Thursday 12 March 2015

தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தி ல் உள்ளஉயிரி அறிவியல் துறை மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம் பற்றி...


நண்பர் பேராசிரியர் கசுயா நகாதா, எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தி ல் உள்ளஉயிரி அறிவியல் துறை மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம் பற்றி ஒரு மணி நேரம் பேசம் முடியுமா என கேட்டிருந்தார்.
நம் தமிழ் சமூகத்தினை சப்பானிய மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு எனக் கருதி ஒத்துக் கொண்டேன். கூடுதலாக மீநுண் அறிவியல் (nanoscience) சமீபத்திய வளர்ச்சி பற்றியும் பேசக் கேட்டிருந்தார்.
ஏறத்தாழ 100 மாணவர்கள் இன்றைய வகுப்பில் கலந்து கொண்டார்கள். முதலில் இந்த மாணவர்கள் எந்த அளவிற்கு கவனிப்பார்கள் என எண்ணினேன். ஆனால் 80 சதவிகித மாணவர்கள் சிரத்தையாக கவனித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. முடிந்த வரை நமது தமிழ் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை 30 நிமிடம் அவர்களுக்கு புகைப்படங்கள் மூலம் விளக்கினேன்.





கீழ்கண்ட விடயங்கள் அவர்களை பெரிதும் கவர்ந்தது.

அ. இந்தியாவில் பல மொழி பேசுகிறார்கள் (பெரும்பாலான சப்பானிய மாணவர்கள் இந்தியாவில் இந்தி மொழி மட்டும் பேசுகிறார்கள் என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இது எனக்கு பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது).

ஆ. நமது ஊரில் இன்னும் வாழை இலையில் சாப்பிடுவது, அரிசியின் மூலம் தயார் செய்த இட்லி, தோசை, பனியாரம் ஆகியவை அவர்களுக்கு புதிய தகவலாக உள்ளது. பெரும்பாலான வெளி நாட்டவர்கள் நமது உணவு கறி (curry) மற்றும் நான் (Nann) என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். மொத்ததில் நம் தமிழ் சமூக பண்பாட்டி கூறுகளை பொது வெளியில் கொண்டு செல்ல இன்னும் நிறைய மெனக் கெட வேண்டி உள்ளது.

இ. தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், இயற்கை சாயத்தில் வண்ணம் தீட்டப்பட்ட குகை ஓவியங்கள்.

ஈ. தமிழக விவசாயம் நெல் நடவு மற்றும் அறுவடை, பொங்கல் திருவிழா.

உ. தமிழக மற்றும் சப்பானிய கிராமங்களில் காணப்படும் ஒற்றுமைகள்

ஊ. நமது கரகாட்டம் மற்றும் பரத நாட்டிய நடனத்தினை யூ டியூப்பில் பார்த்து மேலும் அறிய ஆவலாக இருப்பதாக சொன்னார்கள்.

எ. நம்ம ஊர் ஜல்லிக் கட்டினை நேரில் காண ஆர்வம் இருப்பதாக சொன்னார்கள்.

நம்ம ஊர் கோலம் அவர்களை பெரிதும் கவர்ந்தது. அதுவும் அரிசி கோலம் (rise power drawing) போடுவதன் மூலம் சிறு உயிரினங்களான எறும்பு மற்றும் பூச்சிகளுக்கு உணவிடும் தத்துவம் அவர்களை பெரிதும் ஈர்த்தது...
நிறைய பேச வேண்டி இருந்தது. ஆனால் கால அவகாசம் போதவில்லை. மீண்டும் ஒரு முறை பேச அழைப்பதாக கூறி உள்ளார்கள். அடுத்த முறை விடுபட்டு போன விடயங்களை நிச்சயம் பேச வேண்டும்.

எனது உரையாடலுக்கு சிரத்தை எடுத்து புகைப்படங்கள் அனுப்பிய நண்பர்கள் முனைவர் சக்திவேல் காந்தி (தென் கொரியா), சூரிய பிரகாசு, மற்றும் தம்பி முனைவர் கணேசு மற்றும் முகநூல் வழியாக உதவிய எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது வகுப்பு முடிந்தவுடன் எல்லோரும் தங்களது கருத்துகளை (Feed back) சப்பானிய மற்றும் ஆங்கில மொழியில் கொடுத்துள்ளார்கள். அதில் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்ட Feed back புகைப்படத்தினை இங்கு பகிர்ந்துள்ளேன்.

No comments:

Post a Comment