Monday 21 December 2015


வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்கு தேவையா?


வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கல்வி ஸ்தாபனங்களை நிறுவுவதை ஒட்டி விவாதங்கள் நடந்துவருகின்றன. இதனை நாம் ஆதரிக்கலாமா அல்லது கூடாதா என்ற விவாதத்தினை முன் வைத்து நண்பர் வினையூக்கியார் இந்த தலைப்பினை ஒட்டி ஒரு விவாதத்தினை நண்பர்கள் வட்டத்தில் தொடங்கி வைத்தார். நிச்சயம் நாம் பேச வேண்டிய தலைப்பு. 

எனது பதிலை இங்கே தந்துள்ளேன்

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வந்தால் அவர்கள் கல்வி கட்டணத்தினை உயர்த்தி விடுவார்களா என்று அச்சப்படுகிறீர்களா? பயப்படவே வேண்டாம், கல்வி கட்டணம் நிச்சயம் நிகர் நிலை பல்கலைக் கழகங்களை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களின் சந்தை திட்டமிடல் வேறு தளத்தில் இருக்கும். நேரடியாக வரும் கல்வி கட்டணம் அவர்களின் இலக்கே அல்ல.

வருமானம் எப்படி வருகிறது என ஒரு சில உதாரணங்களை தருகிறேன்.

நம்ம மக்கள் வாயை பிளக்கும் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தனது பிராண்டின் மூலம் பள்ளி அளவில் வெறும் பாட திட்டங்கள் மற்றும் வினா தாள் தருவதன் மூலம் பல நாடுகளுக்கு விற்று நல்ல பணம் பார்க்கின்றன. கேம்பரிட்ஜ் பாடத்திட்டம் இருக்கிறதா என கேட்டு சேர்க்கும் பெற்றோர்கள் இப்போது சென்னை வரை வந்து விட்டார்கள். சத்தியமாக சொல்கிறேன், இவர்கள் யாரும் ஒரு முறை கூட நம் சமச்சீர் பாடத்திட்டத்தை திருப்பி கூட பார்திருக்க மாட்டார்கள். நம்மிடம் இருக்கும் சமச்சீர் கல்வியினை கொஞ்சம் தூசு தட்டினால் பட்டைய கிளப்பலாம். இதே நிலைமைதான் பல்கலைக் கழகங்களிலும் நடக்கிறது.

சரி நாம் எப்படி அடுத்த கட்டதிற்கு நம் பல்கலைக் கழகங்களை கொண்டு செல்வது?
இப்போது தமிழக பல்கலைக் கழகங்களில் இருக்கும் துணைவேந்தர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் ஊழலை ஒழித்தாலே நாம் உலகின் முன் மாதிரியான பல்கலைக் கழகங்களை கொண்டு வரலாம். 

இப்போது உள்ள இந்த பிரச்சினைகளை களையாமல் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை உள்ளே விட்டால் இங்கே இருக்கும் பல்கலைக் கழகங்கள் இன்னும் நிர்வாக ரீதியில் மோசமாகி விடும். நம்மிடம் இருந்த நல்ல அரசு மருத்துவமனைகளை வேண்டும் என்றே எப்படி ஒழித்து விட்டு தனியார் மருத்துவமனைகளில் நாம் இப்போது பிச்சை எடுக்கிறோமோ அதே நிலைமைதான் வரும் (மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை இன்னும் பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்து வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் பத்திரிக்கையில் விளம்பரம் செய்து கொள்வதில்லை, ஆனால் பொது சனங்கள் இன்னும் தனியார் மருத்துவமனையில்தான் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என நம்ப வைத்தது நம் சமூகம்.


வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கு வந்து கல்வி நிறுவனம் நடத்தினால் ஒரு பிரயோசனம் உண்டு, அந்த பிராண்டின் மூலம் அந்தந்த நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தற்போது சீனாவில் கடை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாதான் அவர்களின் அடுத்த குறி. ஆகவே இப்பொழுது பல்கலைக் கழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை தூர் வாரினாலே நாம் அடுத்த பாய்ச்சலுக்கு தயார் ஆகலாம்.

தற்போது எல்லா பல்கலைக் கழகங்களிலும் பண மழை கொட்டும் தொலை தூர கல்வியில் நடக்கும் சீர்கேடுகளை நிறுத்தினாலே கோடிகளில் பணம் மிச்சப்படும். தமிழக பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தினை பாருங்கள். ஐம்பது வருடத்திற்கு முன் வந்த குலேபாகவலி படத்தின் ரீ பிரிண்ட் ரேஞ்சுக்கு இருக்கும்.

நம் பல்கலைக் கழகங்களை போர் கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும், அதற்கு தேவையான வருமான அந்தந்த பல்கலைக் கழகத்திலேயே கிடைக்கிறது. ஆகவே வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் தேவை இல்லை என்பதே என் கருத்து

No comments:

Post a Comment