Tuesday, 7 July 2015


 ஜப்பான் கல்வியில் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது - 3


எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின்   தலைவரும், எமது சர்வதேச போட்டோகேட்டலிஸ்ட் மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசுசிமா (Akira Fujishima) அவர்களது நேர்காணல் அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) செய்தி இதழான சி&என் (C&En) பத்திரிக்கையில் வந்துள்ளது.



பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை


பேராசிரியர் புசுசிமாவின் நேர்காணல் கட்டுரை

கடுமையான பணிகளுக்கு இடையில்  எவ்வாறு தனது நேரத்தினை சரியான முறையில் திட்டமிட்டு உழைக்கிறார்  என இந்த நேர்காணலில் சொல்லப் பட்டிருக்கும். 

இந்த நேர்காணலில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஜப்பானின் அறிவியல் வளர்ச்சிக்கு  பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் அறிவியலை வளர்ப்பது ஒன்றுதான் தங்களது தேசத்தினை எதிர்காலத்தில் வளப்படுத்தும் என திடமாக கூறியுள்ளார். இதற்கு ஜப்பானில் பெற்றோரின் ஒத்துழைப்பும் நன்கு உள்ளது. 

வார இறுதியில் நான் இங்குள்ள அறிவியல் அருங்காட்சியகங்களுக்கு செல்லும்போது அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்து பொறுமையுடன் அவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கின்றனர். குழந்தைகளின் அறிவியல் திறனை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாதது. 

இன்றைக்கு சீனாவில் இருந்து பள்ளி மாணவர்கள் அவருடன் உரையாட வந்திருந்தனர். அப்போது அவர்களோடு பேசுகையில் பேராசிரிய புசுசிமா பகிந்து கொண்ட மற்றொரு விடயம் ஆச்சரியம் அளித்தது. தனது கண்டுபிடிப்பான போட்டோகேட்டலிஸ்ட்கள் பற்றிய  கண்டுபிடிப்புகள்   மற்றும் அடிப்படை அறிவியலை ஜப்பானின் நடு நிலைப் பள்ளிகளில் பாடத்திட்டமாக வைத்துள்ளார். இதற்கான வாய்ப்பினை ஜப்பான் அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. கனகாவா  (Kanagawa) மாவட்டத்தில் போட்டோகேட்டலிஸ்ட் அருங்காட்சியகத்தினை அரசின் உதவியுடன் உருவாக்கி உள்ளார் (http://kanagawa-travel-info.com/english/special_report/1475). பள்ளிக் குழந்தைகளுக்கு  சூரியனைப் பற்றியும் அதன் பயன்பாடுகளையும் எளிய முறையில் புரியும் படி கார்ட்டூன் வடிவில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இப்புத்தகம் தற்போது ஆங்கிலம், சீனம், ரஸ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


Clean and Green: Know about the Sun. The book written by Prof. Fujishima (For middle school students)

 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)


 From the book "Clean and Green: Know about the Sun". The book written by Prof. Fujishima (For middle school students)

மேலும் உயர்கல்வி மாணவர்களுக்கு போட்டோ கேட்டலிஸ் பற்றிய அறிவியல் மற்றும் நுட்பங்களை ஜப்பானிய மொழியில் புத்தகமாகவும் எழுதி உள்ளார். எங்கள் மையத்திற்கு குறுகிய கால ஆய்வு செய்ய வரும் ஜப்பானிய இளம் அறிவியல் மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்த புத்த்கத்தினை படித்து விட்டு அடிப்ப்டை ஆராய்ச்சியில் களம் இறங்கி விடுகிறார்கள். இதுதான் தாய்மொழி வழி கல்வியின் பலம். இது போல் தமிழில் அறிவியல் நுட்பங்களுக்கு பல புத்தகங்களை பேராசிரியர் பெருமக்கள் எளிய நடையில் எழுத வேண்டும்.


 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

  Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)

 Photocatalyst Book written by Prof. Fujishima (for higher education students)


இனி வரும் காலங்களில் நமது பாடப் புத்த்கங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்ற நமது விஞ்ஞானிகளது படைப்புகளை பாடத் திட்டத்தில் கொண்டு வரலாம். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் நோபல் பரிசு பெறும் அறிவியல் துறைகளின் சுருக்கங்களையும் நமது நடுநிலைப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் கொண்டு வரலாம்.

சமச்சீர் பாடத்திட்டமாகட்டும், சிபிஎஸ்சி பாடத்திட்டமாக இருந்தாலும் குழந்தைகளின் கற்பனைத் திறனை விளையாட்டுடன் ஊக்குவிக்க வில்லை எனில் மீண்டும் மீண்டும் நாம் கைதேர்ந்த அடிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப முடியுமே தவிர நம்மால் பிற்காலத்தில் நோபல் அறிவியலாளர்களை ஒரு போதும் உருவாக்க முடியாது. 

மக்கள் தொகையில் 10 மடங்கு சிறிய நாடான ஜப்பான் ஒவ்வொரு வருடமும் சராசரியாக நோபல் பரிசில் ஏதாவது  துறையில் குறைந்த பட்சம் ஒரு விருதாவது பெற்று விடும். ஜப்பானில் நோபல் பரிசு பெறும் அறிவியலாளருக்கு கோடிக்கணக்கில் அரசு பரிசாக வழங்கி சிறப்பிக்கிறது. இவர்கள் அந்த பணத்தினை கூட சொந்த விசயங்களுக்கு செலவிடாமல் மீண்டும் ஆராய்ச்சி திட்டத்திற்கு கொடுக்கிறார்கள். அதனைக் கொண்டு அந்த நோபல் அறிவியலாளர் தனது துறையினை ஜப்பான் முழுவதும் வியாபிக்கும் வகையில் பல பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். இதனால் நோபல் பரிசு பெற்ற துறையோடு அவரது அறிவும் பரவலாக எல்லோருக்கும் செல்கிறது. 

இந்தியா தனது நோபல் வரலாற்றில் அறிவியல் துறையில் பேராசிரியர் சர் சி வி இராமன் (1930) மற்றும் பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் மட்டும் பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தவிர இந்தியாவினை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் (2009) பெற்றுள்ளார். இவர்களுக்கு பின்னர் பெரிய வெற்றிடம் இன்னும் நிலவுகிறது. 

இந்த லட்சணத்தில் நாம் ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது  என கிண்டல் வேறு. 

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை, தாய்மொழியாய் கொண்ட இன்ன பிற நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ரஸ்யா போன்றவை மிக அதிகமான நோபல் பரிசுகளை வென்று தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. 





தாய்மொழி வழிக் கல்வியினை உதாசினப் படுத்தி போலி வேடம் போட்ட எந்த இனமும் உருப்பட்டதில்லை என்பதே இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பெரும் பாடம்.

எது எப்படியோ தாய்மொழி வழிக் கல்வியினை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி பாடத்திட்டத்தில்  எதிர்கால நுட்பங்களை பற்றி அறியும் வகையில் இருக்க வேண்டும் என இனியாவது அரசினை வலியுறுத்துவோம்.

சமீபத்தில் சமச்சீர் புத்தகங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படித்து பார்த்தேன். நல்ல பல தகவல்கள் இருப்பினும் பல முரண்கள் உள்ளது. உதாரணத்திற்கு  இந்தியாவின் ஒப்பற்ற கணித மேதை  இராமானுஜத்தின் எண்களியலில் அவர் செய்த மாய விளையாட்டுகளை (முடிவுறா எண் , பை  எண் உட்பட), அவை எவ்வாறு உலக அளவில் பல்வேறு பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை விளையாட்டு கணக்குகளாக கணித பாடப்பிரிவில் வைக்கலாம். அதை விடுத்து தற்போதைய ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இராமானுஜன் பற்றிய வரலாற்று ரீதியிலான சில தகவல்களை மட்டும் வைத்திருக்கின்றார்கள். நம்மவர்களின் அறிவினை கண்டு  வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். இங்கே ஜப்பான் நாட்டுக்காரன் இராமானுஜத்தினை தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். அவரது எண்ணியல் கோட்பாடுகளை விளையாட்டுகளாக குழந்தைகளுக்கு செய்து காண்பிக்கிறார்கள் (தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித அருங்காட்சிய ம் ).

 முக்கியமாக அரசியல்வாதிகளை குளிர்விக்கிறேன் பேர் வழி என அவர்களை பற்றிய செய்திகளை பாடப் புத்தகத்தில்  வருந்தி திணிப்பதும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் போது அவைகளை நீக்குகிறேன் என கோடிக்கணக்கில் பணத்தினை விரயம் செய்யும் கூத்துகளை உடனடியாக நிறுத்தவேண்டும். 

பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத் திட்ட விளக்கங்களுக்கு தேவையான மாதிரி வடிவங்களுக்கு நாம் இன்னும் மெனக் கெட வேண்டி உள்ளது. அரசு அதற்காக இன்னும் கூடுதல் பணம் செலவு செய்யலாம். இந்த விசயத்தில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். 

முக்கியமாக கவலைக் கிடமாக இருக்கும் அறிவியல் அருங்காட்சியகங்களை  (Science Museum) போர்க்கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும். இதை சரி செய்தால்தான் ஏன் என்ற கேள்விகளை கேட்டு சிந்திக்கும் தலைமுறையினை உருவாக்க முடியும். 

அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். 

No comments:

Post a Comment