Tuesday, 31 March 2015

பரதேசம் -அக்டோபர் 2013

நீண்ட நாட்களாக சைவ, வைணைவ திருத்தலங்களுக்கு தேசாந்திரியாய் போய் வர வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.. இந்த விடுமுறையில் ராசகுமார் அண்ணாச்சியும் என்னோடு இணைந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி. தென்னாடுடைய சிவனையும், அரியும் அரனும் ஒன்று என்று உலகிற்கு சொன்ன தென் கைலாயங்களுக்கும் சென்று வரலாம் என அண்ணாச்சியும் நானும் திட்டமிட்டோம்.. பெரும்பாலான தலங்கள் அண்ணாச்சிக்கு முன்னமே பரிச்சயமாய் இருந்ததால் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது..

நான்கு நாள் பயணத்தில், சூடிக் கொடுத்த சுடர்கொடியாய் மாலனையே பொழுதோறும் நினைந்துருகிய திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆரம்பித்து பின்னர் நான்காம் நாள் இறுதியில் நான்மாடக் கூடலில் அரசாட்சி செய்யும் மதுரை மீனாட்சி அம்மையினை தரிசனம் செய்து பெரும் பேறு பெற்றேன்..

இரண்டாம் நாள் அரியும் அரனும் ஒன்றென உலகிற்கு ஓதி சங்கர நாராயணனாய் கோமதி நாயகி அம்மனுடன் உறையும் சந்திர மெளலீஸ்வரரை தரிசித்து வந்தோம்..
பின்னர் மதியம் திருச்செந்தூர் சென்று வங்கக் கடலில் நீராடி விட்டு அறுபடைத் தலத்தில் கடலோரம் அமைந்த தலம், சூரனை வதம் செய்த செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமண்ய சுவாமியினை தரிசனம் செய்து பின்னர் ஆழ்வார் திருநகரி செல்லும் வழியில் தாமிர பரணியில் நீண்ட நேரம் நீராடினோம்..

பின்னர் மழை பெய்யும் ஒரு ஏகாந்த பொழுதில் எம் உள்ளம் கவர் கள்வன் நெல்லையப்பர் ஆலயம் சென்று பெருமானையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து பின்னர் இரவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் தென்காசியில் தங்கினோம்..


 at Kalugu Malai.. Samanar padukkai

 Pabanasam tam
 at Pabanasam Sivan temple
 at Kalakkadu

 at Kalakkadu
at Kalakkadu

மூன்றாம் நாள், காலை பனியில் முகம் துடைத்து பின் பாப நாசம் அகத்திய அருவியில் எண்ணெய் குளியலோடு நீராடி விட்டு பின் பொதிகை மலை அருகில் ஒருங்கே அமையப்பெற்ற களக்காடு முண்டந்துறை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள தலையணைக்கு சென்று விலைமதிப்பற்ற மூலிகை சுவாசத்தினை பெற்றுத் திரும்பினோம்.. மதியம் உச்சிகால பூசையில் ஓதுவா மூர்த்திகளின் கல்லும் கரையும் தேவாரத் திருத் தமிழில் கரைந்து கொண்டிருந்த பாப நாசம் சிவனையும், உலகாம்பிகையையும் கைகூப்பி மனம் உருகி தொழுது பின் மனமில்லாமல் அவ்விடம் அகன்றோம்..

அன்று மாலை பெய்யென பெய்யும் பெருமழையில் குற்றால நாதரையும், தென்காசி சிவனையும் தரிசித்து உவகையுற்றோம்.. நான்காம் நாள் அண்ணாச்சியிடம் இருந்து விடைபெற்று விட்டு கழுகுமலையினை நோக்கி பயணத்தினை தொடர்ந்தேன்,, சூரனை வதம் செய்த ஆறுமுகப் பெருமான் மன அமைதி வேண்டி அமர்ந்த திருத்தலம் 'கழுகு மலை'. இங்கு கழுகாலச மூர்த்தி என்னும் திருநாமத்தில் பன்னிரு கைகளுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இந்த மலையின் மீது உலகப் பிரசித்த பெற்ற வெட்டுவான் கோவிலும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கைக்களும், சிற்பங்களும் உள்ளது. தென் தமிழகத்தில் காண வேண்டிய அற்புதமான தலம் இது..

கழுகு மலையில் உள்ள சமணர் குகையில் சிறிது நேரம் தியானம் செய்த பின்பு மதுரையை நோக்கி எமது பயணத்தினை தொடர்ந்தோம்.. மதுரை பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய வெள்ளி அம்பல பெருமான் மற்றும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மையினை தரிசனம் செய்து கரூருக்கு திரும்பினோம்..


இந்த பயணம் முழுவதும் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த பல புதிய அனுபவங்கள் கிடைத்தன.. அவற்றினை முழுவதுமாக தனி பிளாக்கில் எழுத ஆசை...மகா காளி அருளட்டும்

No comments:

Post a Comment