Thursday, 11 May 2017

நீட் இது யாருக்கான நுழைவுத் தேர்வு - 2

சமீபத்தில் பொது வெளியில் அதிகமாக காண்கிற கோசம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம், மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினை ஒப்பிடும் போது தரம் குறைவாக உள்ளது, எனவே நம் பாடத்திட்டத்தினை அதற்கு தக்கவாறு மாற்ற வேண்டும்.

இந்த சிக்கல் எழக்காரணம் தமிழக அரசு 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தியது. அதற்கு பிறகு 8 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை. எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே பாடத்திட்டத்தை இன்னும் படித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற பதட்ட உணர்வே இவ்வாறான ஒரு கருத்தை மக்களிடம் விதைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக வெளியில் புழக்கத்தில் இருந்த‌ வேறு வேறான பாடத் திட்டம்  (a.தமிழக அரசின் மாநில பாடத்திட்டம், b.மெட்ரிக், c. CBSE) பனிரெண்டாம் வகுப்பில் நடை முறையில் இருந்த காலத்தில் மாநில பாடத்திட்டம் ஒரு சவலைக் குழந்தையாகவே பார்க்கப்பட்டு வந்தது. அதன் நீள் தொடர்ச்சியாகவே இந்த பொது புத்தி மனோநிலை மக்களிடம் நீடித்து வருவதும் இன்னொரு காரணமாக இருக்கக் கூடும்.

இந்தப் பதிவில் மக்களுக்கு புரியும் வகையில், இரண்டு பாடத்திட்டத்தையும் (CBSE and TN State Board – Samacheer Kalvi) ஒப்பிட்டு சில தகவல்களை எழுதி உள்ளேன். பொறுமையாக வாசியுங்கள்.

குறிப்பாக‌, இயற்பியல் பாடத்திட்டத்தை இங்கே ஒப்பிட்டு எழுதுகிறேன். ஏனெனில் நான் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவன். ஆகையால் மற்ற பாடத்திட்டங்களைக் காட்டிலும் இயற்பியல் பாடத்திட்டத்தை எளிதாக என்னால் பகுத்தாய்வு செய்ய இயலும்.

12 வகுப்பு இயற்பியல் பாடத்திட்டத்தில் சிபிஎஸ்சி, மற்றும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி இரண்டிலும் உள்ள பாடங்களையும் அதற்கு ஆசிரியர் செலவு செய்யும் நேரத்தையும் பட்டியல் இட்டு  எளிதாக தெரியும் படி தலைப்பினை தனித்தனி வண்ணத்தில் தந்துள்ளேன் (படம் 1).

·         நிலை மின்னியல்,
·         மின்னோட்டம்,
·         காந்தவியல்,
·         அணு மற்றும் துகள் இயற்பியல்,
·         ஒளியியல்,
·         அலைப் பண்பியல்,
·         எலக்ட்ரானியல் மற்றும் தொலைதொடர்பு கருவியியல்

இவைதான் சிபிஎஸ்சி மற்றும் தமிழக அரசின் சமச்சீர் திட்டத்தில் உள்ள இயற்பியல் பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சங்கள்.

Comparative chart of XII standard CBSE and TN State board Physics subject. 
·         அட்டவணை 1 ல் உள்ள படி தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தினால் (NCERT) பரிந்துரைக்கப்பட்ட சிபிஎஸ்சி பாடத்திட்டதினை ஒப்பிடும் போது தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில் 98 சதவிகிதம் ஒரே மாதிரியான பாடங்களே பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
·         இரண்டு பாடத்திட்டங்களிலும் இயற்பியல் பாடத்திட்டத்திற்கு 160 மணி நேரம் செலவழிக்கின்றனர்.
·         ஆய்வக  பாடத்திட்டத்தினை ஒப்பிடும் போது ஒரே மாதிரியான சோதனைகளே இரண்டிலும் கடைபிடிக்கிறார்கள் (தேர்வின் போது சிறு பகுதி வித்தியாசம் உள்ளது அடுத்த பதிவில் அதைப் பற்றி பேசுவோம்).

பாடப் புத்தகங்களைப் பொறுத்த வரை இரண்டு பாடத்திட்டங்ளுக்கான மாணவர் புத்தகங்களை ஒப்பிடும் போது சிபிஎஸ்சியில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் முக்கியமான பாடங்களை ஒரு தொகுதியாகவும் அந்த குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்கள் எடுக்க வேண்டிய மாதிரி பயிற்சி வினாக்களை  துணைப்பாடப் புத்தகமாக‌ (Supplementary book) தந்துள்ளார்கள். தமிழக அரசின் சமச்சீர் கல்வி புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதி பகுதியில் பயிற்சி வினாக்களை பிற்சேர்க்கையாக (auxiliary) தந்துள்ளார்கள். இரண்டிலும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

இங்கே முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய செய்தி தமிழக அரசின் சமச்சீர் புத்தகம் எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக தரப்படுகிறது. இத்துடன் தமிழக அரசின் கல்வி அமைச்சகத்திற்கான இணைய தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிபிஎஸ்சி புத்தகங்களை நீங்கள் சந்தையில் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், கிராமப்புற பகுதி மாணவிகளுக்கு மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், இன்ன பிற கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது.

ஆக, இரண்டு பாடத்திட்டங்களிலும் இருக்கும் சரக்கு, ஆசிரியர் எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டும் ஒன்றே என்ற அரிய உண்மையினை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் எந்த பகுதியினை மாற்றியமைப்பது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது சமச்சீர் கல்வியில் இருக்கும் உள்ளடக்கம் எந்த விதத்தில் குறைவானது?.

அப்படியானால் சிபிஎஸ்சியில் படிக்கும் மாணவர்கள் மிகச்சிறந்த அறிவாளிகளாகவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் எளிதாக எதிர்கொள்பவர்களாகவும் இருக்கிறார்களே என்றுதானே கேட்கிறீர்கள்.

இது முழுக்க முழுக்க உங்கள் பொது புத்தியே. இரண்டு பாடத்திட்டத்திலும் ஒரே மாதிரியான அறிவை பெறுபவர்கள் எப்படி ஒருவரை விட மற்றொருவர் தாழ்வாக முடியும் என்று சற்றே சிந்தியுங்கள்.

தமிழக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் எம்.எஸ்.சி, பி.எட். பட்டம் பெற்று  நன்கு புலமை பெற்ற ஆசிரியர்களே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திட்டத்தினை பயிற்றுவிக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் தமிழக அரசின் ஆசிரிய தேர்வு (TRB) வாரியத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் பலரும் பல்கலைக் கழக அளவில் நல்ல ரேங்க்கில் தேர்ச்சி பெற்றவர்கள். இதற்கு இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் என் வகுப்பு நண்பர்களே சாட்சி. சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் பயிற்று விக்கும் ஆசிரியப் பெருமக்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இருப்பவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.

**இரண்டு பாடத்திட்டத்திலும் பொதுத் தேர்வில் எப்படி கேள்விகள் கேட்கிறார்கள். என்பதனை அடுத்த பதிவில் விளக்குகிறேன். இந்தப் பகுதியைத்தான் பொது மக்கள் பரவலாக போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

ஒன்றை மட்டும் மிக உறுதியாகச் சொல்வேன். தன் மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு சமமாக கல்விப் பாடத்திட்டம் தருவதோடு , கல்வி உபகரணங்களும் இலவசமாக‌ கிடைத்திடச் செய்திடும் தமிழக அரசு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம். ஆனால், எதையுமே புரிந்து கொள்ளாமல் இந்த இலவசங்கள் எல்லாம் வேண்டாம் நல்ல கல்வியைக் கொடு என்றால் ஒன்று நம் பாடத்திட்டத்தை பற்றிய புரிதல் இல்லை என்று அர்த்தம் அல்லது நமக்கு கிடைத்த வசதி ஏழை, எளிய குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டு குழந்தைக்கு கிடைத்திடக் கூடாது என்னும் வயிற்றெரிச்சலாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் இருந்துக் கொண்டு இந்தியாவைக் காதலிக்க தெரிந்த பலருக்கும் தமிழக அரசு தன் சொந்த குழந்தைகளை எவ்வாறு அரவணைக்கிறது என்ற உண்மை பெரும் அவஸ்தையாயிருக்கிறது. அதன் விளைவே நீட் என்னும் திருட்டு தேர்வினை வலிந்து திணிக்க கோசமிடுகிறது.


-தொடர்ந்து பேசுவேன்

No comments:

Post a Comment