Monday 6 July 2015

மரத்தினை வாழ விடுங்கள் - Save Trees


சமீப காலமாக சாலையோரத்தில் உள்ள மரங்கள் மிக வேகமாக வெட்டி அழிக்கப்படுகின்றன. இவற்றிற்கு நாம் சொல்லும் காரணம் நகரமயமாக்கல். 

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூற்றாண்டுகள் கடந்த மரங்கள் உட்பட பழமையான மரங்கள் யாவும் வெட்டி அழிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளை பொதுமக்களாகிய நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்ந்து விடுகிறோம்.

சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின்  இலை சிறியதுதான் ஆனால் அது என்ன செய்யும் என்று தெரிந்து கொண்டால் அடுத்த முறை  சாலையோர மரங்களை வெட்டும் போது நிச்சயம் நீங்கள் தடுத்து நிறுத்துவீர்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி விட்ட இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு நச்சு புகையின் அளவும் சரிநிகராக அதிகரித்து விட்டது. இங்குதான் மரத்தின் இலைகள் தங்களது அற்புதமான புனித பணியினை மேற்கொள்கிறது. வாகனங்களில் இருந்து வெளி வரும் நச்சு புகையினை தான் எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கை என்னும் வேதி வினை மூலம் கார்பன் டை ஆக்சைடு வாய்வினை  நாம் சுவாசிக்கும் ஆக்சிசன் வாய்வினை பரிசாக வழங்குகிறது.இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மட்டுமல்ல தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியின் மூலம் கார்பன் டை ஆக்சைடு நச்சு வாயுக்கள் மனிதர்களுக்கு சுவாசிக்க பயன்படும் ஆக்சிசன் வாயுவினை தருகிறது


 வாகனம் மற்றும் தொழிற்சாலை கழிவு நச்சுகளில் கலந்துள்ள வாயுக்களையும் இந்த மரங்கள்தான் சுத்தகரிக்கின்றன. இது இல்லாவிட்டால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது இந்த நச்சு காற்று வளிமண்டலத்தில் உள்ள இதர கரிம நச்சுகளுடன் சேர்ந்து தரைமட்ட அளவிலான ஓசோன் படலத்தினை (Ground level ozone) உருவாக்கி விடும் ( இது நமது வளி மண்டலத்தின் மீது இருந்து நம்மை காக்கு ஒசோன் படலம் அல்ல).

தரைமட்ட அளவிலான ஓசோன் படலம் என்னவென்று விளக்கமாக சொல்கிறேன்.

வாகனங்களில் இருந்து வெளி வரும் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு மற்றும் இதர கரிம நச்சு வாயுக்களுடன் இணைந்து சூரிய ஒளியில் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் (O2) மூலக்கூறுகளை உடைக்க முடியாத O3 மூலக்கூறுககளாக மாறுவதே தரைமட்ட ஓசோன் படலம் எனப்படும். இதனை நம் நுரையீரலால் உடைக்க இயலாது. சொல்லப் போனால் மென்மையான நுரையீரல் கொண்ட நமது குழந்தைகளையும், பெரியவர்களையும் வெகுவாக பாதிக்கும்.


Ground level ozone layer formation


நம் தரை மட்ட அளவில் உருவாகும் இந்த நச்சு ஓசோன் படலம் நமக்கு தீராத நுரையீரல் நோய்களை தரும் மேலும் பயிர்களின் வளர்ச்சியினையும் கெடுக்கும். இதனால் ஆண்டு ஒன்றிற்கு பல இலட்சம் மரணங்களை  இந்த மோசமான வேதிவினை விளைவிக்க்கிறது.அதுமட்டுமல்ல அளவுக்கு அதிகமான சுற்றுப்புற சூழல் சீர் கேட்டினால் வளி மண்டலம் பாதிக்கப்படு அமில மழை பொழியும். இதெல்லாம் நம் நாட்டில் பெரு நகரங்களில் ஏற்கனவே நடக்கும் கொடுமைதான்.


சரி இந்த மரத்தின் இலைகள் செய்யும் வேலையினை நம்மால் செயற்கையாக விஞ்ஞானத்தின் மூலம் செய்ய முடியாதா என கேட்போருக்கு எமது ஆய்வின் மூலம் ஒரு தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

சாலையோர மரங்களில் உள்ள ஒரு இலையினை செயற்கையாக (artificial leaf) டைட்டானியம் டை ஆக்சைடு (TiO2) நானோ பூச்சுகள் மூலம்  1 செமீ அளவிற்கு செய்ய  குறைந்தது 100 ரூபாய் ஆகும்.  அப்படியே செய்தாலும் இலையின் அளவிற்கு திறனுடன் இந்த செயற்கை பூச்சுகள்  செயலாற்றுமா என்பதும் கேள்விக்குறியே. அப்படியென்றால் ஒரு மரத்தில் உள்ள இலைகளை கணக்கில் கொண்டால்  ஒவ்வொரு மரமும் சுத்திகரிப்பு பணியில் கோடிக்கணக்கில்   மதிப்பிட முடியாத பொக்கிசம்.


Photo courtesy: Salem Citizen Forum

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் பகுதியில் சாலையோரங்கள் மரங்கள் வெட்டப்படும்போது நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டே சென்றால் பின்னாளில் உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ நேரடியாகவும், மறைமுகமுகாவும் இந்த நச்சு காற்றினால் பாதிக்கப்படுவீர்கள்தானே.

இந்த மரங்கள் நம் சுற்றுப்புற சூழலில் நம்மைப் போலவே சம உரிமை படைத்த பறவைகளும் தங்கும் வீடுகள் ஆகும். அவர்கள் உரிமையின்றி அவர்களது வீடுகளை பறிக்கவும், இடிக்கவும் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

தயவு செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த கட்டுரையினை காண்பிக்கவும். எனக்கு அவர்களைப் பற்றிய அக்கறைதான் அதிகம்.


நன்றி:
இக்கட்டுரை எழுத காரணமாக இருந்த Salem Citizen's Forum மற்றும் நாணல் நண்பர்கள் குழுவினருக்கு நன்றி.




No comments:

Post a Comment