Sunday, 23 April 2017


ஆர்வ மிகுதியும் அபத்த புரிதல்களும்  - பாலிஸ்டைரீன் மிதவை அட்டைகள்- வைகை அணை

கடும் கோடை வறட்சியினால் மழை பொய்வின்றி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே எச்சரித்து இருந்தார்கள்.

வழமையினை மீறிய சூரிய வெப்பத்தால் நீர் நிலைகளில் இருந்து அதிகமாகவே நீர் ஆவியாகும் அடிப்படை அபாய சிக்கல் நீர் மேலாண்மை பணியில் ஈடுபட்டு இருக்கும் பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் முன் கூட்டியே என்ன மாதிரியான நடவடிக்கையினை இந்த ஆண்டு எடுத்துள்ளார்கள் என்பதுதான் இப்போதைய நம் கவலை.

ஆகையால் ஏரி, குளம், அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் இருக்க நவீன நுட்ப வழிமுறைகளை பற்றி தற்போது சிந்தித்தே ஆக வேண்டும். இந்த சூழலில்தான் வைகை அணையில் கையிருப்பில் இருக்கும் அணை நீரை கோடை வெப்பத்தில் ஆவியாகமல் இருக்க அதன் மேல் பரப்பில் பாலி ஸ்டைரீன் (Polystyrene) என்னும் பாலிமர் வேதிப் பொருளால் செய்யப்பட்ட நுரைப் பொருளாகிய தெர்மோகோல்  நிறுவனத்தின் அட்டைகளை, வெப்ப தடுப்பு மிதவை களாக‌   நீரின் மேல் மிதக்க விடும் திட்டத்தை  சோதனைக்கு முன்பாகவே பத்திரிக்கையாளர்களுக்கு  காட்டுகிறேன் பேர்வழி என‌   சங்கடப்பட்டு நிற்கிறார். 

வைகை அணையில் நீர் ஆவியாகமல் இருக்க தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடும் திட்டத்தைனை அமைச்சர் செல்லூர் ராஜீ துவங்கி வைத்த போது எடுத்தபடம். 
திட்டம் துவக்கிய சில மணி நேரத்தில் தெர்மோகோல் அட்டைகள் கரை ஒதுங்கிய போது எடுத்த படம்


தெர்மோகோல் அட்டைகள் மூலம் நீர் ஆவியாகாமல் தடுக்கும் திட்டத்தினை நீர்த் தேக்கங்களில் சோதித்து வெற்றி கண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

நீரின் மேல் பரப்பில் மிதக்கும்  பாலிஸ்டைரீன் மென் அட்டைகளை பயன்படுத்தும் போது திட்டத்திற்கான செலவு, காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்குமா, நீரில் கடுமையாக அலைகள் ஏற்படும் போது அவை தாக்குப் பிடித்து நிற்குமா, மீன் போன்ற உயிரினங்கள் இதனை தின்னுமா,
நீர் நிலைகளின் அருகில் வாழும் வன விலங்குகள் நீர் அருந்த இந்த திட்டம் இடையூறாக இருக்குமா  என பல காரணிகளை சோதனை ஆய்வின் மூலம் முதல் செய்து பார்க்க வேண்டும். 

சூரிய‌ வெப்பத்தினால் நீர் ஆவியாதலை தடுப்பதன் மூலம் ஏரி, அணை, குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள சேமிப்பை அதிகரிக்க முடியும் என்ற ஆராய்ச்சி 1960 களின் பின்பகுதியில் உலகம் முழுவதும் மிகப் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. பல்வேறு முறைகளில் முயன்று சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சி கட்டுரைகளாக பலரும் பிரசுரித்துள்ளார்கள். 

அவற்றில் நீரின் மேற்பரப்பில் மிதவைகளை ஏற்படுத்தி நிழல் தருதல் (Shading the Water Surface), சூரிய ஒளியினை எதிரொளிப்பு மூலம் நீருக்கு உள்ளே செல்லாமல் தடுத்தல் (Floating Reflective Covers), நீரின் மேற்பரப்பை தற்காலிக பாலிமர் போன்ற பொருட்களைக் கொண்டு மூடுதல் (Floating Vapor Barriers) என சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையிலும் சாதகமும், பாதகமும் கலந்தே உள்ளது. 

நம் தேவைக்கேற்ப சாதகங்கள் அதிகமுள்ள முறையினை நாம் பயன்படுத்தலாம். 

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு நாசிக் நகரில் உள்ள இரண்டு பொறியியல் கல்லூரியில் இருந்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை ஐ.ஐ.டி யில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சமர்பித்துள்ளார்கள் (https://www.researchgate.net/publication/288003519_Use_of_thermocol_sheet_as_floating_cover_to_reduce_evaporation_loss_in_farm_pond). நீர் நிலைகளில் தெர்மோகோல் அட்டைகளை மிதக்க விடுவதன் மூலம் எவ்வாறு சூரிய வெப்பத்தில் இருந்து ஆவியாவதை தடுக்கலாம் என்பதே அவ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

 
இரண்டு ஒரே மாதிரியான நீர் குட்டையினை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டதில் தெர்மோகோல் அட்டைகள் மிதக்கவிடப்பட்ட நீர்க் குட்டையானது திறந்த வெளியில் உள்ள நீர் குட்டையினை விட 64 மி.மீ நீரை ஆவியாகாமல் சேமித்து வைத்துள்ளது. இந்த ஆய்வினை 3 மாதத்திற்கு மார்ச் ‍முதல் ஜீன் 2015 ஆம் ஆண்டில் பரிசோதித்து பார்த்துள்ளார்கள். எளிமையாக  சொல்வதென்றால் 93 நாட்களில் 32% நீரை ஆவியாகாமல் தடுத்துள்ளார்கள். இந்த ஆய்வுக் காலத்தில் எதிர்பாரா விதமாக இடி இடித்தல் போன்ற இயற்கை நிகழ்வினால் தெர்மோகோல் அட்டைகள் சுக்கு நூறாக உடைந்து சிதறியுள்ளது. அந்த சூழலிலும் தெர்மோகோல் அட்டைகள் சிறப்பாக செயலாற்றி உள்ளது.

இப்படி ஒரு திட்டத்தினைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜீ நேரடியாக களத்தில் இறங்கி தொடங்கி வைத்துள்ளார். நான் மேலே சொன்னது போல் ஒவ்வொரு முறையில் சாதக, பாதகம் உள்ளது. அதே போல் மேற் சொன்ன ஆய்வானது சிறிய நீர் குட்டையில் அலைகள் அதிகம் இல்லாத சூழலில் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய ஏரி, அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் குறைந்தது 3ல் இருந்து 6 மாத காலம் 1 சதுர கி,மீ பகுதியில் பரிசோதித்து அதில் உள்ள சிக்கல்களை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். அது வெற்றியடையும் முன்பே பத்திரிக்கையாளர்களை கூட்டி பெரிய அளவில் விளம்பரம் செய்ய போய் இப்படி சங்கடப்பட்டு நின்று இருக்க வேண்டிய சூழல் அமைச்சருக்கும அவரது குழுவிற்கும் வந்திருக்காது.

இந்த ஒட்டு மொத்த திட்டத்தில் அமைச்சருக்குத்தான் நுட்பவியல் தெரியாது  ஆனால் இந்த குழுவில் இருந்த‌ மாவட்ட ஆட்சியர், மூத்த நீர் மேலாண்மை அதிகாரிகளுக்குக் கூடவா தெரியாது.

இதுதான் சாக்கு என ஒரு கூட்டம் பார்த்தாயா திராவிடர்களின் அறிவற்ற செயலை என்று மீம்ஸ் போட்டுக் கொண்டு திரிகிறது. உண்மையில் இந்த தேசத்தில் பரவி இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒப்பிடும் போது அமைச்சரின்  ஆர்வ மிகுதி செயல்  ஒன்றுமே இல்லை. 

ஏனெனில் சமூக வலைதளங்களில் நீங்கள் எப்படி சிரிக்கிறீர்களோ அப்படித்தான் ஒவ்வொரு நாளும் வாட்சப், முகநூலில் உள்ள எனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் "நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல" என்று அனுப்பும் உட்டாலக்கடி பார்வேர்டுகளை வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே கடக்கிறேன். ஆகையால் அமைச்சரின் செயலை நக்கலடிக்கும் அளவிற்கு இந்த சமூகம் ஆகச் சிறந்த அறிவியல் நுட்பங்களை தரம் பிரித்து கொண்டாடும் தகுதியே இல்லை என்றுதான் சொல்வேன். 

இன்னொரு விசயத்தையும் சொல்லி விடுகிறேன். இது போன்று சிறிய அளவில் கள ஆய்வு செய்ய மத்தியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைத்துள்ளது, அதே நேரம் வட இந்திய கல்வி நிறுவனங்களுக்கு எவ்வளவு ஆய்வு நிதி கிடைக்கிறது என்ற பட்டியலை ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் தமிழகத்தை இந்த நிலையில் வைத்திருக்கும் வட இந்திய அறிவியல் அரசியலுக்கென்று தனி மீம்ஸ் போட்டு நாம் தனியே சிரிக்க வேண்டி இருக்கும்.

தமிழகத்தில் உள்ள முது நிலை மாணவர்கள் தங்கள் பயிலும் காலத்தில் சிறிய அளவில் தங்கள் ஆய்வு திட்டத்தினை செய்து பார்க்க 10,000 ரூபாயை தமிழ்நாடு அறிவியல் மற்றும் நுட்ப மன்றம் உதவித் தொகையாக தருகிறது. இதனை கண்காட்சியாக தமிழக அளவில் நடத்தி சிறந்த திட்டத்திற்கு பரிசளிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் சிறந்த திட்டத்திற்கு பரிசும் அளிக்கிறார்கள்.  இக்கண்காட்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு பயண உதவித் தொகை, தங்கும் வசதி, உணவு என்று எல்லா வசதியையும் தமிழக அரசு செய்து தருகிறது. முது நிலை பயிலும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் துவக்கத்தில் இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள்.http://www.tanscst.nic.in/student.html

முகநூலில், வாட்சப்பில் நக்கல் அடிக்கும் கூட்டம் இது போன்ற கண்காட்சிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று நேரில் காட்டுங்கள். 

சிறந்த மாணவர் ஆய்வு திட்டத்திற்கு தனியார் நிறுவங்கள் சிறிய அளவில் முதலீடு செய்து ஊக்குவிக்கலாம். தெர்மோகோல் மிதக்க விடும் திட்டங்கள் எல்லாம் இது போன்ற மாணவர்களின் எண்ணத்தில் உதித்தவைதான். இவர்களின் புதிய சிந்தனைகளை அலட்சியப்படுத்தாமல் ஊக்குவியுங்கள்.

வாட்சப் பார்வேர்டுகளை நம்பி ஒரு பெரும் கூட்டமே குட்டையில் விழுந்து கொண்டு இருக்கிறது. முதலில் இந்த குப்பையில் இருந்து வெளியே வாருங்கள். அமைச்சர் செல்லூர் ராஜீ வேண்டுமானால் ஆர்வ மிகுதியால் பிழை செய்திருக்கலாம். தமிழகத்தில் அடிப்படை ஆராய்ச்சிக்கென்று நேர்த்தியான திட்டம் பல உள்ளது. பெரும்பாலும் அவை மாநில நிதியில் இருந்தே செயல்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளோம் என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டுகிறேன்.

கோடை காலத்தில் தாமதமாக செயல்பட்டு இருந்தாலும் நீர்பிடிப்புபகுதிகளில் உள்ள நீரை ஆவியாகாமல் தடுக்க வேண்டும் என்ற செயலாற்றிய தமிழக அரசுக்கு நன்றி. 

இனியாவது காலாம் தாழ்த்தாமல் முன் கூட்டியே விரைந்து செயல்பட்டு மக்களை காத்தருளுங்கள்.






Saturday, 8 April 2017

பர்மிய பாரம்பரிய உணவு - லாபெட்

இன்று பர்மிய (Bharma) நண்பர் அவர்களது பாரம்பரிய உணவான லாபட் (Laphat) செய்து எடுத்து வந்திருந்தார்.

இந்த லாபட் உணவின் சிறப்பம்சமே இதில் கலக்கப்படும் தேநீர் இலை ஊறுகாய்தான் (fermented tea leaves).

என்னது தேநீர் இலை ஊறுகாயா என வியக்கிறீர்களா? ஆம் உலகிலேயே தேநீர் இலைகளை உணவாக சாப்பிடுபவர்கள் பர்மியர்கள் மட்டுமே.

தேநீர் இலைகளை காய வைத்து மூங்கில் குழாய்களில் வைத்து பக்குவமாக நீராவியில் வேக வைத்து பதப்படுத்தி விடுகிறார்கள். தேவைப்படும் போது எடுத்து மீண்டும் கொஞ்சம் சூடு செய்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

லாபட் உணவில் பல வகை உண்டு.

பெரும்பாலும் பாரம்பரிய "லாபட் ஓக்" எனப்படும் உணவில் பதப்படுத்தப்பட்ட இறால், வறுத்த நிலக்கடலை பருப்பு, மீன் எண்ணெய், பட்டு பூச்சி லார்வா அல்லது குளவியின் லார்வா (தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்), வறுத்த பீன்ஸ், தக்காளி, அரைத்த இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், வறுத்த கடுகு, முள்ளங்கி இலை, கொஞ்சம் எலுமிச்சை சாறு, இதனுடன் தேவைப்படும் காய் கறிகளை சேர்துக் கொள்ளலாம்.

இந்த கூட்டுக் கலவையில் பதப்படுத்தபட்ட தேநீர் இலைகளை கீரை போல குறிப்பிட்ட அளவு சேர்த்துக் கொள்ளலாம். ஏறத்தாழ இது சேலட் போல இருக்கும்.

இதில் நார் சத்து, விட்டமின், புரோட்டீன், என எல்லாமும் கலந்த சரிவிகித உணவாகும். மேலே சொன்னதில் தேவைப்படுவதை சேர்த்துக் கொள்ளலாம்.

சந்தையில் பர்மிய லாபட், பதப்படுத்தபட்ட தேநீர் இலை பாக்கெட்களில் கிடைக்கிறது. வாங்கி வீட்டில் தயார் செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான நாடுகளில் உள்ள பர்மிய மளிகைக் கடைகளில் லாபெட் கிடைக்கிறது.

அருமையான உணவு, வாய்ப்பு கிடைத்தால் செய்து பாருங்கள்.
நண்பர் சாங் செய்து கொண்டு வந்திருந்த லாபெட் உணவு

பாரம்பரிய லாபெட் உணவுக்கான மூலப் பொருட்கள்






Tuesday, 4 April 2017



மொழி என்னும் பெருவரம் -2 (இந்தி என்னும் மாய விளக்கு)

தமிழ்நாட்டுல இந்தி மொழிய நுழையவே கூடாதுன்னு திராவிடக் கட்சிகள் நினைச்சிருந்தா இந்தி பிரச்சார சபாக்கள் எல்லாம் தமிழகத்தில் இயங்கி இருக்க முடியாது.

சும்மா ஒரு கூட்டம் தேவையில்லாமல் பினாத்திக் கொண்டுள்ளது.

மொழிகளின் தேவை, அவசியத்தை உணர்ந்த தமிழகம் ஒரு கட்டத்தில் எல்லா மொழிகளையும் கற்பதை அரவணைத்தே சென்றுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது இங்கே மாநில எல்லையோர அரசுப் பள்ளிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, அரபி, இந்தி என எல்லா மொழிகளையும் அனுமதித்துள்ளோம்.

இங்கே யாரையும் இந்தி படிக்க கூடாதுன்னு கையப் பிடிச்சு தடுத்து நிறுத்தவில்லை. இந்தி வேண்டும் என்றால் படித்துக் கொள்ளுங்கள். ஏன் அதற்கு தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனப் புரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் படித்துத்தான் உலக அளவில் பணியாற்றும் வாய்ப்பினை தமிழர்கள் பெற்றுள்ளார்கள். மீண்டும் மீண்டும் வட இந்தியாவிற்கு போக முடியாமல் தமிழர்கள் ஏதோ வங்காள விரிகுடாவில் படுத்துக் கொண்டு கதறுவது போல் ஒரு மாயையினை கட்டமைக்க வேண்டாம்.

ஏன் உலக மொழியினை படிக்கிறீர்கள்? இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகிய இந்தியைப் படிக்க என்ன தடை என்ற லாஜிக் கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தந்திரங்களை நாங்கள் நன்கு அறிவோம்.

உங்கள் லாஜிக் படியே எங்கள் தரப்பில் இருக்கும் கோரிக்கையினை வைக்கிறோம்.

தமிழகத்தில் இருக்கும் ஒருவர் ஆராய்ச்சி மாணவர் ஆய்வு நிதி விருதுகளுக்கான நேர்முகத் தேர்விற்கு இன்றைக்கும் டெல்லிக்குதான் போக வேண்டி உள்ளது.

ரயிலில் இரண்டு இரவு, ஒரு பகல் என உலகின் நீண்ட ரயில் பயணங்களில் ஒன்றை இத்து போன கம்பி வாசத்துடன் கடந்துதான் போக வேண்டும்.
அங்கே சென்றாலும் தென்னிந்தியர்களை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டாம்.

நேர்முகத் தேர்வினை ஆங்கிலம், இந்தியில் நடத்தலாம் என்ற விதி உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவனுக்கு தாய் மொழியிலேயே தேர்வில் பேசிக் கொள்ளலாம். இதர மொழிக்காரன் கடினப்பட்டுத்தான் ஆங்கிலத்தில் பேசி விருதை வாங்க வேண்டும்.

நீங்கள் என்னதான் இந்தி கற்றுக் கொண்டாலும், அவர்கள் அளவிற்கு உங்களால் நுட்ப வார்த்தைகளை ப்ரொபசனலாக பேச முடியாது. பிறகு எதற்கு இந்த ஓர வஞ்சனை.

விருது தேர்வில் இருக்கும் பேராசிரியர்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே நடுவில் ரெண்டு இந்தி வார்த்தையோடுதான் பேசுவார். நீங்கள் கேள்வி புரியாமல் தடுமாறும் போதே மதராசிகளே இப்படித்தான் என்று நக்கலை வேறு சமாளிக்க வேண்டும்.

நீங்கள் உண்மையிலேயே நாட்டின் எல்லாக் குடிமகன்களுக்கும் பாரபட்சமற்ற ஒரு நிலைப்பாடுடன் நடத்துவதென்றால், தென்னிந்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான (ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகம்) நேர் முகத் தேர்வினை இங்கேயே பிராந்திய ரீதியில் எங்கள் பகுதியிலேயே நடத்துங்கள்.

சுழற்சி முறையில் ஐந்து மாநிலங்களுக்குள் ஒன்றை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். எத்தனை நாளைக்குத்தான் நாங்கள் மூட்டையில் புளிச்சோற்றைக் கட்டிக் கொண்டு உங்களைப் பார்க்க வருவது.

மிகப்பெரிய எல்லைப் பரப்பில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள், புவிசார் சூழலுக்கு தகுந்தவாறு ஒரே நாட்டின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தங்கள் துணைத் தூதரகங்களை அமைப்பது போல் இதற்கும் அமைத்து விட்டு போங்களேன். எப்படியும் எங்கள் வரிப்பணத்தில்தானே இயங்கப் போகிறது.

இது போன்று ஒவ்வொரு தேர்வும் தென்னிந்திய அளவிலேயே இங்கேயே நடத்தலாம். மாணவர்களுக்கும் அலைச்சல் குறைவு, அரசுக்கும் செலவுக் குறைவு. இப்படி உட்கட்டமைப்பை கொண்டு வாருங்கள், மக்கள் தானாகவே இந்தி மொழியின் தேவையின்மையை உணர்ந்து கொள்வார்கள்.

எங்களுக்கான தேவையினை ஏழு கடல், மலை தாண்டி ஓளித்துவைத்துக் கொண்டு ஏன் எங்களுக்கு மட்டும் நீச்சல், பறத்தல், தாண்டுதல், ஓடுதல் என ஆயக் கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்கள்.

சமூக நீதி என்பது எல்லோருக்கும் பாரபட்சம் இன்றி தரப்படுவது. தமிழகத்தில் நாங்கள் அதனைத் தருகிறோம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் எங்கள் மாடலை இந்தியா முழுக்க அமல்படுத்தித் தருகிறோம்.

Saturday, 18 March 2017











We glad to share that our recent research work on "WO3/W:BiVO4/BiVO4 graded photoabsorber electrode for enhanced photoelectrocatalytic solar light driven water oxidation" has been published in Physical Chemistry and Chemical Physics (Impact Factor 4.49) (Phys. Chem. Chem. Phys., 2017,19, 4648-4655). 


We demonstrate the dual advantages of graded photoabsorbers in mesoporous metal oxide-based hetero interfacial photoanodes in improving photogenerated charge carrier (e−/h+) separation for the solar light-driven water-oxidation process. By taking advantage of the effects of mild W-doping at BiVO4, which extends the visible light absorbance and enhances the charge separation, for the first time, we utilize W:BiVO4 as a photoactive interfacial layer between WO3/BiVO4 interfaces. As a result, the WO3/BiVO4 hetero photoanode containing the photoactive W:BiVO4 interfacial layer showed 130% higher photocurrent than that of the interfacial layer-free hetero photoelectrode owing to the enhanced charge separation led water oxidation process.



நானோ அளவிலான குறை கடத்தி மென் படலங்களை (Semiconductor thin films) கொண்டு சூரிய ஒளியில் இருந்து நீரை ஆக்சிஜனேற்றம் செய்து ஆக்சிஜன் வாயுவையும், இந்த வினையின் மூலம் பெறப்பட்ட ஒளி எலக்ட்ரான்கள் மூலம் நீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவையும் பெறும் செயற்கை ஒளிச் சேர்க்கை (artificial photosynthesis) நுட்பமானது எதிர்காலத்தில் நாம் எதிர் நோக்கி இருக்கும் எரிவாயு தட்டுப்பாட்டினை போக்கும் வழி முறைகளில் ஒன்றை தந்துள்ளது. ஆனால் ஒளி மின் விளைவின் போது குறைகடத்தி மென் படலங்களில் உருவாகும் நேர், எதிர் மின்னிகளை திறனுறு வகையில் பிரித்தால் மட்டுமே ஒளிவினையூக்கி (photocatalyst) நிகழ்வுகளில் இருந்து பெறப்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுவின் அளவினை அதிகரிக்க இயலும்.

இத்தையக பார்வையில் இரண்டு குறைகடத்தி கலப்பு சந்திகளுக்கு (heterojunction) இடையே உள்ள இடைமுகத்தில் (interface) உலோக மூலக்கூறுகள் மூலம் செறிவூட்டப்பட்ட குறைகடத்தி படலத்தினைச் செருகும் போது இடைமுகத்தில் உள்ள ஆற்றல் பட்டைகளில் ஒரு படிகட்டு (graded interface) போன்ற அமைப்பினை உருவாக்கி எதிர் மின்னிகள் இலகுவாக வெளி மின்சுற்றுக்கு எடுத்துச்செல்லும் சூழலை உருவாக்கி தருகிறது. இதன் மூலம் மின்னிகளின் மீளச்சேரல் வீதத்தை (recombination rate) வெகுவாக குறைத்து
செயற்கை ஒளிச்சேர்க்கை வினையினை செறிவுள்ளதாக மாற்றுகிறது. 

எமது ஆய்வில் டங்ஸ்டன் உலோக மூலக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட பிஸ்மத் வனேடியம் ஆக்சைடு என்ற (W:BiVO4) மென்படலத்தை கலப்பு சந்தியில் இடைசெருகும் போது மிகச் சிறப்பான வகையில் செயலாற்றுகிறது. இந்த இடைமுக மென்படலமானது ஒளி மின் விளைவுகளை அடிப்படையாக கொண்டு செயலாற்றும் குறைகடத்தி கலப்பு சந்திகளில் மின்னிகளை பிரித்தறிவான்களாக பயன்படுத்தலாம்.


 

Thursday, 9 March 2017

பிரித்தானியாவின் ஆரம்ப பள்ளிகளில் உள்ள கணிதவியல் பாட முறை

நான்கு வயது முதல் ‍ 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிரித்தானியாவில் எவ்வாறு கணிதம் கற்றுத் தருகிறார்கள் என்பதே இந்த பதிவு.

சென்ற வாரத்தில் அவந்தியின் பள்ளியில் உள்ள பிரைமரி வகுப்பு ஆசிரியர்களோடு உரையாட 40 நிமிடம் அனுமதி நேரம் தந்திருந்தார்கள். பள்ளி முடிவடைந்ததும் இதற்காக நேரம் ஒதுக்கி ஐந்து ஆசிரியர்கள் என்னோடு உரையாடினர். 

இங்குள்ள பிரைமரி வகுப்புகளில் எவ்வாறு கணிதம் கற்றுத் தரப்படுகிறது என்பதை இந்திய கல்வி முறையோடு ஒப்பிட்டு எழுதியுள்ளேன். இரண்டு கல்வி முறையுமே சிறந்ததுதான். இன்னும் நம் கணிதம் பயிற்றுவிக்கும் முறையினை எப்படி எளிமையாக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

இந்தியாவில் நான்கு வயதில் இருந்து கின்டர் கார்டன் வகுப்புகளிலும், அரசுப் பள்ளிகளில் ஆறு வயதில் இருந்து கணக்குப் பாடம் சொல்லி தரப்ப‌டுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை 2010-11 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி முறையினை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளோம். நிற்க. 

இந்தியாவைப் பொறுத்த வரையில் கணிதத்தை வாய்பாடு (table) முறையில் இருந்து துவக்குகிறோம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை ஒவ்வொரு வகுப்பிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய கல்வி முறையில் உள்ள‌ இந்த வாய்பாடு மனன (memorize) முறை கணக்கீடுகளில் நாம் வேகமாக செயலாற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதே நேரம் இதுதான் நம் பலவீனமும் கூட. பெரும்பாலும் நம் கல்வி முறை எண்களை எண்களாகவே பார்க்க கற்றுத் தருகிறது.

உதாரணத்திற்கு ஒரு 2 வகுப்பு மாணவரிடம் 10 ல் 5 ஐ கழிக்க வேண்டும் என்று சொன்னாலும், 10 ஐ 5 உடன் பெருக்க வேண்டும் என்று சொன்னாலும் அவர்களது மூளை எண்களாகவே (abstract) எடுத்துக் கொண்டு செயலாற்றும்.

அதே மாணவரிடம், மேலே சொன்ன கேள்வியை வேறுவிதமாக கேளுங்கள். உதாரணமாக ஒரு கூடையில் உள்ள‌ பத்து மாம்பழத்தில் 5 மாம்பழங்களை எடுத்து விட்டால் எத்தனை இருக்கும் என்றும், பத்து கூடைகளில் ஒரு கூடைக்கு 5 மாம்பழம் வீதம் போட்டால் எத்தனை மாம்பழம் இருக்கும் என்றும் கேளுங்கள். 

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான். ஆனால் இம்முறை மாணவர் பதில் சொல்ல ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்வார்.

மீண்டும் அதே கேள்வியை வேறு விதாமக கேட்கப் போகிறோம். 

ராமுவிடம் இருந்த அட்டை பெட்டியில் பத்து அறைகள் இருந்தன‌. எல்லா அறைகளிலும் ஒரு மாம்பழம் உள்ளது. ராமு காலையில் எழுந்து மூன்றாவது அறையில் இருந்து முக்கால் பழத்தையும், எட்டாவது அறையில் இருந்து கால் பழத்தையும், இரண்டாவது அறையில் இருந்து இரண்டரை மாம்பழத்தையும், அறுத்து சாப்பிட்டான். மதியம் முதல் அறையில் இருந்து கால் மாம்பழத்தையும், நான்காவது அறையில் இருந்து முக்கால் பழத்தையும், ஆறாவது அறையில் இருந்து ஒரு பழத்தையும், ஏழாவது அறையில் இருந்து முக்கால் பழத்தையும், பத்தாவது அறையில் இருந்து கால பழத்தையும் எடுத்து சாப்பிடான். இப்பொழுது ராமு இரவு சாப்பிடுவதற்கு எந்தெந்த அறையில் எத்தனை பழங்கள் இருக்கும்? 

அந்த பத்து அறைகளில் 50 மாம்பழங்களை எத்தனை விதங்களில் அடுக்கலாம்?
இந்த கேள்வியை கேட்டால் அந்த மாணவர் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார். மூன்று கேள்விக்கும் ஒரே விடை என்றாலும் மூன்றாவது கேள்வி  மட்டும் பின்னக் கணக்கீடு மற்றும் நிகழ்தகவும் இணைந்து வரும். 

மூன்று கேள்விகளிலும் நம் மூளை செயல்படும் விதம் வேறாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் காரணங்கள் (reasoning) அடிப்படையில் மூளை சிந்தித்து செயலாற்ற அதிக நேரம் எடுக்க காரணம் எல்லா கேள்விகளையும் மூளை எண்களில் (abstract) இருந்து பொருட்களாக‌ (objectives) உருவகப் படுத்தி பின்னர் எண்ணுக்கு மாற்றி விடையளிக்கும். ஆகையால் நீண்ட நேரம் பிடிக்கும்.

ஆனால் இதே மூன்று கேள்விக்கும் பிரித்தானியாவில் உள்ள 7 வயது மாணவர் பதில் சொல்ல ஒரே நேரம்தான் எடுத்துக் கொள்வார். அது எப்படி சாத்தியம்.
இங்கே உள்ள மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் பரிந்துரைக்கப்படும் கணக்குப் பயிலும் உத்தியை சொல்லி தருகிறார்கள்.
நியூமிகான் (Numicon) எனப்படும் துளையுள்ள சட்டங்களை வைத்து எண்களை கனக்கிட சொல்லி தருகிறார்கள். 




ஒரு சட்டத்தில் 10 வட்ட துளைகள் உள்ளது. இதே போல் ஒரு துளை, இரண்டு துளை,.... என பத்து துளைகள் உள்ள தனித்தனி சட்டங்கள் உள்ளது. குழந்தைகளின் வசதிக்காக ஒவ்வொரு சட்டமும் ஒரு வண்ணத்தில் இருக்கும். முதலில் ஒரு பத்து என்ற சட்டத்தில் உள்ள துளைகளை எண்ணிக் கற்ற பின் பத்தை எத்தனை விதங்களில் சொல்லலாம் என்ற பயிற்சிக்கு போகிறார்கள்.

பத்து என்ற எண்ணை
10 = 1+ 2+ 3+ 4
10 = 1+9
10 = 2+8
10= 3+7
10= 4+6
Etc….
இப்படி எல்லா வாய்ப்புகளையும் சட்டங்களை பொறுத்தி பார்த்து பல விடைகளை எளிதாக சொல்கிறார்கள்
தங்கள் விடை சரி என பார்க்க சிறு தராசும் தரப்படுகிறது. அதில் ஒரு தட்டில் பத்து துளைகள் கொண்ட சட்டத்தை போட்டு விட்டு மறு பக்கத்தில் அவர்களது விடைக்கு தகுந்த சட்டங்களை போட்டு சரி பார்க்கலாம். முள் சரி சமமாக இல்லாமல் இருந்தால் அவர்களே பல முறை முயற்சித்து வேறு வேறு சட்டங்களை போட்டு பிழையினை சரி செய்து கொள்கிறார்கள்.
இதே போல் கூட்டல், கழித்தல், பெருக்கல் என எல்லா வசதியும் நியூமிகான் சட்டத்தில் உள்ளது. நான் மேலே சொன்ன இரண்டு கணக்குகளையும் இந்த சட்டத்தில் ஒரே நேரத்தில் செய்து பார்த்து விடையினை எளிதாக சொல்லி விடலாம். நான்கு வயதில் இதனை பயன்படுத்தும் குழந்தைகள் பத்து வயதில் நேரடியாக கணக்கீடு செய்ய மூளை பழகி விடும்.
கணக்கை ஏன் வடிவியல் (geometry) முறையில் பயில வேண்டும்?
எண் 4 ஐ பார்க்கும் போது நம் இந்திய மாணவர்களுக்கு நான்காக மட்டும்தான் பதியும்.
ஆனால் இங்குள்ள குழந்தை 4 என்ற எண்ணை சதுரமாக பார்க்கும். சதுரத்திற்கு நான்கு பக்கங்கள். இரண்டு பக்கத்திற்கு இடையே உள்ள கோணம் 90 டிகிரி என தொடங்கி நான்கு என்ற எண்னை பத்து வேறு வேறு தளங்களில் உருவகப்படுத்த பழகிக் கொள்கிறார்கள். இந்த சதுரத்திற்குள் நூறு கேள்விகளை கேட்டாலும் நான்கு என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு விடைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.
இதன் மூலம் எண்களை உடைக்கவும் (fraction),  சாதராண மாம்பழ எண்ணிக் கணக்கில் இருந்து, முடிவில்லா  கேலக்சி அளவிலான கற்பனை தளத்தின் (infinity) கொள்ளளவை (volume) கணக்கிடவும் இந்த கணக்கீடு முறை குழந்தைகளுக்கு உதவுகிறது. பின்னாளில் பொறியியல் துறை தொடங்கி பல தளத்திலும் இவர்களால் எளிதாக வெற்றி பெற இதுவே பெரிதும் உறுதுணையாக உள்ளது
கடினாமான கணக்குகளை சொல்லித் தர  சினிமா, கார்ட்டூன்கள் குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியில் ஒரு பயிற்று வழியாக‌ (tool) பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, எண்களை சரியாக பிரித்து வைக்க ஒரு பெட்டி நிறைய ஒரு பென்னி (penny) காசுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். நிறைய பைரட்ஸ் கப்பல்  படங்கள் ஒரு போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள‌ ஜேக்ஸ்பேரோ ஸ்டிக்கர்கள் மேல் காசுகளை எண்ணிக்கைக்கு தகுந்த வாறு பிரித்து வைக்கிறார்கள். நீங்கள் சினிமா கெடுதல் எனப் பிரச்சாரம் செய்வதை விட அவற்றை சொல்லித்தரும் டூலாகப் பயன்படுத்தி விட்டு போகலாம்.

நாம் கற்பிக்கும் கணக்குப் பாட முறை முற்றிலும் முதல் பெஞ்சு மாணவர்களுக்கு மட்டுமே. மீண்டும் சமச்சீர் கல்வி பாடத்திற்கு வருகிறேன். நாம் படித்த காலத்தை ஒப்பிடும் போது இந்த முறை வண்ணப் படங்கள் நிறைந்த எளிய முறையினை தந்துள்ளது. இன்னும் கொஞ்சம் இதே முறையில் மாற்றம் செய்தால் கடைசி பெஞ்ச் மாணவர்களையும் ஹீரோவாக்கி விடலாம்.
குறிப்பு
·      இன்றைய தேதியில் கணக்கு பாடம் சொல்லி கொடுப்பத்தில் சிங்கபூரின் கல்வியியல் முறைதான் நம்பர் ஒன். ஜான் ப்ரூனர் என்ற சைக்காலஜிஸ்ட் பரிந்துரைத்த concrete – pictorial- abstract (CPA) என்ற முறையினைத்தான் சிங்கப்பூர் தற்போது பின்பற்றி வருகிறது. கேம்ப்ரிஜ் பல்கலைக் கழக திட்டத்தை போலவே கணிதத்தை எண்ணாக சொல்லித்தராமல் பொம்மைகள், வடிவங்கள், பார் வரைபடங்கள் மூலம் சொல்லி தருகிறார்கள். தற்போது உலகளாவிய ஒலிம்பாய்டு, சர்வதேச கணக்கு போட்டிகளில் சிங்கப்பூர் குழந்தைகள் முதல் மூன்று இடங்களை பிடிக்க இதுவே காரணம். சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் இந்த முறைதான் தற்போது அமெரிக்காவின் பிரைமரி பள்ளிகளில் பயன்படுத்தப் படுகிறது. யூகேவிலும் ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் தற்போது நடை முறையில் உள்ளது.
·      வீட்டில் 4‍-8 வயது வரையுள்ள குழந்தைகள் இருந்தால் சிங்கப்பூர் பிரைமரி கணித புத்தகம் வாங்கி கணிதப் பயிற்சி தரலாம்.. ஆனால் தற்போது இந்திய நடைமுறையில் பயிலும் குழந்தைகளை குழப்பாமல் விளையாட்டாக இந்த கணித முறையினை அறிமுகம் செய்யுங்கள்.
·      தற்போது சமச்சீர் கல்வியில் ஏறத்தாழ இதில் ஒரு பகுதியினை அறிமுகப் படுத்தியுள்ளோம். ஆனால் இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்யலாம்.



For further information:
நியூமிகான், சிங்கப்பூர் பிரைமரி கணிதபுத்தகங்கள் ஆன் லைனில் வாங்க, அல்லது அதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட இணைய தளங்களை  பார்க்கவும்.


Numicon tool, Cambridge University Press:

Singapore Primary mathematics books:
















Wednesday, 8 March 2017


மகளிர் தின வாழ்த்துகள்!

வரலாற்றில் மகத்தான பக்கங்கள் பெண்களால் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் ஆண்களின் சாதனைகளே வெளி உலகிற்கு தெரிகிறது அல்லது தெரிய வைக்கப் படுகிறது.

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவர்களாய் பார்க்கப்படுகின்றனர். ஆனால் சமூகப் படிநிலை வளர்ச்சியில் பெண்களின் பங்கு ஆண்களுக்கு நிகரானது.

அறிவியல் மற்றும் நுட்ப துறைகளில் சாதித்த பெண்களைப் பற்றி நாம் மீள் வாசிப்பு செய்ய வேண்டி உள்ளது. தன் உழைப்பாலும், அன்பாலும் இவ்வுலகை தாங்கும் எல்லா பெண்களுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

இந்த தினத்தில் கு.வி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய "அறிவியலில் பெண்கள், ஒரு சமூக வரலாற்றுப் பார்வை" என்ற புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன். (அடையாளம் பதிப்பு, ரூபாய் 280, சென்னை, பனுவல் புத்தக நிலையத்தில் இந்த புத்தகம் கிடைக்கும்)

இந்த நூல் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பாதித்த காரணிகளை வரலாற்றினூடே விளக்கி அவை பாலினப் பாகுபாட்டில் எந்த அளவிற்கு முக்கிய விசையாக செயல்படுகிறது என்பதை விவரிக்கிறது. இதன் மூலம் அறிவியலில் முகம் தெரியாப் பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்கு துணையாக இருந்த பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கிறது.

நிச்சயம் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி துறையில் பணி புரிய விரும்பும் பெண்கள் என எல்லோரும் இதனை வாசிக்க வேண்டுகிறேன்.

நோபல் பரிசு வரலாற்றில் இது வரை 44 விருதுகளை பெண்கள் பெற்றுள்ளனர். இது நோபல் பரிசு பெற்ற ஆண்களை ஒப்பிடும் போது 12 மடங்கு குறைவு. இன்னும் பல லட்சம் பெண் ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், அமைதிக்காக போராடும் போராளிகள் என பெரிய வெளி பெண்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் இருந்து ஒரு பெண்மணி நோபல் பரிசு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்காக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.