Sunday, 21 May 2017

ஜப்பானிய புத்தகங்களும், எழுத்து முறைகளும்


சமீப நாட்களாய் நான் போட்டிருந்த மூக்கு கண்ணாடி என் காது மடல்கள் மீது அதிக அழுத்தம் தர ஆரம்பித்து விட்டது.  இனி மேலும் பொறுக்க முடியாது, கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டத்திற்கு வந்திருந்தேன்.

உங்கா, அருகில் இருக்கும் நகரியமா ஒத்தகனமோரி ரயில் நிலையம் அருகில் வணிக வளாகத்தில் கொஞ்சம் கண்ணாடி கடைகள் இருக்கிறது.

நான் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பதினைந்து நிமிட பயணம் என்பதால் பெரிய சிரமம் இருக்காது என கிளம்ப்பி விட்டேன். கண்ணாடி கடையில் பழைய லென்சின் அளவையே போட்டுத் தரச் சொன்னேன். புதிய பிரேமை எடுத்துக் கொடுத்ததும் ஒரு மணி நேரம் காத்திருக்க முடியுமா என்றார்கள்.

சரி போரடிக்காமல் இருக்க வணிக வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து விடலாம் என சுற்றி வந்த போது பெரிய புத்தக கடை கண்ணில் பட்டது.

ஏறத்தாழ அந்த தளத்தின் பாதி பகுதியினை அந்த புத்தக கடை ஆக்கிரமித்து இருந்தது. சுற்றி வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தோன்றியது.

முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்களை அவரது புகைப்படங்களை பெரிதாக போஸ்டர் போட்டு அதன் கீழ் அலமாரியின் தனியாக அடுக்கி வைத்திருந்தனர். முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள். சிறியவர், பெரியவர் என இரண்டாக பிரித்திருப்பதால் எளிதாக குழப்பமில்லாமல் மக்கள் விரும்பும் பகுதிக்கு செல்கிறார்கள்.பெரும்பாலும் புத்தகங்களை நின்று கொண்டே புரட்டி படிக்கிறார்கள். இளைஞர்களுக்கான தனித்த பகுதியினை ஆளை சுண்டி இழுக்கும் வகையில் போஸ்டர்கள் போட்டு வைத்திருக்கின்றனர். பதின்ம வயது கூட்டம் முழுவதும் நேராக அந்த பகுதிக்கு போய் விடுகிறார்கள்.

நம் ஊர் புத்தக கடைகளைப் போலவே சமையல், ஜோக்குகள், அரசியல், ஆன்மிகம், நிர்வாகவியல் புத்தகங்கள் என பிரிவு வாரியாக‌ வைத்திருக்கின்றனர்.

அதே நேரம் பயணம், பேஷன் டிசைனிங், என மாடர்ன் ஏரியாக்களில் ஏராளமான‌ கலெக்சனை பார்க்க முடிந்தது. மீன் பிடித்தல், கார் ரேஸ், டென்னிஸ், கோல்ப், கால்பந்து என இந்த வரிசை நீண்டு கொண்டே போனது. இந்த ஏரியாவில் புத்தகங்களை மக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

அரசியல் ஏரியாவில் என்ன மாதிரியான புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என கொஞ்சம் புத்தகங்களை எடுத்து புரட்டி பார்த்த போதுதான்  ஒரு சில புத்தகங்கள் இடது பக்கம் திறப்பது போல் இருந்தது.
வலமிருந்து இடமாக திறக்கும் படி உள்ள புத்தகம்

ஒரு வேளை தவறாக பைண்ட் செய்து விட்டார்களா என யோசித்து அங்கிருந்த மற்ற புத்தகங்களோடு ஒப்பிட்டேன். எல்லாமே வலது பக்கம் திறப்பது போல் இருந்தது. நம் புத்தகங்கள் இடது புறம் திறப்பது போல் இருக்கும். இது என்ன கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே என ஆச்சரியமடைந்தேன்.

வழமையாக நம் ஊர் புத்தகங்கள் இடத் புறம் திறந்து படிப்பது போல் இருக்கும். ஆனால் சில ஜப்பானிய புத்தகங்கள் வலது புறம் திறந்து படிப்பது போல் இருக்கிறது. புத்தகத்தினை புரட்டி பார்த்தால்  எழுத்துகள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டு இருந்தது. அதே நேரம் புத்தகத்தின் பக்கங்கள் வலம் இருந்து இடது புறம் நோக்கி அமைக்கப்பட்டு இருந்தது.

அதாவது பூக்களை மேலிருந்து கீழாக தொடுத்து அந்த மாலைகளை வலம் இருந்து இடமாக தொங்க விட்டுக் கொண்டே போனால் எப்படி இருக்கும். அது போன்ற அமைப்பில் இருந்தது.

இது போன்ற எழுத்து அமைப்பினை கொரியாவில் இருந்த போது பார்த்திருக்கிறேன். ஆனால் அன்றாட புத்தகங்களில் இது போன்ற எழுத்து அமைப்பு இன்னும் கொரியாவில் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் ஜப்பானில் இன்றும் நடைமுறையில் சரி பாதி கிடைக்கையாக, நாம் எழுதுவது போல் “இடம் இருந்து வலம் எழுதும் முறையும்” (left to right side), செங்குத்தாக எழுதும் எழுத்துகளில் வலம் இருந்து இடமாகவும் (right to left side)  எழுதும் முறையினை கடைபிடிக்கிறார்கள்.

அதனால்தான் இந்த அமைப்பில் இருக்கும் புத்தகங்களை எளிதாக படிக்கும் வண்ணம் வலது பக்கம் (right side) திறப்பு வைத்துள்ளனர். நம் புத்தகங்களுக்கு நேர் எதிர்.

கொஞ்சம் இதன் அமைப்பினை தேடி அலசிப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

ஜப்பானிய மொழியின்  “காஞ்சி” (Kanji) சித்திர எழுத்துகள் சீன மொழியில் இருந்து தருவிக்கப்பட்டவை. இந்த சித்திர எழுத்துகளை மேலிருந்து கீழாக, கிடைக்கையாக, கீழிருந்து மேலாக எழுதலாம். அதே நேரம் இந்த அமைப்பில் நிறுத்தக் குறியீடுகள், வார்த்தைகளுக்காக இடவெளி, எந்த திசையில் எப்படி எழுத வேண்டும் என்று பல விதிகள் இருக்கிறது. அதைப் பற்றி ஜப்பானிய மொழியில் நன்கு புலமை பெற்ற ஆசிரியர்களிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆசியாவில் உள்ள மற்ற‌ நாடுகளை ஒப்பிடும் போது கிழக்கு ஆசிய நாடுகளில் (சீனா, கொரியா, ஜப்பான்) மட்டும்தான் இந்த எழுத்து முறை உள்ளது. முக்கியமாக ஜப்பானில் இன்றும் இந்த முறையினை பள்ளியில் இருந்து சொல்லித் தருகிறார்கள்.

நம் ஊரில் இரண்டு வரி நோட்டில் (ruled note) தமிழ் எழுதிப் பழகுவது போல், கெங்கொ யொசி (Genko Yoshi) என்னும் பிரத்யோக நோட்டில் இந்த முறையினை பயிற்சி எடுக்கிறார்கள். இந்த நோட்டில் ஒரு பக்கத்திற்கு 20 X 20 (மொத்தம் 400) சதுர கட்டங்கள் உள்ளது. இதில் மேலிருந்து கீழாக எழுதப் பழகுகிறார்கள். பி4 அளவு தாளில் இரண்டு பகுதிகளாக 10X10 கட்டங்களை பிரித்திருக்கிறார்கள். இது தாளை இரண்டாக மடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. இரண்டு வரிசைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் ஆசிரியர்கள் திருத்தி பிழைகளை சுட்டிக் காட்டி எழுதுகின்றனர்.
கெங்கொ யொசி எழுதும் வடிவம்

கெங்கொ யொசி முறையில் எழுதப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் கையேடு

கெங்கொ யொசி எழுதும் வடிவம்


ஜப்பானியர்களுக்கு மேலிருந்து கீழாக எழுதும் பழக்கம் எப்படி வந்தது?

ஜப்பானியர்களின் எதோ (Edo Period) கால கட்டத்திற்கு முந்தைய பகுதியில் தகவல் பரிமாற்றங்களை துணி அல்லது காகிதத்தால் சுருட்டி எடுத்துக் கொள்ளும் வண்ணம் இருந்ததால் மேலிருந்து கீழாக எழுதும் முறையினை கடைபிடித்து இருக்கிறார்கள். பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் மெஜி (Meji) கால கட்டத்தில் கெங்கி யொசி எழுதும் முறை தனித்த‌ விதிமுறைகளோடு பரவலாக மக்களிடத்தில் புழங்க தொடங்கி உள்ளது.

ஒரு ஆச்சரியம் இன்றும் கணிணிகளில் “கெங்கி யொசி” எழுது முறைகளுக்கான எழுத்துரு செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. அதே நேரம் பொது இடங்களில் அறிவிப்பு பலகைகளில் இம்முறையினை பின்பற்றுவதால் நீண்ட செங்குத்து பலகைகள் அதிகமாக இடத்தை பிடிக்கிறது என இடமிருந்து வலமாக (இந்திய முறை போல்) எழுதும் முறையினை பரவலாக பயன்படுத்துகின்றனர். இன்றும் ஜப்பானிய வழிபாட்டு தலங்களில் உள்ள தூண்கள், விளக்கு கம்பங்களில் உள்ள தகவல் அனைத்தும் “கெங்கி யொசி” முறைப்படி மேலிருந்து கீழாக எழுதி இருப்பதை காண முடியும். ஏனெனில் இந்த செங்குத்து தூண்கள் இந்த எழுத்து முறைக்கு மிக ஏதுவாக இருப்பதும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

“கெங்கி யோசி” எழுதும் முறை பற்றி தனிப்பதிவாகத்தான் எழுத வேண்டும். இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.

கடைக்குள் அப்படியே வண்டியை அறிவியல் நுட்ப புத்தகங்கள் பகுதியில் திருப்பினேன்.

ஆகா, என் எதிர்பாப்பு பொய்க்கவில்லை. ஏறத்தாழ மூன்று  வரிசை முழுவதும் முழுக்க முழுக்க அறிவியல் நுட்ப புத்தகங்களை ஜப்பானியர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதி வைத்திருந்தனர்.

அ. பள்ளி மாணவர்களுக்கான வெகுசன அறிவியல் (Popular Science) புத்தகங்கள்
ஆ. மிகச்சிறந்த மேலைநாட்டு அறிவியல் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள்.
இ. உயர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களை எளிதாக அணுக ஜப்பானிய‌ பேராசிரியர்களின் எளிமையான வழிகாட்டி புத்தகங்கள். நம் ஊரில் உள்ள கோனார் நோட்ஸ் போல் அல்ல. முழுக்க முழுக்க வெகுசன அறிவியல் புத்தக வடிவிலேயே எழுதி உள்ளார்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட வேதியியல் உயர்கல்வி புத்தகம்

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள அறிவியல் விளக்க புத்தகம்.

ஜப்பானிய மொழியில் கிடைக்கும் வெகுசன அறிவியல் இதழ்கள்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ள வெகுசன அறிவியல் (popular science) புத்தகங்கள்.

ஜப்பானிய மொழியில் கிடைக்கும் வெகுசன அறிவியல் இதழ்கள்.
வானவியல், பருப்பொருளியல், வடிவியல், நானோ நுட்பவியல், விலங்குகள், தாவரங்கள், அண்ட வெளி, கடல் வாழ் உயிரினம் என பல தலைப்புகளில் இன்றைய நவீன அறிவியலின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கிறது. இப்புத்தகங்கள் யாவும் எல்லா தரப்பு மக்களுக்கும் வாசிக்கும் வகையில் படங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக‌ பாடப் புத்தகங்களுக்கு வெளியே மாணவர்களுக்கு எப்படி அறிவியலை, கணிதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த வெகுசன அறிவியல் புத்தகங்கள் தான் வழி நடத்தும். நியூட்டனின் விதிகளை, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைகளை, நுண் கணிதத்தில் உள்ள தேற்றங்களை பாடப்புத்தகங்கள் அணுகும் விதம் வேறு. அவை முழுக்க முழுக்க தியரிடிக்கல் பார்வையிலேயே இருக்கும். ஆனால் இந்த வெகுசன அறிவியல் புத்தகங்கள் படக்கதைகளோடு, அன்றாட வாழ்வியலில் உள்ள உதாரணங்களோடு இருப்பதால் மாணவர்களுக்கு மிக எளிதில் புரிகிறது. இந்த இடத்தில் நாம் தமிழ் மொழியில் நிறைய புத்தகங்கள் கொண்டு வர நாம் பெரிதும் உழைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கலே பொது மக்கள் ஒத்துழைப்பு தான்.

தமிழ் சூழலில் பெரும்பாலும் வெகுசன அறிவியல் செய்திகளை மக்கள் வார இதழ்கள்,தின சஞ்சரிகைகளில் ஒரு பத்தியாக வருவதையே வாசிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். பெரியவர்கள் வாசிக்கும் இந்த பகுதிகள் பள்ளி மாணவர்களுக்கு சென்றடடைவதில் பெரும் பின்னடைவு உள்ளது. ஆகவே மக்கள் தமிழில் வரும் வெகுசன அறிவியல் புத்தகங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் நிறைய பதிப்பகங்கள் இந்த பகுதியில் நிறைய முதலீடு செய்ய முன் வருவார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். தமிழில் தற்போது உள்ள வெகுசன பத்திரிக்கைகளில் தனித்த அறிவியல் எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இந்த பகுதிக்கென்று தனியாக எழுத்தாளர்களை நியமிக்க வேண்டும்.

முக்கியமாக அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி ஆழமாக கேள்வி பதில்களோடு வரும் கட்டுரைகள் மிகக் குறைவே. “சிவகாசி மாணவன் நீரில் ஓடும் மோட்டார் கண்டுபிடிப்பு” என்று மக்கள் கவனத்தை கவரும் தலைப்புகள் மட்டுமே வீங்கி பெருத்துக் கொண்டே போகின்றன.

சம கால கண்டுபிடிப்புகள் அதன் வரலாற்றோடு ஒப்பிட்டு எழுதுவது என்பதே துளியும் இந்த கட்டுரைகளில் காணமுடிவதில்லை. ஆகவே வெகுசன அறிவியல் புத்தகங்கள் வருவதோடு, தனித்த அறிவியல் எழுத்தாளர்களையும் நாம் தமிழுக்கு நிறைய கொண்டு வர வேண்டும்.

இந்த புத்தகங்களுடன் ஜப்பானிய மொழியில் வரும் நீயூட்டன் மாத அறிவியல் இதழ்களின் தொகுப்பையும் பார்க்க முடிந்தது (இது பற்றி தனி பதிவாக எழுதி உள்ளேன்).  ஜப்பானில் இருந்து வரும் நீயூட்டன் அறிவியல் இதழ்களோடு, நேசனல் ஜியோகிராபிக் இதழ்களின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு இதழ்களையும் காண முடிந்தது. உலகின் எந்த மூலையிலும் இருக்கும் அறிவியல் நுட்ப செய்திகளை உடனுக்குடன் ஜப்பானியர்கள் மொழி பெயர்த்து தருகிறார்கள்.

தாய்மொழியில் அறிவியல் நுட்ப தகவல்கள் வெகுசன மக்களிடம் செல்லும் போது மேம்படுத்தப்பட்ட நவீன சமூகத்தை எளிதாக வார்தெடுக்க முடியும் என்பதற்கு ஜப்பான் எப்போதும் ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம். காரணம் இங்கு கிடைக்கும் புத்தகங்கள்.

சம கால நுட்ப தகவல்களை புத்தகங்களாக தரும் பிரித்தானிய புத்தக சந்தையினைப் போலவே ஜப்பானியர்களும் சிறப்பான ஒரு பார்வையினை கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பிரித்தானியாவில் உள்ள கிரேட் வெஸ்டன் ரயில்வே நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பிரித்தானியா முழுவதும் அவர்கள் எவ்வாறு ரயில்வே இருப்பு பாதைகள் அமைத்தார்கள். சிக்கலான நதிகளை எவ்வாறு கடக்க பெரிய பாலங்களை கட்டினார்கள். குறிப்பாக ப்ருனெல் என்பாரின் சாதனைகளை தனித்த புத்தகங்களாக இன்றும் வெளியிடுகின்றனர். இதே போல் ஜப்பானின் ஜேஆர் ஜோபன் இருப்பு பாதைகள் எப்படி அமைக்கப்பட்டன, ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற பாலங்கள் எப்படி கட்டப்பட்டன என்று தாய்மொழியில் வரலாற்று புகைப்படங்களுடன் தந்துள்ளனர். இந்த புத்தகங்கள் எல்லாம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுபவை. சாதனையாளர்களாக நாம் காட்டும் பிம்பங்கள் வரலாற்று தகவல்களோடு தரப்படவேண்டும்.

“நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்று தொடர்ந்து ஜல்லியடிக்கும் வாட்சப், முகநூல் பதிவுகளிலேயே தற்போது தமிழர்கள் திருப்தி அடைந்து விடுகிறார்களோ என்று அச்சமாக உள்ளது.

அறிவியல் நுட்ப புத்தகங்கள் பகுதியில் இருந்து ஜப்பானியர்களின் புகழ் பெற்ற “மாங்கா” கார்ட்டூன் பகுதிக்கு வந்தேன். குழந்தைகள் அப்படியே தரையில் உட்கார்ந்து உலகத்தை மறந்து படித்துக் கொண்டிருந்தார்கள். பெற்றொர்கள் ஒரு புறம் அவர்கள் புத்தக உலகிலும், குழந்தைகள் அவர்களுக்கான மாங்கா புத்கங்களிலும் மூழ்கி கிடந்தனர்.இப்படி ஒரு சூழலை பார்க்கவே ஆச்சரியாமாக இருந்தது. இப்படி புத்தக நிலையங்களில் பெற்றோர், குழந்தைகள் கூட்டத்தினை தமிழகத்தில் காண ஆர்வமாக உள்ளேன்.

ஒரு வழியாக புத்தக கடையினை சுற்றிப் பார்த்து விட்டு கண்ணாடிக் கடைக்கு வந்த போது என் புதிய மூக்கு கண்ணாடியை தயாராய் வைத்திருந்தார்கள்.