Friday 15 May 2015


ஜப்பானில் சூரிய ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்ற என்னுடைய கட்டுரையின் முதல் பாகம்  இவ்வார bepostivetamil இணைய இதழில் வந்துள்ளது, 
http://bepositivetamil.com/?p=1006

சூரிய ஆற்றல் – ஜப்பான் சொல்லும் நவீன பாடம் (Part 1)

பரப்பளவில் இந்திய தேசத்தினை ஒப்பிடும் பொழுது 8.6 மடங்கு சிறிய நாடு ஜப்பான். மேலும் ஒரு வருடத்திற்கான சூரிய ஒளி கதிர் வீச்சினை (solar irradiation) பெறுவதை ஒப்பிடும் பொழுது ஜப்பானை விட பல மடங்கு அதிகமாக இந்தியாவில் பெறப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியின் மூலம் தங்களது சுய தேவையினை பூர்த்தி செய்வதில் ஜப்பான் மிக குறைவான கால கட்டத்தில் இந்தியாவை விஞ்சி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது, இந்தியா இந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் ஜப்பானில் ஆற்றல் வளத்தினை காண்போம். ஜப்பானின் எரிபொருள் கொள்ளளவு திறன் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை சார்ந்தே இருந்து வருகிறது. ஜப்பான் ஆற்றல் பொருளாதார மைய ஆய்வேட்டின்படி (Japan Energy Economy Institute) கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து, சராசரியாக 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாட்டு இறக்குமதியிலும், 20 சதவிகிதம் உள்நாட்டு ஆற்றல் உற்பத்தியின் மூலம் தனது அனைத்து தேவைகளையும் எளிதாக சமாளித்து வந்திருக்கின்றது.
உலக வர்த்தகத்தில் கோலோச்சிய ஜப்பானின் பொருளாதார நிலையானது 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் (Great East Japan earthquake) அதளபாதாளத்திற்கு தள்ளி விட்டது. மேலும் புகுசிமா (Fukushima Daiichi) அனு உலை விபத்து ஜப்பானின் பொருளாதாரத்தினை மட்டுமல்லாது அன்றாட வாழ்வில் மக்களுக்கு தேவையான மின்சார பகிர்வையும் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக ஜப்பானின் வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 92 சதவிகிதமாக உயர்ந்திருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஜப்பானிய தமிழ் நண்பர்களுடன் உரையாடிய போது ஒரே நாளில் ஜப்பானின் எதார்த்த வாழ்க்கை எப்படி துக்கமானதாக இருந்திருக்கிறது என அறிய முடிந்தது.
நிலநடுக்கம் ஏற்ப்பட்ட அன்று தண்ணீர் தட்டுபாடு கடுமையாக இருந்திருக்கிறது. பெரும் நில நடுக்கம் ஏற்படும் போது ஒவ்வொரு தெருவிலும் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி குளிர் பான இயந்திரத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை கூட அவர்களால் எடுக்க முடியவில்லை காரணம் அச்சாதனங்கள் இயக்கக் கூடிய மின்சாரமும் துண்டிக்கப்பட்டதே. மேலும் சாலையின் சமிக்ஞை விளக்குகள் மற்றும் தானியங்கி கதவுகள் என யாவும் மின்சாரம் இல்லாமல் முடங்கி விட்டிருக்கிறது. வீடுகளில் ஒரு வார காலத்திற்கு மின்சாரம் இல்லாமல் பெரிதும் அவதிப் பட்டிருக்கிறார்கள்.
இந்த அனுபவத்திற்கு பிறகு ஜப்பானின் ஆற்றல் பார்வை தற்போது மரபுசாரா ஆற்றல் வளங்களின் மீது திரும்பி உள்ளது. அதிலும் முக்கியமாக சூரிய மின் உற்பத்தியில் (solar power generation) ஜப்பான் மிகப் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் ஜப்பானிய அரசால் வெளியிடப்பட்ட ஆற்றல் செயல் திட்டத்தின் (Stredgery Energy Plan 2014) மூலம் புதிய சூரிய மின்சக்தி நிலையங்கள் முன்னெடுப்பது பற்றிய அதன் விரிந்த பார்வையினை அறிய முடிகிறது.  அனு உலையின் மூலம் பெறப்பட்ட மின் சக்தியினை எவ்வாறு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் பெற முடியும் என்ற பெரும் சவாலான பணிக்கு ஆயத்தமாகி உள்ளார்கள்.
தற்போது ஜப்பான் அரசு அனு மின் உலைகளின் பயன்பாட்டினை மெதுவாக நடைமுறையில் இருந்து குறைத்து கொண்டு வருகிறது. ஆனால் அதே சமயம், அனு உலைக்கு இணையாக மாற்று எரிசக்தியினை சூரிய மின் சக்தியின் மூலம் எப்படி பெறுவது என்ற தயக்கமான கேள்வியும் அவர்கள் முன் சவாலாய் நின்றது. உதாரணத்திற்கு ஒரு மணி நேரத்தில், ஒரு அனு உலையில் பெறப்படும் மின் சக்திக்கு (1.2 மில்லியன் கிலோ வாட் அல்லது 7.4 பில்லியன் கிலோவாட்/மணி) இணையான சூரிய மின் சக்தியினை பெற வேண்டுமாயின் குறைந்த பட்சம் 1.7 மில்லியன் வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை பொறுத்த வேண்டும். இது கற்பனையில் தோக்கியோ நகரில் உள்ள எல்லா வீடுகளின் கூரைகளின் மீதும் பொருத்துவதற்கு சமம்.
இந்த இடத்தில் இந்தியாவின் சூரிய மின் சக்தி கொள்கையினையும் அதற்கு நாம் எடுத்து கொண்ட முயற்சிகளையும் நாம் அலச வேண்டும். ஜவகர்லால் நேரு சூரிய மின் சக்தி திட்டக் கொள்கையானது (Jawaharlal Nehru National Solar Mission) 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது, எதிர் வரும், 2020 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய மின் சக்தியினை உற்பத்தி செய்வதோடு, உள்நாட்டு மின் சக்தி கொள்முதலில் மிகக் குறைந்த விலையில் பெறும் வகையில் சூரிய மின் சக்தி தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது, மேலும் அதற்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பது போன்றவையாகும். இத்திட்டதில் நாம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளோம். ஆயினும் தொழிற்சாலைகள் அல்லாத குடியிருப்பு பகுதிகளில் சூரிய மின் சக்தி திட்டமானது அமல்படுத்துவதில் இன்னும் தேக்க நிலையிலேயே உள்ளது. அரசு போதிய மானியம் அளித்திருந்த போதிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வழமையான அனல் மின் சக்தியானது மக்களை இன்னும் மாற்று எரிபொருளின் மீதான பார்வைக்கு திருப்பாமல் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல் ஜப்பானை விட இந்தியாவில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மிக தாராளமான இடங்கள் உள்ளது, குறிப்பாக வீடுகளில் நமது மேற்கூரை அமைப்புகள் அகலமாக, தட்டை வடிவில் உள்ளதால் மிக எளிதாக சோலார் பேனல்களை நிறுவ முடியும். ஆனால் ஜப்பானில் நில நடுக்கம் மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்றவாறு சாய்வான  மேற்கூரைகளே உள்ளது. ஆகையால் இந்தியாவை ஒப்பிடும் பொழுது இத்தையக V வடிவிலான கூரைகளின் மீது சோலார் பேனல்களை பொறுத்த தாங்கு கம்பிகளுக்கு நிறைய பணம் செலவாகும். மேலும் இந்தியாவினைப் போல் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த மானியமும் கிடையாது.
இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும், கடந்த ஆண்டின் இறுதியில் மணிக்கு 6.7 மில்லியன் கிலோவாட் மின்சக்தியினை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களில் இருந்து மட்டும் பெற்று சாதித்து காட்டியுள்ளார்கள் ஜப்பானியர்கள். இந்த சாதனையினை எவ்வாறு இவர்களால் நிகழ்த்த முடிந்தது?
இந்த சவாலில் கிடைத்த வெற்றிக்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். முதலில் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை தங்களுக்குடையது என கருதி தேசத்திற்காக களத்தில் இறங்கியது. மற்றொன்று அதுவரை ஜப்பானில் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியினை மின் வாரிய கம்பி தடத்தில் ஏற்றுமதி செய்யும் மின்சார இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) இல்லாமல் இருந்தது. இந்த தொழில்நுட்பத்தில் ஜெர்மனிதான் உலகத்திற்கே முன்னோடி எனலாம். ஆகவே சூரிய மின்சக்தியினை மின்வாரிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் இன்வெர்ட்டர்களை வடிவமைத்து சந்தைப்படுத்துதலில் எளிமைப்படுத்தியதன் விளைவு சூரிய மின் சக்தி உற்பத்தியில் புதிய பரிணாமத்தினை எட்டி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக ஜெர்மனிக்கு அடுத்து நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றலின் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்ப வெப்பநிலை, சோலார் பேனல்களில் இருந்து உருவாகும் மின் உற்பத்தி மற்றும் அதற்கு நிகரான கார்பன் டை ஆக்சைடு கழிவு எவ்வளவு தடுக்கப்படுகிறது என்பதனை அறுதியிட்டு தெரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வசதி திறன் அலைபேசிகளிலும் வந்து விட்டது.
தற்போது ஒரு கிலோவாட்/மணிக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி ஏற்றுமதிக்கு (Feed-in tariff) 29 லிருந்து 35 யென் வரை மின் உற்பத்தி நிறுவனங்கள் தருகின்றது. இந்த மின்சக்தியினை வாங்குவதற்கு 10 லிருந்து 20 ஆண்டுகளுக்கு மின் உற்பத்தி செய்பவரோடு இந்நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஆகையால் மக்களிடம் இத்திட்டதிற்கு தற்போது ஜப்பானில் நல்ல வரவேற்பு. இந்தியாவில் கடந்த ஆண்டுதான் சூரிய மின் சக்தியினை ஏற்றுமதி செய்யும் வகையிலான இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) சந்தைகளில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதன் விலையும், இதன் மீதான உள்நாட்டு உற்பத்தி வரியும் நீக்கப்பட்டால் நாமும் இதே போன்று சாதிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். ஆனால் சூரிய மின் உற்பத்தியினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள் இன்னும் வடிவமைக்கப்படாமலே உள்ளது. இதனை இந்தியாவில் குறைந்த விலையில் வடிவமைத்தால் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது பெரும் செலவு மிச்சமாகும்.
(மேலும் தகவல்கள் அடுத்த இதழில் தொடரும்…)    
 - முனைவர்பிச்சைமுத்து சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்
ஜப்பான்
(E-mail: vedichi@gmail.com)
 முனைவர் பிச்சைமுத்து சுதாகர் பற்றி…
இயற்பியல் துறையில் 2009 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குவாண்டம் துகள்களை கொண்டு செறிவூட்டப்பட்ட திறன் மிகுந்த சூரிய மின்கலங்களை (QDs-sensitized solar cells) எவ்வாறு நானோ நுட்பவியல் மூலம் வடிவமைப்பது என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டின் மிகசிறந்த JSPS ஆராய்ச்சி விருதினைப் பெற்று தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணி புரிந்து வருகிறார். மேலும் இந்தியாவில் Solarix Energy System என்ற நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். சேலத்தில் இயங்கும் National Institute of Renewable Energy Technology என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும், சம கால சூழலில் ஸ்பெயின், இங்கிலாந்து, கொரியாவில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு சூரிய மின் சக்தி குறித்த ஆராய்சிக்கு வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

----------------------
நன்றி; bepositivetamil
Likes(0)Dislikes(0)

No comments:

Post a Comment