Saturday, 2 May 2015

ஜப்பான் - தோட்ட விவசாயம்

வசந்த காலத்தின் (spring) துவக்கமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாத துவக்கத்தில் நெல்லங்கன்று நடவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் தங்க விடுமுறை தினங்கள் எனப்படும் (golden holidays) மே மாதம் முதல் வாரத்தில் ஜப்பானில் விவசாயம் செய்ய துவங்கி விடுவார்கள்.  பெரும்பாலும் வயதானவர்களே இங்கு விவசாயம் செய்கிறார்கள். தனி ஒரு ஆளாக ஐந்து ஏக்கர் அளவிற்கு விவசாயம் செய்கிறார்கள். நவீன இயந்திர தொழில் நுட்பம் இவர்களுக்கு நன்கு கைகொடுக்கிறது. இரசாயன பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வயல் வெளிகளில் வாத்துகளும், காட்டு கோழிகளும், தவிட்டு குருவியும் நிறைந்த காணப்படும் பசுமை நிறைந்த வயல்வெளிகளை இன்றளவும் ஜப்பானியர்கள் மிக அருமையாக பராமரிக்கிறார்கள். வயல்வெளிகளின் இடையில் வீடுகள் பெரிதும் இல்லை, தமிழகத்தினைப் போலவே ஊருக்கு வெளியில் கால்வாய் பாயும் பகுதிகளில் மொத்தமாக நெல் சாகுபடி செய்கிறார்கள். பண்ணை வீடுகள் என்ற சூழலில் காய்கறிகளையும், பழ மரங்களையும் அதிகமாக வளர்க்கிறார்கள்.

ஜப்பானில் சிறு இடத்தினை கூட மக்கள் வீண் செய்வதில்லை அதில் காய் கறி வகைகளையோ (கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், முள்ளங்கி, முட்டைகோஸ்), கீரைகளையோ பயிர் செய்கின்றனர். முக்கியமாக விவசாயிகளுக்கு அவர்கள் பயிர் செய்யும் தானியங்களையும், காய்கறிகளையும் விற்பனை செய்ய உள்ளூர் மளிகை அங்காடிகள் பெரிதும் உதவி செய்கின்றன.


எனது வீட்டின் அருகில் உள்ள காய்கறித் தோட்டம். 80 வயதிற்கு மேற்பட்ட பாட்டி ஒருவர்தான் இந்த தோட்டத்தினை தினமும் பராமரிக்கிறார்.

 எங்களது நோதா நகரப் பகுதியில் இனகயா, மரியா, கோஅப், எயோன் வணிக வளாகம் போன்றவற்றில் உள்ளூர் காய்கறிகளை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். இது மட்டுமல்லாது விவசாயிகள் தங்களது நிலப்பகுதிகளின் அருகிலேயே திறந்த வெளியில் காய்களை வைத்து விட்டு அதற்கான விலையினை எழுதி வைத்து விட்டு சென்று விடுவார்கள். எனது வீட்டினை சுற்றி உள்ள தோட்டத்தில் அன்றாடம் விளையும் கீரையும், இதர காய்கறிகளும் ஒரு பையில் போட்டு  அலமாரிகள் கொண்ட பெட்டியில் வைத்து  விடுகிறார்கள். அருகில் உள்ள உண்டியலில் 100 யென் காசைப் போட்டுவிட்டு காய் அல்லது கீரையினை எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் யாரும் அற்ற சூழலில் ஏமாற்றாமல், களவு செய்யாமல் ஒரு சமூகம் இப்படி அறம் வழுவாது இயங்குகிறது என்பது என்னை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. 



விவசாயிகளின் தோட்டத்திலேயே விற்கப்படும் காய்கறிகள்

மேலும் விவசாயி தான் சாகுபடி செய்த காய்கறிகளை தன் வயலின் வாசலிலேயே விற்பதால் மிகக்குறைவாக நேரடியாக மக்களை சென்றடைகிறது. மேலும் உள்ளூரில் உள்ள பெரும்பாலான அங்காடிகளில் உள்ளூர் விவசாயிகள் தங்களை விளைபொருட்களை நேரடியாக வைத்து விட்டு வந்து விடுவார்கள். அதில் விற்ற பணத்தில் சிறு தொகையினை மட்டும் அங்காடியினர் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நேரடி முறையால் விவசாயி, பொதுமக்கள் இருவருமே பயன் பெறுகிறார்கள்.

ஜப்பான் உழவர் சந்தை - எயோன் வளாகம், நோதா நகரம்




மரியா அங்காடியில் கிடைக்கும் உள்ளூர் விவசாயிகளின் காய்கறிகள்

விவசாயத்தினை ஊக்கப்படுத்தும் பொருட்டு உள்ளூர் நகர் மன்றமும், சில தனியார் நிலங்களும் குறுகிய கால குத்தகைக்கு விடுகின்றனர். எனது வீட்டின் அருகில் உள்ள கூட்டு பண்ணை விவசாய பகுதிக்கு கடந்த வாரம் சென்று அங்குள்ளவர்களை சந்தித்தேன். அங்கு கத்தரி செடிகளுக்கு தாங்கு கம்பிகள் கட்டிக்கொண்டிருந்த கத்தோரி- சன் என்பவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களின் விவசாய உத்திகளை விளக்குமாறு கேட்டேன். அவரால் நன்கு ஆங்கிலம் பேச முடிந்ததால் எளிமையாக அவர்களது விவசாய முறைகளை விளக்கினார். சப்பானியர்கள், நெல் விவசாயம் தவித்து காய்கறிகளை பயிரிட பசுமை குடில் (green house) முறையினை பயன்படுத்தி நன்கு வெற்றி கண்டுள்ளார்கள். தோக்கியோ நகரில் பிரதான நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதாக கத்தோரி- சன் கூறினார். தன் தந்தைக்கு பிறகு இந்த விவசாயம் விட்டு போகாமல் இருப்பதற்கும் தன் குடும்பத்திற்கு நஞ்சு இல்லாத கீரைகளையும், காய்கறியினையும் தானே விளைவிப்பது என்பது தனக்கு கூடுதல் மகிழ்வு என்றும்  பேசினார். வார இறுதி நாட்களில் இங்கு வந்து விவசாயம் செய்வதால் மனதிற்கு பெரிய ஓய்வும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைப்பதாக கூறினார். 






தமிழகத்தினை போல் தண்ணீரை நேரடியாக வரப்புகளில் பாய்ச்சாமல் கைத்தெளிப்பான் அல்லது சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செடிகளுக்கு செலுத்துகிறார்கள். என்னிடம் அவர் பேசிக்கொண்டு இருந்த போது அங்குள்ள கைம்பம்பின் மூலம் நீரை சேகரித்து அதனை சிறிய கைத்தெளிப்பான் மூலம் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார். ஏறத்தாழ 2 ஏக்கர் அளவில் செய்யப்படும் விவசாயத்திற்கு ஒரு சிறிய கையினால் இயக்கப்படும் போர்வெல் பம்ப்பினை மட்டுமே நீர் ஆதாரத்திற்கு  வைத்து இருக்கிறார்கள்.






தோட்டத்தில் கிடைக்கும் இலை தழைகள் சேகரிக்கப்படும்  தொட்டி



கடையில் விற்கப்படும் மட்கிய சாண உரம் - விலை 600 யென் (300 ரூபாய்  இந்திய மதிப்பில்)

சிறிய தோட்டங்களில் முதலில் மண்ணை உழுது செப்பனிட்ட பிறகு அவற்றினை அகலமான மேடை போன்ற பாத்திகளை அமைக்கிறார்கள். பின்னர் அவற்றினை நெகிழி தாள்கள்  (polyethene) மூலம் மண்பாத்திகளை மூடி விடுகிறார்கள். பின்னர் செடி நடும் அளவிற்கு துளைகள் இட்டு அதில் நடவு செய்கிறார்கள். இம்முறை மூலம் நீரானது நேரடியாக செடிகளின் வேருக்கு பாய்ச்சப்படுகிறது. நீரானது தேவையற்ற முறையில் ஆவியாவது நெகிழி உறைகளால் தடுக்கப்படுகிறது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் வாயு அமோனியாவாக மாற்றம் செய்யப்பட்டு செடிகளின் வேர்களுக்கு வீரியத்துடம் பாய்ச்சப்படுகிறது. மாட்டு சாணங்களில் இருந்து பெறப்படும் எருக்களையே முதலில் செடிகளுக்கு இடுகிறார்கள். ஒரு மூட்டை எரு 600 யென். இதைக் கொண்டு எட்டு சதுர அடி நீளம் கொண்ட செடிகளுக்கு உரமாக இடப்படுகிறது. மரங்கள் மற்றும் செடிகளில் விழும் இலைகளை பொறுக்கி அவற்றினை ஓரிடத்தில் சேமித்து வைத்து காம்போசைட் இயற்கை உரங்களாக மாற்றி மீண்டும் மண்ணுக்கு இடுகிறார்கள். மறந்தும் கூட எந்த காய்ந்த சருகுகளை தீ வைத்து வீண் செய்வதில்லை.



இம்முறையில் ஒவ்வொரு முறையும் நெகிழி பைகளை மாற்ற வேண்டி இருப்பதால் சிலர் நீண்ட காலம் தாக்கு பிடிக்கக் கூடிய பெரிய அளவிலான பசுமை குடில்களை (green house) கட்டுகிறார்கள். இதன் மூலம் 5-10 வருடங்களுக்கு அவர்கள் நெகிழி கூடாரங்களை மாற்ற வேண்டியதில்லை. தரையில் வைக்கோல் பில்லை பரப்பி வைத்து விடுகிறார்கள். இது காலப் போக்கில் மக்கி உரமாகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள பசுமை குடில்களில் தக்காளி, சோயா பீன்ஸ், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, பேரிக்காய் போன்றவற்றினை அதிகமாக பயிரிடுகிறார்கள். குறைந்த நீரே இதற்கு செலவிடுகிறார்கள். தீடீரென ஏற்படும் பருவ கால மாற்றத்தால் செடிகள் காய்ந்து போகாமல் ஒரே சீரான தட்ப வெப்பத்தில் வளர்க்கப்படுவதால் திறந்த வெளியில் வளர்க்கப்படும் செடிகளை காட்டிலும் இம்முறையில் அதிக மகசூலை ஈட்டுகிறார்கள். ஜப்பானில் எவ்வாறு இயற்கை விவசாயத்தின் மூலம் பெரும் புரட்சி ஏற்பட்டது என்பதனை தெரிந்து கொள்ள இந்த நூற்றாண்டின் இணையற்ற இயற்கை விவசாயி திரு. மாசானபு புகோக்கா அவர்கள் எழுதிய  The one-Straw Revolution  (ஒற்றை வைக்கோல் புரட்சி)   நூலினை நேரம் கிடைத்தால் வாசிக்கவும்.








பசுமை குடில்களின் மூலம் விளைவிக்கப்படும் தக்காளி


உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி (2009- 2014), ஜப்பானின் விவசாய சாகுபடி நிலப் பரப்பளவு என்பது 12.6 சதவிகிதமாக உள்ளது. நிலப்பரப்பளவில் பெரிய நாடுகளான இந்தியா (60.3%) மற்றும் சீனாவோடு (54.8%) ஒப்பிடும் பொழுது இங்கு 5 மடங்கு குறைவான விவசாய நிலமே உள்ளது. ஆனால் தானிய மகசூலை ஒரு ஹெக்டேருக்கு ஒப்பிடும் பொழுது ஜப்பான் (6105) இந்தியாவினை (2962) விட மூன்று மடங்கு அதிகமான விளைச்சலை கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பான் விவசாயத்துறையில் மேற்கொண்ட நவீன சீரமைப்பு தற்போது மிகவும் கைகொடுக்கிறது.

 வெறும் இரசாயன உரங்களின் மூலம் விளைச்சலை பெருக்காமல், மரபு வழியோடு இயைந்த நவீன உத்திகளை வெகுசன மக்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் இன்று விவசாய உற்பத்தி துறையில் ஜப்பான்  சிறந்து விளங்குகிறது.

No comments:

Post a Comment