Wednesday, 22 July 2015


சூரிய மின் சக்தியில் இயங்கும் கண்காணிப்பு விளக்குகள் - Solar powered motion lights


நமது வீட்டின் வராந்தா, கொல்லைப் புறம், மொட்டைமாடி, அல்லது ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஆனால் பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வெகுவாக விரயம் ஆக வாய்ப்புள்ளது. சரி பணத்தினை சேமிக்காலாம் என விளக்கை அணைத்து விட்டால் அந்நியர்கள் யாரேனும் வீட்டினுள் பிரவேச்சிப்பது தெரியாது. 

சரி, மின்சாரமும் சிக்கனம் ஆக வேண்டும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். இப்படி இரண்டு அனுகூலங்களையும் பெற  ஒரே வழி  நடமாட்ட நுணர்வினைக் கொண்டு இயங்கும் தானியங்கி விளக்குகள் (motion controlled lighting) அமைப்பதுதான். இவ்விளக்குகள் சிறிய அசைவுகளை நுணர்விகள் மூலம் அறிந்து, ஆள் நடமாட்டத்தின் போது தானாகவே எரியும் வகையில் நுணர்விகள் (sensors) மூலம் மின் சுற்றில் மாற்றிகளை (switch) கொண்டு இயங்குகிறது.

இவ்வகையில்  அமைக்கப்படும் மின்சார விளக்குகள் வெளிநாடுகளில் மிகப் பிரசித்தம். அதுவும் பொதுக் கழிவறைகள், மக்கள் அதிகம் புழங்காத தெருக்களில் இவைகளை நிறுவுவதன் மூலம் தொடர்ந்து விளக்கு எரியாமல் , தேவைப்படும் போது அல்லது மனித நடமாட்டத்தின் போது மட்டும் எரிய வைக்கப் படுகிறது. இதன் மூலம் பெரும் மின் சக்தி சேமிக்கப்படுகிறது. 

தற்போது இதே நுட்பத்தினை பயன்படுத்தி, சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தியினை பெறப்பட்டு நடமாட்ட‌ நுணர்விகள் மூலம் எரியும் தானியங்கள் எல் ஈ டி விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளது. சொல்லப் போனால் வீட்டின் வெளிப்புறங்களில் பயன்படுத்தப்படும் தானியங்கி விளக்குகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாகும். 

தற்போது சந்தையில் (Sunforce Products, Japan) வந்துள்ள இந்த சூரிய மின் சக்தியில் இயங்கும்  நடமாட்ட நுணர்வு விளக்குகளில் உள்ள மேம்பட்ட பயன்களைக் கொஞ்சம் பார்ப்போம். 

வழமையான சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில்,  காப்பர் இன்டியம் கேலியம் சல்பைடு (CIGS) மென் ஏடுகள் பூசப்பட்ட சூரிய மின் கலங்கள் (CIGS amorphous thin film solar cells, 1 W, 6 Volts)  நல்ல தேர்வு.  ஏனெனில் சிலிக்கான் சோலார் பேனல்கள் சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக வைக்க வேண்டும். ஆனால் மென் ஏடுகள் மூலம் தயாரிக்கப்படும் சூரிய மின்கலங்கள்  அவ்வாறான கட்டுபாடுகள் இல்லாமால் ஓரளவிற்கு சூரிய வெளிச்சம் படும் எல்லா கோணங்களிலும் மின் சக்தியினை உற்பத்தி செய்ய வல்லது. 

எனவே வீட்டின் வெளியே எல்லா இடங்களிலும் இவ்விளக்குகளை எளிமையாக பொருத்திக் கொள்ளலாம். மேலும் சிலிக்கான் சோலார் பேனல்களை ஒப்பிடும் போது இதன் எடையும் குறைவு. இதனுடன் இணைக்கப்பட்ட நேர் மின்னோட்டத்தில் (DC) இயங்கும் 80 SMD எல் ஈ டி (Light Emitting Diodes) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது 60 வாட் குண்டு பல்பின் வெளிச்சத்திற்கு இணையானது (800 Lumens). 

Solar powered motion lights


CIGS amorphous solar panel


இந்த மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்கள் 10 வருடத்திற்கு சிறப்பாக இயங்க வல்லது. DC யில் இயங்கும் எல் ஈ டி விளக்குகள் குறைந்த பட்சம் 50,000 த்தில் இருந்து ஒரு லட்சம் மணி வரை இயங்க வல்லது. அப்படியானால் நீங்கள் ஒரு பத்து வருடத்திற்கு விளக்குகளை மாற்றத் தேவையில்லை. குறைந்த எடையில் அதிக சிக்கல் இல்லாத வடிவமைப்பு. ஆகையால் உங்கள் வீட்டில் நாட்காட்டிகளை மாட்டுவது போல் தேவைப்படும் இடங்களில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம்.

விலை என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்களா பாஸ். 

இதோட விலை இங்க ஜப்பான்ல 4500 யென் (இந்திய மதிப்பில் 2300 ரூபாய்). தரமான எல் ஈ டி விளக்குகள், சூரிய மின் கலங்கள், பாட்டரிகள் கொண்டு வழங்கப்படும் இந்த விளக்குகளை இன்னும் கொஞ்சம் பிரயத்தனப் பட்டால் நம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அருமையாக வடிவமைத்து எளிமையான வடிவில் சந்தைப் படுத்தலாம். 


அப்படியே உங்கள் இல்லங்களிலும் இந்த விளக்குகளை பயன்படுத்தி ஆற்றல் வளத்தினை எதிர்கால சந்ததியினருக்கு சேமியுங்கள். 

சுய தொழில் முனையும் ஆர்வம் உள்ள பொறியியல் பட்டதாரிகள் இது போன்ற சூரிய மின் சக்தியில் இயங்கும் தானியங்கி, பாதுகாப்பு விளக்குகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வகையில்  வடிவமைப்பில் இறங்கினால் வெற்றி நிச்சயம். 

(சுத்தமாக மின்சார வசதியே இல்லாத ஆப்ரிக்கா நாட்டில் இது போன்ற நடமாட்ட நுணர்விகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட எல் ஈ டி விளக்குகள் மூலம் தனது கால்நடைகளையும், சிங்கங்களையும் ஒரு சிறுவன் காப்பாற்றியுள்ளான். அவனது கதையினை கீழே படியுங்கள்)


 கொசுறு செய்தி:

ஆப்ரிக்கா சமவெளியில்  வசிக்கும் (கென்யா, நைரோபி) பழங்குடிகளுக்கு கால் நடை மேய்ப்புதான் பிரதான தொழில். நைரோபி தேசிய வனவிலங்கு பூங்காவின் அருகில் உள்ள சிறு கிராமம் கிடென்செலா  (Kitengela). இங்குள்ள மசாய் (maasai) மக்களுக்கு பெரிய தலைவலியே இரவு நேரத்தில் வன விலங்குகள் குறிப்பாக சிங்கங்கள் இந்த கால் நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதுதான். 

அதனால் சில நேரங்களில் இந்த மக்கள் சினம் கொண்டு கூட்டமாக சென்று அந்த சிங்கங்களை சில நேரங்களில் கொல்வதும் உண்டு. இதனை கண்ட  கிராமத்து பள்ளி மாணவன் ரிச்சர்ட்டு (Richard Turere) மக்களிடம் இருந்து சிங்கங்கள் கொல்லப்படுவதையும், அதே நேரம் சிங்கங்கள் ஆடு மாடுகளை கொல்வதையும் தடுக்க பல வழிகளை முயற்சித்துப் பார்த்தான்.   

முதலில் மாட்டின் சாணங்களை கொண்டு சோளக் கொல்லை பொம்மை போல செய்து பார்த்தான், சிங்கங்கள் அச்சப்படுவதாக தெரியவில்லை. ஒரு நாள் தன் வீட்டு தொலைக் காட்சி பெட்டியினை உடைத்து எப்படி வெளிச்சம் வருகிறது விட்டு விட்டு வருகிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இத்தனைக்கும் அவன் வயது பதினொன்று மட்டுமே. ஆனால் அவன் தந்தை கோபப் படாமல் அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பக்க பலமாக நின்றுள்ளார். 

இறுதியாக‌ ஒரு உத்தியினை கையாண்டான்.  தன் கிராமத்தில் கிடைத்த பழைய பொருட்களை கொண்டு (இரு சக்கர வாகனத்தில் இருந்து கிடைத்த பாட்டரி, வயர்) சிறிய வடிவிலான சோலார் பேனல் (அவன் தந்தையிடம் சொல்லி வெளியில் இருந்து வாங்கியது) ஆகியவற்றினை கொண்டு நடமாட்ட நுணர்விகள் மூலம் இயங்கும் மின்னும் எல் ஈ டி விளக்குகளை (flashing LED lights) இரவில் அமைத்தான். ஆச்சரியம் சிங்கங்கள் இந்த விளக்குகளை கண்டு அச்சப்பட்டு கால் நடை பட்டிகளை இரவு நேரத்தில் தாக்கவில்லை. பிறகு அருகில் உள்ள பட்டிகளுக்கும் இதே உத்தியினை கையாண்டு சோலார் பேனல்களை கொண்டு இயங்கும் மின்னும் எல் ஈ டிகளை இயக்கி அவர்களது கால்நடைகளையும் பாதுகாத்துள்ளான். இந்த நுட்பம் சிறிதுதான் ஆனால் இதனை கொண்டு வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவைகளை விரட்ட இந்த‌ எளிமையான வழியினை இதற்கு முன் யாரும் அங்கு முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் சிறப்பே.  இந்த விளக்குகளுக்கு ரிச்சர்டு சூட்டிய பெயர் சிங்க விளக்குகள் (Lion Lights).

கிராமத்து பள்ளியில் பயிலும் இந்த மாணவனுக்கு இந்த அறிவியல் நுட்பங்களை யார் சொல்லிக் கொடுத்தது என வியப்பாக உள்ளதா? ரிச்சர்டு தனது பள்ளியில் உள்ள  சிறிய‌ நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்தே தனது கண்டுபிடிப்பிற்கான அடிப்படை வழிகளை பெற்றுள்ளான். இந்த பரிசோதனையின் வெற்றிக்கு பிறகு கென்யா முழுவதும் தற்போது ரிச்சர்டின் இந்த சிறு கண்டுபிடிப்பானது பயன்படுத்தப்படுகிறது. 

பிறகு  இந்த விளக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் விட்டு விட்டு எரியும் விளக்கு சமிக்ஞைகளால் (flashing lights) சிங்கங்கள் பயப்படுகின்றன, அதே சமயம் அணையாமல் எரியும் விளக்குகளை  கண்டு அவை ஒரு போதும் அச்சப் படுவதில்லை என்ற உண்மையினை கண்டு பிடித்தனர். 

இனது  நுட்பத் திறமையினை மேலும் வளர்க்கும் பொருட்டு அங்குள்ள சர்வதேச பள்ளி ஒன்று அவனை தற்போது தத்து எடுத்து படிக்க  வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இவனது திறமை உலக அளவில் பாராட்டப்படும் வகையில் மிகச் சிறந்த ஆளுமையாளர்களை வரவழைத்து பேச வைக்கும் TED மேடை ரிச்சர்டினை பேச வைத்து கெளரவம் செய்தது. 

சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள் அன்று இதே மேடையில் இவனுடன் பேசிய ஆளுமைகள் யார் தெரியுமா. அமெரிக்காவின் மிகச் சிறந்த கணிப்பொறி நிபுணர் Sergey Brin, இவர் வேறு யாருமல்ல கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். ஒரு சிறுவனின் கண்டுபிடிப்பு அவனை உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளோடு மேடையினை பகிரும் வகையில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மதிப்பெண்கள் மட்டும் பெறுகின்ற வெறும் ஏட்டுக் கல்வி ஒரு போதும் உயர்த்தாது என்பதனை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 
எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆப்ரிக்க கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனால் சூரிய மின் சக்தியினை கொண்டு விளக்குகளை அமைக்கும் போது நம் ஊரில் ஏன் இந்த விளக்குகளை எளிய முறையில் வடிவமைக்க முடியாது. 

மற்றொன்று பள்ளிக் குழந்தைகள் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என முயற்சிக்கும் போது தயவு செய்து அவர்களது கற்பனைத் திறனுக்கு தடுக்காதீர்கள். ஏனெனில் அப்படி ஒரு ரிச்சர்டு தடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு ஆப்ரிக்காவில் குறைந்தது ஆயிரம் சிங்கங்களும் பல்லாயிரக் கணக்கான கால்நடைகளும் இறந்திருக்கும். 

ரிச்சர்டின் இந்த கண்டுபிடிப்பு நமக்கு சொல்லும் மற்றொரு பாடம், நம் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் நூலக வசதி உள்ளதா, அங்கு தினமும் நம் குழந்தைகள் படிக்க புத்தகங்கள் கொடுக்கிறார்களா என நம்மை கேட்க வைத்திருக்கிறது. நூலகத்தினை பயன்படுத்தும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக, பண்பட்டவராக வர முடியும் என்பதற்கு ரிச்சர்டு ஒரு நல்ல உதாரணம். 

அரசியல்வாதிகளை விளித்து ஊர் சுவற்றினை நாசம் செய்யும் பக்தர்கள், ரோட்டில் நடிகர்களை வாழ்த்தி பிளக்ஸ் வைக்கும் புண்ணியவான்கள், பால் அபிசேகம் செய்யும் ரசிக குஞ்சுகள் உங்கள்  அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல் திறனை வளர்க்கும் பத்து புத்தகங்களை அங்குள்ள நூலகத்திற்கு வாங்கி கொடுங்கள். எதிர் கால சந்ததியினர் நம் சமூகத்திற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொண்டு வர அது மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும். 

மாணவன் ரிச்சர்டு மேடையில் பேசிய காணொளியினை காண கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். எளிய ஆங்கிலத்தில் அவன் பேசும் அழகே தனி. முடிந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லது அருகில் உள்ள குழந்தைகளுக்கு இந்த காணொளியினை காண்பிக்கவும். அவனது கதையினை அவர்களுக்கு சொல்லுங்கள்.

https://www.youtube.com/watch?v=RAoo--SeUIk

மேலும் சூரிய மின் சக்தியின் பயன்பாடுகளை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.