Friday, 29 May 2015


வசந்தமாகும் இலையுதிர்காலங்கள்  - ஜப்பானிய பெரியவர்கள்


காலையில் எழுந்து செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தேன். பின் வீட்டு பாட்டி என்னைப் பார்த்தவுடன் 'ஓகாயோ கொசாய்மசு' என முகமன் கூறி விட்டு அவர்களது வாசலில் உள்ள செடிகள் இருக்கும் இடத்துக்கு போனார். செடிகளை உற்றுப் பார்த்து விட்டு தீடிரென வீட்டிற்குள் வேகமாக ஓடினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 சரி ஏதாவது பூச்சியை பார்த்து இருப்பார் என எண்ணிக் கொண்டு செடிக்கு தண்ணீர் விடுவதை தொடர்ந்தேன். அப்போது பாட்டியுடன், அவ்வீட்டு தாத்தா வெளியே வந்து அந்த செடிகளுக்கு அருகில் அமர்ந்து எதையோ பார்த்து விட்டு கத்தரிக் கோலால் வெட்டினார்.பிறகு நன்கு வளர்ந்திருந்த நீண்ட கத்தரிக்காயினையும், வெள்ளரியையும் என்னிடம் காட்டி குழந்தையினை போல் குதூகலித்தார் பாட்டி.

நான் "ஓ சுகோயினே" என வாழ்த்துகளை சொன்னவுடன் பாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்..


வயதாகி விட்டது என வீட்டில் முடங்கி கிடக்காமல் குதுகலமான குழந்தையினை போல் இருக்கும் பெரியவர்களை ஜப்பான் முழுக்க பார்க்கலாம்.

என் எதிர் வீட்டு தாத்தா கொஞ்சம் வித்தியாசமானவர், எனது காரை எடுக்கும் போது தான் பெரும்பாலும் அவரை பார்ப்பேன். வணக்கமும் சிரிப்புமாக நகர்ந்து விடுவார். அதிகம் பேசியதில்லை, ஒரு வேளை எனக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் நிறைய அவரிடம் பேசி இருப்பேன்). தினமும் தான் வளர்க்கிற செடிகளை கைகளால் தொட்டும், வாசலில் உள்ள சிறு பழ மரம் ஒன்றினை அசையாமல் பார்த்துக் கொண்டே இருப்பார். நிறைந்த வாழ்க்கையில், தனிமையின் வெம்மையினை வார இறுதியில் அவரது வீட்டுக்கு வந்து போகும் பேத்தியின் மூலம் சற்றே ஆற்றுப்படுத்தி கொள்வார்.

அநேக நேரங்களில் தனிமையினை போக்க  இங்குள்ள வயதானவர்களுக்கு இயற்கைதான் ஆகப் பெரும் மருந்தாக இருக்கிறது. பிள்ளைகள் வேலை நிமித்தம் பெரு நகரங்களில் நகர்ந்து விட தனிமையே துணை என வாழ்கின்றனர். மற்றபடி பகல் நேரங்களில் இவர்களின் பொழுதுபோக்கிற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களின் தனித்த உலகம் மிகப் பெரிது என்றே சொல்லலாம். கம்யூனிட்டி சென்டர்கள் எனப்படும் சமூக மையங்கள் ஜப்பானில் நிறைய உண்டு.   இது வயதான பெரியவர்களுக்கான சந்திப்பிற்கு முக்கிய இடமாக உள்ளது. இதன் மூலம்  இங்குள்ள வயதான பெரியவர்கள் குழுக்களாக  இயங்க முடிகிறது.

ஜப்பான் அரசு எல்லா முதியவர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்கிறது. ஆனால் ஜப்பானியர்கள் இலவசமாக எதையும் வாங்குவதும் இல்லை, கொடுப்பதும் இல்லை (பரிசு பொருள் பரிமாற்றம் தவிர). ஆகையால் வயதான பெரியவர்கள் தங்களது குழுக்களுடன் நிறைய சமூக பணிகளில் ஈடுபடுகிறார்கள். தங்களது நகர் மன்றம் மூலம் தங்களது பகுதிக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள்.

சாலை ஒரங்களில் உள்ள தேவையற்ற செடி கொடிகளை வெட்டி அப்புறப் படுத்துகிறார்கள். வங்கிகளுக்கு சென்று அங்கு வரும் பயனாளர்களுக்கு உதவுகிறார்கள். விண்ணப்பம் தருவது அதனை எவ்வாறு நிரப்புவது போன்ற உதவிகளை செய்கிறார்கள்.

எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பிரதான கட்டிடங்களுக்கு இடையே ஒரு பெரிய வீதி உள்ளது. இந்த சாலையினை கடக்க மாணவர்களுக்கு ஏதுவாக தினமும் உள்ளூர் பெரியவர்கள் கொடியுடன் வந்து நின்று கொண்டு உதவி செய்வார்கள்.  இது போல் தினமும் மக்கள் அதிகம் கூடும் சாலைகளிலும், மெட்ரோ இரயில் நிலையங்களிலும் மக்களுக்கு தன்னார்வ தொண்டு செய்ய  நிறைய பெரியவர்கள் நின்று கொண்டு இருப்பார்கள்.

ஓரளவிற்கு நல்ல ஆங்கிலம் பேசக் கூடிய பெரியவர்கள் அந்த பகுதிகளில் உள்ள நகர் மன்றங்களில் (City Hall) வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக தங்களது மொழியினை கற்பிக்கிறார்கள்.

ஒரு மாலை நேரத்தில் நடைபயிற்சியின்போது பெரியவர்கள் குழுவாக எங்கள் கிராமத்தில் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களது சீருடை சற்றே வித்தியாசமாக இருந்ததால் அவர்களிடம் நெருங்கி நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டேன். அக்குழுவில் இருந்த முரா-யாமா என்ற பெரியவருக்கு நன்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அவர்களின் பணியினை பற்றி விளக்கினார். இந்த பெரியவர்கள் வாரத்தில் இரு முறை மாலை வேளையில் எங்கள் பகுதியில் உள்ள எல்லா தெருக்களிலும், தோட்டத்தில் உள்ள வீடுகள் வழியேயும் ரோந்து செல்கிறார்கள். இவர்கள் ஸ்டாப் க்ரைம் (Stop Crime) எனப்படும் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். மிகவும் வயதான தனிமையில் உள்ள பெரியவர்களையும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்கிறார்கள். தெருக்களில் குப்பைகளையே பார்க்க முடியாது அப்படியே கிடந்தாலும் இவர்கள் அதனை அப்புறப்படுத்தி விடுவார்கள்.


காலையில் அவந்தியை பள்ளிக்கு விடச் செல்லும் போது பெரும்பாலான பாட்டிகள் சைக்கிளில் விளையாடவோ அல்லது தங்கள் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு கிராமத்தினை சுற்றி வரவோ செல்லும் போது எதிர் படுவார்கள்.சிறிய வணக்கத்தோடு கடந்து செல்வார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு  அருகில் உள்ள சிறு புல்மைதானத்தினை சீரமைத்து இப்போது காலை வேளையில் நிறைய தாத்தா பாட்டிகள் பந்து விளையாடுகிறார்கள்.

முதுமையில் தனிமையோடு தனித்திருக்காமல் சமூக வெளியில் மற்றவர்களோடு கூட்டாக இயங்குகிறார்கள். அரசாங்கம்தான் ஓய்வூதியம் தருகிறது என வீட்டில் சும்மா இல்லாமல் சமூகத்திற்கு உழைக்கும் இந்த பெரியவர்களே இந்நாட்டின் மிகப் பெரிய பலம்.

முதுமையிலும் குழந்தைமையோடு தங்களை உற்சாகமாக வைத்திருப்பதால்தான் ஜப்பானியர்கள் இந்தியர்களை காட்டிலும் மிக அதிக வருடங்கள் வாழ்கின்றனர்.

எங்கள் கிராமத்தில் இருந்த திண்ணைகள் மறைந்து விட்டன. அவர்கள் கூடிப் பேசும் மந்தைகள் இப்போது இல்லை. எல்லா வீட்டுன் முன்புன் பெரிய கதவுகள் போடப்பட்டு இறுக்கமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

தற்போது நம் சமூக வெளியில் பெரியவர்களை 'பெரிசு' என்று அநாகரிமாக இகழ்வதும்,உதாசீனப் படுத்துவதுமான அவமானகரமான நிகழ்வுகளை சாகசங்களாக நிகழ்த்த துவங்கி விட்டோம்.  திருச்சியில் ஒரு பேருந்தில் ஏற முற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்திருந்த பெரியவர் ஒருவரை அவ்வழியே சென்ற பேருந்துகள் ஏற்றிக்கொள்ள தயங்கி நகர்ந்து போன பேருந்துகளை பற்றி செய்திதாளின் படித்தேன். நினைக்கவே அருவருப்பாக உள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் எவரும் உரையாடுவது கிடையாது. அவர்களுக்கான சமூக வெளி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பெரும்பாலும் டிவி பெட்டிகளின் முன்பு சிறை வைக்கப்படுகிறார்கள். குறைந்த பட்சம் அவர்களது நண்பர்களுடன் கூட உரையாட எவரும் அனுமதிப்பதில்லை.

நான்கு பெரியவர்கள் ஒன்று கூடி விளையாடுவதை என் வாழ் நாளில் எங்கள் பகுதியில் நான் ஒரு போதும் கண்டதில்லை. நாம் ஏன் இவ்வளவு வஞ்சம் நிறைந்த விலங்குகளாக மாறி விட்டோம்.

பாசிலின் 'பூவே பூச்சூடவா' படத்தில் வரும் பாட்டியினைப் போல் கங்கு கரை காணாத வெள்ளமாய அன்பினை நெஞ்சுக் கூட்டில் வைத்திருக்கும் வயதான பெரியவர்கள் நம்மை சுற்றி நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்தால் புன்னகையுங்கள், நலம் விசாரியுங்கள். கொஞ்ச நேரம் அமர்ந்து உரையாடுங்கள். நமக்கும் முதுமை வரும், அப்போது நாம் செய்த செயல்களே நமக்கும் திருப்பி வரும்.

முதுமை என்பது இரண்டாம் முறை வரும் குழந்தைப் பருவம். அன்பின் வழியே அவர்களின் உலகை விலாசமாக்குவோம்.