Sunday, 28 May 2017

புஜி மலையும், யமனாகா ஏரியும் (ஜப்பானின் மிக உயரமான‌ மலை)

புஜி எரிமலை (Mount Fuji) ஜப்பானில் உள்ள மலைகளிலே உயரமானது. ஏறத்தாழ 3700 மீட்டர் உயரம் உடையது.  ஜப்பானியர்கள் புனிதமாக கருதும் மூன்று முக்கிய மலைகளுல் புஜி மலையும் ஒன்று. ஆகையால் ஜப்பானிய மொழியில் மரியாதையோடு புஜி சன் (Fujisan) என்றழைக்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு யுனெஸ்கோ கலாச்சாரத் தளங்களுக்கான பட்டியலில் புஜி மலை சேர்க்கப்பட்டுள்ளது.

புஜி மலை அசப்பில் பார்க்க குழந்தைகள் சாப்பிடும் கோன் ஐஸ் போல் உச்சியில் பனிக்கட்டிகள் தூவி பார்க்கவே ஜில்லென்று ஒரு அனுபவத்தைக் உங்களுக்கு கொடுக்கும்.

ஜப்பானிற்கு விமானத்தில் வரும் போது நிச்சயம் நீங்கள் கழுகு பார்வையில் புஜி மலையினை ஆகாய மார்க்கம் வழியாக தரிசிக்கலாம்.

தோக்கியோ நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது புஜி மலை. ஆகஸ்ட் மாதத்தில் இம்மலை உச்சிக்கு நடந்து செல்லலாம். உலகெங்குமிருந்து மலையேற்றத்தில் பிரியம் உள்ளவர்கள் புஜி மலையில் ஏறுவதற்காகவே  ஜப்பானுக்கு சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.. மற்ற காலங்களில் பனி உறைந்து இருப்பதால் புகைப்பட தரிசனம் மட்டுமே.

புஜி மலையின் பக்கவாட்டில் பள்ளத்தாக்கில் உள்ள பூங்காவிற்கு (Grinpa Mt. Fuji)  செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தூரத்தில் தெரியும் மலை அதன் அடிவாரத்தில் அழகிய பூக்கள் பூத்திருக்கும் தோட்டம் என பார்க்கவே வீட்டு வரவேற்பறையில் ஒட்டியிருக்கும் பெரிய போஸ்டரைப் பார்த்தது போல் புஜி மலையின் மீதான் ஈர்ப்பில் ஒரு நாள் முழுதும்  ஜென் நிலையில் கடந்து போனது.

 புஜி மலையின் பள்ளத்தாக்கில் இருந்து கிளம்பும் போது மாலை 5.30 மணி. அங்கிருந்து தோக்கியோ நகருக்கு திரும்பி போகும் வழியில் புஜி மலையின் பக்கவாட்டில் 40 கிமீ தூரம் பயணித்தால் அதன் அழகை இன்னும் கொஞ்சம் நெருங்கி ரசிக்கலாம் என காரில் சுற்றியபடி வந்தோம்.

புஜி மலையின் அடி வாரம் என்பது பல மைல்களுக்கு விரிந்து கிடக்கும் ஒரு பகுதி. அதன் காலடியில் கவாகுச்சிகோ, சைகோ, யமனாககோ, சொஜிகொகோ, மொடொசுகோ என்னும் அற்புதமான ஐந்து ஏரிகள் உள்ளது. அவை புஜிகொகோ (Fujigoko) என்றழைக்கப்படுகின்றன. ஜப்பானிய மொழியில் கொ என்றால் ஏரி என்று பொருள்.

இந்த ஐந்து ஏரிகளுள் மிகப்பெரிய ஏரியான யமனாகா (Lake Yamanaka) ஏரியில் சற்று காலாற அமர்ந்து விட்டு போகலாம் என முடிவெடுத்து இரவு ஏழு மணிக்கு வந்தடைந்தோம்.

யமனாகா ஏரியானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புஜி எரிமலை குழம்பின் லார்வாக்களுக்கான வடிகாலாக இருந்த சகாமி ஆற்றின் வாயிலாக அமைந்து இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஜப்பானின் மிகப்பெரிய மூன்றாவது ஏரி என்னும் சிறப்போடு, புஜி மலையினை சுற்றியுள்ள ஏரிகளுள் ஆழமானதும் (44 அடி)  இதுவே.

யமனாகா ஏரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளது. மீன் பிடித்தல், படகு ஓட்டுதல், நீர் சறுக்கு விளையாட்டு, ஏரியின் கரையில் இரவு நேரத்தில் தீ முட்டி கறி வறுத்து சாப்பிடுவது, பந்து விளையாட்டு என ஏறத்தாழ 6.4 கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விரிந்து கிடக்கும் இதன் கரையானது ஜப்பானியர்களின் ஓய்விற்கான தலங்களில் அதிக கவனத்தைப்  பெற்றுள்ளதால் வருடத்தின் பெரும்பாலான நாட்களும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜப்பானுக்கு சுற்றுலாவிற்கு குடும்பத்தோடு வரும் வாய்ப்புள்ளவர்கள் இங்கு தங்கி இளைப்பாறி செல்லலாம். இந்தப்பகுதியில்தான் இயற்கையாகவே எரிமலையில் இருந்து வெளிவரும் சுடுநீர் ஊற்றில் குளிக்கும் இடங்கள் அதிகம் நிரம்பிய கக்குனே மலை உள்ளது.

ஜப்பானில் கோடை காலத்தில் இரவு எட்டு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும். நாங்கள் யமனாகா ஏரியை அடைந்த போது   நாள் முழுவதும் ஓடிக் களைத்த சுற்றுலாப் பயணிகளுக்கான படகுகள் நீரில் தள்ளாடியபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

படகு சவாரியில் ஏறுவதற்காக ஏரியின் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் நீண்ட பலகையில் மெல்ல நடந்து சென்று ஏரியின் ஆழமான பகுதி அருகே சென்று அதன் அழகை ரசித்தேன்.

அங்கேயே நின்று கொண்டு நண்பரின் இல்லத்தில் இருந்து கொண்டு வந்த தேநீரை ஒரு டம்ளரில் ஊற்றி மெதுவாக உறிஞ்சிக் குடித்தேன்.

ஏரியின் தளும்பும் நீர் அலைகளின் ஓசையில், அதன் பின்னனியில்  விருட்சமாய் எழுந்து நிற்கும் புஜி மலையைப் பார்த்தவாறே தேநீரைக் குடித்து விட்டு கொஞ்சம் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மெல்ல விடை பெற்றேன்.
 யமனாகா ஒரு ரொமான்டிக் ஏரி..குடும்பத்தோடு சென்று மகிழ்ந்திருங்கள்.No comments:

Post a Comment