Thursday, 12 March 2015

 கரூர் நகராட்சி மேல் நிலைப் பள்ளி - Municipal Higher Secondary School- MHSS

கடந்த விடுமுறைக்கு இந்தியா சென்ற பொழுது நான் படித்த கரூர் நகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு (Municipal Higher Secondary School- MHSS) ஒரு முறை சென்று விட்டு வரலாம் என்று தோன்றியது.

ஒரு காலத்தில் தம்பி எங்கு படிக்கிறாய் என்றால் 'MHSS' என்று காலரை தூக்கி கெத்தாக சொல்லிக் கொள்வோம்..படிப்பு, ரகளை என இரு தடங்களிலும் தனது முத்திரையினை பதித்த பள்ளி..பல்லாயிரக் கணக்கான மாணவர்களை உலகமெங்கும் கிளையெனப் பரப்பி நிற்கும் தாய் வேர். நான் இங்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றேன் (1992-1996). சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வி பயில கிடைத்த ஆக்ஸ்போர்டு நிறுவனம்.




எம் பள்ளியின் ஆன்ம பலம் ஆசிரிய பெருந்தகைகளே. எனக்கு தமிழின் மீது தீராக் காதலையும் பற்றையும் அள்ளிக் கொடுத்தது என் ஆசிரியர்களே.. தமிழுக்கு சொர்ணம் அம்மா, அறிவியலுக்கு திரு சங்கரன் சார், கணிதத்திற்கு திரு அங்கப்பன் சார்..என பட்டியல் மிகப் பெரிது..எனக்கு ஒன்பதாம் வகுப்பில் 'F' பிரிவு கிடைத்தது.. அப்போதைய கால கட்டத்தில் 'O' பிரிவு வரை இருந்ததென்றால் பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை விளங்கும்..ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி தமிழ்நாட்டின் இரண்டாவது நகராட்சி மேல்நிலைப்பள்ளி எனப் பெயர் எடுத்திருந்தது..

அக்கால கட்டத்தில் இங்கு உயர்நிலைக் கல்வியில் முதல் பிரிவிற்கு MLA, MP என சிபாரிசிற்கு என பெரும் கூட்டமே அலையும்.. நான்கு இடங்களில் காலை பிராத்தனை வகுப்பு நடைபெறும்.. எனது இயற்பியல் ஆய்வகத்தின் வாசலில் நின்று கொண்டு வெறித்து பார்த்த படியே நின்று இருந்தேன்..நிறைந்த புங்க மரங்களின் வழியாக சிவராஜ் சாரின் கண்டிப்பான, நேர்த்தியான ஆய்வக வகுப்புகளின் ஞாபகம் வந்து போனது..என் வாழ்வின் பெரும் வழியே இயற்பியலை நோக்கி இங்குதான் துவங்கப் போகிறது என அப்போது எனக்கு தெரியாது.. அப்போதைய நண்பர் பட்டாளம் மிகப் பெரிது.. ஆயினும் வெகு அரிதான தருணங்களில் மட்டுமே தற்போது சந்திக்க முடிகிறது. நேற்றைய பொழுதைப் போல் உள்ளது என் பள்ளியிலிருந்து வந்தது..

ஒரு காலத்தின் கரூர் நகரின் ஆதர்சனங்களின் ஒன்றான எம் பள்ளி இன்று காலம் கிழிதெறிந்த காகிதமாய் நசிந்து போய் உள்ளது..வெறும் நானூறுக்கும் குறைவான மாணவர்களே தற்சமயம் இங்கு பயில்கின்றனர். தற்போது கரூர் மாநகரில் பத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணை பள்ளிகள் வந்து விட்டன.இங்கு பெட்டரில் வைத்து நன்கு பொறித்து அனுப்புகிறார்கள்..எம் பள்ளி இன்று சீண்டுவார் இல்லாமல் ஒரு அகதி முகாமைப் போல் உள்ளது.. பள்ளிக்கென நுழைவு வாயில் பலகை கூட இல்லை..அடப் பாவிகளே..

2000ஆன் ஆண்டிற்கு பிறகு இங்கிருந்த உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களின் நுண் அரசியலால்அட்மிசனுக்கு வரும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மூளைச்சலவை செய்து அனுப்பப் பட்டார்கள்..வெகு விரைவில் இந்த நரிகளின் தந்திரத்தால் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை கூண்டோடு காலி செய்யப்பட்டது.. மிகச் சிறந்த ஆசிரியர்களை அரசியல் நெருக்கடி மூலம் இங்கிருந்து துரத்தி அடித்தார்கள்..இது நம் வரிப் பணத்தில் இயங்கும் பள்ளி..நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உரிமையோடு ஆசிரியர்களையும், பள்ளியினையும் அடிக்கடி சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இருந்தால் இந்த இழிநிலை தடுக்கப்பட்டு இருக்கலாம்..

இங்கு பயின்ற முன்னால் மாணவர்கள் சீக்கிரம் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்..விரைவில் இது நகராட்சியால் கையகப்படுத்தப்பட்டு ஒரு பேருந்து நிலையமாகவோ, வணிக வளாகமாகவோ மாற்றப்படலாம்.. நண்பர்கள் எவரிடமேனும் நம் பள்ளியின் பழைய புகைப்படம் இருந்தால் share செய்யவும்

No comments:

Post a Comment