நிலையான ஆற்றல் நுட்பங்கள்குறித்த சர்வதேச மாநாடு (International Conference on Sustainable Energy Technologies)
கடந்த டிசம்பர் மாதம் (11-13 December, 2014) இந்தியாவில் நடைபெற்ற 'நிலையான ஆற்றல் நுட்பங்கள்' (International Conference on Sustainable Energy Technologies) குறித்த சர்வதேச மாநாட்டில் எனது ஆய்வு குறித்து பேச அழைத்திருந்தார்கள்.
இந்த சர்வதேச மாநாட்டினை கோவையில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி (PSG College of Technology) தலைமை ஏற்று நடத்தியது. இவர்களுடன் இங்கிலாந்தில் உள்ள எக்சிடர் பல்கலைக் கழகம் (Exeter University), நோர்வேயில் உள்ள ஓசுலோ பல்கலைக்கழகம் (UiO, Norway) , பெர்கன் பலகலைக் கழக கல்லூரி (Bergan University College, Norway) ஆகியவை கூட்டாக இணைந்து இம்மாநாட்டினை நடத்தினார்கள்.
சூரிய ஒளியினைக் கொண்டு போட்டோ கேட்டலிசுடுகள் (photocatalyst) மூலம் நீரிலிருந்து ஐதரசன் (hydrogen) வாயுவினை தயாரித்தல் என்ற தலைப்பில் எனது சமீபத்திய ஆய்வு முடிவுகளை மாநாட்டில் பேசினேன்.
மூன்று நாட்களுக்கு மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் குழு செய்திருந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் செயலர்கள் பேராசிரியர்கள். பாலசுந்தர பிரபு (பி.எஸ்.ஜி கல்லூரி), பேராசிரியர் சுந்தரம் செந்தில் அரசு ( (Exeter University),, முனைவர் எஸ். பிரசன்னா (பி.எஸ்.ஜி கல்லூரி) உள்ளிட்ட அனைவருக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும்.
மூன்று நாட்களில் 400க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை வாசித்தார்கள். சூரிய மின்கலங்கள் (solar cells) தயாரிக்க தேவையான புதிய, நானோ அளவிலான பருப்பொருட்கள் (nanostructured materials), எரிபொருள் மின்கலங்களுக்கு தேவையான மின்வேதி ஊக்கிகள் (electrocatalyst for fuelcells), நானோ அளவிலான மென்படல ஏடுகள் (nanocrystalline thin film coatings) போன்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மிகவும் கவனத்தினை ஈர்த்தது. இது தவிர காற்றாலை மின் உற்பத்தி, உயிரிமின் உற்பத்தி (biomass energy) போன்ற தலைப்பில் நல்ல பல கட்டுரைகள் விவாதம் செய்யப்பட்டது.
முனைவர் ஆராய்ச்சி மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்தியது பெரும் மகிழ்வினை தந்தது. நாம் இன்னும் சர்வதேச அளவில் கடக்க வேண்டிய தொலைவு நெடுந்தூரம் உள்ளது என மாணவர்களுக்கு வலியுறுத்தினேன். சமகாலத்திய ஆய்விலிருந்து நம் மாணவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளதாகவே தெரிகிறது. பெரும்பாலும் பல்கலைக் கழக மாணவர்கள் சொல்வது எங்களது ஆய்வு செய்ய போதிய வசதி இல்லை. எனக்கு ஒன்று புரியவில்லை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இதே பதிலைச் சொல்லிக் கொண்டு இருப்போம் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை குறைகள் மாணவர்களிடமும், இன்னும் ஆய்வு கட்டமைப்புகளை இன்னும் பரவலாக கொண்டு செல்லப்படாத அரசின் மீதுதான் எனத் தோன்றுகிறது. நானோ பொருள் அறிவியல் ஆராய்ச்சி தற்போது மருத்துவம், ஆற்றல், சூழலியல் என பல்துறைகளிலும் புதியகருவி வடிவமைத்தலில் பெரும் பங்கு வகிக்கிறது. சீனா கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பிரச்சினையினை வேகமாக முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். இந்த ஆராய்ச்சி அவர்களது தொழில்துறை சார்ந்த புதிய கருவி வடிவமைத்தலுக்கு பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார்கள். இது தவிர நம் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு தரவுகளை கட்டுரைகளாக எழுதும் பொழுது scientific plots நேர்த்தியாக வரைய நிறைய பயிற்ச்சி தேவைப்படுகிறது. இதனை முதலில் நாம் முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் தமிழில் இதனை விளக்கப் படமாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றாலம் எனத் திட்டமிட்டுள்ளேன்.
சுவரொட்டி பகுதியில் (poster session) திருவாரூர் மத்திய ப ல்கலைக் கழகத்தில் இருந்து கிராஃப்பின் ஏடுகள் (scrambled graphene synthesis) குறித்த ஆய்வுக் கட்டுரை மிகவும் கவனத்தினை ஈர்த்தது. கொச்சின் பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர் கே. விசயகுமார் அவர்களின் "தெளிப்பான் முறையிலான சூரிய மின்கல பூச்சுகள்” (spray deposited nanostructured solar cells coatings) குறித்த ஆய்வு பேச்சு மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாகவும் இருந்தது. மாநாட் டு விழாவின் நிறைவு விழாவில் மூன்று நாட்களாக நடைபெற்ற அனைத்து ஆய்வு கட்டுரைகளின் மையக்கருத்தினை (abstract) பற்றி தெளிவாக ஒருங்கிணைத்து அவற்றில் உள்ள எதிர்கால சவால்களை தெள்ளத் தெளிவாக ஒரு பேராசிரியர் எடுத்துரைத்தார். ஆச்சரியத்தில் அப்படியே ஆழ்ந்து போனேன். பிறகுதான் தெரிந்தது அவர் திருவாரூர் மத்தியபல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவரும், பொறுப்பு-பதிவாளருமான பேராசிரியர் இரவீந்திரன் அவர்கள். நிச்சயம் தங்களது தலைமையில் இயற்பியல் பள்ளி (School of Physics) நல்ல முன்னேற்றம் அடையும் என தின்னமுறுகிறேன்.
பல வருடங்களுக்கு பிறகு எனது ஆய்வு சார் நண்பர்களையும், பேராசிரியர் பெருமக்களையும் மற்றும் புதிய ஆய்வு நண்பர்களையும் கோவை மாநகரில் சந்திக்க வாய்ப்பளித்தமைக்கு பி.எஸ்.ஜி மாநாட்டு குழுவினருக்கு எமது நன்றிகள். தொடர்ந்து இது போன்று நல்ல பல ஆய்வு கருத்தரங்களையும், மாநாடுகளையும் நடத்திட எமது வாழ்த்துகள்.
பி.சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம், சப்பான்
No comments:
Post a Comment