Sunday, 7 June 2015


தொட்டி காய்கறி செடிகள்


சோதனை முயற்சியாக மூன்று விதமான மண்ணை (இளகிய, இறுக்கமான, இரண்டும் கலந்த) தேர்வு செய்து சிறிய பிளாஸ்டிக் தொட்டிகளில் இட்டு கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய், புதினா, தக்காளி, வெள்ளரி, பாகற்காய், கொத்த மல்லி  ஆகிய செடிக் கன்றுகளை நட்டேன்.

3 வாரங்களுக்கு பிறகு கத்தரி நன்கு பூக்கள் வைத்து காய்க்க தொடங்கி விட்டது. பச்சை மிளகாய், பிஞ்சும், தக்காளி பூக்களும் வைத்து விட்டது.









மூன்று விதமான மண்ணில்  இளகிய வேரோட்டம் இருக்கும் மண்ணில் செடிகள் நன்கு வளர்ந்து உள்ளது. அதே சமகாலத்தில் இறுகிய மண்ணில் வைக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி மிகவும் பின் தங்கியே உள்ளது. தொட்டி செடி வைப்பவர்கள் முதலில் இந்த விசயத்தினை கவனிக்க வேண்டும்இது மிகவும் குழந்தைதனமான விசயம்தான். போன வருடம் இது எல்லாம் ஒரு விசயமா என நினைத்து கொன்டு நான் வைத்த பாகற்காய் செடி அனைத்தும் மிகவும் மெதுவாக வளர்ந்து ஒரு நேரத்தில் காய்ந்தே போய் விட்டது.

சில நேரங்களில் காற்று பலமாக அடிக்கும் போது செடிகள் உடைந்து விடும் அபாயம் உண்டு. ஆகவே 20 செமீ வளர்ந்த பிறகு தாங்கு கம்பிகள் அல்லது குச்சிகள் கொண்டு செடிகளை கட்டி விடுவது நல்லது.  தாங்கு கம்பிகள் வைக்கலாம் என எண்ணி கடைக்கு சென்றால் 3 கம்பிகள்  300 யென் (150 ரூபாய்). ஆகவே எங்கள் கிராமத்தில் வேலி ஓரம் உள்ள மூங்கில் குச்சிகளை வெட்டி வந்து நட்டு விட்டேன். செலவு மிச்சம்.

இங்குள்ள கடைகளில் சாண எரு, கோழி கழிவு, குதிரை லத்தி, பன்றி விட்டை ஆகியவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது (மூட்டை 500 - 600 யென்). மக்னீசியம் போன்ற நுண்ணுயிர் (மினரல்) சத்துகள் தரும் மீன் உரங்கள் விலை அதிகம் (மூட்டை 2500 யென்). ஆனால் இதனை செடிகளுக்கு இட்டால் நன்கு செழித்து வளரும்.

கடையில் கிடக்கும் இயற்கை உரங்களில், இடு உரமாக சாண எருவும், கோழி கழிவும் மண்ணில் நன்கு கலந்து இட்டேன். எரு வைத்த இரண்டு நாட்களில் மெதுவாக பூச்சிகள் வர ஆரம்பித்தன. லேசாக பயம் வந்து விட்டது. ஆனால் பின்னாடியே நம்ம எறும்பு அண்ணாச்சியும் வந்து விட்டார்கள். இந்த எறும்புகள் அவர்களை சாப்பிட்டு விடுகிறார்கள். இராசயன பூச்சி கொல்லி தெளிக்காததால் இந்த உணவு சங்கிலி நன்கு வேலை செய்கிறது.  


தற்போது பெரிய சவால், இந்த எறும்புகளை தின்ன சிலந்தி பூச்சிகள் வருகின்றன. இவர்கள்தான் இப்போது பிரச்சினையே. இவ்வாரம் எறும்பு குறைந்ததால் பூச்சிகள் முட்டை இட்டு லார்வாக்கள், வெண்டை பிஞ்சுகளில், குருத்து இலைகளில் வந்து விட்டது. வேப்ப எண்ணெய் தெளிக்கலாம் என்றால் ஜப்பானில் கிடைக்கவில்லை. எப்படி சிலந்திகளிடம் இருந்து எறும்புகளை காப்பாற்றுவது என தெரியவில்லை. கடைசி ஆயுதம் புற ஊதா கதிர்களை உமிழும் எல் ஈ டி (blue LED) விளக்குகள் கொண்ட பூச்சி பொறி வைத்து காலி செய்ய வேண்டியதுதான்.
ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரத்திற்கும் சேர்த்து மொத்தம் 12 லிட்டர் தண்ணீர் சிறிய கைத்தெளிப்பான் மூலம் செடிகளுக்கு விடுவதால் நீர் சிக்கனமாக செலவு ஆகிறது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் கத்தரிக்காய்கள் முற்றி விடும். இரசாயனம் கலக்காத கத்தரிக்காயை சுவைக்க ஆவலாக உள்ளது.

உண்மையில் இந்த சின்ன விசயத்திற்கே நான் மெனக் கெட்டபோது ஏக்கர் கணக்கில் காய் கறி செடி விவசாயம் செய்யும் விவசாயிகள் வைத்திருப்பவர்களின் நிலைமை பெரும் சவால்தான். நண்பர்களே இவர்களிடம்தான் நாம் வியாபாரிகள் அடித்து ஆட்டைய போட்டு பெரு நகரங்களில் நன்கு விலை வைத்து விற்கிறார்கள்.  

இயற்கை விவசாயத்தில் மண்ணை மீட்டெடுக்க வெகு நாட்கள் ஆகும் என எண்ணுகிறேன். பிறகுதான் விளைச்சலை எதிர்பார்க்க முடியும். பல வருடங்களாய் உரமும் பூச்சிக் கொல்லியும் இட்டு மண்ணின் pH மதிப்பு குறைந்து அமிலத் தன்மையுடன் இருக்கும் என எண்ணுகிறேன். மேலும் உயிர் தன்மையும் செத்து இருக்கும். இதனை மீட்பதே முதலில் சவால். சும்மா சினிமாவுல காட்டற மாதிரி தோட்ட செடிகள் மந்திரத்தின் மூலம் வளர்க்க முடியாது. எதார்த்தத்தில் நிறைய பொறுமை வேண்டும்.

இப்ப எல்லாம் விவசாயத்த பத்தி பேசறது டிரண்டா போச்சு ன்னு நினைக்காதீங்க. பேசி பேசித்தான மொபைல் போன்களின்  மார்க்கெட்ட மேல ஏத்தி விட்டுட்டோம். இப்படி பேசறத்துக்காகவாவது விவசாயத்த பத்தி உரையாடுவோம். அதுவே பெரிய மாற்றத்தினை கொண்டு வரும். உண்மையில் நாம் போராட வேண்டியது நல்ல மண்ணிற்காகவும், நீருக்காகவும்தான், இலவசங்களுக்காக அல்ல.

(அடுத்து மண் இல்லாமல், மிதவை அமைப்பில் சோதனை முறையில் கொத்த மல்லி செடிகளை வளர்த்து பார்க்க வேண்டும் என எண்ணி உள்ளேன்)


1 comment:

  1. How to Deposit With the Bonus at Casinos Near Me - Tricktactoe
    The 축구 승무패 예측 minimum deposit that the 야동 사이트 순위 casino 롤 토토사이트 유니벳 expects 인증 토토사이트 샤오미 to match will be 메이저 $25 and the maximum amount will be $25 or more. You can also wager on

    ReplyDelete