Sunday, 2 August 2015


சங்கொலி இதழில் எனது கட்டுரை


இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

புதிய உலகிற்கான கதவுகள் நண்பர்கள் வழியே திறந்து கொண்டே இருக்கிறது. 

எப்போதும் பரபரப்பாகவே நண்பர்களோடு இருந்து விட்டு ஜப்பான் வந்த பிறகு ஏனோ ஒரு ஏகாந்த தனிமையினை அனுபவிக்க நேர்ந்து விட்டது. ஆள் அரவமற்ற ஒரு சிறிய கிராமத்தில் (Unga, Nodashi, Japan) தற்போது வசிக்கின்றேன்.  நான் பணி புரியும் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தின் ஒரு சிறிய கால்வாயின் கரையோரம் கட்டி வைத்த தீர்க்கதரிசியினை பாராட்ட வேண்டும். இளைஞர்களை எப்போதாவது அரிதாய்தான் இந்த கிராமத்தில் பார்க்க முடியும். அப்படியென்றால் எனது சூழலை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். எப்போதாவது, பணி நிமித்தம் தோக்கியோ நகருக்குள் பயணம் என்று தற்போதைய‌ பொழுது ஒருவாறாய் கழிகிறது. 

முக நூல் பல நேரங்களில் என் பொழுதுகளை தீன்று தீர்த்தாலும், உலகில் நான் பார்த்திராத பல நண்பர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது. அந்த வகையில் மார்க்கிற்கு பெரும் நன்றிகள். 

அன்றாடம் பார்க்கும் விசயங்களை அதன் பின் புலத்தினை தேடிப் படித்து எழுதி முக நூலில் பகிர்ந்து கொண்டு இருந்தேன். என் ஆய்வின் ஒரு பகுதி நேரம் இதில் செலவாகி கொண்டு இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக தாய்மொழியில் எழுதிக் கொண்டே இருந்ததால், கட்டுரைகளை எழுதும் விதத்தில் கொஞ்சம் நீக்கு போக்கு பிடிபட ஆரம்பித்தது.   சிறிய செய்தியாக இருந்தாலும் சுவாரசியம் கூட்டி சொல்லுதல், வாசிப்பவரை உள்ளே இழுத்துச் செல்ல தேவையான பொறியினை எழுத்தின் வழியே வலை விரித்தல், குறைந்த பட்சம் வாசிப்பவர்களுக்கு புதிய செய்தியினை பதிய வைத்தல், அவர்களின் நுட்ப அறிவினை தூண்டுதல் என எழுத்தின் பல இரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தது. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதினால்தான் இலக்கண பிழைகளை முற்றாய் தவிர்க்க முடியும் என எண்ணுகிறேன். 

இப்போது என் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வேறு கோணங்களில் எழுத ஒரு புதிய பிடி கிடைத்துள்ளது. தாய் மொழியில் நாம் எவ்வளவு பலமாக இருக்கிறோமே அந்த அளவிற்கு எல்லா மொழியின் லாகவமும் பிடிபடும் என நான் உணர்கிறேன். 

என் முகநூல் பக்கத்தினை படித்துப் பார்த்து விட்டு நான் அதிகம் நேசிக்கும் மிகச் சிறந்த பண்பாளர் திரு.வைகோ அவர்களின் உதவியாளர், அன்பிற்குரிய அருணகிரி அண்ணன் அவர்கள் முகநூல் வழியே தொடர்பு கொண்டு ஜப்பானில் உங்களது அனுபவத்தினை ஒரு கட்டுரையாக எழுதி கொடுங்கள் என்று கேட்டார். 

அதுவரை எந்த ஒரு எல்லையும் இல்லாமல் மனதில் தோன்றியவைகளை முகநூலில் எழுதிக் கொண்டு இருந்த எனக்கு அவர் சொன்னவுடன் எப்படி ஒரு தலைப்பிற்குள் எழுதி தருவது என யோசித்துக் கொண்டு இருந்த போது சரியாக இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க வேண்டிய சூழலில் வேறு மாட்டிக் கொண்டு  இருந்தேன். ஒரு வழியாக‌,  இரண்டு மாதம் கால தாமதத்திற்கு பிறகுதான் அண்ணனிடம் எனது கட்டுரைகளை நான் அனுப்ப நேர்ந்தது. இடையில் உரிமையோடு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தார். எப்படி எழுதி தர வேண்டும் என கேட்டபோது அவர் எழுதிய ஜப்பானில் அருணகிரி புத்தகத்தின் மின் நூல் பதிப்பினை எனக்கு அனுப்பி வைத்து மேலும் உற்சாகமூட்டினார். மேலும் தொடந்து எழுதுங்கள் அவற்றினை தொகுத்து ஒரு புத்தகமாக பதித்து விடலாம் என்று வழிகாட்டினார். 

நான் மட்டுமல்ல பல நண்பர்களை எழுத வைத்து தமிழுக்கு பல பயணக் கட்டுரைகளை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார் அருணகிரி அண்ணன். அந்த வரிசையில் தற்போது எனது ஜப்பானிய அனுபவங்கள் மதிமுக வின் அதிகார ஏடான சங்கொலி இதழில் தொடர் கட்டுரைகளாக இரண்டு வாரம் வந்துள்ளது. 

அருணகிரி அண்ணனின் வழிகாட்டலுக்கு பிறகு புதிய வலைப்பூக்கள் பக்கதினை தொடங்கி எனது கட்டுரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். நான்கு மாதத்தில் 70 கட்டுரைகள் எழுதி விட்டேன். இன்னும் 15 கட்டுரைகள் பாதி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. வலைப்பூக்கள் தொடங்கிய நான்கு மாதத்தில் எனது பக்கங்கள் ஏறத்தாழ 8000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 41 நாடுகளில் இருந்து 3082 நண்பர்கள் தொடர்ந்து எனது பக்கங்களை படிக்கின்றனர். இந்த சிறியவனின் எழுத்துகளை படித்து விட்டு முகநூல் வழியே உற்சாகமூட்டிய எனது நண்பர்களை அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.  

நான் வலைப்பூக்களில் எழுதும் இக்கட்டுரைகளுக்கு அண்ணன் அருணகிரி கொடுத்த உற்சாகம்தான் முதற்படி என்று சொல்ல வேண்டும்.

முகநூல் வழியே தங்களது நேரத்தினை செலவு செய்து எனது கட்டுரைகளில் உள்ள பிழைகளை நேரம் ஒதுக்கி  திருத்தம் செய்யும் பேராசிரியர் செல்வகுமார் ஐயா, மணி வண்ணன் ஐயா உள்ளிட்ட சான்றோர் மக்கள் பலருக்கும்  எமது நன்றிகள்.

நண்பர்களுக்கு சங்கொலி இதழின் இணைய சுட்டிகளை இணைத்துள்ளேன். 

Part -1:


Part-2:










Thursday, 30 July 2015


ஒரு பேராசானின் இறுதிப் பயணம் - The last journey of a great teacher  

நோபல் அறிவியளார்கள்,உலகின் தலை சிறந்த பொருளாதார மேதைகள், மிகச் சிறந்த நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் தங்கள் எல்லைகளை கடந்து  சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளமும், வாழ்வியல் அடிப்படைத் தேவைகளும் மிகச் சிறப்பாக கொடுத்து அவர்களை கெளரவிக்கின்றது. 

சரி இவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய‌ சம்பளத்திற்கு என்னதான் பணி? மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டுமா, அவர்களது தேர்வுத் தாளை திருத்த வேண்டுமா. எதுவுமே கிடையாது. வேறு என்னதான் செய்ய வேண்டும்? மாணவர்களோடு உரையாட வேண்டும், அவர்களது அனுபவங்களை பகிர வேண்டும். இதன் மூலம் அந்நாட்டின் மனித வள மேம்பாடு வளர்ச்சியடையும் என அவர்கள் கருதுகிறார்கள். மேதமை தாங்கிய இந்த முதிர்ந்தவர்களிடம் கிடைக்கப்பெறும் அறிவாயுதத்திற்கே அவர்கள் பெரும் தொகையினை செலவிடுகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில்தான் மேதகு அப்துல் கலாம் ஐயாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதரு பேராசிரியர் பதவிகள் அவரை தேடி வந்தன. அவற்றினை எல்லாம் நம் தாய் நாட்டிற்காக புறந்தள்ளி விட்டு நம் மண்ணிலேயே தங்கி, தன் 84 வயதிலும் இடையறாது இந்தியா முழுக்க பயணித்து பல லட்சம் மாணவர்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தேசிய ஆராய்ச்சி கூடங்களிலும் நேரில் சந்தித்து உரையாடினார். அதன் சாட்சியே இந்த இரண்டு நாட்களில் சமூக தளங்களிலும், பொது வெளிகளிலும் பகிரப்படும் புகைப்படங்கள்.  ஒரு எளிமையான பேராசானின் பயணத்திற்க்கு இதுவே சாட்சி

மக்களை வசீகரிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் அவரிடம் இல்லை. கேட்பவர்களை கிண்டலடிக்கும் பெரிய நகைச்சுவை துணுக்குகள் இல்லை. பிறகு எப்படி இத்தனை லட்சம் மாணவர்கள் அவரது பேச்சில் கட்டுண்டார்கள்.  அதற்குக் காரணம், தேசமுன்னேற்றத்திற்காக அவரிடம் இருந்த அக்கறை.   அந்த தகுதிதான் மாணவர்களிடம் அவரை கொண்டு சென்றது.

இல்லறத் துணை இல்லாமல் தன் முதுமை காலத்திலும்  சுய ஒழுக்கம் தவறாது இந்த நாட்டையே சுற்றி வந்த ஒரே ஆன்மா கலாம் அவர்கள்.  கலாம் ஐயா மறைந்த பிறகு இந்த இரண்டு நாட்களில் அவர் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை காணும் போது எதார்த்தத்தில் இந்த தேசம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது. இதே வயதில் இத்துணை செயல்பாடுகளை கடந்து வருவீர்களாயின் நீங்கள் அவரை விமர்சிக்க கட‌வீர்களாக. 

மிகச் சிறந்த போராளிகள், இலக்கியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பொது வெளியில் அறியப்பட்டவர்களிடம் அவர் போய்ச் சேரவே இல்லை என்பதனை என்னால் உணர முடிகிறது. ஒரு வேளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். புல்லாங்குழலின் வழியே பயணிக்கும் காற்று முழுமையும் அதனை நிரப்ப இயலாது, ஆனால் அதன் துளைகளே அதனை இசைக்கிறது. அதைப் போலவே, உங்களின் விமர்சனங்கள் வழியே அவர் இன்னும் அதிகமாய் மக்களிடம் போய் சேருவார், என நம்புகிறேன்.

இச்சமூகத்திற்கு அவரது பங்களிப்பினை தனிக் கட்டுரையாக எழுதலாம், ஒரு ஆராய்ச்சியாளனாக இந்தியாவின் தற்போதய அறிவியல் வளர்ச்சியில் அவரது பங்கினை நானறிந்த வகையில் ஓரிரண்டு விசயங்களை பகிர விரும்புகிறேன். 

ஐஐடிகளும், தேசிய அறிவியல் ஆய்வகங்களிம் மட்டும்தான் மிகப் பெரிய ஆய்வு திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்பிக் கொண்டிருந்த கால கட்டம் அது. அப்போதுதான், கலாம் அவர்கள் இராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி கழகத்தின் செயலராக இருந்த போது, இந்த நாட்டில் உள்ள எல்லா கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் உள்ள பேராசிரியர்களுக்கு அடிப்படை அறிவியல் மற்றும் நுட்ப ஆராய்ச்சிக்கான உதவித் தொகை வழங்கவும், புதிய பல திட்டங்களையும் கொண்டு வந்தார். இதனால் இன்று பல ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர்.  இந்தியாவிற்கென பிரத்யோக நுட்பங்கள் இந்த மண்ணிலேயே வடிவமைக்கப்படும் என நம்பியவர். 

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எந்த மாதிரியான ஆராய்ச்சி இந்தியாவிற்கு தேவை என்பதனை மிக நுட்பமாக ஊகிக்கும் வல்லமை பெற்றவர். அதனை மாணவர்களிடமும் வலியுறுத்தினார். என் நினைவில் தெரிந்த வரை 2005ல் இருந்து 2007 ஆம் ஆண்டிற்குள்  தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கின் ஆய்வு சுருக்கம் புத்த‌கத்தில் முகவுரை எழுதியிருந்தார். அதில் அவர் நம் தேசத்தின் எதிர்கால ஆராய்ச்சி என வலியுறுத்தியது " விண்ணில் இருந்து சூரிய ஒளியில் மின்சக்தியினை உற்பத்தி செய்து கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் பூமிக்கு மைக்ரோவேவ் நுட்பம் மூலம் எப்படி கொண்டு வருவது" என்பதே. இந்த நுட்பம் உண்மையில் சாத்தியம் ஆகுமா என்று நான் ஆச்சரியப் பட்டேன். 

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் விண்வெளி கழகமும் (JAXA), மிட்சுபுசி நிறுவனமும் இணைந்து உலகின் முதல் முறையாக மைக்ரோவேவ் நுட்பத்தின் மூலம் 1.8 கி.மீ தொலைவில் இருந்து மின்சாரத்தினை கம்பியில்லாமல் மைக்ரோவேவ் நுட்பத்தின் அடிப்படையில் 10 கிலோவாட் மின்சாரத்தினை கடத்தி சாதித்து காட்டியுள்ளனர். ஜப்பான் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்துறையில் வெகு தூரம் முன்னேறி இருக்கும் என்பது உறுதி. அப்போதும் நம்ம ஊர் உளுந்த பருப்புகள் விமர்சனம் என்ற பெயரால் வேகாத பருப்பை நசுக்கி கொண்டு இருப்பார்கள்.  தமிழ்ப் பிள்ளைகளே இவர்களை உதறித் தள்ளி விட்டு மக்களுக்கு தேவையான அறிவியலை முன்னெடுத்து செல்லுங்கள்.

கலாம் அடிப்படையில் பறப்பியல் நுட்ப வல்லுநர், ஆயினும் தான் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் ஆற்றல் தேவை எதிர் காலத்தில் தீர்க்க இயலாத சிக்கலாக இருக்கும் என்று கணித்திருந்தார். புதிய ஆற்றல் உற்பத்திக்கான‌ மூலங்களை இந்தியா உருவாக்க வேண்டிய கட்டாயத்தினை  தொடந்து வலியுறுத்தினார். இந்தியாவின் பரந்து பட்ட மக்கள் தொகையினை சமாளிக்க தேவைப்படும் மிகையான மின் ஆற்றல் உற்பத்தியினை அணு மின் உலை மூலம் பெற முடியும் என நம்பினார். அவரிடம் இருந்து கருத்தளவில் நான் நிறைய வேறுபடுகிறேன். ஆனால் ஒரு போதும் கலாம் இந்தியாவில் சூரிய மின் ஆற்றல் தொடர்பான எந்த ஆராய்ச்சி திட்டத்தினையும் குறை கூறியதோ, தடுத்ததோ இல்லை.   

இன்னும் பல ஆண்டுகாலம் இந்த மாமேதை வாழ்ந்திருந்தால் பல லட்சம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார். அவரை சந்திக்க வேண்டி காத்திருக்கும் பல லட்சம் மாணவர்களது கேள்விகளுக்கு அவரின் வாழ்க்கையே விடையாக கிடைக்கும் என எண்ணுகிறேன். 

எங்களுக்கு சிந்திக்க தெரிந்த காலத்தில் நாங்கள் நம்பிக்கையற்று இருந்தோம். தாய் மொழியில் படித்த எங்களுக்கு எதிர்காலம் சூன்யமாய் தெரிந்தது. நீங்கள் எங்களிடையே வந்தீர்கள், நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம். எதிர்கால இந்தியாவில் எம் மாணவர்கள் உன் பெயரால் பெரும் எழுச்சி மிகுந்த தேசத்தினை கட்டி எழுப்புவார்கள் என்பது உறுதி.

எங்கள் ஆசானின் இறுதி யாத்திரைக்கு மாணவர்களாகிய எங்கள் இதய கமலங்களில் இருந்து பூக்கள் தந்து வழி அனுப்புகிறோம். 

உமது ஆன்மா வல்ல பரம்பொருளின் மடியில் உறங்கட்டும்.





(மேதகு கலாம் ஐயா  அஞ்சலி செலுத்தும் வகையில் எங்களது மூத்த சகோதரரின்   இளைய புதல்வன் ஆதித்தன் (15 வயது) வரைந்த கோட்டோவியம் )


Monday, 27 July 2015


இறுதி வரை
அறிவியலுக்காகவே வாழ்ந்தாய்

ஒரு ஆசானாய்
உயிர் பிரிந்தாய்

ஒரு வார்த்தை அணு மின் உலை
கெட்டதென உரைத்திருந்தால்
எம்மவருக்கு ஞானம் வாய்த்திருக்குமே!

இனி யாரை கொண்டு
இப்பேருண்மையினை நிறுவுவது.

உன் பாத கமலங்களில்
எம் கண்ணீரே சரணம்.

-



முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் கலாம் ஐயாவின் மறைவு சொல்லனா துயரை தருகிறது. 

இராமேஸ்வரத்தில் ஏற்றிய விளக்கு இந்தியாவின் வடக்கில் சில்லாங்கில் மறைந்து விட்டது.

சூரிய  மின்சக்தியின் மூலம் இயங்கும் குப்பைத் தொட்டிகள் - Solar powered trash bin


தற்போது மக்கள் கூடும் இடங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் ஒழுங்கின்றி வெளியில் வீசப்படும் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது  மக்களுக்கு அருவருக்கத்தக்க சூழலை ஏற்படுவதோடு   மோசமான‌ தொற்று நோய்களின் பிறப்பிடமாக குப்பைத் தொட்டிகள் விளங்குகிறது.

நம் மக்கள் குப்பைகளை தெருக்களில் வீச முக்கியமான காரணங்கள். அ) சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை அல்லது அலட்சியம்   ஆ) போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாமை இ) குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளை சரியான நேரத்தில் சேகரித்து செல்ல இயலாதது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குப்பை மேலாண்மை மேற்கண்ட காரணிகளால் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இக்காரணங்களை தவிர்த்து, இன்னும் நம் நாட்டில் சரி வர மேம்படுத்தப்படாத‌  குப்பை கழிவு மேலாண்மை திட்டம்மும் ஒரு முக்கிய காரணாமாக உள்ளது.

இதில் அரசினை குறை சொல்வதை விட பொதுசனமாகிய நாம்தான் நிறைய மாற வேண்டும். சொல்லப் போனால் இனி வரும் காலங்களில் அரசு, பொதுசனம் இருவருமே சேர்ந்து கூட்டாக இயங்கினால் மட்டுமே சுத்தமான தேசத்தினை உருவாக்க முடியும்

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களில் குப்பைத் தொட்டிகள் இயல்பான நகரங்களை ஒப்பிடும் போது மிக வேகமாக நிரம்பி விடும். அவ்வாறு குப்பைகள் நிரம்பிய பின் சரியான நேரத்திற்கு அக்குப்பைகள் அகற்றப்படாமல் விட்டால் பெரும் சுகாதார கேட்டினை உருவாக்கும்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌, அமெரிக்காவில் உள்ள பிக் பெல்லி (BigBelly Solar) நிறுவனம் நியூயார்க், பிலிடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் வொய்பை (Wifi) நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு சூரிய மின் சக்தியில் இயங்கும் குப்பைத் தொட்டிகளை மக்கள் கூடும் பொது இடங்களில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

இந்த குப்பைத் தொட்டிகளில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.


வழக்காமான குப்பைத் தொட்டிகளைப் போல் அல்லாமல், இந்த குப்பை தொட்டியில் மக்கள் போடும் குப்பை நிரம்பியவுடனோ அல்லது தாங்க முடியாத துர்நாற்றம் வீசும் போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வொய்பை நுட்பத்தின் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் சென்று விடும். அவர்கள் உடனடியாக அந்த குப்பைத் தொட்டியினை காலி செய்து விடுவார்கள். இதன் மூலம் குப்பைகள் பெருகி தெருக்களில் துர்நாற்றம் வீசப்படுவடு தடுக்கப்படுகிறது.  இதன் விலை 3000 அமெரிக்க டாலர். இதனை இந்திய தொழில் நுட்பத்தில் வடிவமைத்தால் பல மடங்கு விலை குறைய வாய்ப்புள்ளது.

சோலார் பேனல்கள் குப்பைத் தொட்டியின் மீது உள்ள மூடிப் பகுதியில் சூரிய ஒளி படும் படி இணைக்கப்பட்டுள்ளது (சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில் மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்களை பயன்படுத்துவது பல வகைகளில் சிறப்பு). மேலும் குப்பையிலிருந்து மிக மோசமான வாயு வெளிப்படும் பொழுது மூடியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள வொய்பை பலகையில் வாயுவினை அறியும் நுணர்விகளும் (gas sensors) பொருத்தப்பட்டிருக்கும். எளிமையான இந்த வடிவமைப்பு நிச்சயம் நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த பெரு நகரங்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் இதனை சோதனை முயற்சியாக பரிசோதித்து பார்க்கலாம்.

இந்த நுட்பத்தினை வெளிநாடுகளில் இருந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. தற்போது நம் பொறியியல் மாணவர்களைக் கொண்டே இந்த திட்டத்தினை வடிவமைக்கலாம்.




இன்னும் சில நிறுவனங்கள் சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் வண்ணத் திரைகளை (LED) கொண்டு விளம்பர பலகைகளை குப்பைத் தொட்டிகள் மீது வைத்து புதிய வகையில் வாடிக்கையாளர்களை கவந்து வருகிறார்கள்.


Advertisement flash board on solar powered garbage cans


விளம்பர பலகை வைக்கும் அளவிற்கு கூட வேண்டாம், குறைந்த பட்சம் நம்மால்   சூரிய மின் சக்தியினை கொண்டு குப்பைத் தொட்டியினை சரியான நேரத்திற்கு காலி செய்ய முடியுமா என்று முயற்சிக்கலாம். இதனால் நகராட்சி வண்டி தேவையில்லாமல் ஊரைச் சுற்றத் தேவை இருக்காது. பொதுசனமும் குப்பை நிரம்பிய தொட்டியினால் அவதியுறவும் தேவை இருக்காது.


(குப்பைதானே என்று அலட்சியப் படுத்தி வெளியே வீசாதீர்கள். இந்த கேவலமான குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான‌ மின் சக்தி, எரிவாயு போன்ற ஆற்றலை பெற முடியும். ஆனால அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, குப்பைகளை குப்பை, மட்காத குப்பை என பிரித்து போட வேண்டும் அதனைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்)


Wednesday, 22 July 2015


சூரிய மின் சக்தியில் இயங்கும் கண்காணிப்பு விளக்குகள் - Solar powered motion lights


நமது வீட்டின் வராந்தா, கொல்லைப் புறம், மொட்டைமாடி, அல்லது ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஆனால் பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வெகுவாக விரயம் ஆக வாய்ப்புள்ளது. சரி பணத்தினை சேமிக்காலாம் என விளக்கை அணைத்து விட்டால் அந்நியர்கள் யாரேனும் வீட்டினுள் பிரவேச்சிப்பது தெரியாது. 

சரி, மின்சாரமும் சிக்கனம் ஆக வேண்டும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். இப்படி இரண்டு அனுகூலங்களையும் பெற  ஒரே வழி  நடமாட்ட நுணர்வினைக் கொண்டு இயங்கும் தானியங்கி விளக்குகள் (motion controlled lighting) அமைப்பதுதான். இவ்விளக்குகள் சிறிய அசைவுகளை நுணர்விகள் மூலம் அறிந்து, ஆள் நடமாட்டத்தின் போது தானாகவே எரியும் வகையில் நுணர்விகள் (sensors) மூலம் மின் சுற்றில் மாற்றிகளை (switch) கொண்டு இயங்குகிறது.

இவ்வகையில்  அமைக்கப்படும் மின்சார விளக்குகள் வெளிநாடுகளில் மிகப் பிரசித்தம். அதுவும் பொதுக் கழிவறைகள், மக்கள் அதிகம் புழங்காத தெருக்களில் இவைகளை நிறுவுவதன் மூலம் தொடர்ந்து விளக்கு எரியாமல் , தேவைப்படும் போது அல்லது மனித நடமாட்டத்தின் போது மட்டும் எரிய வைக்கப் படுகிறது. இதன் மூலம் பெரும் மின் சக்தி சேமிக்கப்படுகிறது. 

தற்போது இதே நுட்பத்தினை பயன்படுத்தி, சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தியினை பெறப்பட்டு நடமாட்ட‌ நுணர்விகள் மூலம் எரியும் தானியங்கள் எல் ஈ டி விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளது. சொல்லப் போனால் வீட்டின் வெளிப்புறங்களில் பயன்படுத்தப்படும் தானியங்கி விளக்குகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாகும். 

தற்போது சந்தையில் (Sunforce Products, Japan) வந்துள்ள இந்த சூரிய மின் சக்தியில் இயங்கும்  நடமாட்ட நுணர்வு விளக்குகளில் உள்ள மேம்பட்ட பயன்களைக் கொஞ்சம் பார்ப்போம். 

வழமையான சிலிக்கான் சோலார் பேனல்களுக்கு பதில்,  காப்பர் இன்டியம் கேலியம் சல்பைடு (CIGS) மென் ஏடுகள் பூசப்பட்ட சூரிய மின் கலங்கள் (CIGS amorphous thin film solar cells, 1 W, 6 Volts)  நல்ல தேர்வு.  ஏனெனில் சிலிக்கான் சோலார் பேனல்கள் சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக வைக்க வேண்டும். ஆனால் மென் ஏடுகள் மூலம் தயாரிக்கப்படும் சூரிய மின்கலங்கள்  அவ்வாறான கட்டுபாடுகள் இல்லாமால் ஓரளவிற்கு சூரிய வெளிச்சம் படும் எல்லா கோணங்களிலும் மின் சக்தியினை உற்பத்தி செய்ய வல்லது. 

எனவே வீட்டின் வெளியே எல்லா இடங்களிலும் இவ்விளக்குகளை எளிமையாக பொருத்திக் கொள்ளலாம். மேலும் சிலிக்கான் சோலார் பேனல்களை ஒப்பிடும் போது இதன் எடையும் குறைவு. இதனுடன் இணைக்கப்பட்ட நேர் மின்னோட்டத்தில் (DC) இயங்கும் 80 SMD எல் ஈ டி (Light Emitting Diodes) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது 60 வாட் குண்டு பல்பின் வெளிச்சத்திற்கு இணையானது (800 Lumens). 

Solar powered motion lights


CIGS amorphous solar panel


இந்த மென் ஏடுகள் பூசப்பட்ட சோலார் பேனல்கள் 10 வருடத்திற்கு சிறப்பாக இயங்க வல்லது. DC யில் இயங்கும் எல் ஈ டி விளக்குகள் குறைந்த பட்சம் 50,000 த்தில் இருந்து ஒரு லட்சம் மணி வரை இயங்க வல்லது. அப்படியானால் நீங்கள் ஒரு பத்து வருடத்திற்கு விளக்குகளை மாற்றத் தேவையில்லை. குறைந்த எடையில் அதிக சிக்கல் இல்லாத வடிவமைப்பு. ஆகையால் உங்கள் வீட்டில் நாட்காட்டிகளை மாட்டுவது போல் தேவைப்படும் இடங்களில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம்.

விலை என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கீங்களா பாஸ். 

இதோட விலை இங்க ஜப்பான்ல 4500 யென் (இந்திய மதிப்பில் 2300 ரூபாய்). தரமான எல் ஈ டி விளக்குகள், சூரிய மின் கலங்கள், பாட்டரிகள் கொண்டு வழங்கப்படும் இந்த விளக்குகளை இன்னும் கொஞ்சம் பிரயத்தனப் பட்டால் நம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அருமையாக வடிவமைத்து எளிமையான வடிவில் சந்தைப் படுத்தலாம். 


அப்படியே உங்கள் இல்லங்களிலும் இந்த விளக்குகளை பயன்படுத்தி ஆற்றல் வளத்தினை எதிர்கால சந்ததியினருக்கு சேமியுங்கள். 

சுய தொழில் முனையும் ஆர்வம் உள்ள பொறியியல் பட்டதாரிகள் இது போன்ற சூரிய மின் சக்தியில் இயங்கும் தானியங்கி, பாதுகாப்பு விளக்குகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வகையில்  வடிவமைப்பில் இறங்கினால் வெற்றி நிச்சயம். 

(சுத்தமாக மின்சார வசதியே இல்லாத ஆப்ரிக்கா நாட்டில் இது போன்ற நடமாட்ட நுணர்விகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட எல் ஈ டி விளக்குகள் மூலம் தனது கால்நடைகளையும், சிங்கங்களையும் ஒரு சிறுவன் காப்பாற்றியுள்ளான். அவனது கதையினை கீழே படியுங்கள்)


 கொசுறு செய்தி:

ஆப்ரிக்கா சமவெளியில்  வசிக்கும் (கென்யா, நைரோபி) பழங்குடிகளுக்கு கால் நடை மேய்ப்புதான் பிரதான தொழில். நைரோபி தேசிய வனவிலங்கு பூங்காவின் அருகில் உள்ள சிறு கிராமம் கிடென்செலா  (Kitengela). இங்குள்ள மசாய் (maasai) மக்களுக்கு பெரிய தலைவலியே இரவு நேரத்தில் வன விலங்குகள் குறிப்பாக சிங்கங்கள் இந்த கால் நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதுதான். 

அதனால் சில நேரங்களில் இந்த மக்கள் சினம் கொண்டு கூட்டமாக சென்று அந்த சிங்கங்களை சில நேரங்களில் கொல்வதும் உண்டு. இதனை கண்ட  கிராமத்து பள்ளி மாணவன் ரிச்சர்ட்டு (Richard Turere) மக்களிடம் இருந்து சிங்கங்கள் கொல்லப்படுவதையும், அதே நேரம் சிங்கங்கள் ஆடு மாடுகளை கொல்வதையும் தடுக்க பல வழிகளை முயற்சித்துப் பார்த்தான்.   

முதலில் மாட்டின் சாணங்களை கொண்டு சோளக் கொல்லை பொம்மை போல செய்து பார்த்தான், சிங்கங்கள் அச்சப்படுவதாக தெரியவில்லை. ஒரு நாள் தன் வீட்டு தொலைக் காட்சி பெட்டியினை உடைத்து எப்படி வெளிச்சம் வருகிறது விட்டு விட்டு வருகிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இத்தனைக்கும் அவன் வயது பதினொன்று மட்டுமே. ஆனால் அவன் தந்தை கோபப் படாமல் அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பக்க பலமாக நின்றுள்ளார். 

இறுதியாக‌ ஒரு உத்தியினை கையாண்டான்.  தன் கிராமத்தில் கிடைத்த பழைய பொருட்களை கொண்டு (இரு சக்கர வாகனத்தில் இருந்து கிடைத்த பாட்டரி, வயர்) சிறிய வடிவிலான சோலார் பேனல் (அவன் தந்தையிடம் சொல்லி வெளியில் இருந்து வாங்கியது) ஆகியவற்றினை கொண்டு நடமாட்ட நுணர்விகள் மூலம் இயங்கும் மின்னும் எல் ஈ டி விளக்குகளை (flashing LED lights) இரவில் அமைத்தான். ஆச்சரியம் சிங்கங்கள் இந்த விளக்குகளை கண்டு அச்சப்பட்டு கால் நடை பட்டிகளை இரவு நேரத்தில் தாக்கவில்லை. பிறகு அருகில் உள்ள பட்டிகளுக்கும் இதே உத்தியினை கையாண்டு சோலார் பேனல்களை கொண்டு இயங்கும் மின்னும் எல் ஈ டிகளை இயக்கி அவர்களது கால்நடைகளையும் பாதுகாத்துள்ளான். இந்த நுட்பம் சிறிதுதான் ஆனால் இதனை கொண்டு வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவைகளை விரட்ட இந்த‌ எளிமையான வழியினை இதற்கு முன் யாரும் அங்கு முயற்ச்சிக்கவில்லை என்பதுதான் சிறப்பே.  இந்த விளக்குகளுக்கு ரிச்சர்டு சூட்டிய பெயர் சிங்க விளக்குகள் (Lion Lights).

கிராமத்து பள்ளியில் பயிலும் இந்த மாணவனுக்கு இந்த அறிவியல் நுட்பங்களை யார் சொல்லிக் கொடுத்தது என வியப்பாக உள்ளதா? ரிச்சர்டு தனது பள்ளியில் உள்ள  சிறிய‌ நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்தே தனது கண்டுபிடிப்பிற்கான அடிப்படை வழிகளை பெற்றுள்ளான். இந்த பரிசோதனையின் வெற்றிக்கு பிறகு கென்யா முழுவதும் தற்போது ரிச்சர்டின் இந்த சிறு கண்டுபிடிப்பானது பயன்படுத்தப்படுகிறது. 

பிறகு  இந்த விளக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் விட்டு விட்டு எரியும் விளக்கு சமிக்ஞைகளால் (flashing lights) சிங்கங்கள் பயப்படுகின்றன, அதே சமயம் அணையாமல் எரியும் விளக்குகளை  கண்டு அவை ஒரு போதும் அச்சப் படுவதில்லை என்ற உண்மையினை கண்டு பிடித்தனர். 

இனது  நுட்பத் திறமையினை மேலும் வளர்க்கும் பொருட்டு அங்குள்ள சர்வதேச பள்ளி ஒன்று அவனை தற்போது தத்து எடுத்து படிக்க  வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இவனது திறமை உலக அளவில் பாராட்டப்படும் வகையில் மிகச் சிறந்த ஆளுமையாளர்களை வரவழைத்து பேச வைக்கும் TED மேடை ரிச்சர்டினை பேச வைத்து கெளரவம் செய்தது. 

சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள் அன்று இதே மேடையில் இவனுடன் பேசிய ஆளுமைகள் யார் தெரியுமா. அமெரிக்காவின் மிகச் சிறந்த கணிப்பொறி நிபுணர் Sergey Brin, இவர் வேறு யாருமல்ல கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். ஒரு சிறுவனின் கண்டுபிடிப்பு அவனை உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளோடு மேடையினை பகிரும் வகையில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மதிப்பெண்கள் மட்டும் பெறுகின்ற வெறும் ஏட்டுக் கல்வி ஒரு போதும் உயர்த்தாது என்பதனை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 




எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆப்ரிக்க கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனால் சூரிய மின் சக்தியினை கொண்டு விளக்குகளை அமைக்கும் போது நம் ஊரில் ஏன் இந்த விளக்குகளை எளிய முறையில் வடிவமைக்க முடியாது. 

மற்றொன்று பள்ளிக் குழந்தைகள் எதையாவது கண்டுபிடிக்கிறேன் என முயற்சிக்கும் போது தயவு செய்து அவர்களது கற்பனைத் திறனுக்கு தடுக்காதீர்கள். ஏனெனில் அப்படி ஒரு ரிச்சர்டு தடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு ஆப்ரிக்காவில் குறைந்தது ஆயிரம் சிங்கங்களும் பல்லாயிரக் கணக்கான கால்நடைகளும் இறந்திருக்கும். 

ரிச்சர்டின் இந்த கண்டுபிடிப்பு நமக்கு சொல்லும் மற்றொரு பாடம், நம் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் நூலக வசதி உள்ளதா, அங்கு தினமும் நம் குழந்தைகள் படிக்க புத்தகங்கள் கொடுக்கிறார்களா என நம்மை கேட்க வைத்திருக்கிறது. நூலகத்தினை பயன்படுத்தும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக, பண்பட்டவராக வர முடியும் என்பதற்கு ரிச்சர்டு ஒரு நல்ல உதாரணம். 

அரசியல்வாதிகளை விளித்து ஊர் சுவற்றினை நாசம் செய்யும் பக்தர்கள், ரோட்டில் நடிகர்களை வாழ்த்தி பிளக்ஸ் வைக்கும் புண்ணியவான்கள், பால் அபிசேகம் செய்யும் ரசிக குஞ்சுகள் உங்கள்  அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல் திறனை வளர்க்கும் பத்து புத்தகங்களை அங்குள்ள நூலகத்திற்கு வாங்கி கொடுங்கள். எதிர் கால சந்ததியினர் நம் சமூகத்திற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொண்டு வர அது மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும். 

மாணவன் ரிச்சர்டு மேடையில் பேசிய காணொளியினை காண கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். எளிய ஆங்கிலத்தில் அவன் பேசும் அழகே தனி. முடிந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லது அருகில் உள்ள குழந்தைகளுக்கு இந்த காணொளியினை காண்பிக்கவும். அவனது கதையினை அவர்களுக்கு சொல்லுங்கள்.

https://www.youtube.com/watch?v=RAoo--SeUIk

மேலும் சூரிய மின் சக்தியின் பயன்பாடுகளை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.







Tuesday, 21 July 2015



டிரான்சிஸ்டர் (transistor) வடிவமைக்கப்பட்டது முதல் தற்காலத்திய நானோ கருவிகளில் எவ்வாறு அது செயலாற்றுகிறது என்பதை பற்றிய எனது முந்தைய‌ கட்டுரை பிபாசிடிவ் (bepositivetamil) இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. கட்டுரையினை படிக்க‌

http://bepositivetamil.com/?p=1130

நன்றி
ஆசிரியர் குழு பிபாசிடிவ் இதழ்



Impedance School  - ISSchool-J15


NanoGe Foundation is one of the world renowned scientific platforms to conduct/organize the symposium in diverse topics. Among the Nanoge events, the “HOPV” is well known sparkling scientific event in energy conversion devices field around the globe. Another notable, successive series of NanoGe foundation  is “impedance school” which primarily introduced in Spain.  Later this school was introduced to Asian countries (South Korea, Japan, Taiwan and China) as “Asia edition” and has received profound attention in the last few years.

I am glad to share that we have organized this year's ISSchool-J15 (International Workshop on Impedance Spectroscopy of Energy Materials and Devices 2015) on 14th to 15th July 2015 at Tokyo University of Science, Kagurazaka Campus, Tokyo, Japan. First of all, We thank Prof. Akira Fujishima, President, Tokyo University of Science for his support and guidance.

We have received overwhelming response from the participants around the globe. A two days intensive training on impedance spectroscopy was given by Prof. Germán García and Prof. Sixto Gimenez, Institute of Advanced Materials, University of Jaume I, Spain, on different topics including perovskite, organic solar cells, photoelectrochemical fuel production, and Li-ion batteries. Prof. Takaya Kubo (University of Tokyo) has delivered excellent lecture on Quantum Dots Solar Cells. 

This course introduced the whole experimental process of Electrochemical Impedance spectroscopy: from the design of experiments, set-up requirements, to data analysis with special attention to computer-controlled instrumentation and use of software packages for data fitting and visualization. The key factor of this workshop is one-to-one interaction module, which brought effective hands on experience to the participants. 

On behalf of organizing committee, let me express our special gratitude to all the participants of this school for their enthusiastic attendance and cooperation. Also I would like to convey my hearty thanks to Prof. Terashima Co-Chair of this School for his everlasting support and providing all necessary arrangements to make this event successful one. 

I personally thank the NanoGe foundation for giving me this opportunity to chair this school. 

(For more information about NanoGe events, please visit http://www.nanoge.org/)

Best wishes
Sudhagar, Ph.D
(Co-Organizing Chair, ISSchool-J15)

Photocatalysis International Research Center
Tokyo University of Science, Japan


Participants and Key Speakers at ISSchool-15, Japan.

Group Photo- ISSchool-15

Prof. Germa delivering the lecture on impedance analysis for batteries









Prof. Sixto delivering the lecture on impedance analysis for solar fuel cells