நீட் -இது யாருக்கான
நுழைவுத் தேர்வு - 1
CBSE
பள்ளிகள் தான் சிறந்தது, நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவரை உருவாக்கும் என்று கோசமிடும்
அறிவாளிகளே!
தமிழகத்தின்
ஒரு சிறு நகரத்தில்、கிராமத்தில்
இருந்து வரும் மாணவர்கள் இந்த இரண்டையும் எதிர்கொள்ள எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்
என்று நேர்மையாக சொல்வீர்களா?
சமீபத்திய நீட் கோச்சிங் மையங்களின்
கட்டணப் பட்டியல் படி குறைந்தது 1 ல் இருந்து 2 லட்சம் வரை கேட்டிருக்கிறார்கள். இந்த
தகவல்களை நீங்கள் இணையத்திலேயே பார்க்கலாம்.
கல்வி
என்பது நாம் முன்னேறியவுடன் தான் புறப்பட்ட இடத்தில் இன்னும் போராடிக்கொண்டிருப்பவனுக்கும்
அதே வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்று பேசுவதே அறம். அதை விடுத்து தன்னிடம் நாலு காசு
சேர்ந்தவுடன் இந்த பாடத்திட்டமே தவறு என துர் போதனைகள் மூலம் விசமக் கருத்துகளைப் பரப்பி
ஏன் சிறு நகரம், கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்களிடம் ஒரு பீதியை உருவாக்க முயல்கிறீர்கள்.
சிபிஎஸ்சி
பள்ளிகள் நன்கு வளர்ந்த மேல்தட்டு மக்களின் பிள்ளைகளை கணக்கில் கொண்டு செயல்படுபவை.
முதல் தலைமுறையாக கல்வி அறிவு பெறும் எவருக்கும் இவை சாத்தியமே இல்லை. இன்னும் தமிழக
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி கிடையாது. நூலகம் கிடையாது. ஆனாலும் உங்களிடம்
இல்லாத ஒரு அறம் அங்கு பயிலும் ஆசிரியர்களிடம் இருக்கிறது.
பெரும்பான்மையான
தமிழக தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை புறக்கணித்து விட்டு 12 வகுப்பு
பாடங்களை இரண்டு வருடம் நடத்தி 1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பதாக மார் தட்டிக்
கொள்ளும் வேலையில் நேர்மையாக 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தி காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை
சிரத்தையோடு நடத்தி மிகச்சிறந்த அறிவை ஊட்டி அவர்களை 12 ஆம் வகுப்பிற்கு கொண்டு வருகிறார்கள்.
மிகச் சரியாக ஜீன் மாதம் தொடங்கி 8 மாதத்திற்குள் அரசுப் பள்ளி மாணவர்கள் 12 வகுப்பு
பொதுத் தேர்விற்கு தயாராகிறார்கள். இங்கு பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் மிதிவண்டியிலும், கால்நடையாய்
பத்து கிமீக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து அருகில் இருக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில்
வந்து பயில்கிறார்கள். இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையிலும் இவர்கள் 1100 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.
நான் மேலே சொன்ன படி இந்த மாணவர்களால் இவ்வளவு
தொகை கொடுத்து இந்தக் குழந்தைகளால் படிக்க முடியாது என உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.
தெரிந்திருந்தும் நீட் தேர்விற்கு தொடர்ந்து ஆதரவாக குரல் தெரிவிப்பதோடு, தமிழக பள்ளி
மாணவர்கள் தேர்விற்கு பயப்படுகிறார்களா? என்ற சமூக நீதிக்கு எதிரான கேள்வியையும் முன்
வைக்கிறீர்கள். ஒரு சிலரோ ஏன் இந்த வசதியை பள்ளியிலேயே கொண்டு வரலாம் எனவும் அறிவுரை
சொல்கிறீர்கள்.
உங்கள்
லாஜிக் படியே அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.
சிபிஎஸ்சி பள்ளிகள் மிகச் சிறந்த
கல்வியை தரும் போது ஏன் அங்கு பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி, நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்
தேர்வுகளுக்கு கோச்சிங் சென்டர்களுக்கு போகிறார்கள். அப்படியானால் சிபிஎஸ்சி பள்ளிகள்
இந்த குழந்தைகள் அந்தத் தேர்விற்கு அவர்களை தயார் செய்யாதா.
ஆக பள்ளிக் கல்வியை தாண்டி
நம் குழந்தைகள் ஜெயிக்க ஒரு சூத்திரம் தேவைப்படுகிறது. என்னிடம் பணம் இருக்கிறது, அதன்
வாயிலாக அந்த சூத்திரத்தை நான் செய்ய முடியும், பணம் இல்லாதவனுக்கு எதற்கு இந்த கல்விக்கு
ஆசைப்பட வேண்டும் என்ற தொணியில்தான் நீட் ஆதரவாளர்களின் அறிவுரைகள் இருக்கிறது.
முதலில்
மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டம்தான் சரியென போதனை செய்தீர், பின்னர் சிபிஎஸ்சி தான்
சிறந்தது என்றீர். இப்போது கேம்ப்ரிட்ஜ் பள்ளிகளின் பாடத்திட்டம் சிறந்தது என்கிறீர்கள்.
கடைசி வரை நீங்கள் கற்ற கல்வியையே நம்பாமல் உங்கள் பிள்ளைகளின் முதுகில் வண்டி நிறைய
சுமையை ஏற்றுகிறீர்கள். உங்களுக்கு தெரியுமா, இங்கிலாந்தின் பள்ளிகளில் கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக் கழகம் பரிந்துரைந்த பாடத்திட்டம்தான் வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும்
அவர்கள் சிங்கப்பூரின் கணித பாடத்திட்டத்தை தற்போது பரிந்துரைத்து பல பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி
வருகிறார்கள். நீங்கள் எது சிறந்தது என ஓடுகிறீர்களோ அதற்கு பின்னாலும் குறைகளும், நிறைகளும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.
ஒரு
முறை திருநெல்வேலி அருகே திருவைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்
கொண்டு இருந்த போது இடுப்பு நீரில் மாணவர்கள் பாடப் புத்தகங்களை தலையில் வைத்துக் கொண்டு
எங்களை கடந்து சென்றனர். ஏன்ம்பா ஆற்றில் குளிப்பதற்கு எதற்கு புத்தகப் பையினை எடுத்து
வருகிறீர்கள் என நானும் நண்பர் ராசகுமார் அண்ணாச்சியும் கேட்டோம். இல்லண்ணா, எங்க ஊர்
ஆற்றின் அக்கரையில் உள்ளது, பஸ்ல சுத்திப் போனா 40 கி.மீ. அதனால இந்தக் கரையில் இருக்கும்
அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு தினமும் நீரில் இறங்கிப் போய் விடுவோம் என்று சொன்ன
போது இப்படியும் தமிழகத்தில் மாணவர்களின் சூழல் உள்ளதா என அதிர்ச்சி விலகாமல் இருந்தேன்.அப்படியானால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதோ, நீர் அதிகம் வரும் போதோ இவர்கள் எப்படி இந்த பள்ளிக்கு வருவார்கள் என்ற கேள்வியே என்னை ஆக்கிரமித்து இருந்தது.
அதை
விட அடுத்த அதிர்ச்சி எங்களுக்கு காத்திருந்தது. அரை மணி நேரம் கழித்து ஐந்து ஆசிரியைகள்
அதே போல் மறு கரையில் இருந்து வந்தனர். அவர்களும் இடுப்பு நீரில் இறங்கியபடியே எங்களை
கடந்து நாங்கள் குளித்துக் கொண்டிருந்த கரைக்கு ஏறிச் சென்றனர். அவ்ர்களின் கணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மாற்றுத் துணியுடன்
நின்று கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் நாங்கள் உறைந்து விட்டோம்.
நாம்
பார்த்திராத ஒரு உலகம் உங்கள் சன்னலுக்கு வெளியே இப்படித்தான் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள்
வீட்டு வாசலில் பள்ளிப் பேருந்தில் ஏறி எந்த சிக்கலும் இல்லாமல் பள்ளிக்குள் நேரடியாக இறங்கிக் கொண்டிருக்கும் சூழலில்
இந்தப் பிள்ளைகள் தங்கள் நோட்டுப் புத்தகங்கள் தண்ணீர்ல் நனைந்து விடக்கூடாது என பாலீத்தீன்
பைகளில் சுற்றி திரிகின்றனர்.
இப்படி
ஏற்றத் தாழ்வுள்ள கட்டமைப்பில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது
என்று கருதி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது.
கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கென்று சிறப்பு சலுகை வழங்கியது. அதனையும் கிண்டல் அடித்தீர்கள்.
இன்னும் கொல்லி மலை, நீலகிரி, கோத்தகிரி, வால்பாறை, கொடைக்கானல் பகுதிகளில் வண்டிகள்
செல்ல முடியாத இடங்களில் எல்லாம் மாணவர்கள் கால்நடையாய் வந்து பயில்கிறார்கள். இன்னும்
இந்த துயரத்தின் பட்டியல் நீளும். இவர்களுக்கு
தந்த சின்ன சலுகையையும் பறித்து கொண்டு நீட் கொண்டு வருவதால் இவர்கள் வாழ்க்கையில்
என்ன மாதிரியான விளைவினை ஏற்படுத்த போகிறீர்கள் என்றாவது யோசித்தீர்களா?
தமிழக
அரசின் 100 சதவிகித வரிப்பணத்தில் அரும்பாடுபட்டு கொண்டு வந்த மருத்துவக் கல்லூரிகளில்
இவர்கள் இது வரை அரசின் உதவியோடு கைதூக்கி விடப்பட்டனர். இனி இவர்களின் வாழ்வின் மண்ணை
அள்ளிப் போட்டு விட்டு யாருக்காக நீட் தேர்வு கொண்டு வருகிறீர்கள்.
முதலில்
உங்கள் கற்பிதங்களை பிறர் மீது திணிக்கும் முன் உங்களைச் சுற்றி இருக்கும் உலகை பாருங்கள்.
பலம் பொருந்திய சிங்கம் மட்டுமே இருப்பது காடு அல்ல என்ற உண்மையினை உணருங்கள்.
உண்மையில்
நீட் தேர்வு பாரபட்சம் இல்லாததா? அடுத்த பதிவில் எழுதுகிறேன்。
-தொடர்ந்து
பேசுவேன்
No comments:
Post a Comment