Thursday, 26 November 2015


மின் மிதி வண்டி நிலையங்கள் ‍ - பார்சலோனா நகரம்

(BiCing in Barcelona city)

மதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் .நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ விடுதியில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன். நகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

பார்சலோனா நகரில் (Barcelona) எலக்ரானிக் மிதிவண்டிகளை (Battery powered Bicycles) வாடகை எடுக்கும் வசதி உள்ளது. இப்படிப்பட்ட எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு விடுவதை இங்குதான் முதன் முதலாக பார்க்கிறேன்

கார்பன் நச்சு புகையில்லாத பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் மிக அற்புதமான ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நகரின் பல இடங்களில் எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுக்க வசதியாக தானியங்கி நிலையங்களை வைத்திருக்கிறார்கள். இதனை பார்சலோனா நகர் மன்ற குழு (Barcelona City Council) முன்னின்று நடத்துகிறது. இதற்கு Viu BiCiNg என்று பெயரிட்டுள்ளார்கள்.






இந்த மிதி வண்டியுடன் பொருத்தப்பட்டுள்ள பாட்டரியில் மின் சக்தியினை தேக்கி வைத்து கொள்ளும் வசதி இருப்பதால், நாம் இரு சக்கர மோட்டார் வாகனங்களை போல் மணிக்கு 20 கிமீ வேகத்தில் ஓட்டி செல்லலாம். மிக இலகுவான எடையில் இருப்பதால் கையாள எளிதாக இருக்கிறது.

நாம் ஓட்டி செல்லும் வழியில் மின் சக்தி குறைந்து விட்டால் கவலையே வேண்டாம். அருகில் உள்ள நிறுத்தத்தில் மிதி வண்டியினை நிறுத்தி விட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மிதி வண்டி நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் மிதி வண்டிகள் பொருத்தப்பட்டுள்ள தாங்கு கம்பியில் (stand) இருந்து மிதிவண்டியின் பாட்டரிகளில் மின்சக்தியினை சேமித்து (charging) வைக்கும் படி வைத்திருக்கிறார்கள்கள்.

இந்த மிதி வண்டியினை உள்ளூர் வாசிகள் தங்கள் வீட்டு முகவரி மற்றும் அடையளாங்களை இணையத்தில் பதிந்து தானியங்கி அட்டைகளை வாங்கி கொள்ளலாம். வருடாந்திர சந்தா 47.16 யூரோ. மிதி வண்டி எடுத்த முதல் அரை மணி நேரம் இலவசம். அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை 0.74 யூரோ ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே முதல் அரை மணி நேரத்தில் செல்லும் இடத்தில் அருகில் உள்ள நிலையத்தில் விட்டு விடலாம். பார்சலோன நகர் முழுக்க 41 இடங்களில் நிறுத்தம் உள்ளது. இதற்கான செயலிகளை திறன் பேசிகளில் தரவிறுக்கம் செய்து கொண்டால் எந்த இடத்தில் இந்த மிதி வண்டி நிலையங்கள் என அறிந்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு என்று தனியாக வாடகை கடைகளும் உள்ளது.
இந்த பைகிங் (Bicing) என்று அழைக்கப்படும் மிதி வண்டியின் பயன்பாடு வருடா வருடம் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இந்நகரின் மாசு கேடு பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மொத்தம் உள்ள மிதி வண்டிகளை அனைவரும் பகிர்ந்து ஓட்டுவதால் மிதி வண்டிகளை நிறுத்தும் இடமும் மிச்சம் ஆகிறது.

ஒரு வேளை மிதிவண்டியினை நிலையத்தில் விடாமல் ஏமாற்றலாம் என நினைத்தால் முடியவே முடியாது. மிதி வண்டி எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தில் விடவில்லை என்றால் 4.49 ஒரு மணி நேரத்திற்கு அபாராதம். அடுத்த நாளுக்குள் விடவில்லை காவல்துறை மூலம் நடவைக்கை எடுக்கப்பட்டு 150 யூரோ வரை அபாராதம் வசூலித்து விடுவார்கள்.

அடுத்த முறை பார்சலோனா நகருக்கு போனால் ஒரு முறை இந்த பாட்டரி மிதி வண்டியில் ஒரு முறை வலம் வாருங்கள்

(நிலையத்தில் மட்டுமே இந்த வண்டிகளை நிறுத்த முடியும் என்பதால் இந்த வண்டிகளுக்கு தனிப் பட்ட நிறுத்த வசதி (Stand) இருக்காது)


Saturday, 14 November 2015


ஜப்பான் அங்காடிகள்


ஜப்பானில் உள்ள அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க போகும் போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை எளிதாக வீட்டிற்கு எளிதாக எடுத்துச் செல்ல படத்தில் காட்டியுள்ளது போன்ற வசதி உள்ளது.

1. கத்தரிக்கோல்
2. ஈரத்துணி
3. 250 கி கொள்ளளவு உடைய நெகிழி பை
4. நெகிழி கயிறு
5. ஒட்டு தாள் (sello tape)
In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan

In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan

எதற்கு ஈரத்துணி என்று யோசிக்கிறீர்களா?

 சில நேரங்களில் கடையில் வாங்கிய பொருட்களை நெகிழி பையில் போடும் போது அவற்றை பிரிக்க விரலை இந்த ஈரத்துணியில் தொட்டு விட்டு பிரித்தால் நெகிழி பை  ஈரமான விரலில் எளிதாக ஒட்டிக் கொள்வதன் (adhesion)மூலம் பிரிக்கலாம் .  (வங்கியில் பணம் எண்ணும் போது காசாளர் நீரில் நனைக்கப்  பட்ட பஞ்சில் விரலை தொட்டு விட்டு பண நோட்டுகளை எளிதாக பிரித்து எண்ணுவார். அதே தத்துவம் தான்).

 இது போன்ற வசதிகளை நமது நாட்டில் உள்ள அங்காடிகளில் கொண்டு வரலாம்.

குறிப்பு:

சில அங்காடிகளில் பொருள் வாங்க துணிப் பை கொண்டு சென்றால்  சுற்றுப் புற சூழல் மேம்பாட்டினை வலியுறுத்தும் விதமாக வாங்கும் பொருளில் சிறிய தள்ளுபடி உண்டு.

ஜப்பான் தொடர் வண்டி நிலையங்கள் - ‍ 4

(Japan Railway Station Felicities-4)


சக்கர நாற்காலிகளில் செல்லும் மாற்று திறனாளிகள் தொடர் வண்டிகளில் பயணிக்கும் போது நடை மேடைக்கும் (platform) வண்டிக்கும் உள்ள பெரிய இடைவெளியில் இறங்குவது கடினம்.

இது போன்ற சூழலில் அவர்களுக்கு உதவிட ஜப்பானில் உள்ள தொடர் வண்டிகளில் அழைப்பு சேவை (SOS Phone) உள்ளது. இந்த அழைப்பு மூலம் தொடர் வண்டியின் ஓட்டுநரை அந்தந்த பெட்டியில் உள்ள  முன்னுரிமை இருக்கையின் (priority seats) அருகே உள்ள அழைப்பு பொத்தானை அழுத்தி பெட்டி எண்ணையும் (coach number), இறங்க வேண்டிய நிறுத்தத்தினையும் சொல்லி விட்டால் ஓட்டுநர் முன்னதாகவே அந்த நிறுத்தத்தில் உள்ள ஊழியருக்கு தெரிவித்து விடுவார். 

SOS call option available in train. Photo taken at Tobu Noda Urban line, Japan

SOS call option available in train. Photo taken at Tobu Noda Urban line, Japan

அவர் சக்கர நாற்காலி வண்டியில் இருந்து நடை மேடைக்கு எளிதாக இறங்கும் வண்ணம் தாண்டு பலகையினை வைத்து கொண்டு நிற்பார்.

இன்று உயனோ (Ueno) தொ.வ நிலையத்தின் நடை மேடையில் 
வண்டிக்காக காத்திருந்த போது ஒரு ஊழியர் பலகையினை வைத்து கொண்டு நின்றிறுந்தார். வண்டி வந்தவுடன் அவ்வளவு கூட்டத்திலும் சக்கர நாற்காலியில் வந்தவர் எளிதாக நடை மேடைக்கு இறங்கி விட்டார்.


உயனோ (Ueno) தொடர் வண்டி நிலையத்தில் சக்கர நாற்காலியின் பயணிப்பவருக்கு நடை மேடையில் இறக்கி விட கடமையாற்றும் ஊழியர்.

உயனோ (Ueno) தொடர் வண்டி நிலையத்தில் சக்கர நாற்காலியில் பயணிப்பவர் நடை மேடையில் எளிதாக இறங்கும் பொழுது எடுத்த படம்

இது போன்று வசதி நம் தொடர் வண்டி நிலையங்களில் கொண்டு வந்தால் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.



Friday, 13 November 2015

ஒரு விபத்தும் பால‌ பாடமும்

தற்போது பெய்து கொண்டு இருக்கும் பெரு மழையானது  கடலூர் மாவட்டத்தினை வடித்து தின்று ஆர்பரித்து அடங்கி இருக்கிறது.   காங்ரீட் காடுகளான சென்னை மாநகரில் வெள்ளம் இப்போது தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. முக நூல் முழுக்க சென்னை நகர் வெள்ளத்தில் தத்தளிக்கும் படங்களை பகிர்ந்து நண்பர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள்.





இப்படி ஒரு வெள்ளம் வரும் எனத் தெரிந்தும் எந்த முன்னேற்பாடும் செய்யாத மெத்தன‌ அரசும், தாந்தோன்றி தனமாய் சாக்கடைகளில் கண்டதையும் வீசி சாக்கடைகளின் ஓட்டத்தினை தடுத்து நிறுத்திய‌ பொது மக்களும் இப்போது வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளனர்.

இரண்டு பேருக்கும் இல்லாத பொது அக்கறையினால் ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது.

ஜப்பானில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வசிக்கும் தெருவில் உள்ளூர் நகர் மன்ற அதிகாரிகள் சாலையின் உயர அகலங்களை அளக்கும் கருவிகளோடு எங்கள் தெருவின் சாக்கடைகளில் ஒழுங்காக நீர் ஓடுகிறதா என பரிசோதித்து கொண்டு இருந்தார்கள். இதை ஏதோ வழக்கமான சோதனை என நினைத்து இருந்தேன். பிறகு இரு வாரம் கழித்து கடுமையான மழை இரு வாரங்களுக்கு மேல் நீடித்தது. ஆச்சரியம், ஒரு சொட்டு நீர் கூட எங்கள் பகுதியில் தேங்கவில்லை. இதற்கு காரணம் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள். ஏதோ சாக்கடைதானே என அலட்சியப்படுத்தாமல் மக்களின் நலன் கருதி அவற்றினை சரியான நேரத்தில் ஆய்வு செய்து நீர் ஓடும்படி சரியான நிலையில் வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என புரிந்து கொண்டேன்

எங்கள் தெருவோடு பிரதான சாலையினை ஒப்பிடுகையில் நான் வசிப்பது தாழ்ந்த பகுதி, இயல்பாகவே தண்ணீர் தேங்க வாய்ப்புண்டு. ஆனால் அவ்வளவு கன மழையிலும் சொட்டு தண்ணீர் என் பகுதியில் தேங்கவில்லை. இதற்கு காரணங்கள் என்ன.

1. ஜப்பானில் பெரும்பாலும் சாக்கடைகள் திறந்த நிலையில் இருப்பதில்லை. இதனால் மக்கள் மனம் போன போக்கில் குப்பைகளை அதுவும் நெகிழி குப்பைகளை சாக்கடையில் வீச முடியாது ஒவ்வொரு பகுதிக்கும் சென்சார் பொருத்தப் பட்டு மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இரசாயன பொருட்கள் கழிவு நீர் சாக்கடையில் கலந்தால் உடனே அந்த பகுதியில் சோதனை நிகழ்த்தப்பட்டு எது பிரச்சினை என்று கண்டறியப்படும். 
2. இது தவிர‌, ஒவ்வொரு கிராமத்தினையும் சுற்றியும் ஒரு கால்வாய் ஓடும். இயல்பான நாட்களில் அந்த கால்வாயில் தண்ணீர் ஓடுவதை காண்பதே அரிது. ஆனால் வெள்ளம் பெருகும் நாட்களில் இந்த கால்வாய்கள் அவற்றினை வடித்து குடியிருப்பு பகுதிகளை காக்கும்.

இவ்வளவு கட்டுபாடுகளையும் மீறி ஜப்பானை பாதிப்பது ஆற்றின் கரைகளை உடைத்து கொண்டு எதிர் பாராத விதமாக ஊருக்குள் பாயும் வெள்ளம் மட்டுமே.

3.ஒரு வேளை ஊரை சுற்றி வெள்ளம் வந்தால் குய்யோ முய்யோ என கத்தி கதறாமல் அருகில் உள்ள முகாம்களுக்கு மக்கள் சென்று விடுவார்கள். முகாம்கள் என்றால் நம் ஊர்களில் ஏதோ கலெக்டர் திடீரென திறந்து விடும் நிவாரண‌ கூடம் அல்ல. ஜப்பானில் நில நடுக்கம் என்பது இயல்பானது. சற்று சிந்திந்து பாருங்கள் கடுமையான நில நடுக்கத்தின் போது இங்கு மின்சாரம், வீட்டிற்கு சமைக்கும் அடுப்பு எரிவாய் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டு விடும். இப்படி  தீடீர் என ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க ஜப்பானிய அரசு பொது மக்களுக்கு வருடம் முழுவதும் இயங்கும் முகாம்களை வைத்துள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. அந்தந்த பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகள்தான். ஆம் நீங்கள் உங்கள் குழந்தைகளை மழைக்கு கூட ஒதுக்க மனம் வராத அரசு பள்ளிகள் தான் இங்குள்ள மக்களை காப்பாற்றும் ஆபத்துதவிகளாக இருக்கிறது. பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, உறைவிடம் ஆகியவை அங்கு தயார் நிலையில் இருக்கும். எப்படி பட்ட சூழலிலும் பொது மக்கள் ச‌ண்டை போட்டு கொள்ளாமல் முறையாக வரிசையில் நின்று, தேவையான பொருட்களை  பெறும் வண்ணம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

எல்லா பேரிடர் நிகழ்வுகளையும் திறன் அலை பேசிகளில் உள்ள திறன் செயலிகள் (Apps) மூலம் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவியல் நுட்பம் இங்கு ஜப்பானில் முன்னேறி உள்ளது.

நாம் இன்னும் தல, தளபதி படங்களுக்கு அடித்து கொண்டு சாகிறோம்.

சரி பொது மக்களின் விசயத்திற்கு வருகிறேன்.

1. பொது சாலையினை அத்து மீறீ  சாக்கடைகளை ஆக்கிரமித்து கற்களை கொண்டு மூடி அவற்றின் மீது கடைகளையும், வீடுகளை கட்டும் கொடூர ஆக்கிரமிப்பாளர்கள்
2. எந்த பொறுப்பும் இன்றி சாக்கடைகளில் நெகிழி குப்பைகளை வீசும் பொது மனிதர்கள்.
3. துப்புரவு பணி என்பது கலெக்டர் பணிக்கும் மேலானது என உணராமல் அவர்களுக்கு கேவலமான சம்பளம் வழங்கி அவர்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தேவையான, அத்யாவசிய உபகரணங்களை வழங்காதது
4. அரசின் நிவாரணம் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் அத்தனை நாசக் கேட்டையும் மீண்டும் செய்வது
5. பொது சொத்தான ஏரி, கண்மாய், குளம், வெள்ளதாரை எனப்படும் வெள்ள வடிநீர் கால்வாய் ஆகியவற்றை திருட்டு தனமாக ஆக்கிரமிப்பு செய்வது
6. நீர் வடியும் மட்டம் பார்த்து அமைக்கப்படும் சாலைகளை சேதப்படுத்துவது 

என மேற்சொன்ன எல்லா இழி செயல்களையும் செய்யும் பொது சனங்கள் என எல்லோருமே இது போன்ற வெள்ளப் பெருக்கிற்கு காரணம்.

மெத்தனமாய் இருக்கும் அரசும், ஒவ்வொரு பேரிடர் அழிவிழும் திருந்தாத‌ பொதுசனமும் விழித்து கொள்ளாத வரையில் இது போன்ற வெள்ள சேதாரங்களை தடுக்க முடியாது.

பொறுப்பு இருபாலருக்கும் உண்டு என்பதை இனியேனும் உணர்க‌

தீதும் நன்றும் பிறர் தர வாரா.


















Wednesday, 11 November 2015

 தொடு புலன் உணர் பாதைகள் (Tactile paving tiles)


ஜப்பான் இரயில் நிலையங்களில்  நான் பார்த்து வியந்த விசயங்களில் ஒன்று விழிச் சவால் உடைய திறனாளிகள் (Visual impaired persons) பயன்படுத்துவதற்காக உள்ள பிரத்யோக  தொடு புலன் உணர் பாதைகள் (Tactile paving). 

வழி காட்டும் குச்சியால் (white can) எளிதாக தொட்டு உணரும் வண்ணம் தடித்த குமிழ்களாக  (truncated domes) இப்பாதையில் பொருத்தப் பட்டு இருக்கும். மற்ற நபர்கள் இந்த பாதையினை தொந்தரவு செய்ய இயலா வண்ணம் மஞ்சள் வண்ணமிடப்பட்டு இருக்கும். தற்போது இவை நெகிழிகளால் செய்யப்பட்ட டைல்சு அச்சுகளாக கிடைக்கிறது. 

அடிப்படையில் இரண்டு விதமான குறியீடுகள் இந்த பாதையில் உள்ளன. புள்ளி புள்ளிகளாக (dots) உள்ள குமிழ்கள் நிறுத்த எச்சரிக்கையினையும் (stop), நீளவாக்கில் கோடுகளாக (lines) உள்ள குமிழ்கள் மேற்கொண்டு செல்லலாம் (proceed)  என்ற  அர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


Left side indicates "Stop", right side block indicates "Go"

எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இருந்து உங்கா  (Unga) இரயில் நிலையத்திற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும். இடையில் சிறு ஆற்று பாலத்தினையும், இரண்டு தெருக்களையும் கடக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த பகுதி முழுவதும்  மேற் சொன்ன பிரத்யோக தொடு புலன் உணர் பாதையினை பல்கலைக் கழக வாயிலில் இருந்து இரயில் நிலையத்தின் உள்ளே இரயில் நிற்கும் பிளாட்பாரம் வரை போட்டிருக்கிறார்கள்.

தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்தின் (நோதா வளாகம்) பிரதான வாயிலின் எதிர் புறம் ஆரம்பிக்கும் தொடு புலன் உணர் பாதை

 தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

 தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

உங்கா இரயில் நிலையத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள‌ தொடு புலன் உணர் பாதை

உங்கா இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள‌ தொடு புலன் உணர் பாதை

இந்த பாதைகள் முழுதும் அந்த பகுதியில் உள்ள நகர் மன்றத்திற்கு வரும் மக்களின் வரிப்பணத்தில் போடப்படுகிறது.

மேலும் இரயிலின் உள்ளே வாசலின் அருகிலும், நுழைந்தவுடன் இடது அல்லது வலது புறம் இருக்கும் முன்னுரிமை (priority seats) இருக்கைகளின் கைப்பிடி கம்பிகளிலும் எளிதில் தொட்டு உணரும் வண்ணம் பிரத்யோக மஞ்சள் வண்ண குமிழ்கள் பொருத்தப்படிருக்கும் இது மட்டுமல்லாமல் மக்கள் புழங்கும் தெருக்களின் பிளாட்பாரங்களிலும் இது போன்ற பாதைகளை அமைத்துள்ளார்கள். 


நகரியமா ஒத்தகன மோரி (Nagariyama Otakanamori) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

காமதா (Kamata) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

காமதா (Kamata) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை 

விழிச் சவால் உடைய திறனாளிகள் எளிதில் கவனமாக‌ செல்லும் வண்ணம் பிளாட்பாரத்தின் நடுவில் இந்த பாதை அமைக்கப்பட்டு இருக்கும்.

அது சரி இப்படி ஒரு பாதையினை யார் தான் கண்டுபிடித்தது?

1965 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் செய்சி மியாகே (Seiichi Miyake) என்பார் தனது விழிச் சவால் உடைய நண்பர் ஒருவருக்கு உதவும் பொருட்டு இந்த தொடு புலன் உணர் பாதைகளை வடிவமைத்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1967 ஆம் ஆண்டு இது ஜப்பான் நாட்டு அரசால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சோதனை முயற்சியாக ஒகாயாமா (Okayama) நகரில் உள்ள தெருக்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பயன்பாட்டினை   தொடர்ந்து ஜப்பான் நாடு முழுவதும் இந்த பாதைகள் அமைக்கப்பட்டது.

பின்னர் இந்த வடிவமைப்பின் பயனை கண்டுணர்ந்த மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பாதைகளை அமைத்துள்ளனர். தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென் கொரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் இரயில் நிலையங்களில் இந்த தொடு புலன் உணர் பாதைகளை காணலாம். 

புள்ளிகள் நிறைந்த எச்சரிகை குமிழ்களை கட்டிடங்களின் உள்பகுதியில் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடத்தில் விழிச் சவாலர்களுக்கு உதவும் வகையில் தற்போது பதிக்க ஆரம்பித்து உள்ளார்கள். ஒரு வகையில் இது வரவேற்கப் பட வேண்டிய விசயம்.


சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆய்வக கட்டிடத்தின் உள்பகுதியில் உலோகத்தால் பொருத்தப்பட்டுள்ள தொடு புலன் உணர் குமிழ்கள்
உலகின் முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்த பாதைகளை அமைப்பதில் ஜப்பான் மற்ற நாடுகளுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது.

இனி வரும் காலங்களில் நம் நாட்டில் அமைக்கப்படும் சாலைகளில் ஓரங்களிலும், இரயில்வே நிலைய பிளாட் பாரம், பேருந்து நிலையங்களில்  இது போன்ற பிரத்யோக டைல்ஸ் கற்களை (Tactile paving tiles) பதித்தால் விழிச் சவால் உடைய திறனாளிகள் நடக்க எளிதாக இருக்கும்

Saturday, 7 November 2015


ஜப்பான் தபால் நிலையங்கள் ‍-1 (Japan Postal Service)

நமது வீட்டிற்கு தபால் நிலையத்தில் இருந்து ஒப்புகை அஞ்சலில் (Register post) கடிதமோ அல்லது பொருட்களோ வரும் போது நாம் வீட்டில் இல்லா விட்டால் அருகில் உள்ளவர்களிடம் தபால் பட்டுவாடா அலுவலர் (Post Man) பயனாளரை தபால் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ள சொல்லுங்கள் என்று சொல்லி விடுவார். 

ஜப்பானில் இது போன்ற சூழலில், பட்டு வாடா செய்யபடாத தபாலுக்கான அறிவிப்பு சிட்டை ஒன்றினை (Undelivered Notice -சுபோன் யுபின்புத்சு‍ தோ கோ புசாய் ரென்ராகு கியோ ) நம் வீட்டு அஞ்சல் பெட்டியில் போட்டு விடுகிறார்கள். 


Undelivered post notice, Japan Post (JP)

Undelivered post notice, Japan Post (JP)

இந்த அறிவிப்பு சிட்டையில் உள்ள இலவச சேவை எண்ணுக்கு (toll free number) அழைத்து எந்த நேரத்தில் நாம் வீட்டில் இருப்போம் என தெரிவித்து விட்டால் போதும் நாம் அறிவுறுத்திய நேரத்திற்கு அந்த தபாலை நம் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர். 

இந்த இலவச சேவை தொலை பேசி வசதி ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு. 

பேச முடியாத மாற்று திறனாளிகளும் இந்த வசதியினை பயன்படுத்தும் பொருட்டு, எண்களை மட்டுமே தட்டச்சு செய்து வசதியான‌ நேரத்தினை அனுப்பு வண்ணம் எல்லா தகவலும் அந்த அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பட்டுவாடா நேரத்தினை ஐந்து காலமாக பிரித்து வைத்துள்ளார்கள். உதாரணமாக மதியம் 12 முதல் 2 மணி வரை ( இரண்டாவது காலம்), இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை (ஐந்தாவது காலம்).

இந்த அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பார் கோடு தகவலை அலைபேசியில் உள்ள ஸ்கேனர் திறனிகள் மூலம் உள்ளீடு செய்தால் தபால் பட்டுவாடா பற்றிய மேலதிக தகவலை பெறலாம்.

ஒரு அட்டைதான் ஆனால் பயனாளருக்கும், தபால் அலுவலருக்கும் நேரத்தினை மிச்சமாக்கி தேவையற்ற வீண் அலைச்சலை குறைக்கிறது.

இதே போன்ற பட்டுவாடா அட்டைகளை இந்திய அஞ்சல் துறையும் கொண்டு வந்தால் நமக்கு எளிதாக இருக்கும்.

குறிப்பு:
இரவு 9 மணிக்கு மேல் தபால் அவசரம் எனில், பட்டுவாடா செய்யப்படாத தபால் பொருட்களை 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.

பட்டுவாடா செய்யப்படாத பொருள் ஒரு மாத காலம் பயனாளரின் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அனுப்பியவரின் முகவரிக்கே திருப்பி அனுப்பபட்டு விடும்.

Tuesday, 3 November 2015


கையெழுத்து (Hand writing menu board)



கணினி மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்  அச்சுத்துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடும்போது  தற்போது கட்டற்ற எழுத்துருக்கள்  இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இப்பொழுது இக்கட்டுரையினை கூட நான் சொல்லினம் என்ற யுனிகோடு எழுத்துரு கொண்டு அலைபேசியில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.

அது மட்டுமில்லாமல், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் , கடைகளில் அறிவிப்பு பலகைகள் என எல்லாவற்றிலும் அச்சடிக்கப்பட்ட தாள்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். ஒரு விதத்தில் நம்முடைய நேரம், செலவு ஆகியவை பெரும் சதவிகிதம் மிச்சபட்டிருக்கிறது.
ஆனால்,  சின்ன கடைகளில் காணப்படும் அறிவிப்புகள், விலை விபரம்,
அங்காடிகளில் பொருட்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றில் பயன்படுத்தப் பட்டு வந்த கையில் எழுதும்  முறை தற்போது வழக்கில் இருந்து மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்கட்டும், சமீப காலத்தில் பரவலாக நாம் அறிந்த சுவற்றில் எழுதும் ஓவியர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அழகான, வித்தியாசங்கள் நிறைந்த அவர்களது கையெழுத்தில் காணப்பட்ட கடைகளின் பெயர் பலகைகள், வாழ்த்து அட்டைகள், வாகன எண்கள் இன்று முற்றிலும் அழிந்து விட்டன. பிளக்ஸ், ஸ்டிக்கர் என நவீன நுட்பங்களுக்கு நாம் மாறி விட்டோம்.

எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் உங்களிடம் இருக்கும் பழைய கடிதங்கள்,  வாழ்த்து அட்டைகளில் உங்களின் கையெழுத்தையோ, அல்லது பழைய புகைப்படங்களில் இருக்கும் சுவர் எழுத்துகளையோ பாருங்கள், அவை நாம் இழந்த மொழியின் எழுத்து வளத்தினை சொல்லும்.


நேற்று முழுவதும் சுவான்சி (Swansea) நகரத்தின் கடைகளை சுற்றி வந்தேன். பெரும்பாலான கடையின் பெயர்கள், விலைப் பட்டியல் போன்றவை கையெழுத்தில் மட்டுமே காணப்பட்டது. அந்த எழுத்துகளை  பார்க்கவே வசீகரமாக இருந்தது.


Swansea City, UK

Mumbles village, Swansea, UK




தமிழில்  "ற", " ழ", "ஐ", " த" உள்ளிட்ட பல எழுத்துகளை எழுதும் போது ஒவ்வொருவரும் ஒரு மாதிரி எழுதுவார்கள், அல்லது சுழிப்பார்கள். இதுவே புதிய எழுத்துருக்களின் பிறப்பிடம் எனச் சொல்வேன்.

நம்மிடம் இருந்து எழுத்துகள் மெல்ல அழிந்து கொண்டே இருக்கிறது. முகநூலில் எழுதும் பலரும் கடுமையான இலக்கண பிழைகளோடு எழுதுகின்றனர். இவை யாவும் நாம் தொடர்ந்து எழுதாமல் இருப்பதன் விளைவே,  ஒரு வேளை இப்படி தொடர்ந்து நாம் எழுதாமல் இருந்தால் நம் மொழி மெல்ல சிதையும்.

முடிந்த வரை கடைகளில் விலைப் பட்டியல், தற்காலிக அறிவிப்பு பலகைகள் போன்றவற்றினை கையில் எழுதுங்கள்.  தொடந்து நாமே கைப்பட எழுத்துகளை எழுதுவதால் மொழி நின்று சிறக்கும்.

உதாரணத்திற்கு ஒரு மொழியினை புதிதாக கற்கும் போது ஆசிரியரின் கையெழுத்து எளிதாகவும் புத்தகத்தில் இருக்கும் அச்சு எழுத்துகள் கடினமாக இருப்பது போல் தோன்றும். உண்மையில் புத்தகத்தில் இருக்கும் எழுத்து வடிவமே முற்றிலும் சரியானது. ஆயினும் கையால் எழுதுன் எழுத்துகளே நம் மனதுக்கு நெருக்கமாக நிற்கிறது.

தற்பொழுது சந்தைகளில் பிரத்யோக கரும்பலகைகளும், அவற்றில் எழுத சிறப்பு வண்ண பேனாக்களும், அழிப்பான்களும் வந்து விட்டது. சமீபத்தில்  எளிதாக எழுதி அழித்து கொள்ளும் வகையிலான எல் சி டி சிலேட்டுகள் சந்தைகளில் கிடைக்கிறது.
விரைவில் சூரிய ஒளியில் இயங்கும் போட்டோ குரோமிக் (Photochromic) நுட்பத்தில் வண்ண எழுத்துகளை கையால் எழுதி அழிக்கும் சிலேட்டுகள் சந்தைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளது. அப்புறம் என்ன உங்கள் கையெழுத்தில் அறிவிப்பு பலகைகளை வையுங்கள்.

குறிப்பு:

சென்ற ஆண்டு கரூரில் உள்ள பிரபல அங்காடியில் பழங்கள் வாங்க சென்று இருந்தேன். அப்போது ஆரஞ்சு பழம் இருந்த இடத்தில் "காமாலை ஆரஞ்சு" என எழுதப் பட்டிருந்தது.  ஒரு வேளை இந்த ஆரஞ்சு பழத்தினை உண்டால் காமாலை நோய் தீர்ந்து விடுமோ என ஐயம் வந்து விட்டது. பிறகுதான் தெரிந்தது அது கமலா ஆரஞ்சு என்று. சரி அதை எழுதியவரை பார்த்து திருத்தலாம் என்று போனால் பள்ளி படிப்பினை இடையிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு வந்த சிறுவனைப் போல் தெரிந்தான். அவனை கடிந்து கொள்ள மனம் இல்லாமல் அன்பாக அறிவுறுத்தி விட்டு வந்தேன். இந்த நிகழ்வுதான் இக்கட்டுரையினை எழுத வேண்டுன் என்று என்னை தூண்டியது.