Monday, 29 June 2015

ஜப்பான் ஏன் கல்வியில் முன்னேறிய நாடாக உள்ளது - 2


இன்று  காலை வழக்கம் போல் எமது ஆராய்ச்சி நிலையத்திற்குள் நுழையும் போது வரவேற்பறையில் ஒட்டியிருந்த சுவரொட்டி (Poster) என் கவனத்தினை ஈர்த்தது. அதில் எனது பல்கலைக் கழக தலைவரும் எனது ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசிஜிமா (Prof. Akira Fujishima) அவர்களின் புகைப்படமும், சிறிய கார்ட்டூன் நிரம்பிய  படங்களும் அச்சிடப் பட்டு இருந்தன. சுவரொட்டி முழுக்க ஜப்பானிய மொழியில் இருந்ததால் எங்களது காரியதரிசி ஒக்கியாமா- சன் அவர்களிடம் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் சொல்லக் கேட்டேன். அத்தனை கார்ட்டூன்களும் பிரபல விஞ்ஞானிகள், ஆளுமைகள் பற்றியது என்று பிறகுதான் தெரிந்தது. 

பேராசிரியர் புசிஜிமா நிறைய சாதனையாளர்கள், அறிவியலாளர்கள் பற்றிய புத்தகங்களினை நிரம்ப வாசிப்பவர். அவ்வாறு தான் படித்த புத்தகங்களில் இருந்து மிகச் சிறந்த ஆளுமைகளை, அவர்களது சாதனைகளை, சுருக்கமாக மாணவர்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் கார்ட்டூன்களாக வடிவமைத்துள்ளார். பின்னர் இதனை எல்லா அறிவிப்பு பலகைகளிலும் இடம் பெயரச் செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த சுவரொட்டிகளை பார்க்கும் போது மாணவர்களின் மனதில் பளிச்சென இத்தகவகல்கள் எளிமையாக சென்றடையும். 


இந்த சுவரொட்டிகளில் உலக பிரசித்தி பெற்ற நியூட்டன், ரூதர் போர்டு, ஐன்ஸ்ட்டீன் ஆகியோரோடு ஜப்பானின் பிரசித்தி பெற்ற சாதனையாளர்கள் ஹோண்டா, டயோட்டா ஆகியோரின் தகவல்களும் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜப்பானிய அறிவியலாளர்  மருத்துவ பேராசிரியர் கிடியோ நொகுச்சி (Hideyo Noguchi) இவர் 1911 ஆம் ஆண்டு பாக்டீரியாக்களின் விளைவினை பற்றி கண்டறிந்தவர் (இவரது புகைப்படம் ஜப்பானிய 1000 யென் பணத்தில் அச்சிடப் பட்டிருக்கும்) பற்றிய தகவலும் இடம் பெற்றுள்ளது. *உலகில் இது போன்று எந்த நாட்டிலாவது அறிவியல் விஞ்ஞானிகளை கவுரவிக்கும் பொருட்டு தாங்கள் பயன்படுத்தும் பணத்தின் மீது அச்சிட்டிருக்கிறார்களா    எனத் தெரியவில்லை. 


Prof. Noguchi image in 1000 Yen currency


சொன்னால் நம்ப மாட்டீர்கள் பேராசிரியர் புசிஜிமா எப்போதும் கையில் ஒரு சிறிய பை வைத்திருப்பார். அதில் புற ஊதா கதிர்களை உமிழும் டார்ச் ஒன்று, போட்டோ கேட்டலிஸ்ட் துகள்கள், தண்ணீர் குடுவைகள் என வைத்திருப்பார். வாரம் ஒரு ஜப்பானிய பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் பற்றிய உண்மைகளை சோதனைகள் மூலம் செய்து காண்பித்து வேடிக்கையான விளையாட்டுகள் மூலம் விளக்குவார். பின்னர் சில நேரங்களில் அது பற்றிய அடிப்படை கேள்விகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனான சந்திப்புகளில் கேள்வியாய் கேட்பார். பதில் சொன்னால் புத்தகங்களில் கையொப்பமிட்டும் கொடுப்பார். அவரோடு பலமுறை உ.பா. அருந்தும் போது அருகில் அமர்ந்து நிறைய பல்பு வாங்கிய அனுபவங்களும் உண்டு. Prof. Fujishima demonstrating principle of light scattering in Skye through simple experiments to the students
Prof. Fujishima explaining the facts of basic science with Indian and Malaysian students during their cultural exchange visit at Tokyo University of Science.

மனிதர் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. திடீரென சிரித்து கொண்டே மேஜிக் மனிதராக மாறி பலகலைக் கழக பார்ட்டிகளில் அறிவியல் சோதனைகளை செய்து அசத்துவார்.

ஒளிச் சிதறல் (Light scattering) பற்றிய இவரது சோதனை விளக்கங்கள் நம்மை பிரப்பில் ஆழ்த்தக் கூடியது. 

உங்களால் ஒரு பனிக்கட்டியினை கத்தியால் வெட்ட முடியுமா எனக் கேட்பார்? யோசித்து முடியும் என்று சொன்னால் உடனே பனிக் கட்டியும், கத்தியையும் கொண்டு வரச் சொல்லி நம்ம வெட்ட சொல்லி வேடிக்கை பார்ப்பார். நாம் கத்தியால் பனிக்கட்டியினை வெட்ட சிரமப்படும்போது, திடீரென தன் பையில் இருந்து செயற்கை வைரம் பூசப்பட்ட மென் ஏடுகள் (Boron doped diamond films coated on Si substrates) பூசப்பட்ட சிலிக்கான் தகடுகளை கொண்டு பஞ்சு போல பனிக்கட்டியினை வெட்டி விட்டு சத்தமாக சிரிப்பார். 

நாமும் அதே போல் பிறகு அந்த செயற்கை வைரம் பூசப்பட்ட சிலிக்கான் தகடுகள்  கொண்டு பனிக் கட்டியினை அறுத்தால் அது வாழைப்பழத்தில் கத்தி இறங்குவது போல் எளிதாக இறங்கும். பிறகு, இது ஏன் கத்தியினை விட சிறப்பாக பனிக்கட்டியினை எளிமையாக வெட்டுகிறது என கேள்விகள் கேட்பார்?

 ஒரு முறை என்னிடம் இதே கேள்வியினை கேட்ட போது,  செயற்கை வைரப் பூச்சுகள் மிகவும் உறுதியான பொருட்களை அறுக்கும் திறன் உடையது எனப் பதில் உரைத்தேன். உடனே, அப்படியா எனச் சொல்லி விட்டு அருகில் உள்ள மரத்துண்டினை அதனை கொண்டு அறுக்கச் சொன்னார். அவ்வாறு முயற்சி செய்தபோது மரத்துண்டினை சிறிது கூட அது அறுக்கவில்லை.நான் மிகவும் குழம்பி போனேன். 

அப்போதுதான் அவர் சொன்னார், செயற்கை வைரப் பூச்சுகள் மிகச் சிறந்த வெப்பக் கடத்திகள் (thermal conductors) அவை நம் விரல்களில் மூலம் உடல் சூட்டினை வெகு வேகமாக பனிக் கட்டிக்கு கடத்தி அதனை உருக வைக்கிறது  அதனால் தான் இது பழத்தில் இறங்கும் கத்தி போன்ற தன்மையினை உணர முடிகிறது என்ற அறிவியல் உண்மையினை எளிய எடுத்துக் காட்டின் மூலம் விளக்கினார். விளையாட்டுகள் மூலம் நாம் சொல்லிக் கொடுக்கும் அறிவியல் சோதனைகள் எளிதில் பிறருக்கு சென்றடையும் என்ற உண்மையினை நான் கண் கூடாக கண்ட தருணம் அது.

இந்த சுவரொட்டிகளை போலவே, சென்ற ஆண்டு பல்கலைக் கழகத்தின் மாதாந்திர  நாட்காட்டிகளில் (Mothly Calender) ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு அறிவியல் விஞ்ஞானியின் புகைப்படங்களும் அவரைப் பற்றிய சிறு குறிப்பும் இடம் பெறும் விதத்தில் வடிவமைத்திருந்தார். அதற்கு எல்லோரிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 

Monthly calender of Tokyo University of Science contains Scientists information. 


இது கூட பரவாயில்லை தோக்கியோவின் பிரதான பகுதியில் உள்ள கட்சுசிகாவில் (katsushika) எங்கள் பல்கலைக் கழகத்தின் புதிய கிளைப் பிரிவில் பிரதான வாயிலில் இருந்து நூலகத்திற்கு செல்லும் 300 மீட்டர் நீளம் கொண்ட சாலையின் தரைக் கற்கள் முழுக்க அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்களும் அவர்களது கண்டுபிடிப்பு மற்றும் எந்த ஆண்டு என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் மூலம் தினமும் இச்சாலையில் நடக்கும் மாணவருக்கு குறைந்த பட்சம் பத்து அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்களாவது மனதில் பதியும் எனபதில் ஐயமில்லை.

நாமும் நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் விஞ்ஞானிகளின் பெயர்களையும், அவர்களது கண்டுபிடிப்புகளையும் சுவரொட்டிகளாக அறிவிப்பு பலகைகளில் வைக்கலாம். அவை வளர்ந்து வரும் அவர்களது இளம் பிராயத்தில் பசுமரத்தாணி போல் நன்கு பதியும். தற்போது அச்சுத் துறையில் நாம் வெகு தூரம் முன்னேறியுள்ளோம். தேவையற்ற விசயங்களுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கும் நம்மால் மாணவர்களுக்கு இது போன்ற வசதிகள் செய்து தர பெரிய செலவு ஒன்றும் ஆகி விட போவதில்லை.

ஜப்பானியர்கள் எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக மாணவர்களை எப்படி சிந்திக்க வைப்பது என்று செயலாற்றும் ஆற்றல் மிகு மனிதர்களை கல்லூரி, பல்கலைக் கழகத்தின் தலைவர்களாக நியமிக்கின்றனர். உலகின் முன்னேறிய திசையில் இவர்கள் பயணிக்க இதுவும் ஒரு முக்கிய காரணி ஆகும்.

தற்போதைய எங்கள் பல்கலைக் கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒரு பெண்மணி. அவரது பெயர் பேராசிரியர் சியாகி முகாய் (Prof. Chiaki Mukai), இவர் நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட கொலம்பியா (Columbia - 1994), மற்றும் டிஸ்கவரி (Discovery-  1998) விண்கலத்தில் சென்று விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். இதற்கு முன் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் திட்ட இயக்குநராகவும் (JAXA), அதன் பலகலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  இவர் தற்போது எங்கள் பல்கலைக் கழகத்தின் மாணவிகளுக்கான திறமைகளை உலகறியச் செய்யும் வகையில் உத்வேகமாக பணியாற்றி வருகிறார்.


With Prof. Chiaki Mukai, Vice President,  Tokyo University of Science at Photocatalysis International Research Center, Japan (File photo: 2014)


(சமீப காலங்களில், நம் ஊரில் உள்ள பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் எத்தையக சாதனைக்குரியவர்கள் என தகவல்களைத் தேடிப் பாருங்கள், அசந்து போவீர்கள்)