Friday, 29 May 2015


வசந்தமாகும் இலையுதிர்காலங்கள்  - ஜப்பானிய பெரியவர்கள்


காலையில் எழுந்து செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தேன். பின் வீட்டு பாட்டி என்னைப் பார்த்தவுடன் 'ஓகாயோ கொசாய்மசு' என முகமன் கூறி விட்டு அவர்களது வாசலில் உள்ள செடிகள் இருக்கும் இடத்துக்கு போனார். செடிகளை உற்றுப் பார்த்து விட்டு தீடிரென வீட்டிற்குள் வேகமாக ஓடினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 சரி ஏதாவது பூச்சியை பார்த்து இருப்பார் என எண்ணிக் கொண்டு செடிக்கு தண்ணீர் விடுவதை தொடர்ந்தேன். அப்போது பாட்டியுடன், அவ்வீட்டு தாத்தா வெளியே வந்து அந்த செடிகளுக்கு அருகில் அமர்ந்து எதையோ பார்த்து விட்டு கத்தரிக் கோலால் வெட்டினார்.பிறகு நன்கு வளர்ந்திருந்த நீண்ட கத்தரிக்காயினையும், வெள்ளரியையும் என்னிடம் காட்டி குழந்தையினை போல் குதூகலித்தார் பாட்டி.

நான் "ஓ சுகோயினே" என வாழ்த்துகளை சொன்னவுடன் பாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்..


வயதாகி விட்டது என வீட்டில் முடங்கி கிடக்காமல் குதுகலமான குழந்தையினை போல் இருக்கும் பெரியவர்களை ஜப்பான் முழுக்க பார்க்கலாம்.

என் எதிர் வீட்டு தாத்தா கொஞ்சம் வித்தியாசமானவர், எனது காரை எடுக்கும் போது தான் பெரும்பாலும் அவரை பார்ப்பேன். வணக்கமும் சிரிப்புமாக நகர்ந்து விடுவார். அதிகம் பேசியதில்லை, ஒரு வேளை எனக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் நிறைய அவரிடம் பேசி இருப்பேன்). தினமும் தான் வளர்க்கிற செடிகளை கைகளால் தொட்டும், வாசலில் உள்ள சிறு பழ மரம் ஒன்றினை அசையாமல் பார்த்துக் கொண்டே இருப்பார். நிறைந்த வாழ்க்கையில், தனிமையின் வெம்மையினை வார இறுதியில் அவரது வீட்டுக்கு வந்து போகும் பேத்தியின் மூலம் சற்றே ஆற்றுப்படுத்தி கொள்வார்.

அநேக நேரங்களில் தனிமையினை போக்க  இங்குள்ள வயதானவர்களுக்கு இயற்கைதான் ஆகப் பெரும் மருந்தாக இருக்கிறது. பிள்ளைகள் வேலை நிமித்தம் பெரு நகரங்களில் நகர்ந்து விட தனிமையே துணை என வாழ்கின்றனர். மற்றபடி பகல் நேரங்களில் இவர்களின் பொழுதுபோக்கிற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களின் தனித்த உலகம் மிகப் பெரிது என்றே சொல்லலாம். கம்யூனிட்டி சென்டர்கள் எனப்படும் சமூக மையங்கள் ஜப்பானில் நிறைய உண்டு.   இது வயதான பெரியவர்களுக்கான சந்திப்பிற்கு முக்கிய இடமாக உள்ளது. இதன் மூலம்  இங்குள்ள வயதான பெரியவர்கள் குழுக்களாக  இயங்க முடிகிறது.

ஜப்பான் அரசு எல்லா முதியவர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்கிறது. ஆனால் ஜப்பானியர்கள் இலவசமாக எதையும் வாங்குவதும் இல்லை, கொடுப்பதும் இல்லை (பரிசு பொருள் பரிமாற்றம் தவிர). ஆகையால் வயதான பெரியவர்கள் தங்களது குழுக்களுடன் நிறைய சமூக பணிகளில் ஈடுபடுகிறார்கள். தங்களது நகர் மன்றம் மூலம் தங்களது பகுதிக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள்.

சாலை ஒரங்களில் உள்ள தேவையற்ற செடி கொடிகளை வெட்டி அப்புறப் படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று அங்கு வரும் பயனாளர்களுக்கு உதவுகிறார்கள். விண்ணப்பம் தருவது அதனை எவ்வாறு நிரப்புவது போன்ற உதவிகளை செய்கிறார்கள்.

எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பிரதான கட்டிடங்களுக்கு இடையே ஒரு பெரிய வீதி உள்ளது. இந்த சாலையினை கடக்க மாணவர்களுக்கு ஏதுவாக தினமும் உள்ளூர் பெரியவர்கள் கொடியுடன் வந்து நின்று கொண்டு உதவி செய்வார்கள்.  இது போல் தினமும் மக்கள் அதிகம் கூடும் சாலைகளிலும், மெட்ரோ இரயில் நிலையங்களிலும் மக்களுக்கு தன்னார்வ தொண்டு செய்ய  நிறைய பெரியவர்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.

ஓரளவிற்கு நல்ல ஆங்கிலம் பேசக் கூடிய பெரியவர்கள் அந்த பகுதிகளில் உள்ள நகர் மன்றங்களில் (City Hall) வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக தங்களது மொழியினை கற்பிக்கிறார்கள்.

ஒரு மாலை நேரத்தில் நடைபயிற்சியின்போது பெரியவர்கள் குழுவாக எங்கள் கிராமத்தில் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களது சீருடை சற்றே வித்தியாசமாக இருந்ததால் அவர்களிடம் நெருங்கி நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டேன். அக்குழுவில் இருந்த முரா-யாமா என்ற பெரியவருக்கு நன்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அவர்களின் பணியினை பற்றி விளக்கினார். இந்த பெரியவர்கள் வாரத்தில் இரு முறை மாலை வேளையில் எங்கள் பகுதியில் உள்ள எல்லா தெருக்களிலும், தோட்டத்தில் உள்ள வீடுகள் வழியேயும் ரோந்து செல்கிறார்கள். இவர்கள் ஸ்டாப் க்ரைம் (Stop Crime) எனப்படும் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். மிகவும் வயதான தனிமையில் உள்ள பெரியவர்களையும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்கிறார்கள். தெருக்களில் குப்பைகளையே பார்க்க முடியாது அப்படியே கிடந்தாலும் இவர்கள் அதனை அப்புறப்படுத்தி விடுவார்கள்.


காலையில் அவந்தியை பள்ளிக்கு விடச் செல்லும் போது பெரும்பாலான பாட்டிகள் சைக்கிளில் விளையாடவோ அல்லது தங்கள் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு கிராமத்தினை சுற்றி வரவோ செல்லும் போது எதிர் படுவார்கள்.சிறிய வணக்கத்தோடு கடந்து செல்வார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு  அருகில் உள்ள சிறு புல்மைதானத்தினை சீரமைத்து இப்போது காலை வேளையில் நிறைய தாத்தா பாட்டிகள் பந்து விளையாடுகிறார்கள்.

முதுமையில் தனிமையோடு தனித்திருக்காமல் சமூக வெளியில் மற்றவர்களோடு கூட்டாக இயங்குகிறார்கள். அரசாங்கம்தான் ஓய்வூதியம் தருகிறது என வீட்டில் சும்மா இல்லாமல் சமூகத்திற்கு உழைக்கும் இந்த பெரியவர்களே இந்நாட்டின் மிகப் பெரிய பலம்.

முதுமையிலும் குழந்தைமையோடு தங்களை உற்சாகமாக வைத்திருப்பதால்தான் ஜப்பானியர்கள் இந்தியர்களை காட்டிலும் மிக அதிக வருடங்கள் வாழ்கின்றனர்.

எங்கள் கிராமத்தில் இருந்த திண்ணைகள் மறைந்து விட்டன. அவர்கள் கூடிப் பேசும் மந்தைகள் இப்போது இல்லை. எல்லா வீட்டுன் முன்புன் பெரிய கதவுகள் போடப்பட்டு இறுக்கமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

தற்போது நம் சமூக வெளியில் பெரியவர்களை 'பெரிசு' என்று அநாகரிமாக இகழ்வதும்,உதாசீனப் படுத்துவதுமான அவமானகரமான நிகழ்வுகளை சாகசங்களாக நிகழ்த்த துவங்கி விட்டோம்.  திருச்சியில் ஒரு பேருந்தில் ஏற முற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்திருந்த பெரியவர் ஒருவரை அவ்வழியே சென்ற பேருந்துகள் ஏற்றிக்கொள்ள தயங்கி நகர்ந்து போன பேருந்துகளை பற்றி செய்திதாளின் படித்தேன். நினைக்கவே அருவருப்பாக உள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் எவரும் உரையாடுவது கிடையாது. அவர்களுக்கான சமூக வெளி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பெரும்பாலும் டிவி பெட்டிகளின் முன்பு சிறை வைக்கப்படுகிறார்கள். குறைந்த பட்சம் அவர்களது நண்பர்களுடன் கூட உரையாட எவரும் அனுமதிப்பதில்லை.

நான்கு பெரியவர்கள் ஒன்று கூடி விளையாடுவதை என் வாழ் நாளில் எங்கள் பகுதியில் நான் ஒரு போதும் கண்டதில்லை. நாம் ஏன் இவ்வளவு வஞ்சம் நிறைந்த விலங்குகளாக மாறி விட்டோம்.

பாசிலின் 'பூவே பூச்சூடவா' படத்தில் வரும் பாட்டியினைப் போல் கங்கு கரை காணாத வெள்ளமாய அன்பினை நெஞ்சுக் கூட்டில் வைத்திருக்கும் வயதான பெரியவர்கள் நம்மை சுற்றி நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்தால் புன்னகையுங்கள், நலம் விசாரியுங்கள். கொஞ்ச நேரம் அமர்ந்து உரையாடுங்கள். நமக்கும் முதுமை வரும், அப்போது நாம் செய்த செயல்களே நமக்கும் திருப்பி வரும்.

முதுமை என்பது இரண்டாம் முறை வரும் குழந்தைப் பருவம். அன்பின் வழியே அவர்களின் உலகை விலாசமாக்குவோம்.





Thursday, 28 May 2015

 சுழலும் ஏர் பின்னது உலகம்

கல்யாணம், காது குத்து, திருவிழா, திரைப்படம் ரிலீஸ் என எல்லாவற்றுக்கும் பிளக்சும், போஸ்டரும் அடித்து பேருவகை எய்தும் நம் சமூகம் ஒரு போதும் தனக்கு உணவு அளிக்கின்ற விவசாயியின் முகத்தினை ஒரு போதும் பார்த்ததில்லை. ஏனெனில் நம்மவர்களை பொறுத்தவரை கடை வியாபாரிகளோடு அவர்கள் உறவு முடிந்து விடுகிறது.


ஜப்பானில் உள்ளூரில் விளைவிக்கப்படும் காய் கறிகள் அந்த ஊரில் உள்ள அங்காடிகளிலேயே விற்க முடியும். இந்த அங்காடிகளில் உள்ளூர் விவசாயிகள் பதிவு செய்து வைத்து விடுகிறார்கள். அவர்களது புகைப்படமும், அவர்களது தோட்டம் பற்றிய விவரமும் புகைப்படங்களாக கடைக்காரர்களிடம் இருக்கும். அந்த விவசாயி காய் கறிகள் கொண்டு வந்து கொடுக்கும் தினம் அவர்களது புகைப்படத்துடன் கூடிய விவரங்களை காய் கறிகளின் அருகில் வைத்து விடுகிறார்கள். காய்கறிகளுக்கான குறைந்த பட்ச விலையினை விவசாயிகளே நிர்ணயிக்கிறார்கள். இதனால் அடிமாட்டு விலைக்கு அவர்களது பொருட்களை வஞ்சிக்கும் இழி நிலை ஓரளவிற்கு ஒழிக்கப்படும். 


Inagaye Stores, Yamazaki, Nodashi, Japan.


Inagaye Stores, Yamazaki, Nodashi, Japan.

மற்றொரு புறம், அன்றாடம் பறித்த சுத்தமான, மலர்ச்சியான, காய்களும் கீரைகளும் உடனுக்குடன் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கின்றது.  

இதைப் போல் நமது சிற்றூர்களிலும், சிறு நகரங்களிலும் ஒவ்வொரு கடைக்காரமும் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு  அவர்களது தகவல்களோடு விற்பனை செய்யலாம். காய் கறிகளை அவர்களது புகைப்படத்துடன் விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கலாம். விவசாயிகளே தங்கள் விளை பொருட்களை விலை நிர்ணயம் செய்து அதில் குறிப்பிட சதவிகிதத்தினை கடைக்காரர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

இதனால் இடைத் தரகர்களின் தொல்லை ஒழிவதோடு, விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் அவர்களது ஊரிலேயோ அல்லது அருகில் உள்ள சிறு நகரங்களிலேயோ  அவர்களின்  வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. 

இனியாவது விவசாயிகளை அங்கீகரிப்போம். 
(அடுத்த பதிவில் ஜப்பானில் உள்ள  அரிசி எடுக்கும் ஏடிஎம் இயந்திரங்களை பற்றி எழுதுகிறேன்)

Tuesday, 26 May 2015

சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் பேருந்துகள் (solar powered bus)

 ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அடிலெய்டு நகரில் முற்றிலும் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் பேருந்தினை அடிலெய்டு நகர் மன்ற குழு  நிர்வகித்து வருகிறது. இந்த பேருந்தின் பெயர் டின்டோ (Tindo). 

இப்பேருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கள் சேவைக்கு தொடங்கப்பட்டு தற்போது வரை  வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மிக முக்கியமாக பாராட்டப் படவேண்டிய ஒன்று இப்பேருந்து சேவை முற்றிலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  மொத்தம் 27 பேர் பயணிக்க கூடிய இந்த பேருந்தில்  மாற்றுத் திறனாளிகள் பயணிக்க ஏதுவாய் இரண்டு சக்கர நாற்காலிகள் உள்ளது. குளிர் சாதன வசதியும், Wifi வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்தினை இயக்கத் தேவையான மின் சக்தி, வழக்கமான வடிவமைப்பினைப் போல் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி பெறப்படாமல், வெளியில் இருந்து சூரிய மின் சக்தியானது பெறப்படுகிறது. ஏனெனில் ஒரு பேருந்தினை இயக்க தேவையான 70 கிலோவாட்  மின் சக்தி பெற 280 சோலார் பேனல்கள் (250 Wp)   பேருந்தின் மீது பொருத்துவது என்பது கடினமே. 

எனவே அடிலெய்டு நகர் மன்ற கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் துணை மின் நிலையத்திலிருந்து மின் சக்தியினை எடுத்துக் கொள்கிறது. இப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள 220 கிலோவாட்மணி திறன் உடைய சோடியம் நிக்கல் கைட்ரைடுகள் மூலம் இயங்கும் பாட்டரிகளில் மின்  சக்தியினை தேக்கி வைத்துக் கொள்கின்றன. 

இதன் மூலம் ஒரு முறை தேக்கிய மின் சக்தியினைக் கொண்ட் 200 கி.மீ வரை பயணிக்கலாம். மணிக்கு 76 கிமீ வரை வேகமாக செல்லும் இப் பேருந்து வருடத்திற்கு 70000 கிலோ கார்பன் வெளியீட்டினை தடுக்கிறது.இது 14,000 லிட்டர் டீசல் எரிப்பதற்கு சமமாகும். பேருந்தினை தற்காலிகமாக நிறுத்தும் போது regenerative braking  முறையின் மூலம் மின் சக்தியானது சக்கர ஓட்டதிலிருந்து மீண்டும்   பாட்டரியில் சேமித்து வைக்கப்படுகிறது.

ஒரு நிமிடத்திற்கு  ஒரு கிலோ மீட்டர் ஓடுவதற்கு தேவையான  மின் சக்தியானது சேமிக்கப்படுகிறது (charging time).

இந்தியா, சீனா, ஐரோப்பா நாடுகளில் போன்ற சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் பேருந்துகள் இருப்பினும் மக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படுவது ஆஸ்திரேலியாவில் மட்டுமே. 

இப்பேருந்தினை சுவிட்சர்லாந்து நாட்டினை சார்ந்த டிசைன்லைன் இன்டர்நேசனல் (Designline International) என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இப்பேருந்தின் விலை தோராயமாக 900000- 120000 ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் 4 கோடியே 45 லட்சம் ரூபாய்). 

நவீன நுட்பங்களை கொண்டு வடிவமைத்தால் தற்போதைய விலையில் ஒரு பங்கினை குறைக்க முடியும். தற்போது பயன்படுத்தப்படும் பாட்டரிகளுக்கு பதில் Super Capacitor மூலம் வேகமாக  சார்ஜ் செய்யும்படி வடிவமைப்பு செய்யப்பட்டால் இப்பேருந்து  மிக அதிக அளவில் புழக்கத்தில் மக்கள் சேவைக்கு விடலாம். 

அளவற்ற சூரிய ஒளி கிடைக்கும் இந்திய போன்ற நாடுகளுக்கு சூரிய மின் சக்தியில் இயங்கும் சிறிய ரக பேருந்துகளை வடிவமைத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வரப் பிரசாதமாக இருக்கும். இதற்கான உதிரி பாகங்களுக்கான வடிவமைப்பில் இன்னும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இதனையும் நாம் கவனத்தில் கொண்டால் நச்சு புகையற்ற மாநகர் பேருந்துகள்  நம் ஊரிலும் விரைவில் இயக்கலாம். 





இயற்கையின் காதலர்கள் - கரிம விவசாயம் (Organic Forming)

இயற்கை அறிவியலில் மிகுத்த அறிவினை கொண்ட பழுத்த மனிதர்கள் எந்த பகட்டும் இல்லாமல்,  எளிய தோற்றத்தில் வலம் வருபவர்கள் நிறைய பேரை நீங்கள் கொங்கு நாட்டில் பார்க்க முடியும். அப்படி ஒருவராகத்தான் இயற்கை வேளாண் ஆலோசகரும், விவசாயியுமான திரு சுவாமியப்பன்அவர்களை பார்க்கிறேன். இவரை  இயற்கை ஆய்வாளர் நம்மாழ்வாரின் பசுமைகரங்கள் அமைப்பின் மூலம் அறிமுகப்படுத்திய  கோபி செட்டிபாளையம் திருமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.

நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைகளின் கழிவுகள் கலந்து இன்று இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இந்த அழிவினை தடுக்கும் பொருட்டு  2009 ஆம் ஆண்டு முதல் சட்டையே அணியாமல் தன்னால் இயன்ற பிரச்சாரத்தினை இயற்கையினை காக்கும் பொருட்டு சட்டை அணியா சுவாமியப்பன் அவர்கள் செய்து வருகிறார்.

உயிரின பண் மையம் அல்லது பல்லுயிர் பெருக்க நுட்பவியல் பண்ணையம் என்ற தன்னுடைய மாதிரி திட்டத்தினை பல்வேறு இடங்களில் செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்

மனித வள ஆற்றலை எப்படி திறன் மிக்க வகையில் விவசாயத்தில்  பயன்படுத்தலாம் என தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குகிறார்

நேரம் கிடைக்கும் போது இங்கு இணைத்துள்ள காணொளியினை பொறுமையாக கேளுங்கள்


1.  நீர் மேலாண்மையில் பனைமரங்களின் முக்கியத் துவம்

2. ஆல், வேல், இலுப்பை, அத்தி மரங்களின் மகத்துவம்,

3. கால்நடை,மீன் வளர்ப்பு இவைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் 
4. எளிய வாழ்க்கையின் மூலம் எப்படி சுற்றுப் புற சூழலை மாசு சீர்கேட்டில் இருந்து தடுப்பது

போன்றவற்றினை தனது அனுபவத்தின் மூலம் விளக்குகிறார்.

இவரது கருத்து பலருக்கு ஒத்து போகாமல் இருக்கலாம். ஆனால் அவர் சொல்லுகிற செய்திகளின் பின்னால் உள்ள உண்மையினை நாம் ஒரு போதும் நிராகரிக்க முடியாது.

 வெறுமனே இயற்கை விவசாயம் குறித்து பிரச்சாரம் செய்யாமல் அதனை களத்தில் செய்து காட்டியும் வரும் இவர் போன்றவர்களே இன்றைய இளைஞர்களின் ஆதர்சனம் என எண்ணுகிறேன்.

(இவரது இயற்கை விவசாயம் பற்றிய சொற்பொழிவுகள் யூடியூப்பில் கிடைக்கிறது).



இயற்கை வேளாண் ஆலோசகர் திரு. சட்டையணியா சாமியப்பன்



 நன்றி:
"கிராமத்தினை நோக்கி" என்ற நிகழ்வினை ஆவணமாக்கிய விழிகள் அமைப்பிற்கு மிக்க நன்றி.




Sunday, 24 May 2015


பழமையும் புதுமையும் 

கடந்த அறுபது வருடத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் (microelectronics) துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சி கையடக்க கால்குலேட்டரில்  பெரும் மாற்றத்தினை கொண்டு வந்திருக்கின்றது.

நேற்று உயனோ தேசிய இயல்அறிவியல் அருங்காட்சியகத்தில் (Uneo National Natural Science Museum, Japan) இருந்த காசியோ (Casio) நிறுவனத்தின் முதல் தலைமுறை கால்குலேட்டரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. காரணம் அதன் அளவு ஏறத்தாழ ஒரு தட்டச்சு எந்திர அளவிற்கு இருந்தது. இதன் கணக்கிடும் திறன் அளவு 14 இலக்கங்களில் மின் சுற்றுகள் மூலம் (Electric compact relay calculatorவடிவமைக்கப்பட்டிருந்தது.  ஏறத்தாழ 140 கிலோ எடையுள்ள  இந்த முதல் தலைமுறை காசியோ கால்குலேட்டர்
இன்று கையடக்கத்தில்  அல்ஜீப்ரா, கால்குலஸ் மற்றும் இன்ன பிறவற்றை எளிதில் கணக்கிடும் வகையில் வந்து விட்டது.






கூடிய விரைவில் கிராபின் (Graphene) போன்ற நானோ அளவிலான அடுக்குகள் (layered nanostructures ) மின் சுற்றுகளாக பயன்படுத்தும் நுட்பங்கள் வந்துவிடும். மிக அதிக கடத்து திறனும் (electron mobility )அளவில் மிகச் சிறிய கிராபின் நானோ பட்டைகள் (Grephene Nanoribbon) மின் சுற்று வடிவமைப்பிற்கு பெரிதும் பயனளிக்க கூடியது. இதன் திறன் வேகம் 500 ஜிகா ஹெர்ட்ஸ் வரை கொண்டு செல்லலாம் என யூகிக்கப்படுகிறது.  இதன் மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள கணக்கு செயலிகளின் நினைவகங்கள் பன் மடங்கு உயர்த்தப்படும். மிக குறைவான காலத்தில் (Processing Speed) மிகப் பெரிய பாலினாமியல் கணக்குகளை விரைவாக கணக்கிடும் கால்குலேட்டர் சந்தையில் வந்து விட்டாலும் ஆச்சரியபட  ஒன்றும் இல்லை.







Monday, 18 May 2015

ப்ரெய்லி - எழுத்தின் கண்கள்

வல்லரசு நாடுகள் என்றால் அதி நவீன ஆயுதங்கள் வைத்திருப்பதும், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் விடுவதுமன்று. தன் சமூக கட்டமைப்பில் மாற்று திறனாளிகளுக்கும் எல்லோரையும் போல வாழ வசதி செய்து கொடுக்கிற பண்பட்ட சமூகமே வல்லரசாக மேன்மையுறும். 

ஜப்பானில் நோடா (Nodashi) அஞ்சல் நிலையத்திற்கு சென்றபோது வாசலில் உள்ள அஞ்சல் பெட்டியில் பொறிக்கப்பட்டிருந்த பிரெய்லி எழுத்துகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தன.அதில் எந்த நேரம் பெட்டி திறக்கப்படும் மற்றும் எந்த பகுதியினை சார்ந்த அஞ்சல் பெட்டி போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல ஜப்பானில் உள்ள எல்லா அஞ்சல் பெட்டிகளிலும் நீங்கள் இத்தையக எழுத்துகளை பார்க்கலாம். 

சமீபத்தில் இலண்டன் சென்றிருந்த போது  ட்ராபால்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) வைத்திருந்த தகவல் பலகையில் ப்ரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. விரல்களை கொண்டு தொட்டுப் பார்த்துபார்வையற்றவர்களும் இந்த இடத்தின் வரலாற்றினையும், வரைபட தகவலையும் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் நம் ஊரில் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு குறைந்த பட்ச வசதியினை கூட செய்து  கொடுக்க இயலாத நாம், இனியாவது அதைப் பற்றி சிந்திக்கவும், விவாதம் செய்யவுமான் ஒரு தளத்தினை முன்னெடுப்போம். அனைவருக்கும் சமமான சமூக கட்டமைப்பினை ஏற்படுத்தி தருவதே  மனித மேட்டிமையாகும். 



Friday, 15 May 2015


ஜப்பானில் சூரிய ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்ற என்னுடைய கட்டுரையின் முதல் பாகம்  இவ்வார bepostivetamil இணைய இதழில் வந்துள்ளது, 
http://bepositivetamil.com/?p=1006

சூரிய ஆற்றல் – ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 1)

பரப்பளவில் இந்திய தேசத்தினை ஒப்பிடும் பொழுது 8.6 மடங்கு சிறிய நாடு ஜப்பான். மேலும் ஒரு வருடத்திற்கான சூரிய ஒளி கதிர் வீச்சினை (solar irradiation) பெறுவதை ஒப்பிடும் பொழுது ஜப்பானை விட பல மடங்கு அதிகமாக இந்தியாவில் பெறப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியின் மூலம் தங்களது சுய தேவையினை பூர்த்தி செய்வதில் ஜப்பான் மிக குறைவான கால கட்டத்தில் இந்தியாவை விஞ்சி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது, இந்தியா இந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் ஜப்பானில் ஆற்றல் வளத்தினை காண்போம். ஜப்பானின் எரிபொருள் கொள்ளளவு திறன் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை சார்ந்தே இருந்து வருகிறது. ஜப்பான் ஆற்றல் பொருளாதார மைய ஆய்வேட்டின்படி (Japan Energy Economy Institute) கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து, சராசரியாக 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாட்டு இறக்குமதியிலும், 20 சதவிகிதம் உள்நாட்டு ஆற்றல் உற்பத்தியின் மூலம் தனது அனைத்து தேவைகளையும் எளிதாக சமாளித்து வந்திருக்கின்றது.
உலக வர்த்தகத்தில் கோலோச்சிய ஜப்பானின் பொருளாதார நிலையானது 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் (Great East Japan earthquake) அதளபாதாளத்திற்கு தள்ளி விட்டது. மேலும் புகுசிமா (Fukushima Daiichi) அனு உலை விபத்து ஜப்பானின் பொருளாதாரத்தினை மட்டுமல்லாது அன்றாட வாழ்வில் மக்களுக்கு தேவையான மின்சார பகிர்வையும் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக ஜப்பானின் வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 92 சதவிகிதமாக உயர்ந்திருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஜப்பானிய தமிழ் நண்பர்களுடன் உரையாடிய போது ஒரே நாளில் ஜப்பானின் எதார்த்த வாழ்க்கை எப்படி துக்கமானதாக இருந்திருக்கிறது என அறிய முடிந்தது.
நிலநடுக்கம் ஏற்ப்பட்ட அன்று தண்ணீர் தட்டுபாடு கடுமையாக இருந்திருக்கிறது. பெரும் நில நடுக்கம் ஏற்படும் போது ஒவ்வொரு தெருவிலும் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி குளிர் பான இயந்திரத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை கூட அவர்களால் எடுக்க முடியவில்லை காரணம் அச்சாதனங்கள் இயக்கக் கூடிய மின்சாரமும் துண்டிக்கப்பட்டதே. மேலும் சாலையின் சமிக்ஞை விளக்குகள் மற்றும் தானியங்கி கதவுகள் என யாவும் மின்சாரம் இல்லாமல் முடங்கி விட்டிருக்கிறது. வீடுகளில் ஒரு வார காலத்திற்கு மின்சாரம் இல்லாமல் பெரிதும் அவதிப் பட்டிருக்கிறார்கள்.
இந்த அனுபவத்திற்கு பிறகு ஜப்பானின் ஆற்றல் பார்வை தற்போது மரபுசாரா ஆற்றல் வளங்களின் மீது திரும்பி உள்ளது. அதிலும் முக்கியமாக சூரிய மின் உற்பத்தியில் (solar power generation) ஜப்பான் மிகப் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் ஜப்பானிய அரசால் வெளியிடப்பட்ட ஆற்றல் செயல் திட்டத்தின் (Stredgery Energy Plan 2014) மூலம் புதிய சூரிய மின்சக்தி நிலையங்கள் முன்னெடுப்பது பற்றிய அதன் விரிந்த பார்வையினை அறிய முடிகிறது.  அனு உலையின் மூலம் பெறப்பட்ட மின் சக்தியினை எவ்வாறு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் பெற முடியும் என்ற பெரும் சவாலான பணிக்கு ஆயத்தமாகி உள்ளார்கள்.
தற்போது ஜப்பான் அரசு அனு மின் உலைகளின் பயன்பாட்டினை மெதுவாக நடைமுறையில் இருந்து குறைத்து கொண்டு வருகிறது. ஆனால் அதே சமயம், அனு உலைக்கு இணையாக மாற்று எரிசக்தியினை சூரிய மின் சக்தியின் மூலம் எப்படி பெறுவது என்ற தயக்கமான கேள்வியும் அவர்கள் முன் சவாலாய் நின்றது. உதாரணத்திற்கு ஒரு மணி நேரத்தில், ஒரு அனு உலையில் பெறப்படும் மின் சக்திக்கு (1.2 மில்லியன் கிலோ வாட் அல்லது 7.4 பில்லியன் கிலோவாட்/மணி) இணையான சூரிய மின் சக்தியினை பெற வேண்டுமாயின் குறைந்த பட்சம் 1.7 மில்லியன் வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை பொறுத்த வேண்டும். இது கற்பனையில் தோக்கியோ நகரில் உள்ள எல்லா வீடுகளின் கூரைகளின் மீதும் பொருத்துவதற்கு சமம்.
இந்த இடத்தில் இந்தியாவின் சூரிய மின் சக்தி கொள்கையினையும் அதற்கு நாம் எடுத்து கொண்ட முயற்சிகளையும் நாம் அலச வேண்டும். ஜவகர்லால் நேரு சூரிய மின் சக்தி திட்டக் கொள்கையானது (Jawaharlal Nehru National Solar Mission) 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது, எதிர் வரும், 2020 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய மின் சக்தியினை உற்பத்தி செய்வதோடு, உள்நாட்டு மின் சக்தி கொள்முதலில் மிகக் குறைந்த விலையில் பெறும் வகையில் சூரிய மின் சக்தி தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது, மேலும் அதற்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பது போன்றவையாகும். இத்திட்டதில் நாம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளோம். ஆயினும் தொழிற்சாலைகள் அல்லாத குடியிருப்பு பகுதிகளில் சூரிய மின் சக்தி திட்டமானது அமல்படுத்துவதில் இன்னும் தேக்க நிலையிலேயே உள்ளது. அரசு போதிய மானியம் அளித்திருந்த போதிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வழமையான அனல் மின் சக்தியானது மக்களை இன்னும் மாற்று எரிபொருளின் மீதான பார்வைக்கு திருப்பாமல் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல் ஜப்பானை விட இந்தியாவில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மிக தாராளமான இடங்கள் உள்ளது, குறிப்பாக வீடுகளில் நமது மேற்கூரை அமைப்புகள் அகலமாக, தட்டை வடிவில் உள்ளதால் மிக எளிதாக சோலார் பேனல்களை நிறுவ முடியும். ஆனால் ஜப்பானில் நில நடுக்கம் மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்றவாறு சாய்வான  மேற்கூரைகளே உள்ளது. ஆகையால் இந்தியாவை ஒப்பிடும் பொழுது இத்தையக V வடிவிலான கூரைகளின் மீது சோலார் பேனல்களை பொறுத்த தாங்கு கம்பிகளுக்கு நிறைய பணம் செலவாகும். மேலும் இந்தியாவினைப் போல் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த மானியமும் கிடையாது.
இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும், கடந்த ஆண்டின் இறுதியில் மணிக்கு 6.7 மில்லியன் கிலோவாட் மின்சக்தியினை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களில் இருந்து மட்டும் பெற்று சாதித்து காட்டியுள்ளார்கள் ஜப்பானியர்கள். இந்த சாதனையினை எவ்வாறு இவர்களால் நிகழ்த்த முடிந்தது?
இந்த சவாலில் கிடைத்த வெற்றிக்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். முதலில் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை தங்களுக்குடையது என கருதி தேசத்திற்காக களத்தில் இறங்கியது. மற்றொன்று அதுவரை ஜப்பானில் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியினை மின் வாரிய கம்பி தடத்தில் ஏற்றுமதி செய்யும் மின்சார இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) இல்லாமல் இருந்தது. இந்த தொழில்நுட்பத்தில் ஜெர்மனிதான் உலகத்திற்கே முன்னோடி எனலாம். ஆகவே சூரிய மின்சக்தியினை மின்வாரிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் இன்வெர்ட்டர்களை வடிவமைத்து சந்தைப்படுத்துதலில் எளிமைப்படுத்தியதன் விளைவு சூரிய மின் சக்தி உற்பத்தியில் புதிய பரிணாமத்தினை எட்டி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக ஜெர்மனிக்கு அடுத்து நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றலின் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்ப வெப்பநிலை, சோலார் பேனல்களில் இருந்து உருவாகும் மின் உற்பத்தி மற்றும் அதற்கு நிகரான கார்பன் டை ஆக்சைடு கழிவு எவ்வளவு தடுக்கப்படுகிறது என்பதனை அறுதியிட்டு தெரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வசதி திறன் அலைபேசிகளிலும் வந்து விட்டது.
தற்போது ஒரு கிலோவாட்/மணிக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி ஏற்றுமதிக்கு (Feed-in tariff) 29 லிருந்து 35 யென் வரை மின் உற்பத்தி நிறுவனங்கள் தருகின்றது. இந்த மின்சக்தியினை வாங்குவதற்கு 10 லிருந்து 20 ஆண்டுகளுக்கு மின் உற்பத்தி செய்பவரோடு இந்நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஆகையால் மக்களிடம் இத்திட்டதிற்கு தற்போது ஜப்பானில் நல்ல வரவேற்பு. இந்தியாவில் கடந்த ஆண்டுதான் சூரிய மின் சக்தியினை ஏற்றுமதி செய்யும் வகையிலான இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) சந்தைகளில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதன் விலையும், இதன் மீதான உள்நாட்டு உற்பத்தி வரியும் நீக்கப்பட்டால் நாமும் இதே போன்று சாதிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். ஆனால் சூரிய மின் உற்பத்தியினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள் இன்னும் வடிவமைக்கப்படாமலே உள்ளது. இதனை இந்தியாவில் குறைந்த விலையில் வடிவமைத்தால் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது பெரும் செலவு மிச்சமாகும்.
(மேலும் தகவல்கள் அடுத்த இதழில் தொடரும்…)    
 - முனைவர்பிச்சைமுத்து சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்
ஜப்பான்
(E-mail: vedichi@gmail.com)
 முனைவர் பிச்சைமுத்து சுதாகர் பற்றி…
இயற்பியல் துறையில் 2009 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குவாண்டம் துகள்களை கொண்டு செறிவூட்டப்பட்ட திறன் மிகுந்த சூரிய மின்கலங்களை (QDs-sensitized solar cells) எவ்வாறு நானோ நுட்பவியல் மூலம் வடிவமைப்பது என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டின் மிகசிறந்த JSPS ஆராய்ச்சி விருதினைப் பெற்று தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணி புரிந்து வருகிறார். மேலும் இந்தியாவில் Solarix Energy System என்ற நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். சேலத்தில் இயங்கும் National Institute of Renewable Energy Technology என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும், சம கால சூழலில் ஸ்பெயின், இங்கிலாந்து, கொரியாவில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு சூரிய மின் சக்தி குறித்த ஆராய்சிக்கு வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

----------------------
நன்றி; bepositivetamil
Likes(0)Dislikes(0)

Tuesday, 12 May 2015



நீரில்லா பூச்செடிகள்

ஜப்பான், தோக்கியோவில் உள்ள மியோதென் (Myoden) இரயில் நிலையத்தின் வாசலில் அழகான பூச்செடிகளால் வடிவமைக்கப்பட்ட அலமாரிகளை கண்டேன்.

சிறப்பு என்னவெனில் இச்செடிகள் யாவும் நீர் இல்லாமலேயே வளர்கின்றது. மழை பெய்யும் போதோ அல்லது வளி மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தினையோ உறிஞ்சி உயிர் வாழ்கிறது. இதற்கு இச்செடிகளின் கீழ் இணைக்கப் பட்டுள்ள பஞ்சு போன்ற அமைப்பு (சணல் நார்) வைக்கப்பட்டுள்ளது.  இது செடிகளுக்குத் தேவையான நீரினை சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் தினமும் இச்செடிகளுக்கு விடும் நீரும் சேமிக்கப்படுகிறது.

காற்றில் உள்ள ஈரப்பதத்தினை ஈர்க்கும் வண்ணம் செடியின் தொட்டிகள் புவி ஈர்ப்பு விசைக்கு பக்கவாட்டில், சூரிய ஒளியானது நேரடியாக படாமல் இருக்கும் வண்னம் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது. செடிகள் நன்கு செழித்து வளர,  இந்த பூத் தொட்டிகளுக்குள் இயற்கையான மட்கிய இலை மற்றும்  சாண உரமும் இட்டிருக்கிறார்கள்.  

மலைவாசஸ்தலங்களில் இது போன்று பாறைகளின் மீது மண், நீர் இல்லாமலேயே வளரும் செடிகளைப் போன்ற அமைப்பினை போல் உள்ளது. இதே போன்று நம் ஊரிலும் வறண்ட பகுதிகளில் பூச்செடிகள் வளர்க்க முடியுமா?

தாவரவியலாளர்கள் இந்த செடிகள் பற்றி தெரிந்தால் விளக்கவும்.




இரவில் இப்பூக்கள் ஒளிர இதன் நடுவில் சோலார் பேனல்கள் அமைத்திருக்கிறார்கள். அருகில் நின்று சிறிது நேரம் பூக்களின் அழகை கண்டு ரசித்து விட்டு வந்தேன்.


Saturday, 9 May 2015

உத்தம வில்லன் - ஒரு நடிகனின் சுய தரிசனம்


இன்று ஜப்பான், தோக்கியோவில் உள்ள மியோதன் (Myoden) பகுதியில் உள்ள ஏயோன் (AEON) சினிமா வளாகத்தில்  "உத்தம வில்லன்" படம் பார்த்தேன்.

தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிதான கதைக் களம் இது. தமிழர்களின் பழமையான கிராமியக் கலைகளில் ஒன்றான    வில்லுப்பாட்டின் வழியே கதைக்குள் கதை சொல்லும் உத்தியினை கமல் கையாண்டிருப்பது வரவேற்புக்குரியது. இத்தையக உத்தி நம் மொழிக்கே உரியது என்ற கர்வத்தினையும் கமல் சொல்லாமல் சொல்லி அடித்திருக்கிறார். கமல் தன் எல்லா படங்களையும் தாண்டி ஒரே பாய்ச்சலில் விஸ்வரூபம் எடுத்தது போல் உள்ளது.  







Utthama Villan at AEON Cinema, Myoden, Japan.

ஒரு நடிகனின் கதையாக விரிவடையும் படத்தின் காட்சிகள்  கமலுக்கு நேர்த்தியாய் பொருந்தி போவதால் பார்வையாளனை படம் ஆரம்பித்த உடனே தன் வசம் வீழ்த்திக் கொள்கிறார். இதன் சாட்சியாய் வரும் கே.பி சாரின் பாத்திரம் தெரிந்தே பின்னப்பட்ட வலை போல் உள்ளது. சமகாலத்தில் வெறெந்த நடிகரைப் போலவும் அல்லாமல் கமலுக்கே வாய்ந்திருந்த பிரத்யோக இரகசிய வாழ்க்கையும், அவரின் அக வாழ்க்கை பற்றிய மக்களின் பொது புத்தியும் இப்படம் பார்ப்பதற்கான ஒரு உந்து விசையாக படம்நெடுக  பார்க்க முடிகிறது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழுக்கு கிடைத்த ஆட்டோ பிக்சன் (Autofiction) கதையாகவே உத்தம வில்லனை அங்கீகரிக்கலாம்.

சின்ன சின்ன தொய்வுகள் படத்தில் இருந்தாலும் அவை கதையின் உட்கதைக்குள் வருவதால் பிரதான கதை ஓட்டத்தினை பெரிதாய் தடை செய்வதில்லை. சில வசனங்கள் சட்டென மின்னலைப் போல கடந்து போய் விடுகிறது. அதன் வசீகரிப்பு பல காட்சிகளை தாண்டி மீண்டும் மீண்டும் மனம் அசை போடுகிறது.  ஒரே நேர் கோட்டில் பொருத்தி பார்க்க முடியாத கதையின் வேறு வேறு பகுதிகள் பார்வையாளை கொஞ்சம் குழப்பலாம், ஆனால் இதுவே இப்படத்தின் ஆணி வேர். மலையாள படங்களில் இது போன்ற படங்களை அங்கிருக்கும் நடிகர்கள் அனாசயமாக நடித்து ஸ்கோர் செய்வார்கள். அதே சமயம் அதை உள் வாங்கி கொள்ளும் இரசிகர்கள் வெகு இயல்பாய் மலையாள சினிமாவிற்கு வாய்தது போல் தமிழுக்கு பெரும் பரப்பளவில் வாய்க்கவில்லை என்பது நம் துரதிஸ்டமே.

ஒவ்வொரு காட்சி இறுதியிலும் போடப்படும் முடிச்சு, அடுத்த காட்சியின் துவக்கத்திலேயே காட்சிகளாய் சொல்லாமல் கதை மாந்தர்கள் வழியே அவிழ்க்கப்படும் உத்தி முந்தைய தமிழ் படங்களைப் போல் அல்லாமல் "உத்தம வில்லன்" எளிதாக கடந்து விடுகிறது. இது நம்மவர்களின் கதை சொல்லும் உத்திகளில் ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியாகவே பார்க்க முடிகிறது. பெரும்பாலான படங்களில் கமலின் மிகை நடிப்பினை இரசிக குஞ்சுகள் மட்டுமே சிலாகிக்க முடியும். ஆனால் உத்தம் வில்லன், கமலின் மிகை நடிப்பிலிருந்து  சற்றே விலகி எதார்த நிலையின் எல்லையில் இருப்பதால் கமலை புதிய பரிணாமத்தில் தரிசிக்க முடிகிறது. இப்படத்தின் மற்றொரு பலம்  படம் நெடுக வலம் வரும் சக கதா பாத்திரங்கள். கமலின் மகன் மற்றும் மகள் வேடங்களில் வரும் இருவருமே பாத்திரங்களுக்கு இயல்பாய் பொருந்தி போகிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஆண்ட்ரியா, பூஜா குமார், எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, கே.பி. நாசர் என எல்லோருமே சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.

தன் மரணத்தினை வீட்டில் உள்ள உறவுகளுக்கு சொல்ல முற்படும் காட்சியாகட்டும், தன் இரகசிய வாழ்க்கையின் அந்தியந்த தோழியுடன்  உரையாடும் காட்சிகளில் கமலின் உடல் மொழி கிளாசிக் ரகம். பின்னனி இசை அற்புதம், ஜிப்ரானுக்கு வாழ்த்துகள். படத்தினை  தியேட்டருக்கு சென்று பொறுமையாக பார்த்து இரசியுங்கள்.

கமலின் ஒட்டு மொத்த திரை உலக வாழ்க்கையில் "உத்தம வில்லன்" ஒரு மைல்கல்.இனி தன்னை பின் தொடர்பவர்கள்  அதனை உடைத்துப் பார்க்கட்டும் என்று வெகு துணிச்சலாகவே
களத்தில் இறங்கியது போல் உள்ளது.

 "உத்தம வில்லன்" ஒரு சிஸ்யன் தனது குருவிற்கு அளித்த கட்டை விரலை விடவும் மேலான காணிக்கை.   கே.பி சாரின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்திருக்கும்.

இப்படத்தினை ஜப்பானில் திரையிட்ட "செல்லுலாய்ட் ஜப்பான்" நிறுவனத்திற்கு நன்றி.


Sunday, 3 May 2015

சுஜாதா - வாசிப்பு உலகின் மந்திர திறவு கோல்

என் நினைவில் எட்டிய வரை, 90 களில் தூர்தர்சனில் ஒளிபரப்பாகிய "என் இனிய இயந்திரா ' தொடர் நாடகம் மூலம்தான்  எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனக்கு பத்து வயது இருக்கும் என எண்ணுகிறேன். அந்த பேசும் நாய் 'ஜீனோ' கதாபாத்திரம் மட்டும் அப்படியே அவரின் ஆளுமையாக என் மனதில் தேங்கி நின்று விட்டது. ஆனால் திடீரென தோன்றும் ஒரு பிம்பம் எப்படி மறைந்தது மீண்டும் எப்படி தோன்றியது என அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை.

அதன் பிறகு கல்லூரியில் (1997-2000) இளம் நிலை இயற்பியல் படிக்கும் போது என் இனிய இயந்திராவை வாசிக்கும் அனுபவம் கிட்டியது. சற்றே அதில் பேசப்பட்ட அறிவியலும், அரசியலும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் அந்த advanced science content கொஞ்சம் மிரட்டலாகவே இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் வசித்த போது மீண்டும் அந்த நாவலை படித்தேன். அப்போதுதான் அவர் பேசுகிற 'ஹாலோகிராம்' மேட்டரும், பாலினாமியல் கணக்கீடுகளும் நன்கு புரிய ஆரம்பித்தன.. வேறு வேறு காலங்களில் என்னை மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த சுஜாதாவின் இரகசியம் அவரின் எளிமையான எழுத்துகளில் ஒளிந்திருந்தது. சுஜாதா சொல்லிய அறிவியல் புனைவு யாவும் அப்போது தமிழ் சமூக சூழலில் பெரும்பாலும் அறிந்திறாத ஒன்று. மேற்கத்திய அறிவியலின் மீதான அவரது தீராத வேட்கைகள் தமிழின் புதிய எழுத்துச் சிந்தனைகளாக மிளிர்ந்தன.

இடையில் என் வளரிளம் பருவத்தில் உயர் நிலைப் பள்ளி படிக்கும் போது ஆனந்த விகடனை விடாமல் வாசிக்கும் பழக்கம் இருந்தது.  அப்போது ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்", பிறகு "மதனின் கேள்வி பதில்கள்", பின்னர் அந்த வயதிற்கே உரிய ஆர்வம் தேங்கிய காதல் தொடர்கதையும் (ஒற்றையடி காதல் பாதை - மலரோன்) எனது விருப்பத்திற்குரிய வாசிப்பாய் இருந்தது. நான் லீனியர் வடிவத்தில் வந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்  என்னை அவரிடம் வெகு நெருக்கத்தில் கொண்டு சென்றது.

எனது வாசிப்பு உலகில் அதி தீவிர தேடலை துவக்கிய புள்ளி சுஜாதா என்றுதான்  சொல்வேன். ஆண்டாள் பாசுரம் தொடங்கி, ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரம் பாடல்களை review abstract வடிவத்தில் கதை போல் சொல்லி தருவார். சங்க இலக்கியங்களின் மீதான பயம் மெதுவாய் போகியது. அவருக்கு பிறகு எளிய நடையில் சங்க இலக்கியக்களை எழுதுவதை தற்போது பார்க்க இயலவில்லை. அதே தொடரில்தான் பிற்பாடு யூடியூப்பினை எனக்கு அறிமுகம் செய்தார். அவர் எழுதியது எல்லாமே சமகால இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத இலக்கியங்களை அவர் தொடர்ந்து படைத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது எழுத்துகள் எளிமையின் வடிவமாக, ஒரு பேருந்து பயணத்திலோ அல்லது காத்திருக்கும் நேரவெளியிலோ வாசித்து முடித்துவிட கூடியதாக இருந்தது.. ஆனால் அந்த வாசிப்பிற்கு பிறகு அவர் எழுப்பும் கேள்விகள் மிகப் பலமானவை. சுஜாதாவின் எழுத்து வசீகரிக்கும் ஆனால் எவரையும் அவரிடத்திலேயே தேங்கி விட அனுமதிக்காது அதுதான் அவரது பலமும் கூட.

தற்போதைய சூழலில் இலக்கியவாதிகள் என அறியப்படுபவர்கள் அவர்கள் எழுத்துகளை மட்டுமே வாசிக்கவும் அதனையே தொழவும் செய்ய பெரும் கைதட்டும் சர்க்கஸ் கூட்டத்தினை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் சுஜாதாவின் எழுத்துகள் சவாலானவை. அவர் செய்ததை இவர்களால் ஒரு போதும் செய்ய இயலாது.



Writer Sujatha

சுஜாதா மிக அழுத்தமாக சொன்னார் "எளிமையாக எழுதுவதுதான்  மிகக் கடினமான ஒன்று'. அந்த ஒன்றுதான் எனது ஆராய்ச்சி வாழ்வில் நான் எழுத நினைக்கும் கட்டுரைகளுக்கு பெரும் ஆதர்சனமாக இருக்கிறது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுஜாதா சார்.

(இதை எழுதி முடிந்தவுடன் சிறிய நிலநடுக்கம் (ரிக்டர்-4) ஒன்று என் அறையினை கவ்விப் போனது ஏனோ தற்செயலானதாய் நினைக்கவில்லை)

Saturday, 2 May 2015

ஜப்பான் - தோட்ட விவசாயம்

வசந்த காலத்தின் (spring) துவக்கமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாத துவக்கத்தில் நெல்லங்கன்று நடவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் தங்க விடுமுறை தினங்கள் எனப்படும் (golden holidays) மே மாதம் முதல் வாரத்தில் ஜப்பானில் விவசாயம் செய்ய துவங்கி விடுவார்கள்.  பெரும்பாலும் வயதானவர்களே இங்கு விவசாயம் செய்கிறார்கள். தனி ஒரு ஆளாக ஐந்து ஏக்கர் அளவிற்கு விவசாயம் செய்கிறார்கள். நவீன இயந்திர தொழில் நுட்பம் இவர்களுக்கு நன்கு கைகொடுக்கிறது. இரசாயன பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வயல் வெளிகளில் வாத்துகளும், காட்டு கோழிகளும், தவிட்டு குருவியும் நிறைந்த காணப்படும் பசுமை நிறைந்த வயல்வெளிகளை இன்றளவும் ஜப்பானியர்கள் மிக அருமையாக பராமரிக்கிறார்கள். வயல்வெளிகளின் இடையில் வீடுகள் பெரிதும் இல்லை, தமிழகத்தினைப் போலவே ஊருக்கு வெளியில் கால்வாய் பாயும் பகுதிகளில் மொத்தமாக நெல் சாகுபடி செய்கிறார்கள். பண்ணை வீடுகள் என்ற சூழலில் காய்கறிகளையும், பழ மரங்களையும் அதிகமாக வளர்க்கிறார்கள்.

ஜப்பானில் சிறு இடத்தினை கூட மக்கள் வீண் செய்வதில்லை அதில் காய் கறி வகைகளையோ (கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், முள்ளங்கி, முட்டைகோஸ்), கீரைகளையோ பயிர் செய்கின்றனர். முக்கியமாக விவசாயிகளுக்கு அவர்கள் பயிர் செய்யும் தானியங்களையும், காய்கறிகளையும் விற்பனை செய்ய உள்ளூர் மளிகை அங்காடிகள் பெரிதும் உதவி செய்கின்றன.


எனது வீட்டின் அருகில் உள்ள காய்கறித் தோட்டம். 80 வயதிற்கு மேற்பட்ட பாட்டி ஒருவர்தான் இந்த தோட்டத்தினை தினமும் பராமரிக்கிறார்.

 எங்களது நோதா நகரப் பகுதியில் இனகயா, மரியா, கோஅப், எயோன் வணிக வளாகம் போன்றவற்றில் உள்ளூர் காய்கறிகளை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். இது மட்டுமல்லாது விவசாயிகள் தங்களது நிலப்பகுதிகளின் அருகிலேயே திறந்த வெளியில் காய்களை வைத்து விட்டு அதற்கான விலையினை எழுதி வைத்து விட்டு சென்று விடுவார்கள். எனது வீட்டினை சுற்றி உள்ள தோட்டத்தில் அன்றாடம் விளையும் கீரையும், இதர காய்கறிகளும் ஒரு பையில் போட்டு  அலமாரிகள் கொண்ட பெட்டியில் வைத்து  விடுகிறார்கள். அருகில் உள்ள உண்டியலில் 100 யென் காசைப் போட்டுவிட்டு காய் அல்லது கீரையினை எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் யாரும் அற்ற சூழலில் ஏமாற்றாமல், களவு செய்யாமல் ஒரு சமூகம் இப்படி அறம் வழுவாது இயங்குகிறது என்பது என்னை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. 



விவசாயிகளின் தோட்டத்திலேயே விற்கப்படும் காய்கறிகள்

மேலும் விவசாயி தான் சாகுபடி செய்த காய்கறிகளை தன் வயலின் வாசலிலேயே விற்பதால் மிகக்குறைவாக நேரடியாக மக்களை சென்றடைகிறது. மேலும் உள்ளூரில் உள்ள பெரும்பாலான அங்காடிகளில் உள்ளூர் விவசாயிகள் தங்களை விளைபொருட்களை நேரடியாக வைத்து விட்டு வந்து விடுவார்கள். அதில் விற்ற பணத்தில் சிறு தொகையினை மட்டும் அங்காடியினர் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நேரடி முறையால் விவசாயி, பொதுமக்கள் இருவருமே பயன் பெறுகிறார்கள்.

ஜப்பான் உழவர் சந்தை - எயோன் வளாகம், நோதா நகரம்




மரியா அங்காடியில் கிடைக்கும் உள்ளூர் விவசாயிகளின் காய்கறிகள்

விவசாயத்தினை ஊக்கப்படுத்தும் பொருட்டு உள்ளூர் நகர் மன்றமும், சில தனியார் நிலங்களும் குறுகிய கால குத்தகைக்கு விடுகின்றனர். எனது வீட்டின் அருகில் உள்ள கூட்டு பண்ணை விவசாய பகுதிக்கு கடந்த வாரம் சென்று அங்குள்ளவர்களை சந்தித்தேன். அங்கு கத்தரி செடிகளுக்கு தாங்கு கம்பிகள் கட்டிக்கொண்டிருந்த கத்தோரி- சன் என்பவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களின் விவசாய உத்திகளை விளக்குமாறு கேட்டேன். அவரால் நன்கு ஆங்கிலம் பேச முடிந்ததால் எளிமையாக அவர்களது விவசாய முறைகளை விளக்கினார். சப்பானியர்கள், நெல் விவசாயம் தவித்து காய்கறிகளை பயிரிட பசுமை குடில் (green house) முறையினை பயன்படுத்தி நன்கு வெற்றி கண்டுள்ளார்கள். தோக்கியோ நகரில் பிரதான நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதாக கத்தோரி- சன் கூறினார். தன் தந்தைக்கு பிறகு இந்த விவசாயம் விட்டு போகாமல் இருப்பதற்கும் தன் குடும்பத்திற்கு நஞ்சு இல்லாத கீரைகளையும், காய்கறியினையும் தானே விளைவிப்பது என்பது தனக்கு கூடுதல் மகிழ்வு என்றும்  பேசினார். வார இறுதி நாட்களில் இங்கு வந்து விவசாயம் செய்வதால் மனதிற்கு பெரிய ஓய்வும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைப்பதாக கூறினார். 






தமிழகத்தினை போல் தண்ணீரை நேரடியாக வரப்புகளில் பாய்ச்சாமல் கைத்தெளிப்பான் அல்லது சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செடிகளுக்கு செலுத்துகிறார்கள். என்னிடம் அவர் பேசிக்கொண்டு இருந்த போது அங்குள்ள கைம்பம்பின் மூலம் நீரை சேகரித்து அதனை சிறிய கைத்தெளிப்பான் மூலம் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார். ஏறத்தாழ 2 ஏக்கர் அளவில் செய்யப்படும் விவசாயத்திற்கு ஒரு சிறிய கையினால் இயக்கப்படும் போர்வெல் பம்ப்பினை மட்டுமே நீர் ஆதாரத்திற்கு  வைத்து இருக்கிறார்கள்.






தோட்டத்தில் கிடைக்கும் இலை தழைகள் சேகரிக்கப்படும்  தொட்டி



கடையில் விற்கப்படும் மட்கிய சாண உரம் - விலை 600 யென் (300 ரூபாய்  இந்திய மதிப்பில்)

சிறிய தோட்டங்களில் முதலில் மண்ணை உழுது செப்பனிட்ட பிறகு அவற்றினை அகலமான மேடை போன்ற பாத்திகளை அமைக்கிறார்கள். பின்னர் அவற்றினை நெகிழி தாள்கள்  (polyethene) மூலம் மண்பாத்திகளை மூடி விடுகிறார்கள். பின்னர் செடி நடும் அளவிற்கு துளைகள் இட்டு அதில் நடவு செய்கிறார்கள். இம்முறை மூலம் நீரானது நேரடியாக செடிகளின் வேருக்கு பாய்ச்சப்படுகிறது. நீரானது தேவையற்ற முறையில் ஆவியாவது நெகிழி உறைகளால் தடுக்கப்படுகிறது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் வாயு அமோனியாவாக மாற்றம் செய்யப்பட்டு செடிகளின் வேர்களுக்கு வீரியத்துடம் பாய்ச்சப்படுகிறது. மாட்டு சாணங்களில் இருந்து பெறப்படும் எருக்களையே முதலில் செடிகளுக்கு இடுகிறார்கள். ஒரு மூட்டை எரு 600 யென். இதைக் கொண்டு எட்டு சதுர அடி நீளம் கொண்ட செடிகளுக்கு உரமாக இடப்படுகிறது. மரங்கள் மற்றும் செடிகளில் விழும் இலைகளை பொறுக்கி அவற்றினை ஓரிடத்தில் சேமித்து வைத்து காம்போசைட் இயற்கை உரங்களாக மாற்றி மீண்டும் மண்ணுக்கு இடுகிறார்கள். மறந்தும் கூட எந்த காய்ந்த சருகுகளை தீ வைத்து வீண் செய்வதில்லை.



இம்முறையில் ஒவ்வொரு முறையும் நெகிழி பைகளை மாற்ற வேண்டி இருப்பதால் சிலர் நீண்ட காலம் தாக்கு பிடிக்கக் கூடிய பெரிய அளவிலான பசுமை குடில்களை (green house) கட்டுகிறார்கள். இதன் மூலம் 5-10 வருடங்களுக்கு அவர்கள் நெகிழி கூடாரங்களை மாற்ற வேண்டியதில்லை. தரையில் வைக்கோல் பில்லை பரப்பி வைத்து விடுகிறார்கள். இது காலப் போக்கில் மக்கி உரமாகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள பசுமை குடில்களில் தக்காளி, சோயா பீன்ஸ், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பேரிக்காய் போன்றவற்றினை அதிகமாக பயிரிடுகிறார்கள். குறைந்த நீரே இதற்கு செலவிடுகிறார்கள். தீடீரென ஏற்படும் பருவ கால மாற்றத்தால் செடிகள் காய்ந்து போகாமல் ஒரே சீரான தட்ப வெப்பத்தில் வளர்க்கப்படுவதால் திறந்த வெளியில் வளர்க்கப்படும் செடிகளை காட்டிலும் இம்முறையில் அதிக மகசூலை ஈட்டுகிறார்கள். ஜப்பானில் எவ்வாறு இயற்கை விவசாயத்தின் மூலம் பெரும் புரட்சி ஏற்பட்டது என்பதனை தெரிந்து கொள்ள இந்த நூற்றாண்டின் இணையற்ற இயற்கை விவசாயி திரு. மாசானபு புகோக்கா அவர்கள் எழுதிய  The one-Straw Revolution  (ஒற்றை வைக்கோல் புரட்சி)   நூலினை நேரம் கிடைத்தால் வாசிக்கவும்.








பசுமை குடில்களின் மூலம் விளைவிக்கப்படும் தக்காளி


உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி (2009- 2014), ஜப்பானின் விவசாய சாகுபடி நிலப் பரப்பளவு என்பது 12.6 சதவிகிதமாக உள்ளது. நிலப்பரப்பளவில் பெரிய நாடுகளான இந்தியா (60.3%) மற்றும் சீனாவோடு (54.8%) ஒப்பிடும் பொழுது இங்கு 5 மடங்கு குறைவான விவசாய நிலமே உள்ளது. ஆனால் தானிய மகசூலை ஒரு ஹெக்டேருக்கு ஒப்பிடும் பொழுது ஜப்பான் (6105) இந்தியாவினை (2962) விட மூன்று மடங்கு அதிகமான விளைச்சலை கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பான் விவசாயத்துறையில் மேற்கொண்ட நவீன சீரமைப்பு தற்போது மிகவும் கைகொடுக்கிறது.

 வெறும் இரசாயன உரங்களின் மூலம் விளைச்சலை பெருக்காமல், மரபு வழியோடு இயைந்த நவீன உத்திகளை வெகுசன மக்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் இன்று விவசாய உற்பத்தி துறையில் ஜப்பான்  சிறந்து விளங்குகிறது.