Wednesday, 24 May 2017

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு - 3

 சமச்சீர் கல்வி வினாத்தாளில் எப்படி சமூக நீதியினை நாம் கடைபிடிக்கிறோம்?

அ. தேர்ச்சி அளவீட்டு எல்லைக்கு நிகரான மதிப்பெண்களை நேரடி வினாவில் கேட்டல் (1 மதிப்பெண் வினா, 3 மதிப்பெண் வினா மற்றும் 10 மதிப்பெண் வினா). உதாரணத்திற்கு மொத்தம் 150 மதிப்பெண்ணில் 70 மதிப்பெண் தேர்ச்சி எல்லை எனில், 70 மதிப்பெண்ணிற்கு நிகரான நேரடி வினாக்கள் நிச்சயம் கேட்கப்பட வேண்டும்.
நேரடி வினாக்கள் (direct questions) என்றால் என்ன?
இயற்பியல் பாடத்தைப் பொறுத்த வரை தத்துவம், கருவி அல்லது தத்துவத்தின் பயன்பாடுகள், சமன்பாடுகள், மாறீலிகளின் மதிப்பு, நேரடியாக சமன்பாடுகளில் கணக்கீடு செய்வது.

ஆ. கடினமான திறனறி வினாக்களை (analytical questions) தனித்த பகுதியாக கேட்காமல் நேரடி வினாக்களோடு கலந்து கேட்டல். இப்பகுதியில் எல்லா கேள்விகளையும் கட்டாயமாக்காமல் அவர்கள் விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளும் (at least) வாய்ப்பை வழங்கல் (3 மதிப்பெண் வினா, 10 மதிப்பெண் வினா).

மேலே சொன்ன இரண்டு வினா வகைமையிலும் எப்படி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் சமூக நீதி (social justice) அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது?

அ. முதல் தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட‌, மற்றும் விளிம்பு நிலை குடும்பங்களில் இருந்து பயிலும் மாணவர்கள்
ஆ. திறனறியும் வினாக்களுக்கு நிகராக‌ நேரடி வினாக்களில் தங்கள் திறமையினை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு சமமாக வாய்பளிப்பது

மேலே சொல்லப்பட்ட ச‌மூக நீதி முறைகளை கடைபிடிக்கும் தமிழகத்தின் சமச்சீர் வழிக் கல்வி போலவே, இந்தியை தாய்மொழி வழிக் கல்வியாகக் கொண்டு இயங்கும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் இதனையே கடைபிடிக்கின்றன.

ஏனெனில் தமிழகத்தைப் போலவே இந்தி பேசும் மாநிலங்களிலும் பொருளாதார, சாதிய ஏற்ற தாழ்வு நிலவும் சூழல் இன்னும் உள்ளது.

இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியில் கேட்கப்படும் வினாக்களின் தன்மையினை ஒப்பிடும் போது இந்தி வழிக் கல்வி இன்னும் எளிமையாகவே உள்ளது. காரணம் தமிழகத்தை விட இன்னும் மோசமான சூழலில் இருக்கும் ஆரம்ப அடிப்படைக் கல்வி. இதனை பின்னர் விளக்குகிறேன்.

மேலே சொல்லப்பட்ட தேர்வுக்கான சமூக நீதி காரணிகளில் சிபிஎஸ்சி பள்ளி வகுப்புகளின் கேள்வி கேட்கும் தன்மை பெரும்பாலும் சமச்சீர் கல்வியின் வரையறைகளோடு ஒத்துப் போனாலும் திறனறி கேள்விகள் முழுக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது (compulsory).

ஏனெனில் சமூக நீதியைப் பொறுத்த வரை வரை நான் சொன்ன இரண்டு காரணிகளில், அவர்கள் முதல் காரணியான "முதல் தலைமுறையாக கல்வி மறுக்கபப்ட்ட விளிம்பு நிலை குடும்பங்களில் இருந்து பயிலும் மாணவர்கள்" பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. பெரும்பாலான சிபிஎஸ்சி வழி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மேட்டுக்குடி வர்கத்தினராகவும், அவர்களது பெற்றோர் பொருளாதார ரீதியிலும், கல்வியறிவிலும் தன்னிறைவு அடைந்தவர்களாகவே உள்ளனர். ஆகையால் சிபிஎஸ்சி வினாத்தாளின் கேள்வி கேட்கும் வரையறை நேரடி அல்லது திறனறி வினாக்கள் என்ற இரண்டு வகைமைக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஆக சிபிஎஸ்சி சமூக நீதிக்கான கல்வி அல்ல என்பதை தெளிவாக உணருங்கள். அது முழுக்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்தவர்களுக்கான கல்வி திட்டம்.

அப்படியானால் யார் சமூக நீதி கல்வியை தருகிறார்கள்?
 மாநிலவாரியான கல்வி திட்டத்தினை பயிற்றுவிக்கும் பள்ளிகள் அனைத்துமே சமூக நீதிக்கானவையே. இந்த சமூகநீதியினை காக்கும் பொருட்டே அடிப்படை உரிமையான “கல்வி” மாநில உரிமைப்பட்டியலில் பட்டியல் 7-2ல் சேர்க்கப்பட்டு இருந்தது.. தற்போது கல்வியும், விளையாட்டும் மத்திய, மாநில அரசின் பொதுவான பகிர்தலுக்குட்பட்ட பொதுப்பட்டியலுக்கு (7-3) நகர்த்தப்பட்டு விட்டது. இந்த இடத்தில் கல்வி ஏன் மாநில அரசின் உரிமைக்குள் இருக்க வேண்டும் என்ற எளிய உண்மை நிச்சயம் உங்களுக்கு புரியும்.

இப்போது நடைபெற்றுள்ள‌ நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள்,  தேசம் முழுமைக்கும் பொதுவானதா, அல்லது மாநில வாரியான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்ததா?

நான் மேலே சொன்ன படி இந்தியா முழுவதுமான புவிசார் சூழலில் பொருளாதாரம், சாதிய அடுக்குகளில் பெரிய ஏற்ற தாழ்வு உள்ளது. இந்த இரண்டு நிலையிலும் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகள் சமமாக இருப்பதில்லை. அதன் விளைவே இட ஒதுக்கீடு சார்ந்த வாய்ப்பினை மாநில அரசுகள் தங்கள் குடிமைச் சமூகத்திற்கு ஏற்ப  வழங்குகிறது. இங்கே அமெரிக்காவின் கல்வி திட்டம், அங்கு கிடைக்கும் வேலை வாய்ப்பினை நேரடியாக ஒப்பிடுவது எவ்வளவு அபத்தம் என்று நீங்கள் எளிதாக உணர்ந்திருப்பீர்கள்.

மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். நீட் நுழைவுத் தேர்வு ஒரே மாதிரியான பாரபட்சமற்ற முறையில் வினாக்கள் உள்ளதா?

நிச்சயம் கிடையாது.

அ. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் வாயிலாக தேர்வு எழுதுபவர்களுக்கு (English Only ) மிக அதிக அளவிலான திறனறி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆ. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான திறனறி கேள்விகளே கேட்கப்படுகின்றன.

அப்படியானால் தமிழக மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டம் வாயிலாக எழுதும் போது கேள்விகள் எளிமையாகதானே இருந்திருக்கும்.

ஆம், நடந்து முடிந்த தேர்வில் கூட சமச்சிர் வழி கல்வி மாணவர்கள் சிபிஎஸ்சி கேள்விகளை ஒப்பிடும் போது சற்றே எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால் எவரேனும் இந்தி வினாத்தாளை ஒப்பிட்டு பார்த்தீர்களா? அவை இன்னும் மிக எளிதாக கேட்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவை நம் சமச்சீர் கல்வி திட்டத்தின் பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை விடவும் குறைவான திறனறி அளவே உள்ளது. அப்படியானால் தமிழ் வழி மூலம் தமிழகத்தில் எழுதியவர்களின் எண்ணிக்கையானது இந்தி வழி மூலம் எழுதியவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு குறைவு. அப்படியானால் இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வில் உறுதியளித்த 10 சதவிகித கோட்டாவில் யார் அதிகம் நுழைய முடியும்.

அப்படியானால் இந்த நீட் நுழைவுத் தேர்வு உண்மையில் யாருக்கானது?

நம்மோடு போட்டியிடும் சக போட்டியாளர்களின் பாடத்திட்டத்தினை ஒப்பிடாமல் நாம் நீட் நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டது ஒரு அவசர முடிவு என்றே சொல்லலாம்.

 அதைவிட அவசரமாக தற்போது இருக்கும் தமிழகத்தின் பாடத்திட்டம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் கட்டமைப்பினையும் மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். அதில் இது வரை வழமையாக நடைமுறையில் இருந்து வந்த‌ ஆய்வக சோதனைத் தேர்விற்கான‌ 50 மதிப்பெண்ணை 10 ஆக குறைத்துள்ளனர். இதனால் தேர்ச்சி மதிப்பெண் 70 என்ற எல்லையினை குறுக்குவதன் மூலம் நான் மேலே சொன்னபடி குறைந்த பட்ச தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் சமூகநீதியையும் நாம் முற்றாக நீக்குகிறோம்.

மேலும் நீட் போன்ற பொதுத் தேர்வில் இந்தி வழி மாநில மாணவர்களின் பாடத்திட்டம் இன்னும் எளிமையாக‌ உள்ள சூழலில் அவர்களோடு பொதுத் தளத்தில் போட்டியிடும் போது நம் மாணவர்கள் நிச்சயம் இன்னும் அதிகமாகவே பாதிக்கப்டுவார்கள்.

மொத்தத்தில் நீட் என்னும் பொது நுழைவுத் தேர்வு பல அபத்தங்களுக்கு வழி கோலியுள்ளது.

இதில் கிடைத்த ஒரே நன்மை 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தினை நுழைவுத் தேர்விற்க்கு க‌ணக்கில் கொண்டிருப்பது. இந்த திட்டத்தினைக் கூட நாம் மாநில அளவிலேயே செயல் படுத்த முடியும். இதற்கு நீட் நுழைவுத் தேர்விற்குள் சென்றுதான் இதனை செயல்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

முதலில் இந்தியா முழுவதும் நடந்து முடிந்த நீட் பொது தேர்வு வினாக்களை நாம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான இந்தி வழி மாணவர்களின் நுழைவு தேர்வு வினாக்கள் எந்த அளவிற்கு எளிமையாக இருக்கிறது என்ற ஒரு கருத்தை இனி தீவிரமாக அலசுவது அவசியம். இந்த சிக்கலை நாம் ஏற்கனவே மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் அதிகமாக எதிர் கொண்டு தமிழக தரப்பில் பலத்த இழப்பை சந்தித்து வருகிறோம்.

மேலோட்டமாக படித்தால் இது தமிழ், இந்தி மொழி பேசுவோருக்கான போட்டியாக தெரியும். ஆனால், காலம் காலமாய் இந்தியாவின் தென் கோடி எல்லையில் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தமிழர்களின் எதிர்காலமாகிய எம் பிள்ளைகளின் கல்வியும் இதில் அடங்கியுள்ளது.

பறவை நோக்கில் பார்த்தால் இந்த நீட் நுழைவுத் தேர்வில் முதலில் காவு வாங்கப்படுவது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தைகள், இரண்டாவது வம்படியாக உள்ளே நுழைக்கப்பட்டு இருக்கும் தமிழக குழந்தைகள். இறுதியில் நோகாமல் நோம்பி கொண்டாடப்போவது இந்தி வழி குழந்தைகள். இனி அவர் அவருக்கான சமூகநீதிக்கு அவரவர்களே  போராடிக் கொள்ள வேண்டியதுதான்.

நாங்கள் எங்கள் தமிழ் வழி மூலம் பயின்ற குழந்தைகளின் பக்கம் நிற்கிறோம். தொடர்ந்து நிற்போம்.

சமீபத்தில்,  சமச்சீர் கல்வியில் கேள்விகள் எளிதாக கேட்பதை இன்னும் கடினமாக்க வேண்டும் என்று சொல்பவர்களையும், பாடத்திட்டத்தை இன்னும் சிபிஎஸ்சிக்கு நிகராக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோசத்தினை வெகுவாக கேட்க முடிகிறது. முதலில் இவர்கள் தமிழகத்தின் சமச்சீர் கல்வியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு வினாக்கள் நேரடி, திறனறி வினாக்களின் எண்ணிக்கையில் ஓரளவிற்கு சமன் செய்தே கேட்கப்படுகிறது என்ற உண்மையினை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த கேள்வியை எழுப்புபவர்கள் முதலில் நம் சமச்சீர் கல்வி முறையில் இருக்கும் சமூகநீதி அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வேளை உங்கள் குழந்தை மிக அதிகமாக திறனறி திறமையோடு இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் தாரளமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு செல்லலாம். ஏனெனில் தமிழக அரசின் அடிப்படைக்  கொள்கை கல்வியை பரவலாக்குவதுதானே தவிர கல்வியை ஒரு குறிப்பிட்ட திறன் உடைய குழந்தைகளுக்கு மட்டுமே கொண்டு செல்வதல்ல.

சிபிஎஸ்சி, சமச்சீர் கல்வி திட்ட பொதுத்தேர்வு வினாக்களில் எந்த அளவிற்கு திறனறி வினாக்கள் கேட்கப்படுகிறது. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
































No comments:

Post a Comment