சுவான்சி நகரம்- 1 (Swansea City, UK)
இங்கிலாந்து வந்து மூன்று நாட்கள் ஆகிறது. ஆனாலும் மனம் ஜப்பானை சுற்றியே வந்து கொண்டு இருந்தது. அதுவும் இலண்டன் மாநகரின் இரயில் தொடர்வண்டிகளில் செல்லும் போது ஒரே இரைச்சலும், அழுக்கான சூழலும், தோக்கியோ நகரின் நிசப்தமான தொடர்வண்டிகளின் அருமையினை உணர்த்திக் கொண்டே இருந்தது.
ஏன் என் மனம் ஜப்பானோடு ஒப்பிடுகிறது என எனக்கே தெரியவில்லை. முக்கியமாக, ஜப்பானின் பெரும்பாலான இரயில் நிலையங்களில் லிப்ட் வசதி உண்டு. ஆகவே பெரும் சுமையோடு வரும்போது இந்த லிப்ட் வசதி பெரும் வரப் பிரசாதம். அது மட்டுமில்லாமல், விழிச்சவால் உடைய மாற்று திறனாளிகளுக்கு எளிதாக இரயில் நிலையம் முழுவதும் சென்று வர அவர்களுக்கென்று வழிகாட்டும் பிரத்யோக கற்கள் பதித்த தடங்கள் இருக்கும். இப்படி எந்த வசதியும் இலண்டன் மாகரின் மெட்ரோவில் காண முடியவில்லை. ஒரு சில இரயில் நிலையங்களிம் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர வண்டிகள் செல்லும் வசதி உள்ளது. இத்தனைக்கும் உலகிற்கே முன்னோடியாக நூறு வருடங்களுக்கு முன்பு நிலவறை தொடர் வண்டி நிலையங்களை (under ground train station - Tube) அமைத்தவர்கள் பிரித்தானியர்கள்.
நேற்றைய இரவில் இலண்டன் நகரில் இருந்து 3 மணி நேர இரயில் பயணம் செய்து சுவான்சி நகருக்கு வந்து சேர்ந்தேன். அழகான கடற்கரை நகரம். இலையுதிர் காலத்தின் மிரட்டலில் தவித்து கொண்டு மரங்கள், பசும் புல்வெளிகள் நிறைந்த வீடுகள், பூங்கா என அழகியல் நிறைந்த ஊராக தெரிந்தது.
உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் தெற்கு மற்றும் மேற்கு வேல்ஸ் மாகாணத்தினை அடிப்படையாக கொண்ட பர்ஸ்ட் குழுமம் (First groups) எனப்படும் தனியார் நிறுவனத்தினரால் இயக்கப்படுகிறது. ஸ்ட்ரீட் கார் எனப்படும் மெட்ரோ பேருந்துகள், கிரேகவுண்ட், சிமுரு கிளிப்பர் என பல்வேறு பெயர்களின் தனது பேருந்து சேவையினை செய்து வருகிறது. இதில் பல பிரத்யோக வசதிகள் உள்ளது. முக்கியமானது எனச் சொன்னால், சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுதிறனாளிகள் நேரடியாக சாலையில் இருந்து பேருந்தில் ஏறி கொள்ளலாம். விழிச்சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை இலவசமாக உடன் பயணிக்க என எல்லா வசதிகளும் உள்ளது. பெருவாரியான பேருந்துகளில் வைபை (WiFi) இணைய வசதி வந்து விட்டது. நாளை வெளியில் சுற்றி விட்டு வந்து நிறைய எழுதுகிறேன்.
சுவான்சி நகரின் கடற்கரை பாதையான ஆய்ஸ்டர் மவுத் சாலையில் (Oyster Mouth Road) சுவான்சி பல்கலைக் கழகம் (Swansea University Main Campus) உள்ளது. அதன் பின்புறம் மலைப் பகுதியில் ஸ்கெட்டி (Sketty) எனப்படும் பகுதி உள்ளது. அங்குள்ள "ஸ்கொயர் பெக் தேநீர் நிலையம்" எனப்படும் (Square Peg Coffee House) சிற்றுண்டி சாலைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என அங்கு சென்றேன்.
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK |
தேநீர் அருந்தி கொண்டே அங்கு வாசிக்க நிறைய ஆங்கில நாவல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மாதத்திற்கான ஓவியர்கள் என தலைப்பிட்டு சில அற்புதமான வண்ண ஓவியங்களை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால், அந்த கடையினை ஒரு முறை முழுதாக சுற்றிப் பார்த்தேன். அப்பொழுது அங்கே வைக்கப்பட்டிருந்த கரும்பலகையில் அந்த கடையின் இலக்கு என்ன என எழுதி இருந்தார்கள்.
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK |
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK |
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK |
ஒரு தேநீர் கடைக்கு என்ன பெரிய இலக்கு இருக்கும் என ஆச்சரியத்துடன் படித்தேன். இக்கடையில் வரும் இலாபத்தின் பெரும்பகுதியினை கென்யாவில் (Kenya) வசிக்கும் ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு செலவிடுகிறோம் என எழுதி இருந்தது.
வியப்பின் உச்சிக்கு சென்ற நான், அங்கிருந்த யுவதியிடம் நான் ஜப்பானில் இருந்து வந்துள்ளேன், உங்கள் கடையினை பற்றிய மேலதிக தகவலை சொல்ல முடியுமா எனக் கேட்டேன். அந்த யுவதியும் சிரித்துக் கொண்டே அக்கடையில் இருந்த மற்றொரு இளைஞரான ஜோஸ் என்பவரை அழைத்தார். சற்றே நீண்ட தாடி வைத்திருந்த இளைஞர் ஒருவர் வந்தார். ஏறத்தாழ பார்ப்பதற்கு ஆங்கில புராதன படங்களில் வரும் போர் வீரனைப் போல இருந்த ஜோஸ் (Jose) சிரித்து கொண்டே என்னிடம் கைகுலுக்கினார்.
With Mr. Jose, Square Peg Coffee House, Sketty, Swansea City, UK |
என்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பின்பு உங்கள் கடையின் வருமானத்தில் கென்ய குழந்தைகளுக்கு உதவி செய்கிறீர்கள் என எழுதி இருந்ததை படித்தேன், மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் என்றேன். ஜோஸ் சிரித்து கொண்டே நன்றி என்றார். பின்னர் ஜப்பானில் இருந்து முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Foundation, Japan) மூலம் எமது நண்பர்கள் எவ்வாறு இந்தியாவில், தமிழ் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுகிறோம் என சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னார்.
பின்னர் எப்படி இவ்வாறு ஒரு சமூக தொண்டு செய்ய திட்டமிட்டீர்கள் என கேட்டேன். அவரது நண்பர்கள் உட்பட சிலர் சேர்ந்து ஒரு அறக்கட்டளை நோக்கம் உடைய வர்த்தக நிறுவனம் ஒன்றினை தொடங்கி, அதில் வரும் இலாபத்தில் ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவ திட்டமிட்டதாக தெரிவித்தார். இது மட்டுமில்லாமல், நிறைய சமூக பணிகளையும் இவர்களது நண்பர்கள் முன்னெடுப்பதாக கூறினார். எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி இந்திய முன்னாள் இராணுவத்தினருக்கு நல நிதி வசூலிக்கும் தேநீர் சந்திப்பினை நிகழ்த்தவிருப்பதாகவும், இங்கு இருந்தால் அவசியம் வரவும் என அழைப்பும் விடுத்தார்.
இது போன்ற விழாக்களில் குறும்படங்கள் மற்றும் சிறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சேரும் பணத்தினை எங்களது அறக்கட்டளையின் மூலம் உள்ளூரில் தெருவோரத்தில் வசிக்கும் வீடடற்ற மக்களுக்கு தங்கும் வசதியும், கென்யாவில் கைவிடடப்பட்ட நிலையில் தெருவில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கைக்கான மேம்பாட்டிற்கும் உதவுகிறோம் எனச் சொன்னார்.
உண்மையில் இது போன்ற இளைஞர்கள்தான் நிகழ் கால மனித மேம்பாட்டின் ஆதர்சனமாக பார்க்கிறேன். நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தில் வர வேண்டும். அவ்வாறு வரும் இளைஞர்களை நம் மக்கள் ஊக்குவிக்க வேண்டும்.
நீங்கள் எப்பொழுதாவது சுவான்சி நகருக்கு சென்றால் இந்த தேநீர் விடுதிக்கு செல்லுங்கள். இதன் மூலம் ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு உதவ முடிந்தால் அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும்.
இக்கடையினை பற்றி மேலும் தகவல் அறிய