சூரிய ஆற்றலில் இயங்கும் புகைப்பட நிலையங்கள் -Solar Powered Photostudio
வேலை சார்ந்த விண்ணப்பங்கள், அரசு அலுவலகங்கள், வங்கி சார்ந்த விண்ணப்பங்களுக்கு என பாஸ்போர்ட் அளவில் புகைப்படம் எடுக்க சில நேரங்களில் நாம் படும் சிரமங்கள் சொல்லி மாளாது.
பெரும்பாலும் நம்மவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி நேரத்தில்தான் புகைப்படம் எடுக்க ஓடுவார்கள். இதில் மிகக் கொடுமையான விசயம், மின் வெட்டு நேரத்தில் புகைப்பட நிலையங்களுக்கு சென்றால், மின்சாரம் வந்தவுடன் வாங்க என்று கையை விரித்து விடுவார்கள். அப்படியே மின்சாரம் இருந்தாலும் புகைப்பட நிலையங்கள் எல்லா பகுதிகளிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
ஆனால் ஜப்பானில் அவசரமான நேரத்தில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் எடுக்க சிரமமே இருக்காது.
பெரும்பாலும் இரயில் நிலையங்களின் அருகில் உள்ள தெருக்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் சிறிய கூண்டு வடிவில் புகைப்பட நிலையங்கள் (Mobile Photostudio) வைக்கப்பட்டிருக்கும். இதனுள் இணைக்கப்பட்டிருக்கும் தானியங்கி புகைப்பட கருவியின் முன் நாம் அமர்ந்து எளிதாக எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்திற்கு தேவையான பணத்தினை அதில் உள்ள இயந்திரத்தில் போட்டு விட்டால் எடுத்து முடித்த பின் 10 வினாடிகளில் புகைப்படங்கள் கைக்கு வந்து விடும். தோராயமாக 6 புகைப்படங்களுக்கு 600 யென் செலவாகும் (300 ரூபாய்). இத்தொகை தொகையினை வெளியில் உள்ள புகைப்பட நிலையங்களுக்கு சென்று எடுக்கும் தொகையோடு ஒப்பிடும் போது நான்கில் ஒரு பங்குதான் என்பது கூடுதல் சிறப்பு.
சமீபத்தில் தோக்கியோ நகரில் அகிகாபாரா (Akihabara) பகுதியில் பார்த்தபோது சோலார் பேனல்களின் மூலம் இயங்கும் உடனடி புகைப்பட நிலையத்தினை (solar powered mobile photostudio) பார்த்தேன். இதன் கூரையில் இணைக்கப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து பெறப்படும் மின்சக்தியின் மூலம் இந்த புகைப்பட நிலையத்தில் இருக்கும் டிஜிட்டல் புகைப்பட கருவி, புகைப்படம் அச்சு செய்யும் இயந்திரம், மின் விளக்குகள், வெளியில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகை ஆகியவை இயங்குகின்றன. இந்த சோலார் பேனலில் இருந்து எவ்வளவு மின்சாரம் பெறப்படுகிறது என்பதனை வெளியில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் (Digital display) பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் சூரிய மின் ஆற்றலில் இயங்குவதால் இந்த புகைப்பட நிலையத்திற்கு எப்போது வேண்டுமானாலும் நம்பி செல்லலாம்.
Solar powered mobile photostudio (Akihabara, Electric town exit)
No comments:
Post a Comment