கோப்பையில் வழிந்தோடும் நீர்- -1
ஜப்பானின்
வட கிழக்கு பகுதியான மியாகி மாவட்டம்தான் (Miyagi Prefecture) 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி
பேரலைகளால் பெரும் நாசக் கேட்டை
சந்தித்த பகுதி எனச் சொல்லலாம்.இன்றைக்கு இணையத்தில் பார்க்கும் சுனாமி பற்றிய நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் யாவும் இந்த பகுதியில் கிடைத்தவைதான். ஏறத்தாழ 46 சதவிகித நகரத்தினை அழித்து
விட்டது. பத்து மீட்டருக்கும் உயரமான
அலைகள் கடற்கரையிலிருந்து ஐந்து கி,மீ
தொலைவிற்கு உள்ளே சென்று எதிர்பாராத
பேரழிவினை நிகழ்த்தி உள்ளது.
ஈட்டி
வைத்திருத்தவன் கையில் வடு மறைந்து
விடுகிறது ஆனால் குத்திய இதயத்திலோ
இரத்தம் வடிந்து கொண்டு இருக்கிறது
என்று வலம்புரி ஜான் சொன்னது போல,
சுனாமியின் சுவடுகள் மறைந்து போய் விட்டன.
ஆனால் அவை ஏற்படுத்திய கொடுரமான
தாண்டவம் இன்னும் இங்குள்ள மக்களின் மனதில்
வாழ்க்கை பற்றிய பிரக்ஞையினை அழுத்தமாக சொல்லி விட்டு சென்று
இருக்கிறது.
ஜப்பானில் உள்ள முழுமதி
அறக்கட்டளை (muzhumathi.org) உறவுகளோடு மியாகி மாவட்டத்தில் உள்ள மக்கிஹமா (Makkihama) என்னும் கடற்கரையோரத்தில்
உள்ள மலையடிவார கிராமத்திற்கு இரண்டு நாள் பயணம்
மேற்கொண்டோம். இந்த பயணத்திற்கான முதல் புள்ளியினை தமிழ் மொழி பற்றி நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வரும் ஜப்பானிய பேராசிரியர் இரோசி யமாசிடா (hiroshi yamashita) அவர்கள் முழுமதி நண்பர்களுக்கு எடுத்து வைத்தார். நீண்ட தெளிவான திட்டமிடலுக்கு பிறகு முழுமதி இந்த பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களோடு தங்கி அவர்களுக்கு ஒரு தோழமையினை தர வேண்டும் என களம் இறங்கியது. இந்த இடத்திற்கு செல்வதற்கு முன் ஏதோ ஒரு கிராமத்திற்கு செல்கிறோம் என தான் எண்ணினோம். ஆனால் இந்த இரண்டு நாளில்
நாங்கள் சந்தித்த மனிதர்கள் மற்றும் இடங்கள் எல்லாமே
ஒரு ஜென் ஞானி சலனம் நிறைந்த
மனித குவளைக்குள் ஏதோ ஊற்றியது போல
எங்களுக்குள் உணருகிறோம்.
புகுசிமா
அனு உலை விபத்திற்கு பிறகு அப்பகுதியில் உள்ள நிர்கதியாய் கைவிடப்பட்ட கிராமங்கள்,
தன்
நட்பின் வழியே தன் மக்களுக்காக உழைக்க நினைக்கும் பேராசிரியர் இரோசி யமாசிடாவும் அவரது நண்பர் குதொமாவும்,
உடைந்து போன
கண்ணாடி ஜாடியினை ஒட்ட வைத்தது போல்
இன்றும் சுனாமியின் சாட்சியாய் நிற்கும் இசினோமாகி (Ishinomaki) நகரம்,
சுனாமிக்கு பின்னரும் கடைத்தேற வாழ்வில்
நிறைய உண்டு எனச் சொல்லும் அவ்விடம் புதிதாய் முளைத்து இருக்கும் கடைகள்,
மக்கிஹமா மலைகிராமத்தின் தலைவர்
தொயோசிமா–சன்,
நோபிரு கைகென் (Nobiru Gaiken) கடற்கரையோரம் தனிமையில் விளையாண்டு கொண்டிருந்த சிறுவனும் அவனது நாய் குட்டியும்
நம்பிக்கையின் ஊற்றுகளாய் சுனாமிக்கு பின் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் 80 வயதுக்கும் மேற்பட்ட வயதான பாட்டிகள்,
என உணர்வுப் பூர்வமாக இருந்தது இந்தப் பயணம். என் வாழ்வில் நான் பார்த்திராத மனிதர்கள் இவர்கள். ஆனால் என்றென்றும் என் நினைவில் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். கிடைத்த சிறிய அனுபவத்தின் வழியாக இவர்களை பதிவு செய்ய வேண்டுமென நினைத்தாலும், எங்கிருந்த தொடங்க வேண்டும் என யோசித்த போது தயக்கமில்லாமல் வந்த மனிதர் தனாகா-சன் (Tanaka-san). வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் நான் வாடி நின்றேனே என்று தான் அறிந்திராத மனிதர்களுக்காக தன் வாழ்வின் எல்லாவற்றையும் துறந்து விட்டு இந்த மலைக் கிராம மக்களோடு தங்கி இருக்கும் முன்னாள் ஆசிரியர்.
திரு. தொயோசிமா-புமுசி ஒரு நிஜ கதாநாயகன். சுனாமி பேரழிவில் தன் கிராமத்தினை வழிநடத்தியவர்.
மகினொகாமி வரைபடத்தில்
மகினொகாமி கிராமம் சுனாமி ஏற்படுத்திய அழிவின் போது
திரு. தொயோசிமா-புமுசி முழுமதி நண்பர்களோடு உரையாடிய போது
மலை உச்சியில் இருந்து மக்கிஹமா கிராமம்
மக்கிஹமா கிராம கடற்கரை
குமொதொ-சன் (Kumodo-san) அவர்களோடு. இவர் இந்தியாவில் ஒரு வருடம் தங்கி இந்திய இசையினை கற்றவர்.
Tanaka-san sharing his experience during post-tsunami period. Prof. Yamashida and his spouse (sitting left side).
சுனாமி
பேரலையில் மக்கிஹமா கிராமமும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும்
முற்றிலும் நீரால் இழுத்து செல்லப்பட்ட
நிலையில் அங்குள்ள மக்களுக்கு புகழிடம் தந்தது மலை மேல்
உள்ள சிறிய பள்ளி. சுனாமிக்கு
பிறகு இப்பள்ளியில் அடைக்கலாமாய் தங்கியிருந்த மக்களுக்கு தன்னார்வ தொண்டராய் சேவை செய்ய வந்தவர்தான்
தனாகா-சன். அப்போது இவர் ஒரு பள்ளியில்
ஆசிரியராக பணி புரிந்து கொண்டு
இருந்தார். இந்த சேவையில் அவரோடு
சேர்ந்து பணியாற்ற நிறைய பள்ளி மாணவர்கள்
வந்திருந்தனர். பின்னர் அவர்களை பற்றி
விசாரித்த போது அதே சுனாமியில்
அருகில் உள்ள பகுதிகளில் தங்கள்
தாய், தந்தையரை இழந்திருந்தவர்கள் என அறிந்த போது நொறுங்கி போனார்.
இந்த இழப்பிலும் ஏன் இங்கு வந்தீர்கள்
எனக் கேட்டபோது அவர்கள் நிதானமாக சொன்ன
பதில் இறந்தவர்களை காட்டிலும் தற்போது உயிரோடு இருப்பவர்களை காப்பாற்றியாக
வேண்டும், மேலும் இவர்களோடு இருக்கும்போது நாங்கள் பாதுகாப்பாய் இருப்பது போல் உணர்கிறோம்.
இந்த சிறிய வயதில் இவர்களின் மன உறுதியினையும், வாழ்க்கை பற்றிய இவர்களின் அக்கறையும்
தனாகா வினை வெகுவாக பாதித்தது.
உடனடியாக
ஊர் திரும்பிய பின் தான் பணி புரிந்து கொண்டிருந்த ஆசிரிய பணியினை உதறி விட்டு இங்கு
வந்து இந்த மக்களோடு ஒருவராக தங்கி விட்டார். சுனாமி விபத்து ஏற்பட்டு 4 ஆண்டுகள் கடந்த
நிலையில் இவர் தற்போதும் மிகுந்த உற்சாகத்தோடும் மன நிறைவோடும் தன் வாழ்வினை இங்குள்ள
மக்களோடு கழிக்கிறார். இந்த மனிதர்தான் எத்தனை உயர்வானவர்.
சிறிய
குண்டு பல்பினை கோவிலுக்கு வாங்கி கொடுத்து விட்டு தியாக வேங்கை என சுய தம்பட்டம் அடிப்பவர்கள்,
சுனாமிக்கே சவால் விட்டவர் என போலியாய் போஸ்டரில் விளித்து திரியும் வெட்கமற்ற மனிதர்கள்
தங்கள் வாழ்வில் தனாகா போன்ற மனிதரை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும்.
முழுமதி
அறக்கட்டளை தன் பையில் கொஞ்சம் நம்பிக்கை விதைகளை எடுத்து வந்திருக்கின்றது. இந்த விதைகள்
எளிய மனிதர்களுக்கான முழுமதியின் சமூக பணிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
-
சுனாமி ஏற்பட்டு ஆறு நாட்கள் வரை வெளி உலகின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு
மலையில் தங்கி தங்கள் உயிரை காத்துக் கொண்ட மக்கிஹமா மலை கிராம மக்களும் அவர்கள வழி நடத்திய மலைக் கிராம தலைவர் தொயோசிமா புமிசி பற்றி அடுத்த
பதிவில்.
No comments:
Post a Comment