Tuesday, 9 June 2015



பழைய பேப்பர் சுத்திகரிக்கும் இயந்திரம் - Paper recycling machine


நம் வீடுகளில் இருக்கும் பழைய செய்தி தாள்களை மட்டும் அதை சேகரிக்க வருபவரிடம் எடைக்கு போட்டு விடுவோம் (அதுலயும் பிராண்ட் வேல்யூ இருக்கு). மற்றபடி பழைய கதை புத்தகங்கள், காகிதங்கள், அட்டைகள் ஆகியவற்றினை ஒன்று அப்படியே வீட்டில் தூசு படிய போட்டு விடுவோம் இல்லையேல் தூக்கி வெளியில் போட்டு தீ வைத்து கொளுத்தி விடுவோம். இதில் வரும் புகையினால் மனிதருக்கும், சுற்றுப் புற சூழலுக்கு பெரும் கேடு உண்டாகும்.  அதுவும் சிலர் பெருந்தன்மையாக சாலைகளில் குப்பையாக கொட்டி விடுகிறார்கள். குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களின் எல்லைகளில் இது போன்று கொட்டப்படும் காகித குப்பைகள் மலையளவு குவிந்து கிடக்கின்றன.

கடைசிவரை இந்த காகிதங்கள் உருவாக்க எத்தனை மரங்களை வெட்டுகிறோம், இவற்றினை உருவாக்கும்போது காகித தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு கழிவு நச்சுகளை ஆற்றில் கலக்கிறோம் என தெரிவதில்லை. இதில் படித்த நபர்கள் வேறு மின்னஞ்சல் அனுப்பும் போது தேவையில்லாமல் இந்த மின்னஞ்சலை காகிதத்தில் பிரிண்ட் செய்து வீணாக்காதீர்கள் என போதனை வேறு. இது எல்லாம் எந்த அளவிற்கு நம் மக்களை மாற்றி இருக்கிறது அல்லது காகித குப்பைகளை குறைத்து இருக்கிறது என தெரியவில்லை.

ஜப்பானில் இந்த காகித குப்பைகளுக்கு பொருளும், பரிசும் தருகிறார்கள். ஆச்சரியமா இருக்கா பாஸ்? 

ஜப்பானில் உள்ள பிரத்யோக தனியார் சுத்திகரிப்பு  நிறுவனங்கள்  மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் காகித சுத்திகரிப்பு மையங்களை வைத்துள்ளது. இதில் 1 கிலோ காகித குப்பைகளுக்கு 10 புள்ளிகள். 500 புள்ளிகள் சேர்ந்தவுடன் அதனை பரிசாகவோ அல்லது பொருளாகவோ வாங்கி கொள்ளலாம். 



 Paper recycling machine, Inegaya Super Market, Unga, Nodashi, Japan


Guidelines to operate the machine


 Guidelines to operate the machine



இந்த நிறுவனங்களிடம் முதலில் நாம் நமது பெயரை விலாசத்துடன் பதிவு செய்து கொண்டால் Eco Card எனும் புள்ளிகள் சேர்க்கும் (Point Card) பார் கோடு அட்டையினை கொடுத்து விடுகிறார்கள். வீட்டிலேயே எடை பார்த்து கயிற்றில் கட்டி எடுத்துக் கொண்டு வந்து தங்களது Eco card அட்டையினை சுத்திகரிப்பு மையத்தில்  உள்ள பார் கோடரில் ஸ்கேன் செய்தால் நமது கணக்கில் எடைக்கு நிகரான புள்ளிகளை கணக்கில் வைத்துக் கொள்ளும். பிறகு இதனுடன் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் இருந்து நாம் எடை போட்டதற்கான ரசீது வரும். அதனை அந்த கட்டின் மீது ஒட்டி அங்குள்ள குப்பை சேகரிக்கும் பெட்டியில் போட்டு விட வேண்டும். நான் இந்த இயந்திரத்தினை பார்வை இட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு ஜப்பானிய பெரியவர் தனது புத்தக குப்பைகளை போட்டு விட்டு ஒரு நிமிடத்திற்குள் பாயிண்டுகளை பதிவு செய்து விட்டு சென்று விட்டார்.

Operating the recycling machine. 

 Paper waste 
 Paper waste 



சரி இந்த குப்பைகளை என்ன செய்வார்கள் என கேட்கிறீர்களா?.  

இந்நிறுவனங்கள் வாரத்திற்கு இரு முறை இந்த மையங்களுக்கு வந்து லாரிகளில் தங்கள் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளுக்கு எடுத்து    செல்கிறார்கள்.  பின்னர் அவற்றினை  மறு சுழற்சி செய்து, காகித கூழினை எடுத்து (pulp processing)  அதன் மூலம் காகித அட்டைகள், கழிவறை திசு காகிதம்,  மற்றும் பார்சல் பெட்டிகள், போன்றவற்றிற்கு  மீண்டும் பயன்படுத்தபடுகிறது. இதுவும் ஜப்பானின் பளிச் சுத்தத்திற்கு மற்றும் ஒரு காரணம்.

கூடுதல் தகவல்: முதல் தயாரிப்பில் உருவாகும் கழிவறை திசு காகிதங்கள் விலையினை விட மேற்கண்ட காகித குப்பைகளில் இருந்து பெறப்படும் மறு சுழற்சி திசு காகிதங்கள் விலை குறைவு. ஆகையால் பெரும்பாலான மக்கள் கழிவறைகளுக்கு மறுசுழற்சி திசு காகிதங்களையே விரும்புகிறார்கள். 

இப்படி நம்ம ஊர்லயும் நகராட்சி, பஞ்சாயத்து சார்பில் டெண்டர் விட்டு தனியார் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்தால் காகித கழிவு மேலாண்மை மூலம் நமக்கு  வீடு மற்றும் வீதிகள் சுத்தாமவதோடு நமக்கு வருமானமும் வரும். 

(குடித்து விட்டு தூக்கி எறியும் குளிர்பான பிளாஸ்டிக் குடுவைகள் (Plastic PET bottles) அல்லது மினரல் தண்ணீர் பாட்டில்களை (PET bottles) கொண்டு  லாட்டரி சீட்டு வாங்கலாம் அல்லது வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கலாம். தகரத்தால் (metal can) ஆன குளிர்பான டப்பாக்கள் (beverage can) அல்லது பீர் குடுவைகளைகளை (tin beer) கொண்டு லக்கி விளையாட்டுகள் விளையாடலாம்  அல்லது பரிசுகள் பெறலாம். அந்த மறு சுழற்சி எந்திரத்தினை பற்றி நாளை எழுதுகிறேன்.)

No comments:

Post a Comment