Saturday 28 March 2015

அவந்திக்கு வந்த முதல் கடிதம்  (The first letter to Avanthika)

தூர தேசத்தில் இருக்கும் நம் பிரியமானவர்களுக்கு நம் அன்பினை வெளிப்படுத்தும் விதமாய் எழுதும் கடிதங்கள் இன்று மெதுவாக வழக்கில் ஒழிந்து வருகின்றன. என்னதான் மின்னஞ்சல், சாட்டிங் மெசெஜென்சர்கள் என தொலை தொடர்பு விடயங்களில் புரட்சி வந்து விட்டாலும் நமக்கு வந்த கடிதங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகும் எடுத்துப் படிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் வெறெந்த ஒன்றிலும் கிடைக்காது.

சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது  பேராசிரியர் செந்தில் அண்ணா வீட்டில்தான் தங்கி இருந்தேன். அண்ணாவின் புதல்வி சர்வதா (ஆறு வயது) செல்லக்குட்டி நான் வருவேன் என முன் கூட்டி தெரிந்ததால் அவந்திக்காவிற்கு பொம்மைகளும், அவளுக்கென்று பிரத்யோகமான கடிதமும் தயார் செய்து இருந்தார். அங்கிள் நான் அவந்திக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கேன் நீங்க கண்டிப்பா இத அவங்க கிட்ட கொடுத்திடுங்கன்னு சொன்னவுடன் ஆச்சரியத்தில் மலைத்துப் போனேன். ஆறு வயது குழந்தைக்கு கடிதம் எழுதும் முறையினை யார் சொல்லி இருப்பார்கள். ஒரு வேளை அண்ணி சொல்லி இருப்பார்கள் என கேட்டபோது அவருடைய பள்ளியில் பயிற்றுவித்து இருக்கிறார்கள் என சொன்னார்.

 Sarvath's letter to Avanthika
 Sarvatha made paper camera and gifted to Avanthika
  Saru specially designed the paper camera and gifted Avanthika
  Saru's letter to Avanthika

 Saru's specially made paper crown for me...

என் பால்ய நினைவுகளில், என் கிராமத்தின் போஸ்ட் ஆபீஸ் எல்லோரின் கவனத்தினையும் மதிப்பினையும் பெற்ற ஒரு இடம் ஆகும். முதன் முறையாக 15 பைசா கார்டு வாங்க அங்கு பயந்து பயந்துதான்  போனேன். என் பால்யம் முழுவதும் தபால் கடிதங்கள் எனக்கு பெரும் கிலேசத்தினை உண்டாக்கியவாறே இருந்தது. உறவினர்களிடம் இருந்து வீட்டிற்கு வரும் எல்லா கடிதங்களையும் அம்மாவிடம் இருந்து வாங்கி படித்து பார்ப்பேன். என் பெயரை சொல்லி கேட்டதாக எழுதி இருந்தால் அவர்கள் மீது பெரும் நெருக்கமும் அன்யோன்யமும் தானாய் மனதில் முளைக்க ஆரம்பித்தன. எங்கள் கிராமத்துக்கு வரும் தபால்களை கோவிந்து மாமாதான் சைக்கிளில் சுமந்த வண்ணம் எங்கள் கிராமத்தினை சுற்றியுள்ள எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று கொடுப்பார். பிறகு ஒருவழியாய் கடிதம் எழுதும் முறையினை எனது இடைநிலைப்பள்ளியில் பத்து வயதில் கற்றுக் கொண்டேன். அப்போது நானும் எனது நண்பன் விஜியும் சேர்ந்து தூர்தர்சன் தொலைகாட்சியில் வந்து கொண்டு இருந்த எதிரொலி நிகழ்ச்சிக்கும், வார மலர் குறுக்கெழுத்து போட்டிக்கும் கூட்டாக கடிதங்கள் எழுதுவோம். மற்றபடி என் மாணவ பருவத்தில் வேறெந்த கடிதங்களையும் எழுதியதில்லை (பொங்கல் வாழ்த்து அட்டைகள் நீங்கலாக). ஆதலால் சர்வதாவின் கடிதம் எனக்குள் பெரும் ஆச்சரியங்களையும், என் பால்யத்தின் நினைவுகளையும் கிளறி விட்டது.

இந்த உந்துதலே அடுத்த நாள் சாருவின் பள்ளிக்கு செல்ல வேண்டும் என பெரும் அவாவினை உண்டாக்கியது. அடுத்த நாள் அண்ணா, சருவை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். இதில் சர்வதா  குட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பள்ளிக்கு அருகாமையில் சென்றதும் தனது பள்ளியின் (பால்மவுத் நர்சரி பள்ளி) இடங்களை குதூகலத்துடன் சுட்டிக் காட்டி விட்டு தனது வகுப்பறக்கு வருமாறு வேண்டினார். சமீபத்தில் அவந்தியின் சப்பானிய நர்சரி பள்ளியினை தவிர வேறெங்கும் சென்று பார்க்க வாய்ப்பு அமையவில்லை ஆதலால் நானும் மிக்க மகிழ்வுடன் சருவின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சற்றேறக்குறைய 50 வயது நிரம்பிய ஆங்கிலேயப் பெண்மணி எங்களை வாருங்கள் என முகமன் கூறி வரவேற்றார். செந்தில் அண்ணா, நான் சப்பானில் இருந்து வருவதாக சொன்னவுடன் அவர் புன்னகைதுக் கொண்டே என்னுடன் பேசினார். தனது மகளும் சப்பானில் ஒசாகா பகுதியில் பணி புரிவதகாவும் , தனது சமீபத்திய சப்பான் பயணத்தினை பற்றியும், சுசி மீன் (sushi fish) வகையினை சிலாகித்து உண்டதாகவும் சொன்னார்பிறகு நான் வகுப்பறையினை சுற்றிப் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் மகிழ்வுடன் எடுத்துக் கொள்ளுங்கள் என அனுமதித்தார். சர்வதா  குட்டி தனது ஓவியங்களையும், வண்ண தாள்களில் தான் செய்த பொம்மை ஓவியங்களை என்னிடம் காட்டினார். பிறகு முட்டையின் மீது தான் வரைந்த நுண் ஓவியங்களையும் காட்டினார். வகுப்பறை முழுவதும் சுற்றிப் பார்த்த பொழுது அவர்களின் கற்பனைத் படைப்பாற்றல் திறன் நன்கு வெளிப்பட்டது. இங்குள்ள ஆரம்பப் பள்ளிகள், இந்திய நர்சரி பள்ளிகளைப் போல் குழந்தைகளை மனப்பாடம் செய்யவும், செக்கு மாடுகளைப் போல் கணித சூத்திரங்களை மண்டையில் போட்டு உடைத்துக் கொள்ளவும், குழந்தைகளை வதைப்பதில்லை என அறிந்து கொண்டேன். 

 Sarvatha kutti explaining her painting, Falmouth Nursary School
 Falmouth Nursery School
 Sarvatha kutti in her class, Falmouth Nursary School
Class room, Elementary Level 1, Falmouth Nursary School

பிறகு வகுப்பு ஆசிரியருக்கு நன்றியினை சொல்லி விட்டு பள்ளியின் பின் பகுதியில் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றேன். பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு செடிகள் கொடுக்கிறார்கள் அவற்றில் ஒன்றினை பள்ளியிலும் மற்ற ஒன்றினை வீட்டிலும் வளர்க்க அறிவுறுத்துகிறார்கள். தற்போது குளிர் காலமாக இருப்பதால் குறைந்த செடிகளையே காண முடிந்தது. மேலும் ஒவ்வொரு வகுப்பிற்கென செல்ல பிராணிகளாய் வளர்க்க கோழி, முயல் குட்டி போன்றவைகளையும் கொடுக்கிறார்கள். இது அக்குழந்தைகளிடையே குழுவாய் இயங்கும் மனோநிலையினை செம்மைப்படுத்துகிறது.


 Kids garden
 Play ground
 Pet animals
 Kids garden


தோட்டத்தின் மூலையில் சிறிய மரக்குச்சியில் நடப்பட்டிருந்த சிலுவை ஒன்று எனது கவனத்தினை ஈர்த்ததுகுழந்தைகளிலின் செல்ல பிராணிகளில் ஒன்றான வொங்கி (wonky) என்னும் முயல் குட்டி இறந்த பிறகு அவ்விடத்தில் புதைத்திருப்பதாக கூறினார்கள். ஒன்றுதான் அக்கணம் புரிந்தது அறிவியல், கணிதம் இவை எல்லாவற்றையும் விட சிறார்களுக்கு நாம் போதிக்க வேண்டியது அன்பு என்னும் சமதர்மமே என்பதை ஆங்கிலேயர்கள் மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ளார்கள்.




இருபது வருடங்களுக்கு முன்பு இதே கல்வி முறை நம் ஊரில் இருந்தது. தற்போது புற்றீசல் என முளைத்துள்ள நர்சரி பள்ளிகள் இதனை காலில் போட்டு மிதித்து விட்டது. பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நம் குழந்தைகளை வதைக்கிறார்கள். இதில் நம் பெற்றோரின் பங்குதான் அதிகம். எல்லா அரசு ஆரம்பப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை நர்சரி பள்ளிகளுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியினை கொடுத்தாலே மிக அருமையாக மாற்றி விட முடியும். அது என்னவோ இன்று வரை அரசுதான் எல்லா ஆணியையும் பிடுங்க வேண்டும் என பொது சனங்கள் தட்டையாகவெ யோசிக்கிறார்கள்.

சர்வதாவின் கடிதம்  நம் சம காலத்திய பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை மட்டுமல்ல நாம் நம் குழந்தைகளின் மீது புகழின் பெயரால் நடத்தும் பெரும் போரை நிறுத்தசொல்வதாகவே தோன்றுகிறது.

அன்பை விடவும் மேலோங்கியதாய் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வெறொன்றும் இல்லை என எண்ணுகிறேன்.

சர்வதா குட்டிக்கு என் அன்பு முத்தங்கள்..

No comments:

Post a Comment