பொன்னியின் செல்வன்...
பொன்னியின் செல்வன் இனிதே நிறைவுற்றது...
ஒரு மாதமாய் என் கடுமையான பணிச்சுமையில் இருந்து பெரும் ஓய்வு.. சோலார் செல், போட்டோ கேட்டலிஸ்ட் என்று ஆய்வகத்தில் ஜல்லி அடிக்காமல் பொன்னியின் செல்வன் நாவல் மூலம் மனம் சற்றே இளைப்பாறியது.
கதை நெடுகும் வலம் வரும வந்தியத் தேவனின் குதிரைப் பயணம் என் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை..வட தமிழகத்தின் வீராணம் ஏரி தொடங்கி, தஞ்சை, பழையாறை, விருத்தாசலம், திருவையாறு, நாகைப்பட்டினம், கோடியக்கரை, மதுரை, கடம்பூர், பூதத்தீவு, ஈழத்தின் அனுராதபுரம், என தமிழமெங்கும் சுற்றி கொங்கு நாட்டின் ஆனைமலை வரை நாம் வந்திய தேவனோடு உலாவ முடிகிறது.
மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு கதையின் முக்கியா மாந்தராய் வரும் ஆழ்வார்கடியானின் செய்யும் ஒற்று வேலை..சைவர்களை கண்டால் தடியை ஒங்கி கொண்டு சண்டைக்குப் போவது..தன் சமயோசித புத்தியின் மூலம் எதிர்களிடமிருந்து சாமர்த்தியமாய் தப்பிப்பது..
சோழ சாம்ராஜ்யத்தின் அணையா விளக்காய் வலம் வரும் இளைய பிராட்டி குந்தவையின் அறிவும் வனப்பும்.அவரது உற்ற தோழி கொடும்பாளூர் இளவரசி வானதி கண்டவர் எவரையும் வசீகரம் செய்யும் வனப்பு கொண்ட அருள் மொழி வர்மன் எனும் இராஜ இராஜன்..
நந்தினியின் கொள்ளை அழகும், அதில் சொக்கி தன் மதி இழக்கும் சோழ அரசின் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன், கடம்பூர் கந்த மாறன், பல்லவன் பார்த்திபேந்திரன்..
சோழ பேரரசின் மணி முடி தரித்த மகா சக்கரவர்த்தி சுந்தர சோழன் அவர்தம் தர்ம பத்தினி வானமா தேவி..ஈழத்து பட்டரசி மந்தாகினி.
அரசியல் சாணக்கியராய் விவேக சிந்தாமணியாய் சோழ மன்னனுக்கு உற்ற துணையாய் நிற்கும் மந்திரி அன்பில் அநிருந்த பிரம்ம ராயர்.
பல போர்களில், சோழ பேரரசிற்கு ஆதரவாய் களமாடி தன் திருமேனியெங்கும் தொன்னூற்று ஆறு விழுப்புண் கொண்ட பழூவூர் வம்ச சிற்றரசர், இறை விதிக்கும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர்..அவர் தம்பி தஞ்சை கோட்டைத் தளபதி காலாந்தக கண்டர்..
சிவபக்தியில் மெய் உருகி அவன் பாதங்களையே பற்றி திரியும் சோழப் பேரரசின் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி. அவர் தம் செல்வ புதல்வன் சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தக சோழர்..அவரின் பதி வீரத்திற்கு பெயர் போன சமுத்திர குமாரி தியாகவிடங்கரின் தவப்புதல்வி பூங்குழலி..
சோழ வம்சத்திற்கு உறுதுணையாக நிற்கும் சிற்றரசர்கள் கடம்பூர் சம்புவரையர், திருக்கோவலூர் மலையமான், இரட்டை குடை இராஜாளியார், விக்கிரம பூபதி, முத்தரையர், தெரிந்த பெரிய கைக்கோளர் படை..
சோழ சாமராஜ்யத்தினை பூண்டறுக்க துடிக்கும் பாண்டிய மன்னன் மற்றும் அவனது ஆபத்துதவிகள் மந்திரவாதி ரவிதாசன், இடும்பன்காரி, ராக்கம்மாள், தேவராளன்,தேவராட்டி..
கழுத்தில் கபால மண்டை ஓடுகளை மாலையாய் போட்டுக் கொண்டு அச்சுறுத்தும் காளாமுகர்கள்..
குடந்தை சோதிடர், நாகைப்பட்டினம் சூடாமணி விகாரத்தின் தலைமை புத்த பிக்கு, வைத்தியர் மகன் பிணக பாணி என்று உயிர்ப்புடன் நம் கண் முன்னே கதாபாத்திரங்களை உலவ விட்டிருக்கும் கல்கியின் எழுத்து காலத்தால் அழியாதது, எவராலும் வெல்ல முடியாயது..
தன் எழுத்தின் மூலம் நிலவறை இருட்டிலும், ஏரிக் கரையிலும், கடலிலும், வாசகனை உயிரோட்டத்தோடு பயணம் செய்ய வைப்பதன் மூலம் என்றென்றும் தமிழ் புதின வரலாற்றில் ஆணி வேராக பொ.செ நிலைத்து நிற்கிறது.. ..
நேரம் இருந்தால் மறக்காமல் வாசிக்கவும்..ஏனெனில் பொன்னியின் செல்வன் உங்களை கால இயந்திரத்தில் ஏற்றி 1000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி உங்களை எடுத்து செல்லும்.. வரலாற்று புனைகதையில் பொ.செ ஒரு மைல் கல் மட்டுமல்ல..தமிழர்கள் ஒவ்வொரும் படிக்க வேண்டிய பொக்கிசம்..
http://ponniyinselvan.in/book/kalki/ponniyin-selvan
No comments:
Post a Comment