் என எண்ணுகிறேன். 

எங்களுக்கு சிந்திக்க தெரிந்த காலத்தில் நாங்கள் நம்பிக்கையற்று இருந்தோம். தாய் மொழியில் படித்த எங்களுக்கு எதிர்காலம் சூன்யமாய் தெரிந்தது. நீங்கள் எங்களிடையே வந்தீர்கள், நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம். எதிர்கால இந்தியாவில் எம் மாணவர்கள் உன் பெயரால் பெரும் எழுச்சி மிகுந்த தேசத்தினை கட்டி எழுப்புவார்கள் என்பது உறுதி.

எங்கள் ஆசானின் இறுதி யாத்திரைக்கு மாணவர்களாகிய எங்கள் இதய கமலங்களில் இருந்து பூக்கள் தந்து வழி அனுப்புகிறோம். 

உமது ஆன்மா வல்ல பரம்பொருளின் மடியில் உறங்கட்டும்.





(மேதகு கலாம் ஐயா  அஞ்சலி செலுத்தும் வகையில் எங்களது மூத்த சகோதரரின்   இளைய புதல்வன் ஆதித்தன் (15 வயது) வரைந்த கோட்டோவியம் )


No comments:

Post a Comment