சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் பேருந்துகள் (solar powered bus)
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அடிலெய்டு நகரில் முற்றிலும் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் பேருந்தினை அடிலெய்டு நகர் மன்ற குழு நிர்வகித்து வருகிறது. இந்த பேருந்தின் பெயர் டின்டோ (Tindo).
இப்பேருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கள் சேவைக்கு தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மிக முக்கியமாக பாராட்டப் படவேண்டிய ஒன்று இப்பேருந்து சேவை முற்றிலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மொத்தம் 27 பேர் பயணிக்க கூடிய இந்த பேருந்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க ஏதுவாய் இரண்டு சக்கர நாற்காலிகள் உள்ளது. குளிர் சாதன வசதியும், Wifi வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருந்தினை இயக்கத் தேவையான மின் சக்தி, வழக்கமான வடிவமைப்பினைப் போல் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி பெறப்படாமல், வெளியில் இருந்து சூரிய மின் சக்தியானது பெறப்படுகிறது. ஏனெனில் ஒரு பேருந்தினை இயக்க தேவையான 70 கிலோவாட் மின் சக்தி பெற 280 சோலார் பேனல்கள் (250 Wp) பேருந்தின் மீது பொருத்துவது என்பது கடினமே.
எனவே அடிலெய்டு நகர் மன்ற கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் துணை மின் நிலையத்திலிருந்து மின் சக்தியினை எடுத்துக் கொள்கிறது. இப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள 220 கிலோவாட்மணி திறன் உடைய சோடியம் நிக்கல் கைட்ரைடுகள் மூலம் இயங்கும் பாட்டரிகளில் மின் சக்தியினை தேக்கி வைத்துக் கொள்கின்றன.
இதன் மூலம் ஒரு முறை தேக்கிய மின் சக்தியினைக் கொண்ட் 200 கி.மீ வரை பயணிக்கலாம். மணிக்கு 76 கிமீ வரை வேகமாக செல்லும் இப் பேருந்து வருடத்திற்கு 70000 கிலோ கார்பன் வெளியீட்டினை தடுக்கிறது.இது 14,000 லிட்டர் டீசல் எரிப்பதற்கு சமமாகும். பேருந்தினை தற்காலிகமாக நிறுத்தும் போது regenerative braking முறையின் மூலம் மின் சக்தியானது சக்கர ஓட்டதிலிருந்து மீண்டும் பாட்டரியில் சேமித்து வைக்கப்படுகிறது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் ஓடுவதற்கு தேவையான மின் சக்தியானது சேமிக்கப்படுகிறது (charging time).
இந்தியா, சீனா, ஐரோப்பா நாடுகளில் போன்ற சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் பேருந்துகள் இருப்பினும் மக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படுவது ஆஸ்திரேலியாவில் மட்டுமே.
இப்பேருந்தினை சுவிட்சர்லாந்து நாட்டினை சார்ந்த டிசைன்லைன் இன்டர்நேசனல் (Designline International) என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இப்பேருந்தின் விலை தோராயமாக 900000- 120000 ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் 4 கோடியே 45 லட்சம் ரூபாய்).
நவீன நுட்பங்களை கொண்டு வடிவமைத்தால் தற்போதைய விலையில் ஒரு பங்கினை குறைக்க முடியும். தற்போது பயன்படுத்தப்படும் பாட்டரிகளுக்கு பதில் Super Capacitor மூலம் வேகமாக சார்ஜ் செய்யும்படி வடிவமைப்பு செய்யப்பட்டால் இப்பேருந்து மிக அதிக அளவில் புழக்கத்தில் மக்கள் சேவைக்கு விடலாம்.
அளவற்ற சூரிய ஒளி கிடைக்கும் இந்திய போன்ற நாடுகளுக்கு சூரிய மின் சக்தியில் இயங்கும் சிறிய ரக பேருந்துகளை வடிவமைத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வரப் பிரசாதமாக இருக்கும். இதற்கான உதிரி பாகங்களுக்கான வடிவமைப்பில் இன்னும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இதனையும் நாம் கவனத்தில் கொண்டால் நச்சு புகையற்ற மாநகர் பேருந்துகள் நம் ஊரிலும் விரைவில் இயக்கலாம்.
No comments:
Post a Comment