Tuesday 10 March 2015

சூரிய மின் சக்தியின் மூலம் உலகை சுற்றி வரும் விமானம் (Solar-powered plane takes off in first round-the-world attempt)


சூரிய மின் சக்தியின் மூலம் விண்வெளி ஆய்வு மையங்கள் (solar powered space station) இயங்கி கொண்டிருக்கும் சூழலில் மற்றுமொரு மகுடமாக சூரிய மின்சக்தியினை கொண்டு விமானத்தினை இயக்கி உலகைச் சுற்றி வலம் வரலாம் என்ற திட்டத்திற்கு இன்று முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. உலகினை சுற்றி வலம் வரப் போகும் இவ்விமானத்தின் பெயர் சோலார் இம்பல்சு 2 (solar Impulse 2). இவ்விமானத்தினை சுவிட்சர்லாந்து நாட்டினை சார்ந்த அந்ர பொர்சுபெக்(André Borschberg), பெத்ரான் பிக்சார்டு (Bertrand Piccard) என்ற இரு விமானிகள் 50 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உதவியுடன் வடிவமைத்து இந்த சவாலில் இறங்கியுள்ளனர், இதற்கு முன் சோதனை முயற்சியாக இவ்விமானத்தின் முதல் வடிவமான solar impulse 2009 ஆம் ஆண்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் இவ்விமானம் இன்று முதன் முதலாக மஸ்கட்டில் உள்ள அல்-பதீன் (Al-Bateen) விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7.12 மணிக்கு கிளம்பியது. முதல் கட்டமாக 400 கி,மீ தொலைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மஸ்தார் நகரத்தினை 12 மணி நேரத்தில் அடைய உள்ளது. அதன் பின்னர் ஐந்து மாதங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்து 30,000 கிமீ கடக்க திட்டமிட்டுள்ளனர் (இடையில் வெறும் 12 நிறுத்தங்கள் மட்டுமே).
ஆனால் இந்த விமானத்தின் எடை என்ன இருக்கும் என்று கணிக்க முடியுமா?..சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதன் எடை நாம் அன்றாடம் ஓட்டும் காரின் எடை அளவே (2.3 டன்). இவ்விமானத்தின் இறக்கையின் அகலம் போயிங் விமானத்தின் இறக்கையினை விட பெரியது (72 மீட்டர்). ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இவ்விமானத்தினை இயக்க முடியும் இந்த வடிவமைப்பிற்கு Si2 என பெயரிட்டுள்ளனர். இவ்விமானம் மணிக்கு 70 கிமீ வேகம் செல்லக் கூடியது.



சரி எப்படி இந்த விமானம் இயங்குகிறது என பார்ப்போம். இவ்விமானத்தின் மேற்பரப்பில் நம் தலை முடியின் தடிமன் அளவிற்கு 135 மைக்ரான் அளவில் சுமார் 17,000 சூரிய மின்கலங்கள் (solar cells) சிறிய வடிவில் மென் ஏடுகளாக (thin film solar cells) பொருத்தப்பட்டுள்ளது. இவை சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரிகளில் (lithium ion battery 4 x 260 Wh/kg) சேமித்து வைக்கிறது. எனவே இந்த மின்சக்தியினை கொண்டு இரவிலும் இவ்விமானத்தினை இயக்க முடியும்.
இந்த சிறப்பு விமானம் இந்தியா வழியாக( குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் வாரணாசி நகருக்கு) நின்று செல்ல இருக்கிறது என்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி.
எரிபொருளற்ற (zero-fuel) விமானங்களை சூரிய மின் சக்தியினை கொண்டே இயக்க முடியும் என வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்ட இருக்கும் இவ்விமானத்தின் குழுவினருக்கு நம் வாழ்த்துகளை சொல்வோம்.
மிஸ்டர் பொதுசனங்களே! இனியாவது சூரிய மின்சக்தியில் மிக்சி ஓடுமா, கிரைண்டர் ஓடுமா எனக் கேட்டுக் கொண்டு இருக்காமல் நம் வீட்டில் எரியும் மின் விளக்குகளையாவது சோலார் மின் சக்தியின் மூலம் இயக்கி நம் நாட்டின் ஆற்றல் வளத்தினை சேமிப்போம்.

பி.சுதாகர்
தோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகம், சப்பான்

No comments:

Post a Comment